Advertisment

‘நீட்’ கண்ணாமூச்சி இனியும் வேண்டாம்

NEET Examination: நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்ற கண்ணாமூச்சி ஆட்டத்தை இனியாவது தவிர்க்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘நீட்’ கண்ணாமூச்சி இனியும் வேண்டாம்

கமல. செல்வராஜ்

Advertisment

நாடு முழுவதும் மருத்துவப் படிப்பின் தரத்தை உயர்த்துவதற்காக, மத்திய அரசு நீட் என்னும் தகுதித் தேர்வை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் தமிழகத்தைத் தவிரப் பிற அனைத்து மாநிலங்களும் இந்த நடைமுறையை ஏற்றுக்கொண்டுள்ளன.

தமிழகத்தில் மட்டும் பெரும்பாலான அரசியல் கட்சிகள் நீட் தேர்வை எதிர்ப்பதையே தங்களின் வாடிக்கையாகக் கொண்டுள்ளன. அதன் உச்சகட்டமாக, தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்குக் கேட்டு இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த இரண்டு மசோதாக்களும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டன. இதனால் மீண்டும் தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நீட் தேர்வு தொடர்பாக அரசியல் கட்சிகளின் விவாதங்களும் போராட்டங்களும் மீண்டும் வலுப்பெற்றுள்ளன.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள் முன் வைக்கும் விவாதங்கள் இரண்டு. ஒன்று இத்தேர்வினால் கிராமப்புறத்திலுள்ள மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பது. மற்றொன்று அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு இத்தேர்வு எழுதி வெற்றிபெறும் திறன் இல்லை என்பது.

இந்த விவாதங்கள் அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து, கிராமப்புற மாணவர்களும், அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் நீட் தேர்வு எழுதி வெற்றி பெறும் விதத்தில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன் முதல்கட்டமாக கடந்த ஆண்டு +1 மாணவர்களுக்காக மாற்றியமைக்கப்பட்ட பாடத்திட்டமும் இந்த ஆண்டு முதல் +2 மாணவர்களுக்காக மாற்றியமைக்கப்பட்டுள்ள புதியப் பாடத்திட்டமும் அமலுக்கு வந்திருக்கின்றன. இவை அனைத்து தரப்பு மாணவர்களும் நீட் தேர்வு எழுதி வெற்றிபெறும் அளவில் மத்திய அரசு பாடத்திட்டமான சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்திற்கு நிகராக அமைக்கப்பட்டுள்ளதாக மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

மேலும் கடந்த ஆண்டு தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக அரசு பள்ளிகளில் பயின்று, நீட் தேர்வு எழுத விரும்பிய மாணவர்களைத் தேர்தெடுத்து, அவர்களுக்கு அரசு செலவில், கல்வி வல்லுநர்களையும், தலைசிறந்த ஆசிரியர்களையும் கொண்டு சுமார் ஒருமாதக் காலம் உணவு, உறைவிடத்தோடு இலவசப் பயிற்சி அளித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மத்திய அரசும் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தேர்வு நடத்தாமல் தமிழ் உட்பட பல்வேறு மாநில மொழிகளில் தேர்வு எழுதுவதற்கு வாய்ப்பளித்தது. அதன் விளைவாக தமிழகத்தில் நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இருந்த 39.56 என்ற சதவீதத்திலிருந்து, இந்த ஆண்டு 48.57 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது தமிழகத்திலிருந்து நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள், நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தி, தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற குழப்பமான சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். மாணவர்கள் மத்தியில் இந்தக் குழப்பத்தை உருவாக்காமல் இருந்திருந்தால் இன்னும் அதிக நம்பிக்கையோடும் திடமான மனநிலையோடும் மாணவர்கள் தேர்வெழுதியிருப்பார்கள். அதன் மூலம் வெற்றி சதவீதம் மேலும் அதிகரிக்க ஏதுவாக இருந்திருக்கும். அதோடு சில மாணவர்களின் தற்கொலையையும் தவிர்த்திருக்கலாம்.

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பேரவையில் நிறைவேற்றப் பட்ட இரண்டு மசோதாக்களையும் குடியரசுத் தலைவர் நிராகரித்திருப்பதன் மூலமும், மத்திய அரசு நீட் தேர்வு நடத்துவதில் உறுதியாக இருப்பதன் காரணமாகவும், அத்தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்குக் கிடைப்பதென்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது.

எனவே தமிழக அரசும், அரசியல் கட்சிகளும், நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்ற கண்ணாமூச்சி ஆட்டத்தை இனியாவது தவிர்க்க வேண்டும். கிராமப்புறங்கள், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுதுவதற்கு தினம் தோறும் பள்ளிகளில், கல்வி வல்லுநர்களைக் கொண்டு இலவசப் பயிற்சி அளிப்பதற்கு வழிவகைச் செய்தால் வரும் ஆண்டுகளில் நடைபெறும் நீட் தேர்வுகளில், தமிழகத்திலுள்ள மாணவர்கள் பிற மாநில மாணவர்களைவிட அதிக சதவீததில் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி.

(முனைவர் கமல.செல்வராஜ், கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். எழுத்து, பேச்சு, கவிதை என பன்முக ஆளுமையாக இயங்கி வருபவர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com ))

 

Neet Dr Kamala Selvaraj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment