கஷ்டமான காலகட்டத்தில், தாகூர் வழியில் நடப்போம்!

குற்றங்கள் இல்லை அமைதியே உண்மை, வெறுப்பு இல்லை அன்பே உண்மை, உண்மை என்பது ஒன்று தான். அதற்கு பல்வேறு வடிவங்கள் இல்லை என்கிறார், தாகூர்.

அவிஜித் பாத்

கலகக்காரர்களையும், சுயநலவாத கலாச்சாரத்தையும், உறுதியான மதக்கோட்பாடுகளையும் கொண்டுள்ள, இயந்திரத்தனமான பகுத்திறவினை போற்றிக் கொண்டாடுகின்ற ஒரு இடத்தில் இருந்து ஒரு கவிஞனை உருவாக்கி அவனை மாற்றுக் கோணத்தில் சிந்திக்கத் தூண்டுவது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை. ஆனால், யாராலும் எப்போதும் தவிர்க்க இயலாத அழகியலோடு உலவும் கவிதைகளுக்கும் இலக்கியத்திற்கும் சொந்தக்காரரான இரவீந்திரநாத் தாகூர் அவர்களை, அவரின் பிறந்தநாளன்று நினைவு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.

அவருடைய கவிதைகளை, உலகத்தின் ஒளிர்விடும் வண்ணங்கள் கொண்டு அழகாக்கியிருக்கின்றார். உபநிடத்தில் தேடப்படும் முடிவற்ற எல்லைகளின் மீதான காதலை இவரின் பாடல்கள் எங்கும் காணலாம். மயக்கும் தாகூருடைய சிறுகதைகள் அனைத்தும் படிப்பவர்களை திக்குமுக்காடவைத்தது. காபூல்வாலா இன்றும் நம் மனதை கொள்ளைய்டைத்துச் செல்லும் நமக்கான துணை. கணவனை விட்டு ஓடிப்போன ஒரு மனைவி தன்னுடைய கணவனுக்கு எழுதும் கடிதம் ஒன்றில் தன்னுடைய சுதந்திரத்திற்காக அவள் எவ்வளவு ஏங்கிப் போகின்றாள் என்பது நமக்கு புரிகின்றது. கோரா என்னும் புதினத்தில் வரும் ஆனந்தமயீ, பெண்மை மனதோடு இந்த நாகரீகத்தினை ஏற்றுக் கொள்ளும் பாங்கு, நந்தினி, ரெட் ஓலியண்டர் என தொடர்ந்து அவருடைய படைப்புகள் யாவும் பெண்மையின் வலிமையினை பிரதிபலித்துக் கொண்டு இருக்கின்றது. அமித் மற்றும் லாபண்யாவின் இறுதி பாடலில் தன்னுடைய நவீனத்துவத்தை மிக நளினமாக கையாண்டிருப்பார் தாகூர். தனக்கான தன் பாடலுக்கான இடத்தை இவ்வுலகில் அறிவியலால், சமூக சித்தாந்தங்களால், இயற்கையின் உந்துதலால் அடைந்தார் தாகூர்.

1941ல் “நாகரீக நெருக்கடிப் பற்றி அறிந்துகொள்ள முயன்றுகொண்டிருந்த நாட்களுக்கு மத்தியில் நான் என்னைக் கண்டடைந்தேன்” என்று ஒரு உரையில் கூறுகின்றார். நாகரீகமற்ற காட்டுமிராண்டித்தனமான வன்முறைகள் ஐரோப்பாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த நேரத்தில் அதை தொடர்ந்து வரும் நிகழ்வுகள் பற்றி தாகூர் முன் கூட்டியே உணர்ந்திருந்தார். வரலாறு மற்றும் சமூகவியல் கொண்டு நாம் தாகூரை அணுகுவோமானால் அவர் ஏன் ஒரு உண்மையான நாகரீத்தின் வசந்தகாலத்தால் இந்த பிரச்சனைகள் எல்லாம் முடிவுக்கு வரும் என்பதை மறுத்தார் என்பது புரியும். இந்த வன்முறைகள் அனைத்தும் மறைமுகமாக ஐரோப்பிய தேசத்தின் நவீனத்துவத்தின் மீதும், அக்கண்டத்தின் சுயநல தேசியவதாக் கொள்கைகளின் மீதும், தொழில்ரீதியான அடக்குமுறைகளின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களாகும். “ஒரு புதிய அதிகாலைப் பொழுது, கிழக்கில் சூரியன் எழும் போது உலகெங்கும் பரவும்” என்று அவர் கூறினார். ஒரு தேசத்தை உருவாக்கும் முனைப்பில் இருந்த நாம் அந்த கவிஞனின் அளவற்ற அறிவினை மறந்துவிட்டோம். இன்று, உலகப் பொருளாதாரம், மதச்சார்பு உடைய தேசியவாதம் என்று ஆட்சியாளர்கள் செய்யும் ஒவ்வொரு தவற்றையும் அன்று தாகூர் இந்த உரையை பேசியபோது ஐரோப்பியர்கள் சர்வாதிகாரம், தேசியவாதம், மற்றும் கலகம் என்ற பெயரில் செய்து வந்தார்கள்.

இன்றோ, நாம் எப்படி ஒரு உண்மையான நாட்டுப்பற்றாளனாக இருக்க வேண்டும் என்று அரசு நமக்கு சொல்லிக் கொடுக்கின்றது. நாம் நம்முடைய எதிரிகள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அவர்களிடமிருந்து தேசத்தை காக்க வேண்டும். தேவைப்படும் போது போராட்டத்தால், நாட்டின் மகிமையினை காத்திட வேண்டும். தேசத்தின் உருவத்தினை மறைமுகமாக வன்முறைகள் தாக்கிக்கொண்டிருக்கின்றது அவர் கூறினார். தேசியவாதம் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரை ஒன்றில் ஒரு இயக்கத்திற்காக செய்யப்படும் தியாகம் என்பது தார்மீகம். ஆனால் அந்த இயக்கத்தை தொடர்ந்து செயல்முறைபடுத்த முயல்வது இயந்திரத்தனமானது. ஒவ்வொரு முறையும் ஆட்சியாளர்கள் பயத்தினையும் வன்முறையினையும் உண்டாக்கும் போது தாகூர் மறைமுகமாக நம் காதுகளில் இந்தியாவினை ஒரு நாடாக பார்க்காமல் ஒரு வளர்ச்சியடைந்த பல்வேறு கலாச்சாரங்களையும் பண்பாடுகளையும் உடைய நாகரீகமாக பாருங்கள் கூறுகின்றார்.

கவிஞனின் மதம் என்ற கட்டுரையில் “மனிதன் தன் தேவைகளுக்கான வரம்பில் வாழ்பவன் அல்ல” என்று கூறுகின்றார். நேர்த்தியும் ஒற்றுமையும், சுற்றுப்புறத்தைச் சார்ந்ததாக இருக்கின்றது என்றும் கூறுகின்றார். மதத்தின் காப்பாளர்கள் என்று சொல்லி சிந்தாந்தகளையும் கொள்கைகளையும் மறந்துவிட்டு கலவரங்களிலும், வெறுப்பு உள்ளங்களையும் கொண்டிருப்போர் மத்தியில் நான் ரவீந்தரின் மதம் பற்றிய சிந்தனைகளைப் பற்றி நான் பேசிக் கொண்டிருக்கின்றேன். ஒரு உண்மையான மனிதன் என்பவன் அவனுடைய அறிவாலோ, அவனுடைய ஆக்கத்தாலோ அடையாளம் காணப்படாமல் அவனுடைய மனத்தினால் அடையாளம் காணப்பட வேண்டும் என்று கூறுகின்றார். இச்சமயத்தில் இந்த எழுத்தாளனின் எண்ணங்களை தூசித்தட்டி எழுப்பி, இன்று சமயங்களின் பெயரால் நடத்தப்படும் வழிப்பாட்டு அரசியல், பாலியல் வன்கொடுமைகள் என எதுவும் ஒரு மதத்தின் கீழ் வராது என்று நாம் எண்ணத் தொடங்குவோம். கலகக்கார தேசியவாத கொள்கைகளை நம்முடைய எண்ணங்களில் பதிய வைக்க தொடர்ந்து முயற்சிபதால் தானோ என்னவோ ஜான் கீட்ஸ்ஸினை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டமாக இருக்கின்றது. இதனால் தான் தாகூர் வழியில் நாம் இன்று செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். குற்றங்கள் இல்லை அமைதியே உண்மை, வெறுப்பு இல்லை அன்பே உண்மை, உண்மை என்பது ஒன்று தான். அதற்கு பல்வேறு வடிவங்கள் இல்லை.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 9.5.18 அன்று, நேரு பல்கலை கழக ஆசிரியர் அவிஜித் பாத் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில் : நித்யா பாண்டியன்

×Close
×Close