எடப்பாடியின் ஓராண்டு : விக்கெட்டை பாதுகாத்தார், ரன்கள் வரவில்லையே?

உட்கட்சி அரசியல், பதவி நெருக்கடி - இவற்றிலேயே அவரது பெருமளவு கவனம் இருந்ததே தவிர, நிர்வாகத்தில் முத்திரை பதிக்கும் மாதிரி அவர் எதுவும் செய்யவுமில்லை.

அரவிந்தன்

தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. இவர் இந்தப் பதவிக்கு வருவார் என்று மக்கள் எதிர்பார்த்து, அல்லது அதற்காக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல என்பது தெரிந்த செய்திதான். சொல்லப்போனால், அவருக்கு இப்பதவி கிடைத்தது, சற்றும் எதிர்பாராத ஒரு நிகழ்வு.

2016 டிசம்பரில் ஜெயலலிதா மறைந்தபோது நடந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டமன்றக் கட்சித் தலைவராக (முதல்வராக) தேர்வானவர் ஓ. பன்னீர்செல்வம் தான். அப்போது சில வாரங்கள் முதல்வராக இருந்த அவர், ஜல்லிக்கட்டு போராட்டத்தையும், சென்னையில் வீசிய புயல் பாதிப்பையும் சரியாகவே கையாண்டார். ஆனால் அவர் பதவியில் நீடிப்பதை விரும்பாத சசிகலா, கட்டாயப்படுத்தி அவரைப் பதவி விலக வைத்தார்.

குடும்பத்தார் சிலரும், அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரும் தூபம் போட்டதன் விளைவு – கட்சி, ஆட்சி இரண்டுமே தன் பிடியில் இருக்க வேண்டும் என்று சசிகலா விரும்பினார். எம்.எல்.ஏ.க்களை சென்னைக்கு வெளியே கடற்கரையோர ரிசார்ட்டில் தங்க வைத்து, பேரங்கள் நிகழ்த்தப்பட்டு, சட்டமன்றக் கட்சித் தலைவராக சசிகலாவின் தேர்வு அரங்கேறியது.

ஆனால் இங்குதான் ஒரு திருப்பம் – எடப்பாடிக்கு ‘ஜாக்பாட்’ அடிக்க வழி வகுத்தது. சுப்ரீம் கோர்ட்டில் சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு நிலுவையில் இருந்ததால், சசிகலாவைப் பதவி ஏற்க அழைப்பதற்கு அவசரம் காட்டாமல் அன்றைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் சட்ட ஆலோசனையை நாடினார். ஒரு வாரத்துக்குள் சசிகலாவுக்குத் தண்டனை என்ற செய்தி வந்தது. கட்சிக்குள் நிதி பலம் மிக்கவராக இருந்த எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் பதவிக்கு சசிகலா தேர்வு செய்தார். இது முன்கதைச் சுருக்கம்.

சசிகலா சிறைக்குப் போவதற்கு முன், கட்சியைத் தன் குடும்பக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஏற்பாடாக, டி.டி.வி. தினகரனைத் துணைப் பொதுச் செயலாளராக்கினார். அந்த சமயத்தில் முதல் சோதனை எடப்பாடிக்கு உருவானது. ஜெயலலிதா மறைவால் உருவான ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி காலியிடத்திற்கு டி.டி.வி. தினகரன் போட்டியில் இறங்கினார். இதனிடையே பதவி பறிக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக ‘தர்மயுத்தம்’ தொடங்கி, தனி அணி கண்டிருந்தார். அவரை 11 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே ஆதரித்தனர். இருந்தாலும் மத்திய அரசை நடத்தும் பா.ஜ.க. மேலிடத்தின் ஆசி அவருக்கு இருந்தது.

ஆர்.கே. நகர் தேர்தலில் முதல்வரும், அவரது அமைச்சரவை சகாக்களும் தினகரனுக்காகப் பிரச்சாரம் செய்தாலும், உள்ளூர அவர் வெற்றி பெறக் கூடாது என்றே பலரும் விரும்பினார்கள். காரணம், அவர் வென்றால், எங்கே தன்னை பதவியில் இருந்து நகர வைத்து விடுவாரோ என்று எடப்பாடிக்கு உள்ளூர இருந்த கவலை. அந்தத் தேர்தல் நேரத்தில் தேர்தல் கமிஷன் மேற்கொண்ட பணப் பறிமுதல், அதன் மூலம் கிடைத்த ஒரு துப்பைக் கொண்டு, வருமான வரித்துறை சுகாதார அமைச்சர் வீட்டில் சோதனை நடத்தி 89 கோடி ரூபாய் அளவுக்கு வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா தொடர்பாகக் கைப்பற்றிய சில குறிப்புகள் எல்லாமாகச் சேர்ந்து தேர்தல் நிறுத்தப்பட வழி வகுத்தது. இது எடப்பாடியின் பதவி தப்புவதற்குச் சாதகமாக நிகழ்ந்த முக்கிய திருப்பம் எனலாம்.

இந்த கட்டத்தில் சசிகலா குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க. இருப்பதை பா.ஜ.க. மேலிடம் துளியும் விரும்பவில்லை என்பதை எடப்பாடிக்கு சில அமைச்சர்கள் சரியாகப் புரிய வைத்தார்கள். சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு கட்சி செயல்படுமென 10 அமைச்சர்கள் கூட்டாக நிருபர்களிடம் அறிவித்தார்கள். அடுத்த நகர்வாக தனி அணியாக இருந்த ஓ. பன்னீர்செல்வத்துடன் இணைப்பு பேச்சுவார்த்தையைத் தொடங்கினார்கள். பா.ஜ.க. மேலிடமும் இதை விரும்பியது. இங்குதான் எடப்பாடியின் அடுத்த வெற்றியும், பன்னீர்செல்வத்தின் சறுக்கலும் நிகழ்ந்தது.

கட்சி நடத்துவதில் பொருளாதார ரீதியாகச் சந்தித்த சிரமங்களின் நெருக்கடியில் இருந்த ஓ.பி., முதலமைச்சர் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் என்ற இரண்டும் (பா.ஜ.க. ஆதரவு இருப்பதால்) தனக்கு கிட்டும் என்று எதிர்பார்த்தார். இதை நிபந்தனையாகவும் விதித்தார். ‘இரண்டும் கிடையாது; இதைத் தவிர வேறு ஏதாவது கேளுங்கள்’ என்று எடுத்த எடுப்பிலேயே தீர்மானமாக இருந்தார் எடப்பாடி.

பல சுற்றுப் பேச்சுகளுக்குப் பிறகு, கலெக்டராக இருந்தவர் தாசில்தார் ஆவது மாதிரி, முதலமைச்சராக இருந்த பன்னீர்செல்வம், துணை முதல்வர் பதவி அளிக்க முன் வந்ததை ஏற்றார். அவர் விரும்பிய கட்சி பொதுச் செயலாளர் பதவியும் தரப்படவில்லை. மாறாக, பொதுச் செயலாளர் என்ற பதவியையே எடுத்து விடுவதாகத் தீர்மானம் போட்டு, முழு அதிகாரம் இல்லாத ‘ஒருங்கிணைப்பாளர்’ என்ற புதிய பதவியை உருவாக்கி, அதை ஓ.பி.க்கு அளித்து, இணை ஒருங்கிணைப்பாளர் என்ற ‘இரட்டைத் தலைமை’க்கு வழி வகுக்கும் பதவியில் எடப்பாடி அமர்ந்து கொண்டார். இது அரசியல் ரீதியாக அவர் பெற்ற மற்றொரு வெற்றி.

இப்படியாக கடந்த ஓராண்டில் உட்கட்சி அரசியல், பதவிக்கு ஏற்பட்ட நெருக்கடி – இவற்றிலேயே அவரது பெருமளவு கவனம் இருந்ததே தவிர, நிர்வாகத்தில் முத்திரை பதிக்கும் மாதிரி அவர் எதுவும் செய்யவுமில்லை; அதற்கான முனைப்பையும் செலுத்தவில்லை. ஜெயலலிதாவால் சில முக்கிய துறைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திறமை வாய்ந்த அதிகாரிகள்தான் அரசு நிர்வாகத்தை எடப்பாடியின் முதல் ஆறு மாதங்கள் பார்த்துக் கொண்டார்கள் என்று சொன்னால் அது மிகையல்ல.

ஜெயலலிதா பாணியில், ‘பூரண மதுவிலக்கை நோக்கி’ என்ற பெயரில், 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் கோப்பில் எடப்பாடியும் கையெழுத்திட்டார். ஆனால் சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவால் தேசிய – மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்திருந்த, சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகளை மூட நேரிடும் நிலை உருவானபோது, வருமானத்தை மட்டுமே குறியாகக் கொண்டு, அந்தக் கடைகளை மீண்டும் திறக்கச் செய்ய அரசு அரும்பாடுபட்டது. இதை வேண்டுமானால் ஒரு ‘சாதனை’யாகக் கூறிக் கொள்ளலாம்.

மற்றபடி, பெரிய அளவில் புதிய வேலை வாய்ப்புகளை அளிக்கக் வடிய ஒரு புதிய பெரும் தொழில் திட்டத்தைக் கொண்டு வந்ததாகவோ, அதற்கான ஒப்பந்தம் போட்டதாகவோ எடப்பாடி சொல்லிக் கொள்ள முடியாது. நிர்வாகத் திறமையை அவர் வெளிப்படுத்தியிருப்பதாக பறைசாற்றுவதற்கும் ஒரு சான்றுகூட தென்படவில்லை.
மாறாக, மருத்துவக் கல்வி பயிலும் மாணவர்களுக்குத் தமிழகத்திற்கு மட்டும் 2017இல் நீட் தேர்வில் இருந்து விலக்கு கிடைத்துவிடும் என்ற தவறான நம்பிக்கையை விதைத்து, அதன் காரணமாக மாணவர்களிடம் பெரும் குழப்பமும், மனச் சோர்வும் ஏற்பட இந்த அரசு காரணமாக அமைந்தது.

ஜெயலலிதா தொடங்கி வைத்த இலவசத் திட்டங்களை, நிதிநிலைத் தள்ளாட்டத்திற்கு மத்தியிலும் தொடர்ந்து செயல்படுத்துவதை ஒரு சாதனையாக ஆட்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்தத் திட்டங்களில் ஒன்றில் கை வைத்தாலும், நிஜத்திற்கும், நிழலுக்கும் உள்ள இடைவெளி பட்டவர்த்தனமாக பல்லிளித்துவிடும்.

ஆகவே, வருவாயை அதிகரிக்க வழி புரியாமல் விழி பிதுங்கி நிற்கிறது அரசு. கடைசியாக, அரசுப் பேருந்துகளைப் பயன்படுத்தும் சாதாரண மக்கள் மீது அதிரடித் தாக்குதல்போல, இரு மடங்கு, மூன்று மடங்கு கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது சாதனைப் பட்டியலில் வராது; வேதனைக் கணக்கில்தான் கூடும்.

முதலமைச்சர் வசம் உள்ள பொதுப்பணி, நெடுஞ்சாலை உள்ளிட்ட ஒப்பந்தப் பணிகள் நடைபெறும் துறைகள் மீதெல்லாம் ஊழல் புகார்கள் எழுந்துள்ளன. துணைவேந்தர் பதவிக்கும், தேர்வாணைய உறுப்பினர் பதவிகளுக்கும் பேரங்கள் என திரும்பிய பக்கமெல்லாம் இலஞ்சப் புகார்கள். அதனால் மத்திய பா.ஜ.க. மேலிடத்தின் ஆசியையும், அ.தி.மு.க,. இப்போது இழந்திருக்கிறது. புதிய கவர்னர் புரோகித்தின் அதிரடி ஆய்வுகள் மூலம் அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

பதவி நாற்காலியை இடையில் இழக்காமல் எடப்பாடி ஓராண்டைக் கடந்து முடிந்திருப்பதே ஒரு சாதனை என்று வேண்டுமானால் சொல்லலாமே தவிர, குறிப்பிடத்தக்கபடி அவர் செய்த ஒன்றைக் கூற வேண்டும் என்றால், யோசித்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். விக்கெட்டை மட்டும் பாதுகாத்துக் கொண்டு, சிங்கிள் ரன்கூட எடுக்காமல் நிற்கும் பேட்ஸ்மேனால் அணிக்கு என்ன லாபம்?

 

×Close
×Close