370-வது பிரிவை மாற்றியிருப்பது சட்டப்படி சரியா ?

Article 370 issues: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததின் மூலம் இந்திய அரசு மதத்திற்கும், ஜன நாயாகத்திற்கும் உள்ள அழுத்தாமான மொழியை ஊமையாக்கிவிட்டது.

    த.லெனின்

சமீபத்தில் மத்திய பாஜக அரசு காஷ்மீருக்கான சரத்து 370-ல் சொல்லப் பட்டுள்ள   சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது. இந்த ரத்து நடவடிக்கையை நாம் அரசியலமைப்பு ரீதியாகவும், ஜனநாயக தத்துவங்கள் ரீதியாகவும்  ஆய்வு செய்வவேண்டியக் கட்டாயத்தில் உள்ளோம். நமது ஆய்வின் முடிவில் இது வெறும் ஜம்மு- காஷ்மீர்க்கான பிரச்னை இல்லை என்றும், இந்தியாவின் அடிப்படை சாரம்சத்தையே  கேள்விகேட்பதாய் உள்ளது என்ற பதில் தான் வரும்.

அரசியலமைப்பு ரீதியாக:

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தது  சட்ட ரீதியாக சரியா? தவறா? என்பதை புரிந்துக் கொள்ள அரசியலமைப்பில் சொல்லப்பட்டுள்ள சரத்து 1 மற்றும் திருத்தப்படுவதற்க்கு முன் உள்ள சரத்து 370 நாம் உற்றுநோக்க வேண்டும்.

சரத்து ஒன்றில் “எப்போதும்  மாநிலங்களின் கூட்டமைப்பில் தான் இந்திய இருக்க வேண்டும்” என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது, மாநிலத்தின் அடையாளத்தில் தான் இந்தியா என்ற நாடே உள்ளது. அப்படி இருக்கையில் எப்படி ஒரு மாநிலத்தின் அடையாளத்தை, இந்திய அரசால் அழிக்க முடியும்

அடுத்தப் படியாக, திருத்தப்படாத  370 சரத்திலுள்ள சில அம்சங்களை  வரிசையாய் சொல்லவேண்டும் என்றால் :

  1.  இந்தியாவிற்கும், ஜம்மு-காஷ்மீர்க்கும் உள்ள அரசியலமைப்பு ரீதியான தொடர்பு வெறும் ரத்து 1 மற்றும் சரத்து 370 மட்டுமே ஆகும். (அதாவது இந்திய அரசியலமைப்பில் 450-க்கும் மேற்பட்ட சரத்துகள் உள்ளன. அவைகள் எல்லாம் இயல்பாய் ஜம்மு-கஷ்மீர்க்கு பொருந்தாது).
  2.  370 (1) (d)-வின் படி இந்திய அரசியலமைப்பிலுள்ள மற்ற சரத்துகள்(சரத்து 1,370 தவிர),அரசியலமைப்பு பிரிவுககளை அம்மாநில அரசிடம்  ஒப்புதல் பெற்ற பிறகு ஜம்மு-காஷ்மீர்க்கு நீட்டிக்கலாம்.
  3. 370 (3)-வின் படி , ஜனாதிபதி தனது உத்தரவின் மூலம் சரத்து 370-யே மாற்றவோ, அல்லது இந்திய அரசியலமைப்பிலிருந்து தூக்கவோ அனுமதி அளித்துள்ளது. ஆனால், ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்புக்கும் முன்பு ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்திடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆனால் இந்த  ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் 1957-லே கலைக்கப் பட்டுவிட்டது.               அப்படியானால்,  370 (3)-ஐ 1957-க்கிற்குப் பிறகு  ஜனாதிபதிக்கும் உத்தரவு கொடுக்கும் அதிகாரமும் முடிந்து விட்டதாய் அர்த்தம்

ஆகஸ்ட் 5-ம் தேதி ஜனாதிபதி உத்தரவு 2019 (c.o.272) ஒன்றை பிறப்பித்தார். இந்த  c.o.272 உத்தரவு சரத்து  370 (1) (d) மூலம் பிரபிக்கப்பட்டு(மேலே காண்க), சரத்து 367 பயன்படுத்தி, சரத்து 370 (3) (மேலே காண்க) திருத்தியிருக்கிறது .

சரத்து 367  இந்திய அரசியலமைப்பை  எவ்வாறு புரிந்துகொள்வது என்பது குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கும். “ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ” என்ற வார்த்தைக்கு அர்த்தம் “மாநில சட்டப் பேரவை என்ற பொருள்”  என்ற துணைப்பிரிவைச்  367 சாரத்தில்  C.O.272 சேர்த்தது

இன்னும் ஆணி அடிப்பது போல் சொல்ல வேண்டும் என்றால்,  C.O.272  ஜனாதிபதி உத்தரவு, 370 (1)-ன் கீழ் உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி  சரத்து  367  துனைபிரிவு (4)-ஐ சேர்த்து, அதன் மூலம் 370 (3) – ஐ  திருத்தி ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தை தேவை இல்லாத ஒன்றாக்கி விட்டது .

தற்போது, அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெறுவதால் ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப் பேரவை கலைக்கப்பட்டுள்ளது . இதனால், அதன் கவர்னர் ஒப்புதல் கொடுத்தால் போதுமானதாக உள்ளது. பின்குறிப்பு, ஜம்மு-காஷ்மீரின் கவர்னரை நியமித்தது இந்திய அரசாங்கம் என்பதே வேதனை .

உண்மையிலே, மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளது இந்திய அரசு. ஆனால், சட்ட பூர்வமாக செயல் பட்டுள்ளதா? என்பது தான் இங்கே மிகப்பெரிய கேள்விக்குறி.

நேரடியாய் செய்ய முடியாததை மறைமுகமாக செய்வது இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கேசவானந்த பாரதி போன்ற  பல வழக்குகளில் தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், சட்டமன்றம் கலைக்கப்பட்ட போது அம்மாநில அடையாளத்தை மாற்றியிருப்பது கூட்டாச்சி தத்துவத்தை குழி தோண்டி புதைப்பதற்கு சமமாகும். S. R. Bommai v. Union of India என்ற வழக்கில் ஜனாதிபதி ஆட்சியின் மூலம் ஒரு மாநிலத்தின்  ஜனநாயக குரலை நசுக்குவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. மேலும், Ganga Ram Moolchandani v. State of Rajasthan  என்ற வழக்கில் கூட்டாச்சி தத்துவம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அடையாளம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு தான் நம் கண் முன்னே வந்து செல்கிறது.

ஜனநாயக ரீதியாக:

இந்தியாவில் பல லட்சம் மக்களுக்கு படிப்பறிவு இல்லாமல் உள்ளனர்,  பல கோடி மக்கள் வறுமையில் உள்ளனர், அதனால் அங்கு ஜனநாயகம் சாத்தியப்படாத ஒன்று என்று தான் மேலை நாடுகள் இந்திய சுதந்திரம் வாங்கிய காலத்தில் சொல்லி வந்தனர். ஆனால், மேற்கத்திய நாடுகளை மிஞ்சும் அளவிற்கு இந்தியாவில் ஜனநாயகம் இன்று மக்கள் வாழ்வில் ஆழமாய் பயனப்பட்டுள்ளது . சமூக நீதியை  அரசியல் மூலமாய் சாத்தியப்படுத்தியதில் இந்திய மற்ற நாடுகளுக்கு முன்னோடியாய் உள்ளது . இதெற்கெல்லாம் முக்கிய காரணம்,நாம் ஜனநாயக மாண்பை மற்ற நாடுகளிடமிருந்து கடனாய் வாங்கி, கடமையாய் மட்டும் இங்கு நடைமுறைப்படுத்தவில்லை. இந்திய ஜனநாயகம் இந்தியாவின் மக்களின் கதைகளில் இருந்து பிறக்கிறது, இந்தியாவின் பலதரப்பட்ட மொழி,இன,மதங்களை அது பிரதிபலிக்கிறது.

இந்தியாவில்  உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் ஜனநாயகத்தின் மேல் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பது சிஎஸ்டிஎஸ் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.

 

                                     Source: National Election Study (2004 )

இந்தியாவில் அனைத்து மதத்தை சேர்ந்த மக்களும் ஜனநாயகத்தை ஆதரிக்கிறனர். அதிலும் குறிப்பாக, மத நம்பிக்கை அதிகமாய் இருக்கும் மக்களிடம் தான் ஜனநாயகத்தின் ஆர்வமும் அதிகமாய் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

பொருளாதார வல்லரசான சவுதி அரேபிய, கத்தார் போன்ற இஸ்லாமிய நாடுகள் ஜனநாயகத்திற்கு பயப்படுகின்றன. இஸ்லாம் பாகிஸ்தான் ஜனநாயகத்தில் பாதி தேர்ச்சி அடைந்தாலும், பொருளாதாரத்தில் மண்ணைக் கவ்வுகின்றன. ஆனால், இந்திய பன்முகத்தன்மை ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, மத வழிபாடு  போன்றவைகள் ஒருங்கே இணைக்கப்பட்டு உலகத்திற்கே முன்மாதிரியாய் உள்ளன.

ஆனால்,சமிபத்திய காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து நடவடிக்கை இந்தியாவின் இந்த பன்முகத் தன்மையை கேள்வி கேட்பதாய் உள்ளன. சமூக வளர்ச்சியில் ஜம்மு-காஷ்மீர் மிகவும் பின்தங்கியுள்ளது, அதன் பொருளாதார கட்டமைப்பு கண்டிப்பாய் சீரமைக்க வேண்டும்  என்று அரசின் வாதங்கள் நம்புவதாய் இல்லை என்றே கூறலாம் .

உதாரணமாக, ஜம்மு-காஷ்மீரில் பிரிவு 35-A நன்கு நடைமுறைப்படுத்தப் பட்டதால் அங்கு நிலம் இல்லாதவர்களுக்கு நில விநியோகம் சமதர்ம முறையில் விநியோகம் செய்யப்பட்டது. பிரிவு 35-A  மற்ற மாநிலத்தவர்கள் யாரும் நிலம் வாங்கக்கூடாது என்பதற்காக அல்ல அங்குள்ள வசதி வாய்ந்த காஷ்மீர் பண்டித்துகளிடம் இருந்து அன்றாட காஷ்மீர் மக்களைக் காப்பாற்றுவதற்காக தான். இதனால், ஜம்மு-கஷ்மிர் இந்தியாவில் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களை விட சமூகத்திலும்,பொருளாதாரத்திலும், கலாச்சார சிந்தனைகளிலும் முன்னிடத்தில் உள்ளனர்.

ஒரு தெருவுக்குள் நடக்கும் சண்டையைத் தீவிரவாதமாக மாற்றியிருக்கிறது நமது இந்திய அரசு. அதற்கு ஒரு மதத்தையும் கைகாட்டியுள்ளது . இறுதியாக, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததின் மூலம் இந்திய அரசு மதத்திற்கும், ஜன நாயாகத்திற்கும் உள்ள அழுத்தாமான மொழியை ஊமையாக்கிவிட்டது. ஒரு குறிப்பிட்ட மதத்தை பின் தொடரும் மக்களுக்கு ஜனநாயகம் சாத்தியமில்லை என்ற கருத்தையே தெரிவிப்பதாய் உள்ளது.

அவர்கள் பேச முடியாத இந்த மௌனமான நாட்கள், நமது எத்தனை சுதந்திர தின வாழ்த்து சத்தத்தாலும் நிரப்ப முடியாது என்பதே உண்மை.

 (கட்டுரையாளர் த.லெனின், ஊடகத் தொடர்பாளர்- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close