Advertisment

நா.முத்துக்குமார் - மௌனித்த தலைமுறையின் வழிகாட்டி!

ஆத்திரம், கோபம், வன்மம் என சகல வெளிப்பாடுகளிலும் நா முத்துக்குமார் கவிதைகளில் ஒரு ஈரம் படர்ந்திருக்கும். அந்த ஈரம் தான் முத்துக்குமார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நா.முத்துக்குமார் - மௌனித்த தலைமுறையின் வழிகாட்டி!

விவேக் கணநாதன்

Advertisment

முத்துக்குமார் ஒரு எளிமையான ஆச்சர்யம்.

அந்த எளிமை புரிவதற்கு நீண்ட ஆச்சர்யத்துக்குள் நாம் முழ்க வேண்டும். ஆச்சர்யத்தின் எளிமை புரிவதற்குள், எளிமையாக தன்னை முடித்துக் கொண்டார். ஆச்சரியங்கள் அதிகம் வாழ்வதில்லை.

*

கண்ணதாசனின் மொழி பாதிப்பு வாலியிடமும், வைரமுத்துவிடமும் உண்டு. புதுக்கவிதை உலகின் மொழிக்கட்டுமானத்தில் பல சாத்தியங்களைக் காட்டியவர் வைரமுத்து.

வைரமுத்துவின் மொழி ஆக்கிரமிப்பு அவருக்குப் பின்னால் வந்த, அவரை வாசித்த அநேகமான கவிஞர்களிடம் உண்டு.

இது தவிர்க்க முடியாதது. ஏனென்றால், இந்தத்தொடர்ச்சியின் ஒழுகல் தான் இலக்கியம். ஆனால், கற்பனைகளை, சொல் விளையாட்டை, தர்க்க உணர்வை தனக்கு முந்தை கவிஞர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நா முத்துக்குமார், தன் மொழியில் சாயலற்ற தன் ஆன்மாவை வரித்துக்கொண்டார்.

இரண்டு ரணங்களின் வழியே அவருக்கு இது சாத்தியப்பட்டது.

ஒன்று மிக அந்தரங்கமான சொந்த அனுபவத்திலிருந்து ஒரு புதிய சமூகத்துக்கான நினைவுப்பிரதிமைகளை முத்துக்குமார் உருவாக்கினார்.

இந்த சொந்த அனுபவத்தை, அதன் ஆன்மமொழியிலேயே முத்துக்குமார் பதிவுசெய்தார். சமூகத்தின் முன்பு நின்று அறைகூவும், மொழியின் பீடத்திலிருந்து சமூகத்தை வழிநடத்த சொல் இரையும் 'மகாக்கவித்தனத்தை' முத்துக்குமார் எப்போதும் கைகொண்டதில்லை.

ஆன்ம உணர்வுகளை மொழிசெய்யும் கவி உற்பத்தியில், சமூகத்தை வழிநடத்த விரும்பும் ஒரு கவிஞனின் மேதைமையை முத்துக்குமார் துண்டித்துக் கொண்டார்.

இந்தத் துண்டிப்பை நிகழ்த்திக்காட்டிய தனித்துவமே, முத்துக்குமாரின் ஆளுமை. முத்துக்குமாரின் பாடல்களின் தனித்துவமும் இங்குதான் இருக்கின்றது.

'ஒவ்வொரு பாடலுக்கான சூழ்நிலைக்கும், தன் சொந்த வாழ்க்கையின் பழைய அனுபவங்களுக்கு நான் பயணித்து வருகிறேன். அதிலிருந்து மீள்வதே பெரும் வாதையாக இருக்கிறது' என நா.முத்துக்குமாரே ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.

வணிக படிப்பினை கொண்ட 'சுத்தமான திரைபாடலாசிரியரின்' பண்புக்கு முற்றாய் எதிரானது இது என்பது கவனிக்கத்தக்கது.

*

புத்தாயிரத்தின் தொடக்கத்துக்குள் தமிழ் சினிமாவில் எல்லாம் மாறியிருந்தது. ஆனால், பாடல்களின் சொற்கட்டும், கற்பனைகளின் அலங்காரமும் மட்டும் மாறவில்லை.

மொழி சாம்ராஜ்ஜியத்தின் ராஜபீடத்தில் அமர்ந்திருந்த ராட்சத கவிஞர்கள், தங்களின் சொற்சாட்டையால் பாடல்உலகில் கவிதை செய்துகொண்டிருந்தனர். நா.முத்துக்குமார் வந்தார். அவன் வருகைக்குப் பிறகுதான், புத்தாயிரத்தின் நவீனமும், மாறிவந்த சமூகத்தின் மனசாட்சியை வழிநடத்தும் எளிய தமிழும் பாடல்பாடத் துவங்கியது.

சொற்கட்டில் எளிமை செய்துகொண்டவன் - உவமைகளில் உச்சத்தில் நின்றார்.

'ஒரு கல், ஒரு கண்ணாடி உடையாமல் மோதிக் கொண்டால் காதல்' - எதார்த்தவாதத்தின் சாகசம்.

காற்றில் இலைகள்

பறந்தபிறகும்

கிளையின்

தழும்புகள் அழிவதில்லை

- எதார்த்தவாதத்தின் அழகுண்மை.

ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ?

அதிசயமாய் அவசரமாய் மொழித் தொலைந்தால் பொருளென்னவோ?

- எதார்த்த கேள்விகளின் அழகியல் ஞானம்.

நில நடுக்கம் அது கொடுமைகள் இல்லை

மன நடுக்கம் அது மிக கொடுமை

- எதார்த்தவாத ஒப்புமையின் அனுபவம்.

திறக்காத மனதில் எல்லாம் களவு போக வழியில்லை

- எதார்த்தவாதத்தின் நிகழ்கவிமை.

காற்றினில் கிழியும்

இலைகளுக்கெல்லாம் காற்றிடம் கோபம் கிடையாது

- எதார்த்தவாத இயல்பின் கவிமை

இவையாவும் மனித உணர்வுகளின் தடுமாற்றங்களை காட்சி அனுபவமாக உணர்த்தக்கூடிய நிதர்சனங்கள்; நிதர்சன உணர்வுகளின் கேள்வி வெளிகள். முத்துக்குமாருடைய காட்சியியல் அறிவின் சாட்சிகள் இவை.

*

மின்சார கம்பிகள்

மீது

மைனாக்கள் கூடுகட்டும்

நம் காதல்

தடைகளைத் தாண்டும்

- நிகழும் எதார்த்தின் காட்சியியல் உண்மை - நம்பிக்கைவாதம்

நா முத்துக்குமாரின் நம்பிக்கைவாத பாடல்கள் தோறும் இத்தகைய காட்சிப்பூர்வமான கவி கட்டுமானம் இருக்கிறது. அன்றாடத்தின் மிக ஆச்சர்யமான காட்சிகளை கவிதை செய்யும் இந்த பண்பு, முத்துக்குமாரை சாமானியக் கலப்பில் கரைத்தது. அந்த சாமானியக் கலப்பு என்பது வட்டாரம், வழக்காறு, மண்சார் பண்பாடு, பிராந்தியச் சிந்தனை போன்றவற்றுக்கு அப்பாற்பட்டது. மனித உணர்வுகள் மட்டுமே சார்ந்தது. நா.முத்துக்குமாரின் இந்த பங்களிப்பை ஹாருகி முரகாமியின் சிறுகதை வெளியோடு சேர்ந்து ஆய்வு செய்யவேண்டும்.

*

தமிழ் சினிமாவில் பொருள்புரியா உணர்ச்சிகளை, பொருள்புரியா மனநுண்மைகளை கடத்துவதில் கற்பனை அலங்காரங்கள் மிகுதியாக இருந்தன. கவிஞர்களின் மேதமையே அதற்கு காரணம். ஆனால், முத்துக்குமார் எளிமையான ஒரு உத்தியால், பொருள் புரியா உணர்வுகளைக் கையாள்வதில் புதிய திறப்பை ஏற்படுத்தினார். மொழி பயன்பாட்டில் ஒரு புதிய உடைப்பு அது.

'அடடா அடடா அடடா எனை ஏதோ செய்கிறாய்'

'ஏதோ செய்கிறாய் எனை ஏதோ செய்கிறாய்'

'அடடா மழைடா அடைமழைடா'

'திமு திமு தீம் தீம் தினம்

தள்ளாடும் மனம்'

அடடா அடடாவுக்கு, ஏதோ செய்கிறாய் என்பதன் பல்வேறு உணர்வு கடத்தலுக்கு விரிவான சாத்தியத்துக்கு நிகரான கற்பனைகள் என்ன?

இந்தக் கற்பனைச் சிக்கலுக்குள் மாட்டிக்கொள்ளாமல், அந்த உணர்ச்சிகளை அந்த வார்த்தைகளிலேயே கொடுத்தார் முத்துக்குமார். முத்துக்குமாரின் வருகைக்குப் பிறகே, அடடா, ஏதோ, ஏனோ போன்ற சொற்கள் பாடல்களில் அதிகம் புழங்கின.

இவை உருவாக்கிய எதார்த்த அழகியல், பொருள் புரியாத, அர்த்தமில்லாத 'லாலாக்கு டோல் டப்பிமா' மரபில் வந்த 'ஓமகசீயா...' உட்பட பல பீறல்களின் தேவையை மட்டுப்படுத்தியது.

*

நிராகரிப்பு, புறக்கணிப்பு, அவமானங்களின் தன்னுணர்வு போன்ற திரைவெளியில் அதிகம் கையாளப்படாத உணர்ச்சிகளைக் குறித்த தொடர்ச்சியான பங்களிப்பிலேயே முத்துக்குமாரின் மிக தனித்துவமான கவிதை ஆளுமை இருக்கிறது.

கல்லறை மேலே பூக்கும் பூக்கள்

கூந்தலை போய் தான் சேராதே

கல்லறை மீதுதான் பூத்த பூக்கள் என்று

வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திடுமா?

முதல்முறை வாழப்பிடிக்குதே

முதல்முறை வெளிச்சம் பிறக்குதே

முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே

முதல்முறை கதவு திறக்குதே

முதல்முறை காற்று வருகுதே

முதல்முறை கனவு பலிக்குதே அன்பே

என நிராகரிப்பின், புறக்கணிப்பின் அனுபவ நுண்மைகளை அதிகம் எழுதிய கவிஞன் முத்துக்குமார். நிராகரிப்புகளையும், புறக்கணிப்புகளையும் சொல்பீடத்தில் ராஜாங்கம் செய்யும் மனநிலையில் அறைகூவாமல், எளிய மனிதர்களின் சாமானிய உணர்விலிருந்தே எழுதியதே முத்துக்குமாரின் பெருவெற்றி.

முத்துக்குமார் எழுதிய காலத்திலிருந்த புத்தாயிரத்தின் நவீனம், எதார்த்தவாத சினிமாவின் நவீன அலை போன்றவை இந்த சாத்தியங்களை அதிகப்படுத்தின.

*

காதல் கவிதைகளில் சாமானிய உணர்வுகளை கையாளும்போது, உயிரோட்டமான காட்சிச் சித்திரங்கள், ஆன்ம கலப்பை விரும்பும் பிணைப்பு, உணர்வு கலப்பை உறவுநிலையின் தேவை போன்றவற்றை மீண்டும் மீண்டும் கவிதை செய்திருக்கிறார் முத்துக்குமார்.

'நடைபாதை கடையில் உன் பெயர்

படித்தால்

நெஞ்சுக்குள் ஏதோ மயக்கங்கள் பிறக்கும்'

- அன்றாடத்தின் காட்சியில் நடக்கும் காதல் உயிரோட்டம்

'ஒரு பாதி கதவு நீயடி மறுபாதி கதவு நானடி'

'நான் என்றால் நானே இல்லை

நீ தானே நானாய் ஆனேன்

நீ அழுதால் நான் துடிப்பேன்'

தன் காதல் பாடல்களில் ஆண் மனோபாவ மீறல் விருப்பத்தையும், பாலுணர்வு சமத்துவ விருப்பத்தையும் முத்துக்குமார் மீண்டும் மீண்டும் பதிவு செய்திருக்கிறார்.

சாதி, சமூக பின்னணி, மதம், ஏற்றத்தாழ்வுகள், பேதபாடுகள் போன்றவற்றின் தளைகளோ, அறிதலோ இல்லாத துய்ப்பே மிகுந்துள்ளது. 90களுக்குப் பிறகு அரசியல் நீக்கத்துக்குள்ளான ஒரு தலைமுறையின் அறிவோடும், உணர்வு நிலையோடும் இப்பாடல்களே அதிகம் புழங்கின. 80களில் நிகழ்ந்ததைப் போல, காதலை ஒரு லட்சிய வாதையாக முன்வைக்காமல், வாதை நிகழும் சூழலில் கூட மீண்டும் மீண்டும் உணர்வுக் கலப்பை வலியுறுத்துகின்றன முத்துக்குமார் கவிதைகள்.

ஆனால், உணர்வு கலப்பை வலியுறுத்தும் எந்த பாடலிலும் பாலுணர்ச்சி வடிதலோ, காம அனுபவமோ, சிருங்காரவாதமோ இல்லாமலேயே எழுதியுள்ளார் முத்துக்குமார். சிருங்கார வாதம் இல்லாத இந்த கலப்பு வலியுறுத்தலே முத்துக்குமாரின் பாடல்களில் பாலுணர்வு சமத்துவ உணர்வை காதலுக்குள் வளர்க்கிறது.

ஆண் - பெண் உறவில் சமத்துவ லட்சியம் பேசும் பல பாடல்கள், சிருங்கார வாதத்தில் வழுக்கி விழும்; காமநெடி தூக்கலாக இருக்கும்.

உதாரணம், நீ பாதி - நான் பாதி கண்ணே பாடல்.

ஆனால், முத்துக்குமார் பாடல்கள் காதலில் சமத்துவ உணர்வை, கலப்பின் ஒரு நிலையாக வலியுறுத்துகின்றன.

சாதி, மதம் உள்ளிட்ட சமூகதளைகளை குறித்து அறிதல் குறைவான ஒரு தலைமுறையிடம், காதலை உணர்வு விருப்பமாக மட்டுமே கருதும் நவீன மனம் வளர்ந்துவிட்ட ஒரு தலைமுறையிடம், நவீன ஏற்பின் ஒரு வடிவமாக சாதி, மதம் குறித்த அறிவை நிராகரித்துவிட்டு தங்களுக்கே தெரியாமல் அத்தளைகளின் வாதைக்குள் சிக்கியிருக்கும் ஒரு தலைமுறையிடம், பிராந்திய - வட்டார - மண்சார் - கலாச்சார - லட்சியவாத பிடிப்புணர்வுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு உறவு சமத்துவத்தை நா முத்துக்குமாரின் பாடல்கள் ஏற்படுத்தியிருக்கின்றன.

எஸ்.ராமகிருஷ்ணனின் புத்தனாவது சுலபம் கதையில் வரும் அருணைப் போன்ற, கவலையின்மை கொண்ட தலைமுறையிடம் உரையாடிய கவிஞர் முத்துக்குமார்.

*

முத்துக்குமார், எதார்த்தாவதத்தின் அழகியல் முழுமை. அந்த முழுமை தோறும், மனித உணர்வுகளை ஆக்கிரமிக்கும் மொழியின் ரகசியத்தினுள் ஈரத்தைப் படரவிட்டார் முத்துக்குமார். சோகம், கண்ணீர், வலி, ரணம், ரௌத்திரம், ஆத்திரம், கோபம், வன்மம் என சகல வெளிப்பாடுகளிலும் நா முத்துக்குமார் கவிதைகளில் ஒரு ஈரம் படர்ந்திருக்கும்.

உண்மையில், அந்த ஈரம் தான் முத்துக்குமார்.

நெருப்பு போன்ற உக்கிரமான சூழ்நிலைகளில், காய்ந்துபோன ரணங்களில், மீளமுடியாத நிராகரிப்புகளில், வெந்து தனிந்த அவமானங்களில் என எங்கெங்கும் முத்துக்குமாரின் இந்த ஈரம் படர்ந்திருக்கிறது.

முகப்புப் பட ஓவியம்- நடிகர் பொன்வண்ணன்

(கட்டுரையாளர் விவேக் கணநாதன், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்)

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Tamil Cinema Vivek Gananathan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment