கருத்து மோதல்களும் தனிநபர் அவதூறுகளும்

தன்னளவில் உண்மையாக இருக்கும் ஒரு கொள்கையாளனை அவன் பின்னணியோ புற உலகமோ பாதிப்பதில்லை.

சந்திரன்

அவர் இடதுசாரி இயக்கத் தோழர். தனக்குக் கடவுள் நம்பிக்கை இருப்பதாகவும், பல்வேறு கோயில்களுக்குச் சென்று வழிபடுவது பிடிக்கும் என்றும் வெளிப்படையாகச் சொல்லக்கூடியவர். “மதம் ஒரு அபின் என்றார் காரல் மார்க்ஸ். அதில், எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. மதம், இனம், மொழி சார்ந்த அரசியலை நானும் எதிர்க்கிறேன். ஆனால், காரல் மார்க்ஸ் நாத்திகத்தைத் தன்னுடைய தனிப்பட்ட விஷயமாக பார்த்தார். கம்யூனிசக் கொள்கையுடன் அணுகவில்லை. நானும் ஆன்மிகம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே பார்க்கிறேன்” என்பார் அவர்.

இன்னொரு நபர். அவர் இந்துத்துவவாதி. தன் அமைப்பின் நம்பிக்கைக்குரிய முழுநேர ஊழியர். கடவுள் நம்பிக்கை அற்றவர். “நான் தனிப்பட்ட முறையில் நாத்திகன்தான். ஆனால், கடவுள் நம்பிக்கையைத் தாண்டிப் பல விஷயங்கள் நம் நாட்டில் இருக்கின்றன. அதற்காக நான் குரலெழுப்புகிறேன். தவிர, மற்றவர்களுக்கு கடவுள் மீது நம்பிக்கை இருக்கிறது. அதை மதிக்கிறேன்” என்று அவர் தன்னுடைய நிலைப்பாடு பற்றித் தன்னிலை விளக்கமளிப்பார்.

இந்துத்துவம் என்ற வார்த்தைக்கு அர்த்தமளித்த வீர சாவர்க்கரும் தீவிர இந்துத்துவவாதியாக அறியப்பட்ட பால் தாக்கரேவும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள்தான். அதேபோல, நாத்திகம் பேசிய ஈ.வே.ரா. பெரியார் ஈரோட்டில் உள்ள பிள்ளையார் கோயிலின் பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்தார். கருணாநிதியின் குடும்பத்தினர் கோயில்களில் வழிபடுவது எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான்.

இன்றைய சமூக வலைதள போராளிகளின் பார்வையில் இருந்து பார்த்தால், தந்தை பெரியாரும் கருணாநிதியும் இந்துத்துவ ஊடுருவல்காரர்களாகத் தெரிவதற்கும் வாய்ப்புள்ளது.

சாதியும் கொள்கையும்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சில கம்யூனிச தலைவர்கள் பிராமணர்கள் என்பதால், அவர்களது பணிகளில் சந்தேகம் கிளப்பி, சில திராவிட சமூக வலைதளப் போராளிகள் (அல்லது அப்படி தங்களைத் தாங்களே கூறிக் கொள்பவர்கள்) குற்றம்சாட்டினார்கள். அதையொட்டி, ‘பார்ப்பனிய மார்க்சியம்’ என்ற சொல்லாடலும் எழுந்தது. கம்யூனிச-திராவிடப் போராளிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. உண்மையில், கம்யூனிசச் சிந்தனையை இந்தியாவில் முன்னெடுத்தவர்களில் ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாட், ஏ.கே. கோபாலன், பி. ராமமூர்த்தி போன்ற பிராமணத் தலைவர்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. தங்களது சாதிப் பின்னணியால் அவர்கள் கொள்கையில் சமரசம் செய்துகொண்டதில்லை. 1950-களில் கேரளத்தில் கம்யூனிஸ்டு கட்சி ஆளும்போது நிலச் சீர்திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனால் அதிகம் பாதிக்கப்பட்டது, ஈ.எம்.எஸ்.ஸின் நம்பூதிரி சமுதாயம்தான்.

உண்மையில், கொள்கையைத் தெளிவாகப் புரிந்து கொண்டவர்களை அவர்களது பின்னணியோ, நட்புறவோ எந்த வகையிலும் பாதித்ததில்லை. மாற்றுச் சிந்தனைகளைப் பேசுபவர்களை உடன் வைத்துக் கொண்டே கொள்கையைத் தீவிரமாக செயல்படுத்தியவர்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அதே நேரத்தில், தங்களதுச் மாற்று சிந்தனைகளையும் அன்றாட வாழ்வில் எதிர்கொண்டேவருகிறார்கள்.

லட்சியம் சார்ந்து வாழும் முறை நம் நாட்டில் புதிதாகத் தோன்றியதில்லை. பண்டைய காலங்களில் இருந்தே அதற்கு ஏராளமான உதாரணங்களைப் பார்க்க முடியும். சைவம், வைணவம், பௌத்தம், சமணம் என்று தனக்குப் பிடித்த வழிபாட்டு முறைகளைப் பின்பற்ற முடியும். தனக்குப் பிடித்த வாழ்க்கையைத் தாங்களே அமைத்துக்கொண்ட மரபும் இருந்தது. அதற்குப் பின்னணி தடையாக இருந்ததில்லை. இல்லாவிட்டால், சத்ரியனாகப் பிறந்த கௌசிகன், விசுவாமித்திரர் என்ற பிரம்ம ரிஷியாக மாறியிருக்க முடியுமா? அல்லது சத்ரியர்களுக்குப் பிறந்த புத்தரும் மகாவீரரும் பௌத்த, சமண மதங்களை தோற்றுவித்திருக்க முடியுமா?

தன்னளவில் உண்மையாக இருக்கும் ஒரு கொள்கையாளனை அவன் பின்னணியோ புற உலகமோ பாதிப்பதில்லை. மாறாக அக உலகில் இருந்து யோசித்துத் தன்னுடைய கருத்துக்களைச் செதுக்கிக்கொள்கிறான். மற்றவர்களுடன் பழகும்போதும் தன்னுடைய கொள்கைகளைக் கைவிடாமல் இருக்க அவனால் முடியும். மேலும், யார் கொள்கையாளன் என்பதற்கு அவன் சான்றிதழ் அளித்துக் கொண்டிருப்பதில்லை. தனக்குள் வட்டமிட்டுக் கொண்டு குறுகிப் போவதுமில்லை. மாறாக, பரந்த வெளியில் பழகி, தன்னுடைய கருத்துகளுக்கு மேலும் வலு சேர்த்துக்கொள்கிறான்.

மாறாக, கொள்கைக்கும் உறவுகளுக்கும் இடையே முடிச்சுப் போடுபவர்கள், தங்களுக்குள் முடங்கிவிடுகிறார்கள். அதிகபட்சமாக, கொள்கைக்குச் சான்றிதழ் அளிக்கும் குமாஸ்தா பணியைத் தாண்டி அவர்களால் எந்த வித தாக்குதல்களையும் ஏற்படுத்த முடிவதில்லை.

இந்த உண்மையைப் புரிந்துகொண்டால், கருத்து மோதல்கள் தனிப்பட்ட முறையில் எதிரொலிக்காது. ஒருவரது பின்னணியை வைத்து அவர்களை எடை போடும் அவசியமும் இருக்காது.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Opinion conflicts and personal slanders

Next Story
முத்தலாக் விவகாரம்: மாற்றம் கோரும் காலத்தின் குரல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com