Advertisment

யு. ஜி. சி புதிய விதிகள்: உலகின் சிறந்த நடைமுறைகளுடன் நாம் ஒன்றிச் செல்கிறோமா?

புதிய விதிமுறைகள் துணைவேந்தர் தேர்வின் நடைமுறையில் உள்ள சில தெளிவற்ற தன்மைகளை நீக்கலாம். ஆனால் பல்கலைக்கழகங்களுக்குவெளியிலிருந்து வரும் தலையீட்டை எதிர்ப்பது, ஆராய்ச்சி தரத்தை உயர்த்துவது போன்ற முயற்சிகள் சவாலாக அமையக்கூடும்.

author-image
WebDesk
New Update
New draft UGC guidelines Are we in step with the best practices in the world Tamil News

நமது பல்கலைக்கழகங்கள் இன்று போதிய நிதியின்றி தவிக்கின்றன. தொழிற்துறை நிறுவனங்கள் அல்லது சேவைத் துறையின் பிரதிநிதிகள் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு வெளியே உள்ள அமைப்புகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்கள், ஒரு பல்கலைக்கழகத்தின் நோக்கங்களை சீர்திருத்த முயற்சி செய்வதற்கு முன் அதன் நெறிமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். (படம்: சி.ஆர் சசிகுமார்)

கட்டுரையாளர்கள்: அசோக் தாக்கூர், எஸ் எஸ் மந்த்தா.

Advertisment

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச தகுதிகளையும் மற்றும் உயர்கல்வியின் தரத்தை தொடர்ந்து தக்க வைப்பதற்கான நடவடிக்கைகளையும் பரிந்துரைப்பதன் மூலம் யு.ஜி.சி-யின் சமீபத்திய வரைவு விதிமுறைகள் தேசிய கல்விக் கொள்கையின் (NEP) நோக்கங்களை பிரதிபலிக்கின்றன. அவைகள் துணைவேந்தர் (வி.சி) பதவிக்கான தேர்வு முறையில் உள்ள தெளிவற்ற தன்மைகளை நீக்குவது மட்டுமின்றி, கல்வித் துறையைச் சாராதவர்களுக்கும் இந்தப் பதவியை வழங்க முயல்கின்றன.

ஆங்கிலத்தில்  படிக்கவும்: New draft UGC guidelines: Are we in step with the best practices in the world?

ஒரு பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டிற்கு துணைவேந்தர் பதவியே மையமாக உள்ளது. பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் நிர்வாகத் தலைவராக, அவர் பல்கலைக்கழகத்தின் நிர்வாக சபை, ஆசிரியர்களின் பேரவை மற்றும் பல்கலைக்கழகத்தின் நிதிக் குழுவின் கூட்டங்களைத் தலைமை தாங்குகிறார். அவர்  பல்கலைக்கழகத்தின் பிரதிநிதியாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விளங்குகிறார். அவர் பல்கலைக்கழகத்தின் நிதி நிலையைப் பாதுகாப்பதற்கும், நிறுவனத்தின் இலக்கு, நோக்கங்கள் மற்றும் குறிக்கோள்களை செயல்படுத்தவும் அதை வலிமையானதாக மாற்றுவதற்கும் பொறுப்பானவர். இந்தப் பதவியின் ஆணை (பொறுப்பு) மனிதகுலத்திற்கும் பிரபஞ்சத்திற்கும் தேவையான ஞானத்தை உருவாக்குவதாகும் - "பல்கலைக்கழகம்" என்ற சொல் இந்த நோக்கத்திலிருந்து பெறப்பட்டது. எடின்பர்க் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் பீட்டர் மேதீசன், ஒருமுறை இந்த அவசியத்தை பொருத்தமாகவும் சுருக்கமாகவும்: "பல்கலைக்கழகங்கள் கற்பதற்காக மட்டுமல்ல. அவை ஞானத்தை உருவாக்குவது, தற்போதைய நிலையை மறுசீராய்வு செய்வது மற்றும் ஆராய்ச்சி மற்றும் கல்வி மூலம் உலகை வாழ்வதற்கு சிறந்த இடமாக மாற்றுவது" என்று  கூறியுள்ளார்.

Advertisment
Advertisement

துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேர்வுக் குழு அமைப்பதில் தற்போதுள்ள சில தெளிவற்ற தன்மைகளை இந்த ஒழுங்குமுறை நீக்குகிறது. அத்தகைய அதிகாரங்கள் இப்போது கவர்னர்- வேந்தர் அல்லது மேற்பார்வையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. முன்பு, அரசாங்கம் தாங்கள் கொடுத்த மூன்று பெயர்களின் பட்டியலிலிருந்து ஆளுநர்-வேந்தரை ஒரு நபர் பெயரைப் பரிந்துரைக்கும்படி கோரும். ஆளுநர்- வேந்தர் இப்போது தனது பிரதிநிதியை பரிந்துரைப்பார். தரம்/கல்வியின் தகுதிநிலைகளை தக்க வைப்பது பராமரிப்பது அதன் ஆணை (பொறுப்பு) என்பதால், யுஜிசி பரிந்துரைக்கும் ஒரு நபர் எப்போதும் தேர்வுக் குழுவின் ஒரு உறுப்பினராக இருப்பார். 

மூன்றாவது உறுப்பினர் மேலாண்மை சபை (கவுன்சில்)அல்லது செனட் போன்ற பல்கலைக்கழகத்தின் உச்ச அமைப்பால் பரிந்துரைக்கப்படுவார். இந்த அமைப்புகளில் மாநிலத்தில் ஆளும் கட்சியுடன் தொடர்புடைய பிரதிநிதிகள் இருக்கலாம். ஆனால், துணைவேந்தர் தேர்வில் மாநில அரசுகள் குரலுக்கு செவி சாய்ப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

சமீப காலமாக, துணைவேந்தரின் பதவி சில மாநிலங்களில் சர்ச்சையை எழுப்பியுள்ளது. சில மாநில அரசுகள் கவர்னர்-வேந்தரை மாற்றி முதல்வர்-வேந்தரை நியமிக்க முயற்சி செய்தன.
இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு அரசியல் தலையீட்டைத் தவிர்க்க இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதால், இந்த முயற்சி விசித்திரமாக உள்ளது.

துணைவேந்தர் பதவியை கல்வித்துறை அல்லாதவர்களுக்கு வழங்குவது குறித்து, கல்யாணி மதிவாணன் அரசுக்கு (2015) எதிரான வழக்கை நினைவுபடுத்தாமல் இருக்க முடியாது, அதில் சென்னை உயர்நீதிமன்றம் பிரபலமாகக் குறிப்பிட்டது: "ஒழுங்குமுறை ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாவிட்டால்இன்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீனைக் கூட  இந்தியாவில் உள்ள எந்தப் பல்கலைக்கழகத்திற்கும் 
துணைவேந்தராக நியமிக்க முடியாது". எனவே நியமன முறைகளில் நெகிழ்வுத்தன்மை வேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றாகும். அதே நேரத்தில், இதனால் பதவியின் "மேன்மை" விட்டுக்கொடுக்கக் கூடிய ஒரு சூழ்நிலைக்கு இது வழிவகுக்கக்கூடாது. இத்தகைய சூழ்நிலைகளைத் தவிர்க்க, தொழில்துறை வல்லுநர்கள், பொதுத்துறையின் அனுபவமிக்கவர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் அல்லது அனுபவம் வாய்ந்த நிபுணர்களை நேரடியாக துணைவேந்தராக நியமிக்கலாம் என்று வரைவு முன்மொழிகிறது. இது ஒரு துணிச்சலான நடவடிக்கை. இருப்பினும், இந்த முயற்சிக்கு சுயநலவாதிகளின் எதிர்ப்பு ஒரு சவாலாக இருக்கலாம்.

அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேடல் குழு, பல்கலைக்கழகத்தின் செயல்முறைகளில் பங்கேற்கும் மூத்த நிர்வாகிகள், முதல்வர், ஆசிரியப் பிரதிநிதிகள், ஊழியர்கள், மாணவர்கள் (எப்போதாவது) மற்றும் அறங்காவலர்கள் அல்லது குழு உறுப்பினர்கள் போன்றவர்களைக்  கொண்டுள்ளது. இங்கிலாந்தில், ஒரு தேடல் குழுவில் பொதுவாக பல்கலைக்கழக ஆளுநர்கள்/அறங்காவலர்கள், துணைவேந்தர்கள் போன்ற மூத்த பல்கலைக்கழகத் தலைவர்கள், ஆசிரியப் பிரதிநிதிகள் மற்றும் வெளி ஆலோசகர்கள் அல்லது தேடல் நிறுவனங்கள் இருக்கும். ஆசிரியர்களும் மாணவர்களும் கூட தேடல் குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர், இது மிகவும் உள்ளடக்கிய மற்றும் வெளிப்படையான தேடல் முறைக்கு வழி வகுக்கிறது.

மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி அல்லது ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் போன்ற நிறுவனங்கள் பன்முகத்தன்மை கொண்டவை மற்றும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை, இருப்பினும் இந்த பல்கலைக்கழகங்கள் தங்களது உயர்ந்த நிர்வாகத் தலைமையைக்  குறிப்பிடுவதற்கு பெரும்பாலும் வேந்தர் அல்லது அதிபர் என்ற பட்டத்தை பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே, அறங்காவலர் குழு ஒரு தேடல் குழுவை உருவாக்குகிறது, இது ஒரு புதிய துணைவேந்தரின் தகுதிகள் மற்றும் விரும்பிய குணங்களின் பட்டியலை உருவாக்கி பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் தொடர்பு கொள்கிறது, பின்னர் அனைத்து பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்கிறது மற்றும் பொருத்தமான வேட்பாளர்களை அடையாளம் காட்டுகிறது. இதில் முறையான நேர்காணல்கள், பின்னணியை சரிபார்த்து மதிப்பிடுவது ஆகியவை அடங்கும். அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ, அத்தகைய நியமனங்களுக்கான தகுதிகளைப் பரிந்துரைக்கும் கட்டுப்பாட்டாளர்கள் யாரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரைவு விதிமுறைகளின் சில விதிகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டவை. உதாரணமாக தொழில்நுட்ப நிறுவனங்களில் நுழைவு நிலை உதவிப் பேராசிரியர் பதவிக்கான யு.ஜி.சி- நெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான தேவையை ரத்து செய்தல். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் எம்.இ அல்லது எம்.டெக் பட்டம் பெற்றிருந்தால் போதுமானது. ஒப்பந்த ஆசிரியர் நியமனங்கள் மீதான உச்சவரம்பு நீக்கம்  தேசிய கல்விக் கொள்கையின் நோக்கங்களுக்கு ஏற்ப உள்ளது மற்றும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இது நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் காலியாக உள்ள அதிக எண்ணிக்கையிலான பணியிடங்களை நிரப்ப உதவும்.

ஒரு முற்போக்கான சமூகத்தின் உறுப்பினர்களாக, கல்வி அமைச்சரின் இந்த விதிமுறைகள் மீதான நம்பிக்கையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இருப்பினும், உலகின் சிறந்த நடைமுறைகளுடன் நாம் ஒன்றிப் போகிறோமா என்று நாம் நின்று சிந்திக்க வேண்டும். நமது பல்கலைக்கழகங்கள் இன்று போதிய நிதியின்றி தவிக்கின்றன. தொழிற்துறை நிறுவனங்கள் அல்லது சேவைத் துறையின் பிரதிநிதிகள் போன்ற பல்கலைக்கழகங்களுக்கு வெளியே உள்ள அமைப்புகளைச் சேர்ந்த புகழ்பெற்ற நபர்கள், ஒரு பல்கலைக்கழகத்தின் நோக்கங்களை சீர்திருத்த முயற்சி செய்வதற்கு முன் அதன் நெறிமுறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில், அவர்கள் ஒரு சிறந்த தொலைநோக்குப் பார்வையை கொண்டு வரவும், நிதியை உருவாக்கவும் உதவலாம்.  அவர் எந்த வகையில் தேர்ந்தெடுக்கப் பட்டாலும், இன்று துணைவேந்தர்களுக்கு இருக்கும் சவால் ஆராய்ச்சிகளின் தரத்தை உயர்த்துவதும் மற்றும் சர்வதேசமயமாக்கலே ஆகும். அது நமது பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்தவும், உலகின் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக அவற்றை வைக்கவும் உதவும். அந்த நோக்கத்திற்கு இந்த விதிமுறைகள் உதவும் என்று நம்புகிறோம்.

கட்டுரையாளர்களில் அசோக் தாக்கூர் இந்திய அரசின் முன்னாள் கல்வித்துறை செயலாளராக பணிபுரிந்தவர். எஸ் எஸ் மந்த்தா அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) முன்னாள் தலைவர் ஆவார். 

மொழிபெயர்ப்பு: எம். கோபால். 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment