மீண்டும் வளர்ச்சியைப் பெறுவது ஒன்றும் கடினமல்ல

உண்மையில், 2014 – 15, 2015 – 16 மற்றும் 2016 – 17ல் சில காலம் தேஜ கூட்டணி அரசு அதே நிலையை தக்கவைத்திருந்தது. 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பை அரசு அகம்பாவத்துடன் அறிவித்தது

By: June 9, 2020, 8:51:57 PM

மாண்புமிகு பிரதமருக்கு எனது இறுதி வேண்டுகோள் என்னவெனில், உங்களின் தற்போதைய பொருளாதார அறிவுரையாளர்களை வெளியேற்றிவிட்டு, புதிய குழுவினரை அமர்த்துங்கள். அவர்களாவது உங்களுக்கு உருப்படியான ஆலோசனைகளை வழங்கட்டும்.

ப.சிதம்பரம், கட்டுரையாளர்.

இந்த கடினமான நிலையிலிருந்து தனக்கான ஊடக வெளிச்சத்திற்கு வருவது எப்படி என்ற சாமார்த்தியம் பிரதமர் மோடிக்கு தெரியும். முதல் மற்றும் இரண்டாவது ஊரடங்கை பிறப்பித்துவிட்டு கொரோனா வைரசுக்கு எதிரான போரில் நான் வெற்றிக்கொள்வேன் என உறுதியளித்துவிட்டு, அடுத்தடுத்து, போடப்பட்ட ஊரடங்குகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். இரண்டாவது ஊரடங்கின் இறுதியில், அவர், மாநில அரசுகள் மற்றும் முதலமைச்சர்களிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, தான் ஒதுங்கிக்கொண்டார். அதுவரை அவரது வார்த்தைகளே சட்டமாக இருந்தது. தற்போது தெளிவற்ற அறிவிப்புகளை உள்துறை செயலாளர் வெளியிடுகிறார். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவித்து வருகிறது. அன்று தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்தது. அதாவது உச்சம் என்பது இன்னும் தொலைவில் உள்ளது. ரூ.20 லட்சம் கோடி பொருளாதார தூண்டுதல் தொகுப்பு என்பது திரு.மோடியின் கண்டுபிடிப்பு. அதிக சொத்து, பிரமாண்டமான 5 ஆண்டு திட்டங்கள் மற்றும் குறைந்தளவு பணம் இவற்றை கொடுத்துவிட்டு யாரும் இதை பொருளாதார தூண்டுதல் தொகுப்பு என்று அறிவித்துக்கொள்ளமாட்டார்கள். இந்த தொகுப்பு வீழும் என்பதை அறிந்த பின்னர் மோடி, அதையும் நிதியமைச்சரிடம் ஒப்படைத்து விளக்கமளிக்குமாறு கூறிவிட்டார். இரண்டாவது நாள் அவரும் ஏதோ விளக்கிவிட்டுச் சென்றுவிட்டார்.

அமெரிக்க வரலாற்றின் உயிரோட்டமான கேள்வி மறுபடி எழுந்திருக்கின்றது

பிரதமர் தன்னை தூரமாக்கிக்கொண்டார்

ஜம்மூ-காஷ்மீர் குறித்து திரு.மோடி பேசியதே இல்லை. அது ஸ்ரீநகரில் உள்ள அதிகாரிகளிடம் விடப்பட்டது. எல்லையில் நடக்கும் அத்துமீறல்கள் மற்றும் அதில் இறக்கும் ராணுவ வீரர்கள் குறித்து பேசியதில்லை. அது ராணுவ தளபதிகளிடம் விடப்பட்டது. இதுவரை அவர் சீனாவுடனான மோதல் குறித்து பேசியதில்லை. ராணுவத்தின் தலைமையகத்தில் இருந்து வரும் செய்திகளை படிக்கும்படி, அவர் பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் விட்டுவிட்டார். வெளியுறவுத்துறை அமைச்சரிடம் சீனாவுடனான பேச்சுவார்த்தை நடத்தும்படி பணித்துவிட்டார்.

திரு.மோடி, புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் ஏப்ரல் மாதம் முழுவதும் அவர்கள் திரும்பிச்சென்றது குறித்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கட்டுப்படுத்த முடியாத அளவு பிரச்னை வெடித்தபோதும், மோடி அல்ல, ரயில்வே அமைச்சரே பேச முன்வந்தார். அதுவும் அவதூறுகளை ஏற்றுக்கொள்வதற்காக அல்ல, மாநில அரசுகளின் மீது பழி போடுவதற்காக. பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் இன்றளவும் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், தாங்கள் எப்போது வீடுகளை சென்றடைவதற்கான பொது போக்குவரத்து தங்களுக்கு கிடைக்கும் என்பது தெரியாமல் சிக்கித்தவிக்கின்றனர்.

ஆனால், தன் மீது ஊடக வெளிச்சம் படுவதைதான் மோடி எதிர்பார்க்கிறார். இந்திய தொழில் கூட்டமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் பேசுவதற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார். எனக்கு தெரிந்து இதற்கு முன் எந்த பிரதமரும், அவர்களின் பொதுக்குழுவில் பேசியதில்லை. இது எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யமாக இருக்கிறது.

கடினம் கிடையாது – சரியா? அல்லது தவறா?

அவர் பொதுக்குழுவில் பேசியதும் ஆச்சர்யம் கிடையாது. அதை ஏற்றுக்கொண்டாலும், பிரதமர்கள் தங்களை உயர்ந்த எண்ணங்கள் கொண்டவராக வைத்திருக்க வேண்டும். ஆனால், அவரின் பேச்சு ஒரு சாதாரண நபரைபோலத்தான் இருந்தது. என்னை நம்புங்கள், வளர்ச்சியடைவது ஒன்றும் கடினம் கிடையாது என்று பிரதமர் கூறினார். அது சரியா? மீண்டும் வளர்ச்சியடைவது கடினமல்ல எனில், 2017 – 18ம் ஆண்டில் சரிந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியை, அரசு தடுத்து நிறுத்தாதது ஏன்? 2019-20, 4வது காலாண்டு வரை, எட்டு காலாண்டுகளாக, வளர்ச்சி விகிதம் குறைந்தபோது, அரசு ஏன் உதவியற்று இருந்தது.

2019-20ன் 4வது காலாண்டின் வளர்ச்சி விகிதம் 3.1 சதவீதம், பாஜ ஆட்சி காலமான 2002 – 03ன் ஆண்டின் 3வது காலாண்டைவிட குறைவானது என்று மோடிக்கு நிச்சயம் தெரியும். 2019 – 20ம் ஆண்டின் 4.2 சதவீத வளர்ச்சி விகிதம் கடந்த 17 ஆண்டுகளில், மிகக் குறைந்தது. 2008ம் ஆண்டு ஏற்பட்ட சர்வதேச பொருளாதார பிரச்னைகள் கூட, இந்தியாவின் வளர்ச்சி விகிதத்தை பெரியளவில் பாதிக்கவில்லை. அலுவல் ரீதியாக வழங்கப்பட்ட மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் எண்ணிக்கையை அப்பட்டமாக புறக்கணித்துவிட்டு, 2012-13 மற்றும் 2013-14ம் ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயல்திறனை நிதியமைச்சர் அடிக்கடி ஏளனம் செய்வார். 2011-12ம் ஆண்டில் 5.2 சதவீதம் (2012 ஆகஸ்ட் 1 முதல் நான் நிதியமைச்சர் பணிக்கு திரும்பினேன்), 2012 – 13ம் ஆண்டில் 5.5 சதவீதம், 2013 – 14ம் ஆண்டில் 6.4 சதவீதம் (கீழே கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை பாருங்கள்) என்று புள்ளியியல் அலுவலகம் கொடுத்துள்ளது. ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, பொருளாதாரம் வளர்ச்சியில் இருக்கும்போது தான் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு ஒப்படைத்தது என்பதை நான் மீண்டும் நிதியமைச்சருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

உண்மையில், 2014 – 15, 2015 – 16 மற்றும் 2016 – 17ல் சில காலம் தேஜ கூட்டணி அரசு அதே நிலையை தக்கவைத்திருந்தது. 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பை அரசு அகம்பாவத்துடன் அறிவித்தது. அப்போது முதல்தான் பொருளாதாரம் சரியத்துவங்கியது. திரும்ப வளர்ச்சியடைவது அவ்வளவு கடினமல்ல என்ற பிரதமரின் அறிவிப்பு, இரண்டு முறையான ஆட்சிக்காலத்திலும் அவர்களின் திறனுக்கு அப்பாற்பட்டது என்று நிரூபித்துவிட்டது.

விடப்பட்ட ஒரு ஐ (I)

தொழில் துறை, வர்த்தகம் மற்றும் வியாபாரத்திற்கு அது தெரியும். ஏற்றுமதியாளர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலாளர்களுக்கு அது தெரியும். கட்டுமான துறைக்கு அது தெரியும். அரசு பொருளாதார வல்லுனர்களை தவிர மற்றவர்களுக்கு நன்றாக தெரியும். தற்போது தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்களும் அதனை உணர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு நாளும் நம்பிக்கை குறைந்துகொண்டு வருகிறது. தற்போது, மோடி அரசு பொருளாதாரத்தை மீட்கும் என்ற நம்பிக்கை முற்றிலும் குறைந்துவிட்டது. நல்ல அறிவுரைகளை கேட்பதற்கு பிரதமர் தயாராக இல்லை. ஆனால் நான் விடமாட்டேன். அரசுக்கு தொடர்ந்து அறிவுறுத்திக்கொண்டே இருப்பேன். பிரதமர் தற்போது 5 ஐ (I)களை கூறுகிறார். அவை நோக்கம் (Intent), உள் அடக்குதல் (inclusion), உட்கட்டமைப்பு (infrastructure), முதலீடு (investment) மற்றும் கண்டுபிடிப்பு (innovation) ஆகியவை ஆகும். இதில் ஒரு முக்கியமான ஒரு I உள்ளது. அதுதான் income அதாவது வருமானம். கிட்டத்தட்ட 125 மில்லியன் மக்கள் தங்களின் வேலைகளை கடந்த 3 மாதங்களில் இழந்துவிட்டார்கள். அகில இந்திய உற்பத்தியாளர் சங்கங்களின் கணக்கீட்டின்படி, 35 சதவீத சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் 37சதவீத சுயதொழிலாளர்கள் தங்களின் நம்பிக்கையை இழந்துவிட்டனர். மீண்டும் தொழிலை துவங்குவது கடினம் என்று அவர்களின் வியாபாரத்தை மூடும் நிலையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் : அரசுகளுக்கு இது தாமதம் கிடையாது

பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய தேவை வருமானம் மட்டும்தான். வருமானம் இருந்து, மக்கள் கையில் பணம் இருந்தால் மட்டும்தான், அது தேவையான பொருட்களை வாங்க தூண்டும், தேவை இருக்கும்போதுதான், வழங்கல் மற்றும் உற்பத்தி பெருகும். உற்பத்திதான் வேலைவாய்ப்பு, ஊக்கத்தொகை மற்றும் முதலீடு ஆகியவற்றை அதிகரிக்கும். இவை அனைத்தும் சேர்ந்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இந்த பொருளாதார கொள்கைதான், மந்தநிலை ஏற்படும்போது இரண்டு மடங்கு தேவைப்படும். இதுவே 2020-21ம் ஆண்டுக்கு தேவை.

மாண்புமிகு பிரதமருக்கு எனது இறுதி வேண்டுகோள் என்னவெனில், உங்களின் தற்போதைய பொருளாதார அறிவுரையாளர்களை வெளியேற்றிவிட்டு, புதிய குழுவினரை அமர்த்துங்கள். அவர்களாவது உங்களுக்கு உருப்படியான ஆலோசனைகளை வழங்கட்டும்.

இக்கட்டுரையை எழுதியவர் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம்.

தமிழில்: R.பிரியதர்சினி.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:P chidambaram about indian economy pm modi

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X