scorecardresearch

சில தலைமுறைகளின் கேப்டன்

Writer Vivek Gananathan: மார்பு விரித்துக்காட்டும், எதிரியை நோக்கி அறைகூவும், ஆர்ப்பரிக்கும் ஆளுமைகள் மீது ஈர்ப்பு கொண்ட இந்திய பொதுப்புத்திக்கு தோனியின் ஆளுமை வித்யாசமாக இருந்தது.

சில தலைமுறைகளின் கேப்டன்

விவேக் கணநாதன்

இந்திய கிரிக்கெட் அணிக்கு கங்குலி தலைமையேற்றிருந்த நேரம்.

கிரிக்கெட்டை மதமாகவும், வீரர்களை தேவதூதர்களாகவும் கொண்டாடிக்கொண்டிருந்த இந்திய கிரிக்கெட் உலகம், அவமானங்களாலும், தொடர் தோல்விகளாலும் துவண்டு கொண்டிருந்தது. அணியில் ஜாம்பவான்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் ஜனரஞ்சகமாக இல்லை.
தன்னுடைய ஆக்ரோஷமான உற்சாகத்தை அணிக்குள் புகுத்திய கங்குலி, புதிய ரத்தங்களை தேடி இந்தியாவின் ஆன்மா உறைந்துகிடக்கும் சிறு நகரங்களை புரட்டிக்கொண்டிருந்தார்.

19 வயதினருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட், மாநில அணிகளுக்கான ரஞ்சிப் போட்டிகள் என பலமுனைகளிலிருந்து பந்து வீசும் ஆயுதங்களை, பேட்டிங் ஆடும் கேடயங்களைக் களமிறக்கிக் கொண்டிருந்தார் கங்குலி. டெல்லியின் யுவராஜ், உத்திரபிரதேசத்தின் முகமது கைப், பஞ்சாப்பின் ஹர்பஜன், மகாராட்டிரத்தின் சாகீர் கான் என பலரும் அணிக்குள் வந்தார்கள். ரத்தம் கொப்பளிக்கும் கங்குலியின் கோபத்தோடு இணைந்த இந்த இளைஞர்கள் ஆஷஸ் கோப்பைக்கு நிகராக பார்க்கப்பட்ட நாட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் புரட்டிப்போட்டார்கள்.

அசகாய சூரர்களாக விளங்கிக்கொண்டிருந்த ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே தண்ணீர் குடிக்க வைத்தார்கள். 2003 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி வரை, உலகக்கோப்பை எனும் மாபெரும் கனவுக்கு மிக அருகில் சென்றுவிட்டு வந்தார்கள்.

ஆனால், ஏதோ ஒரு குறை இந்திய அணியை விடாமல் துரத்திக் கொண்டிருந்தது. உலகத்தரம் வாய்ந்த வீரர்கள், எதற்கும் துணிந்த அணித் தலைமை, ஒத்துழைப்பு, வழிகாட்டல், வரலாற்றிலேயே மிகப்பெரும் மக்கள் ஆதரவு என இந்திய அணியில் எல்லாம் இருந்தது. ஒன்று மட்டும் இல்லை – அதுதான் ‘இந்திய நிதானம்’.

வெறிப் பிடித்தவர்கள் போல விளையாடிய ஆஸ்திரேலியா, கிரிக்கெட்டின் தாயகம் என்ற கர்வத்தோடு களத்தில் நின்ற இங்கிலாந்து, தங்களின் நவீனத்தன்மையால் நாசுக்கு காட்டிய நியூசிலாந்து, ஆப்பிரிக்க கலாச்சாரத்தின் ரத்தின கலவையாக இருந்த தென்னாப்பிரிக்கா என ஒவ்வொரு நாடும், தங்களுடைய கலாச்சார மரபுகளையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் ஆற்றலைத்தான் தங்களது பாணியாக காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், எல்லாருக்கும் ஈடுகொடுக்க விரும்பிய இந்தியா, ஒரு ஆஸ்திரேலியாவைப்போல, ஒரு இங்கிலாந்தைப் போல, ஒரு நியூசிலாந்தைப் போல மாற முயற்சித்துக் கொண்டிருந்ததே தவிர தன் ஆன்மாவின் சாயலை தன் கிரிக்கெட்டில் பிரதிபலிக்கவில்லை. அப்போதுதான், தோனி வந்தார்.

தோனி வந்த பிறகுதான், இந்தியாவின் சிறுநகர்வெளி காட்டு ரத்தம் தன் ஆயிரங்காலத்து கனவுகளை அறுவடை செய்யத் தொடங்கியது. திமிரும் நிதானமும் கலந்த ஒரு புதிய சகாப்தத்தை இந்திய கிரிக்கெட் அணிக்குள் தொடங்கி வைத்தார்.

ஒரு புதிய கலாச்சாரம், ஒரு புதிய பண்பாடு இந்திய கிரிக்கெட் சகாப்தத்தில் ஜொலிக்கத் தொடங்கியது.

தோனியின் சாமர்த்தியமாகவும், தோல்வியாகவும், குறைபாடாகவும், விமர்சிக்கப்பட்ட ‘defensive play’ எனும் தற்காப்பு ஆட்ட உத்தி, எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு வெற்றியை நோக்கி நகரும் நடுத்தர வர்க்க மனநிலையின் உபவிளைவு. அது தோனியின் உத்தி மட்டுமல்ல, இந்திய மனசாட்சியின் உத்தி.

அந்த உத்திதான் இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு புதிய பாணியை உருவாக்கியது. இந்தியாவை, இந்தியாவாகவே விளையாட வைத்தது. இத்தகைய விளையாட்டை நோக்கி இந்தியாவை நகர்த்த உதவியது தோனியின் சமூக பின்புலம்.

இந்திய கிரிக்கெட் அணியில் இருக்கும் சாதியம் எளிதாக எல்லோரும் அறிந்த ஒன்று. சாதியத்தோடு சேர்த்து விவாதிக்க வேண்டிய இன்னொரு இடம் பெருநகரத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதிக வாய்ப்புகளைப் பெறும் ஆதிக்கம்.

இந்தியாவின் மாபெரும் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவருமே பெருநகரத்தில் பிறந்தவர்கள் தான்.

கபில் தேவ் சண்டிகரில் பிறந்தவர். கவாஸ்கரும், சச்சினும் பாம்பேயின் பாட்ஷாக்கள். கங்குலி கல்கத்தா இளவரசன். யுவராஜ், சேவாக், கம்பீர், விராட் ஹோலி போன்றவர்கள் டெல்லி உற்பத்திகள். இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது மிக சாதாரணமான ஊரகப்பகுதியில் பிறந்து வளர்ந்த தோனியின் சாதனை எவ்வளவு மகத்தானது என்று புரியும்.

எதேச்சையோ (அ) திட்டமிடப்பட்டதோ தெரியவில்லை, 1967க்கு பிறகு இந்தியாவிற்கு கிடைத்த கிரிக்கெட் கேப்டன்கள் அனைவரும் பெருநகரங்களை சேர்ந்தவர்கள். கிரிக்கெட் வாய்ப்புகளை பெறுவதற்கு நகர சூழல் ஏதுவாக இருந்ததுகூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். 1967ல் கேப்டனாக இருந்த சாந்து போர்டே பூனேவுக்கு அருகில் இருக்கும் சாதாரண டவுனில் பிறந்தவர். அதற்கு பிறகு, இந்த மரபின் மீது ஒரு உடைசலை நிகழ்த்துவதற்கு தோனியின் வருகை வரை அரைநூற்றாண்டு காலம் இந்தியா காத்துக் கொண்டிருந்தது என்பதே நிதர்சனம்.

அதனால்தான், தோனியைக் கண்டதும்
சட்டென சூழ்ந்துகொண்ட ஒரு பூரிப்பு உணர்வையும், நம்பிக்கையையும் இந்திய இளைஞர் பட்டாளம் உணர்ந்து கொண்டது. தங்களாலும் சாதிக்க முடியும் என்று நம்பத் தொடங்கியது.

தோனி இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற காலகட்டத்தில் தான், வணிக இந்தியா மாபெரும் மாற்றங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. சமூக – பொருளாதார ரீதியாக இந்தியாவின் சந்தைகள் மீது பெரும் பாய்ச்சல் நடந்துகொண்டிருந்த காலம் அது. 2007-08 காலகட்டத்தில் இந்தியாவின் விற்பனை சந்தையின் மதிப்பு சுமார் 73 லட்சம் கோடி. 2000-த்தின் தொடக்க காலத்தில் இவற்றில் பெருமளவு, கிட்டத்தட்ட 40% டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய ஆறு நகரங்களை மட்டுமே சார்ந்தது. இந்திய வணிக நிறுவனங்களின் விளம்பரங்கள், முதலீடுகள், விற்பனை கேந்திரம் என வணிக ஆதாரங்கள் இந்த பெருநகரங்களைச் சுற்றியே நடந்துகொண்டிருந்தது. 2000-த்தின் முதலாம் பத்தாண்டின் மத்திய காலகட்டத்தில் நகரமயமாதல் மிகப்பெரிய அளவில் விரிவடையத் துவங்கியது.

இந்த நகரமயமாக்கம் தரும் மயக்கங்கள், வாழ்வியல் எதிர்பார்ப்புகளோடு மிகப்பெரிய இந்திய இளைஞர் பட்டாளம் சமூக வாழ்க்கைக்குள் குதித்துக் கொண்டிருந்தது. ஊடக பெருக்கம், தகவல் தொடர்பு சாதன பெருக்கம், தொலைத்தொடர்பு வளர்ச்சி என புதுயுகத்தின் அகன்ற வாசலுக்குள் இந்தியா நுழைந்திருந்த நேரத்திலேயே தோனி இந்திய அணியின் கேப்டன் ஆனார். தோனியின் தோற்றம், பின்புலம், ஆளுமை, சின்னஞ்சிறு பாவனைகள் மூலமாகக்கூட இந்திய நடுத்தர வர்க்க எதிர்பார்ப்பின் அசலான நம்பிக்கையாக உருவெடுத்தார்.

2006-2014 வரை தோனி உச்சத்தில் இருந்த காலத்தில் இந்திய சமூகத்தில் நிகழ்ந்த சமூக பொருளாதார மாற்றங்களை ‘Dhoni Effect’ என்றே வர்ணிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். Ernest India நிறுவனம் இந்தத்தலைப்பில் ஆய்வறிக்கையே வெளியிட்டிருக்கிறது.

தோனிக்கு முன்பாக இத்தகைய ஒரு வீச்சை சச்சின் நிகழ்த்தினார். 90களின் ஆரம்பத்தில் தொடங்கி, மத்தியில் நீண்டு, 2000-த்தின் முதல் பத்தாண்டுகள் வரை மிக செல்வாக்குடனான வீச்சை சச்சின் நிகழ்த்திக் காட்டினார். சச்சினும், தோனியும் அவர்களின் காலத்து இளைஞர்களிடம், சிறுவர்களிடம் நிகழ்த்திய தாக்கங்களின் விளைவுகள் வெறும் விளையாட்டின் ஆதிக்கம் மட்டுமல்ல. அதைத் தாண்டிய உளவியல் மற்றும் பொருளியல் மாற்றத்தின் மீதான விசை. அதன் உபவிளைவாக நிகழ்ந்த சமூக-பொருளாதார மாற்றங்களையும் சேர்த்தே நாம் அவர்களை மதிப்பிட வேண்டும்.

இதில் சச்சினும் தோனியும் வேறுபடும் ஒரு புள்ளி குடும்பம் மற்றும் காலகட்டம். எல்லாமுமாக நின்று தோள்கொடுக்க, பொருளாதாரச் சுமைகளை இட்டு நிரப்ப சச்சினுக்கு குடும்பம் துணை நின்றது. ஆனால், தோனிக்கு அப்படியல்ல. இதுதான் விருப்பம் என அவர் கண்டெடுத்த வயது முதல் வெற்றியின் அசாதாரணத்தை உணரும் வரை குடும்பத்தோடும், தன் சுயத்துக்கான தடைப்பொருளாதாரத்தோடும் அவர் போராடினார். உண்மையில், லட்சியங்களுக்கும், பிழைப்பினத்திற்கும், தன்திறன்களுக்கும் மத்தியில் குடும்பப்பொதியை முதுகில் தூக்கிக்கொண்டிருக்கும் கோடானுகோடி இந்திய நடுத்தர வர்க்க இளைஞர்களிலிருந்து வென்ற ஓர் அசல், தோனி.

ஆனால், சச்சினுக்கு இல்லாத ஒரு சங்கடம் விமர்சனம் தோனிக்கு இருந்தது. அதுதான் சகவீரர்களுடனான பிணக்கு.

சச்சினின் சமகாலத்தில் களமாடிய கங்குலி, டிராவிட், லஷ்மணன் என அத்தனை பேருக்குமே சச்சின் ஒரு ஆதர்சனமாக இருந்திருக்கிறார். சச்சினின்
சீனியாரிட்டியும், கிரிக்கெட் உலகுக்கு அவர் புதிதாய் கொணர்ந்தமையும் சச்சினை மரியாதையோடு கொஞ்ச வைத்தன.

ஆனால், யுவராஜ், ஹர்பஜன், சேவாக், காம்பீர் எல்லாம் களத்துக்கு வந்து ஆண்டுகள் கழித்து விளையாட வந்தவர் தோனி. பின்னாளில், இவர்கள் அணியில் இருக்கவேண்டுமா இல்லையா என முடிவுசெய்யும் அளவிற்கு அவர் உயர்ந்தார்.
இதனால், இயல்பான உரசல்கள் கூட விவகாரமான கட்டுக்கதைகளாக சித்தரிக்கப்பட்டன. மேலும், யுவராஜ், சேவாக், காம்பீர் போன்றவர்களை தோனியோடு முட்டவிடப்பட்ட ஊடகப்பிதுக்கங்களின் சண்டை வெறும் திறமையின் சண்டையல்ல. அது பீகாரின் ராஜபுத்திரர்களுக்கும், டெல்லியின் உயர்சாதி ஜாட்டுகளுக்குமான சண்டையும் கூட.

மிகமுக்கியமாக இந்திய பொதுப்புத்திக்கு எதிரான ஓர் ஆளுமை தோனி. ஓர் தனித்த ஆட்டக்காரனாக அதிரடியாக இருந்த தோனிதான், களத்தலைவனாக மென்மையுடன் ஜொலித்தார். ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள், ஊடகம் கேள்வி கேட்கும் என்கிற அவசரயுகத் தீனிகளுடன் விளையாட தன்னை தோனி ஆட்படுத்திக்கொள்ளவில்லை. மாறாக அணிக்கு என்ன தேவை என்பதை தன் ஆளுமையால், கணிக்கும் திறனால் செய்து அவர் தன்னை நிரூபித்திருக்கிறார்.

ஒரு வீரனாக எப்போதும், தோனி என்ற அணித்தலைவனுக்கு கீழாக தோனி என்ற பேட்ஸ்மேன், தோனி என்ற விக்கெட் கீப்பர் தனித்தனியாக வேலைசெய்து கொண்டே இருக்கிறான் என்பதை உணர்த்துபவையாக இவை உள்ளன. எல்லாம் தன்னால் முடியும் என்று மார்பு விரித்துக்காட்டும், எதிரியை நோக்கி அறைகூவும், ஆர்ப்பரிக்கும் ஆளுமைகள் மீது ஈர்ப்பு கொண்ட இந்திய பொதுப்புத்திக்கு தோனியின் ஆளுமை வித்யாசமாக இருந்தது.

தோனியிசம் என்று குறிப்பிடுகிற அளவுக்கு அவரது செயல்பாடுகள், ஆளுமை, இயல்பு, தலைமைப்பண்பு மிகத் தனித்துவமானவையாக இருந்தன.

ஆசை, அதிர்ஷ்டம், சுயநலம் போன்றவற்றின் பொருள் நிறைந்த எண்ணற்ற வார்த்தைகளால் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருந்த விவாதங்களுக்கு தன்னுடைய கேப்டன்ஷிப் ராஜினாமா முடிவை வெறும் இரண்டே மின்னஞ்சலில் சொன்ன தோனி, தன் 15 வருட சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கான ஓய்வை வெறும் 15 வார்த்தைகளில் அறிவித்துவிட்டார். அதைத்தாண்டி ஒரு ஊடக சந்திப்பு கூட நிகழவில்லை. அவர் பேசவேண்டியதை தன்னுடய சக வீரர்களுடன், கூட்டு அறைக்குள் பேசி முடித்துக்கொண்டார். மிகச்சிறந்த தலைமைக்குரிய பண்புக்கு உதாரணமாக சரியான நேரத்தில், எதிர்காலத்துக்கான திட்டமிடலுக்கு அவகாசத்தோடு, அணித்தலைமையை கைமாற்றிய சாதாரண வீரராக விளையாடி தோனி, சச்சின் யுகத்திற்கும் விராட் கோலியின் நிகழ்காலத்திற்குமான காலச்சரடாக தன்னை வரலாற்றில் நிறுத்தியிருக்கிறார் தோனி.

இந்த வரலாற்றில் தோனி ஒரு அணியின் கேப்டன் அல்ல; சில தலைமுறைகளின் கேப்டன் !

(கட்டுரையாளர் விவேக் கணநாதன், எழுத்தாளர்- விமர்சகர். தொடர்புக்கு writetovivekk@gmail.com )

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil“

 

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: Ms dhoni tamil cricket article ms dhoni career writer vivek gananathan