நீதி மட்டுமே வேண்டும்

நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டாலும் அவர்கள் எந்நேரமும் நம் மீது ஒரு கொடூரத்தை நிகழ்த்த தயாராக இருக்கின்றார்கள்.

ஷெஹ்யார் கானகம்

ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்த சம்பவங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது ஒரு வகை என்றால், அந்த சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் எதிரே அமர்ந்து கொண்டு பேசுவது என்பது மற்றொரு வகை. கொஞ்சம் நெருடலானதும் கூட. கடந்த வாரம் நாங்கள் அதைத்தான் செய்தோம். கத்துவாவில் நடந்த வன்முறை தொடர்பாக காஷ்மீர் சென்று வந்த தினத்திலிருந்து தூங்குவது தொடங்கி, அடுத்தடுத்த வேலைகளில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதென்பது மிகவும் சிரமம் வாய்ந்ததாக இருக்கின்றது.

ஸ்ரீநகரில் இருந்து நூறு கிலோ மீட்டருக்கு அப்பால், தார்ப்பாய் கூரைக்கு கீழே அமர்ந்து, கத்துவா சிறுமியின் பெற்றவர்களை நேருக்கு நேர் பார்த்து பேசிக் கொண்டு இருந்த தருணங்களை என்னால் வார்த்தைகள் கொண்டு விளக்கிட இயலவில்லை. நானும் என்னுடன் பணி புரியும் தரப்பும் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களிடம் சென்று அவர்களின் கருத்தினை கேட்டறிவதில் திறம்படவே செயல்பட்டு வந்தோம் கத்துவா செல்லும் முன்பு வரை. ஆனால் சிறுமி அம்மாவின் கண்கள் வழியே அந்த சிறுமி, எங்களைப் பார்பது போன்ற உள்ளுணர்வு. அந்த சிறுமியின் தாயாருக்கு இருக்கும் அதே கண்கள் தான், தொலைக்காட்சி வழியாக, காஷ்மீரில் ஓடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு வாகனத்திலும் ஒட்டப்பட்டிருக்கும் போஸ்டர் வழியாகவும் அவள் எங்களையே பார்த்துக் கொண்டிருப்பதாய் ஓர் உணர்வு.

அவர்களுக்கும், அவர்களின் பெண் குழந்தைக்கும் என்ன நடந்தது என்பதைப் பற்றி நாங்கள் கேட்கவோ, பேசவோ விரும்பவில்லை. மீண்டும் மீண்டும் அதைப் பற்றி பேசி அவர்களின் எண்ணமெங்கும் நடந்ததைப் பற்றி யோசிக்க வைக்க வேண்டாம் என்று நினைத்தோம். நாங்கள் ஸ்ரீநகரில் இருந்து அங்கு சென்றது, அவர்களின் துக்கத்தில் பங்கு கொள்ள மட்டுமே. நான் அவர்களிடம் “உங்கள் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கின்றதோ, அதைப் பற்றிக் கூறுங்கள்” என்றேன். அவர்கள் கூறியதெல்லாம், “எங்கள் குழந்தைக்கு நடந்த அநீதிக்கு, தீர்வு கிடைத்தால் போதும்” மட்டுமே. எங்களுக்கு நடந்த அநீதியினை காரணமாகக் கொண்டு இங்கிருப்பர்வர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது” என்று விரும்புகின்றோம். ஆனால் தவறு செய்தவர்களுக்க்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற அவர்களின் நம்பிக்கையை இந்த அரசாங்கமும், சட்டமும் காப்பாற்றும் என்று நினைக்கின்றேன். தொடர்ந்து, வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மறுக்கப்படும் இந்த சமூக அமைப்பின் மீது இவர்கள் நம்பிக்கை வைத்திருப்பதை நினைத்து இவர்கள் வருத்தப்படாமல் இருக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட இக்குடும்பத்திற்காக பல்வேறு அரசு சாரா அமைப்புகள் நிதி திரட்டி வருகின்றது என்று கேள்விப்பட்டும் கூட அதை வாங்கவோ, அதன் மூலம் ஆதாயம் அடையவோ அவர்கள் விரும்பவில்லை. அவர்கள், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள். வருடத்தில் ஏழு மாதங்கள் கால்நடை மேய்ச்சலிற்காக காடு மேடுகள் என்று சுற்றித் திரியும் அவர்களின் நாடோடி வாழ்க்கை இந்த சமூக அமைப்பில் இருந்தும், அதன் அடிப்படை கட்டுமானத்திலும் இருந்து வேறுபட்டிருக்கின்றது. அதனால் தான் இதைப் பற்றியெல்லாம் அவர்கள் ஏதும் யோசிப்பது இல்லை. காடுகளிலும், மலைகளிலும், விலங்குகளிடமிருந்தும் மோசமான காலநிலைகளில் இருந்தும் ஒரு சக்தி அவர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்று நம்புபவர்கள் அவர்கள்.

சட்ட அமைப்புகள் அதன் வேலையினைச் செய்யும், அரசியல் அமைப்பும் அப்படியே, ஆனால் அந்த சிறுமியின் அம்மாவின் கண்களில் பார்த்த அந்த விரக்திக்கு பதில் என்ன? ஆழமான அந்த உள்ளுணர்வு அவர்களின் கண்களில் இருந்து என்றும் அகலாமல் இருந்துவிட்டால் என்ன செய்வது?

மலைகளில் இருந்து நாங்கள் திரும்பி வரும் போது, வானத்தில் மிக உயரத்தில் தன்னுடைய இரைக்காக காத்துக் கொண்டு பறந்து கொண்டிருக்கும் அந்த வல்லூறுகளைப் பார்த்தேன். இரத்தத்திற்காகவும் சதைக்காகவும் காத்துக் கொண்டிருக்கும் அதன் கண்களில் வருத்தம் ஏதும் இருப்பதில்லை. அந்த வல்லூறுகளாகவே இந்த கொடூரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளையும் அவர்களைப் போல் எண்ணம் படைத்த ஆண்களையும் நான் காண்கின்றேன். நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கின்றோம் என்று நினைத்துக் கொண்டாலும் அவர்கள் எந்நேரமும் நம் மீது ஒரு கொடூரத்தை நிகழ்த்த தயாராக இருக்கின்றார்கள். ஏழை, பணக்காரர்கள், இந்து – முஸ்லீம், படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற எதைப் பற்றியும் அவர்களுக்கு சிந்தனை இல்லை. அவர்கள் எந்நேரமும் நம் இருப்பை கேள்விக்குறியாக்கலாம். நம்முடைய பெருமைக்கும், கண்ணியத்திற்கும் தீங்கு விளைவிக்கலாம். ஆனால், அவர்கள் இருக்கும் சட்ட ஓட்டைகளின் வழியே தப்பித்து உயர்ப் பறந்து காணாமல் போய்விடுவார்கள் ஒரு வல்லூறுவினைப் போல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 11.5.18 அன்று ஷெஹ்யார் கானகம் கட்டுரையின் தமிழாக்கம்

கட்டுரையாளர் ஷெஹ்யார் கானகம் வழக்கறிஞர். காஷ்மீர் பெண் கூட்டமைப்பின் உறுப்பினர்.

தமிழாக்கம் : நித்யா பாண்டியன்

×Close
×Close