SG சூர்யா, கட்டுரையாளர்
கடந்த ஜுன் 19 அன்று மாநிலங்கள் மத்தியத் தொகுப்புக்கு அளிக்கும் மருத்துவ இடங்களில் முதுநிலை மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ், 50 சதவீத இடஒதுக்கீட்டுக்கு உட்பட்டு, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு உரிய 27 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்கத் தயாராக இருக்கிறோம் என ஒதுக்கீடு கோரி தொடுக்கப்பட்ட வழக்கில் கோரிக்கையை ஏற்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது மத்தியஅரசு. ஆனால், இது முதன்முறையாக கூறப்படுவது அல்ல, 2015-ஆம் ஆண்டில் இருந்தே உச்ச நீதிமன்றத்தில் இந்த வாதத்தை தான் மத்திய பா.ஜ.க அரசு பின்பற்றியுள்ளது. எனவே, இந்த முடிவு தி.மு.க-வின் அழுத்தத்தினால் எடுக்கப்பட்ட முடிவு என்பதில் உண்மை இல்லை. அதற்கான விளக்கமே இந்த கட்டுரை.
மருத்துவக் கவுன்சிலின் விதிகளின் படியே ஒவ்வொரு மாநிலமும் இளநிலை மற்றும் பட்டயப்படிப்புகளில் 15 சதவீத இடங்களையும் முதுகலை படிப்புகளில் 50 சதவீத இடங்களையும் மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்குகின்றன. ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள இடங்களை நிரப்பும்போது அந்தந்த மாநிலங்களில் இட ஒதுக்கீட்டுக் கொள்கையின்படி அவற்றை நிரப்பவேண்டுமென மருத்துவக்கவுன்சிலின் விதிமுறைகள் இருக்கின்றன.
அகில இந்திய இடஒதுக்கீடு என்பது என்ன?
பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை ஈடுசெய்ய மத்தியஅரசுஇளநிலை மற்றும் முதுநிலை படிப்புகள் அகில இந்திய இடஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்தியது. இதன்படி இளநிலை இடங்களில் 15 சதவீதமும் முதுநிலை இடங்களில் 50 சதவீதமும் மாநில இடங்களில் இருந்து எடுக்கப்பட்டு தேசிய அளவிலான தகுதிப்பட்டியல் மூலம் நிரப்பப்படும். இது எந்த மாநில மாணவரும் அகில இந்திய இடஒதுக்கீட்டின் கீழ்வரும் இடங்களுக்கு விண்ணப்பிப்பதை அனுமதிக்கிறது.
காலக்கோடு:
1984 : அகில இந்திய ஒதுக்கீட்டில் 25% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும் என்று முதன்முதலில் யோசனைகூறப்பட்டது. (Dr பிரதீப்ஜெயின் வழக்கு)
2003 : முதுநிலை படிப்புகளுக்கான அகிலஇந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு 50%ஆக அதிகரிக்கப்பட்டது (சௌரப்சௌத்ரிவழக்கு - தலைமை நீதிபதி கரே, TMA Pai வழக்கில் நீதிபதியாக இருந்தவர்)
2007 : அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்த 50% இடஒதுக்கீட்டில் SC/ST பிரிவினருக்கு 22.5% உள்ஒதுக்கீடு (அபய்நாத்வழக்கு)
இடஒதுக்கீடு வரலாற்று பின்னணி:
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் முதுகலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்காக அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வு நடத்த ஒரு சுதந்திரமான அமைப்பு உருவாக்க வேண்டும் என்றும் ஒவ்வொரு மருத்துவ கல்லூரிகளிலும் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீதத்துக்கு குறையாமல் தேசிய நுழைவு தேர்வு மூலம் இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு 1986-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.
எனவே நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளங்கலை மருத்துவ படிப்பில்15 சதவீத இடங்களும், முதுகலை மருத்துவ படிப்பில்25 சதவீதம் இடங்களும் வழங்கப்பட்டது. நன்றாக படிக்கக்கூடிய மாணவர்கள்இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் நாட்டில் உள்ள எந்த ஒரு மருத்துவ கல்லூரிகளையும் தேர்வு செய்யும் விதமாக இந்த திட்டம் முதலில் உருவாக்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2005-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவின்படி, முதுகலை மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீடு 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாகஉயர்த்தப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் எஸ்.சி. பிரிவு மாணவர்களுக்கு 15 சதவீதஇடங்களும், எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு 7.5 சதவீத இடங்களும் கடந்த 2007-08-ஆம் கல்வியாண்டு முதல் வழங்கப்படுகிறது.
எத்தனை சதவீதம்?
நாடு முழுவதும் உள்ள மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் மட்டும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 வழங்க மத்திய அரசு கடந்த 2007-ஆம் ஆண்டு அரசிதழ் வெளியிட்டது. முதுகலை மருத்துவம், பல் மருத்துவம் படிப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு10 சதவீதஇடங்களை ஒதுக்கி மத்திய அரசு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மற்றொரு உத்தரவை பிறப்பித்தது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்காக மருத்துவ இடங்களை ஒரு முறை ஒதுக்கிவிட்டால், அந்த இடங்களில் மாநில அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறை பொருந்தாது. அந்த இடங்கள் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றிதான் நிரப்பப்படும்.
2020-ஆம் ஆண்டு முதுகலை மருத்துவ படிப்புக்கான 'நீட்' கவுன்சிலிங்கில், எஸ்.சி. பிரிவினருக்கு15 சதவீதமும், எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 சதவீதமும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களில் மட்டும் (கிரிமீலேயர் அல்லாதவர்களுக்கு) 27 சதவீதமும், மாற்றுத்திறனாளிக்கு 5 சதவீதமும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு10 சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.
இடஒதுக்கீடு கிடையாது:
இந்த கவுன்சிலிங்கில் இரு சுற்றுகளில் நிரப்பப்படாத அகில இந்திய இடங்கள், சம்பந்தப்பட்ட மாநில அரசிடம் திருப்பி வழங்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் இடங்களை அந்தந்த மாநிலங்களில் பின்பற்றப்படும் இடஒதுக்கீட்டு முறையில் மாநில அரசுகள் நிரப்பிக் கொள்ளலாம். ஆனால், ஏற்கனவே இடஒதுக்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு வருகிற ஜூலை 8-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
இந்த வழக்கில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண மனுவில், மருத்துவ படிப்பில் அகில இந்திய இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதே நேரம், எஸ்.சி., எஸ்.டி., உள்ளிட்ட பிரிவினர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் இடஒதுக்கீடுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம், மொத்த இடங்களில் 50 சதவீதம் மிகாமலும் இடஒதுக்கீடு இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
1986-ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களை தவிர வேறு மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு கிடையாது. இந்த வழக்குகளை தொடர்ந்துள்ள அரசியல் கட்சிகளில் சில கட்சிகள் மத்தியில் கூட்டணியில் அங்கம் வகித்தபோது பின்பற்றப்பட்ட முறைதான், தற்போதும் பின்பற்றப்படுகிறது.
கடந்த வாரம் நீதிமன்றத்தில் என்ன நடந்தது?
ஓபிசி பிரிவினரின் அமைப்புக்களும் தமிழக கட்சிகளும் தற்போது நடைபெற்று வரும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நிறுத்திவிட்டு ஓபிசிகளுக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தவேண்டும் என்று கடந்த மே 29 அன்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இது அடிப்படை உரிமை மீறல் சார்ந்த மனு இல்லை என்பதால் மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடுமாறு அறிவுறுத்தியது.
இந்த மனு மீதான விசாரணையின்போது தாங்கள் 27% ஓபிசி இடஒதுக்கீட்டை எல்லா இடங்களுக்கும் விரிவுபடுத்த தயாராக இருப்பதாகவும் இதே பதிலை உச்சநீதிமன்றத்தில் 2015-லிருந்து நிலுவையில் இருக்கும் சலோனிகுமார் வழக்கிலும் தாக்கல் செய்திருப்பதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது. எனவே இந்தப் பிரச்சினை மீண்டும் உச்சநீதிமன்றத்துக்கே வந்துவிட்டது; சலோனிகுமார் வழக்கு விசாரணை ஜூலை 7, 2020 அன்று பட்டியலிடப்பட்டுள்ளது.
அரசியல் விளைவுகள்
இதற்கு யார் உரிமை கோருகிறார்கள்?
தி.மு.க 14 வருடங்களாகஇதைப் பற்றி கவலைப்படவே இல்லை. ஆனால் வாய்ப்பு கிடைத்த உடன் வெகுவிரைவாக இந்த விஷயத்தை அடுத்தடுத்த படிகளுக்கு நகர்த்தினார்கள்.
மத்திய பா.ஜ.க அரசு 2015-லேயே இந்த இடஒதுக்கீட்டு முறைக்கு ஒத்துக்கொண்டு நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தும் விட்டது.
திடீரென தி.மு.க-வின் நாடகம்:
2010-11 வாக்கில் மத்திய அரசில் தி.மு.க அங்கம் வகித்தது. அதுமட்டுமின்றி, தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சராகவும் பதவி வகித்தார். அப்போது திமுக நினைத்திருந்தால் மிகவும் எளிதாக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்ய அப்போது அவர்களுக்கு மனமும் இல்லை; நேரமும் இல்லை. இப்போது திடீரென கிளம்பி, இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கெல்லாம் நாங்கள் தான் காரணம் என்று கூறி வருவது, யாரோ பெற்ற பிள்ளைக்கு, தன் பெயரை இனிசியலாக வைத்தது போல அல்லவா இருக்கிறது?
இந்த கட்டுரையை எழுதியவர் SG சூர்யா,
செய்தித்தொடர்பாளர், பா.ஜ.க.
துணைத்தலைவர், இளைஞரணி, பா.ஜ.க தமிழ்நாடு
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.