ப. சிதம்பரம் பார்வை : 70ல் இந்தியா - மகிழ்ச்சியற்ற கொண்டாட்டம்.

இந்தியா முழுவதும் 71வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி மோசமாக உள்ளதாக குறிப்பிடுகிறார், ப.சிதம்பரம்.

ப.சிதம்பரம்

சுதந்திரம், எழுதப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம், பாராளுமன்ற முறையிலான அரசு, சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றுக்கு பல நோக்கங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது இவை ஒரு நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும்.

1947ல், ஒரு நாட்டில் 83 சதவிகிதத்தினர் படிப்பறிவற்றோர், சராசரி ஆயுட்காலம் 32 வயது, தனி நபர் வருமானம் 247 ரூபாய், தனி நபர் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவு ஆண்டுக்கு 16.3 கிலோ வாட் என்ற நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்பதை பற்றி நினைத்துப் பாருங்கள். மனத் துணிவு இல்லாத சிலர், இந்தியாவை ஆட்சி செய்ய இயலாது என்ற முடிவுக்கே வந்திருப்பர். வேறு எந்த தேசத்தைச் சேர்ந்த தேசத் தந்தையாக இருந்தாலும், ஆட்சியை கைப்பற்றி, தனது விருப்பத்திற்கேற்ப ஆட்சியை நடத்தியிருப்பார். ஆனால் மகாத்மா காந்தி அப்படிப்பட்டவர் அல்ல. அவர் ஆட்சிப் பொறுப்பேற்பதை மறுத்து, தனது சொந்த வழியில் மக்களுக்கு தன் சேவையை தொடர்ந்தார். ஒரு மிகப் பிரம்மாண்டமான பல பிரிவினைகளைக் கொண்ட ஒரு நாட்டை நிர்வகிக்க ஜவஹர்லால் நேருவும், வல்லபாய் பட்டேலும் முன் வந்தனர்.

வெற்றியின் அளவுகோள்கள்

15 ஆகஸ்ட் 1947லிருந்து இந்தியா பல தூரம் வந்து விட்டது. பார்வையற்றோரும், பக்தர்களும் மட்டுமே கடந்த 70 ஆண்டுகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று வாதிடுவர். சராசரி ஆயுட்காலம் 68.34ஆக உயர்ந்துள்ளது. தற்போது உள்ள விலைவாசி நிலவரப்படி, தனி நபர் வருமானம் ஒரு ஆண்டுக்கு 1,03,219 ரூபாயாக உயர்ந்துள்ளது. கல்வியறிவு 73 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் சதவிகிதம் 22 சதவிகிதமாக குறைந்துள்ளது. உணவு தானியங்களில் சுய நிறைவு ஏற்பட்டுள்ளது. ப்ளேக், காலா ஆஸார், சின்னம்மை, போலியோ போன்ற நோய்களை வெற்றி கண்டுள்ளோம். அறிவியல், தொழில்நுட்பம், விண்வெளி விஞ்ஞானம், அணு சக்தி ஆகியவற்றில் நமக்கு உள்ள குறைந்த தொழில்நுட்பத்தை வைத்து, பல மடங்கு முன்னேறியுள்ளோம்.

இந்த வளர்ச்சிக் கதையில் இந்தியாவின் அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் பங்கு இருக்கிறது. காங்கிரஸ் மத்திய அரசுக்கு ஏறக்குறைய 55 ஆண்டுகள் பொறுப்பு வகித்திருக்கிறது. காங்கிரஸ் அல்லாத அரசுகள் 15 ஆண்டுகள் ஆண்டன. இதில் பிஜேபி 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. (வாஸ்பாய் மற்றும் மோடி அவர்கள்). இந்தியாவை நிர்வகிப்பது மத்திய அரசின் பொறுப்பு மட்டுமல்ல. மாநில அரசுகளுக்கும் பெரும் பங்கு உள்ளது. மக்களை நேரடியாக பாதிக்கும் பல விவகாரங்கள் மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன (அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணை பட்டியல் இரண்டை பார்க்கவும்). மாநில அரசுகளின் நிர்வாகம் பல இடங்களில் மோசமாக உள்ளதால், வளர்ச்சியும் சமனற்றதாகவே உள்ளது. மார்ச் 31, 2017ன்படி, டெல்லியில் சராசரி தனி நபர் வருமானம் ரூபாய் 2,49,004ஆகவும், கோவாவின் தனி நபர் வருமானம் 2,42,745 ரூபாயாகவும், பீகாரின் தனி நபர் வருமானம் 31,380ஆகவும் (2014-15 கணக்கின்படி) உள்ளது.

இந்தியாவின் வறுமையான மாநிலங்களில் யார் அரசுப் பொறுப்பில் இருந்தது ? 1989 முதல் காங்கிரஸ் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியில் இல்லை. ஒதிஷாவில் 2000 ஆண்டு முதல் இல்லை. மேற்கு வங்கத்தில் 1977 முதல் இல்லை. 1990 முதல் பீகாரில் இல்லை (ஜுலை 2017 முதல் 20 மாதங்களுக்கு ஒரு சிறுபான்மை பங்குதாரராக அரசில் இருந்ததை தவிர்த்து). கடந்த சில பத்தாண்டுகளில் ஏற்பட்ட பின்னடைவுக்கு காங்கிரஸை பொறுப்பாக்க முடியாது. மாறாக 1997-2002 முதல் உத்தரப் பிரதேசத்தில் பிஜேபி ஆட்சியில் இருந்துள்ளது. தற்போது மீண்டும் இருக்கிறது. 2000-2009ல் பிஜேபி ஒதிஷாவில் ஆட்சிப் பொறுப்பில் பங்குதாரராக இருந்தது. பீகாரில் 2005-14 முதல் தற்போது மீண்டும் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது.

முக்கியமான ஐந்து அளவுகோல்கள்

சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இந்தியாவின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான ஐந்து அளவுகோல்களை ஆராய வேண்டியது அவசியம்.

வேலைவாய்ப்பு : வேலைவாய்ப்பு இல்லாத வளர்ச்சியை அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மத்திய அமைப்பு, ஜனவரி 2017 முதல் ஏப்ரல் 2017 வரை, அமைப்பு சார்ந்த தொழில்களில் 1.5 மில்லியன் வேலை வாய்ப்பு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறுகிறது.

ஜிடிபி வளர்ச்சி : 2014-15 காலாண்டு முதல், ஒட்டுமொத்த மதிப்பு கூட்டுதலில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது என்பதும், அதன் தாக்கம் ஜிடிபியிலும் உள்ளது எனபதும் தெளிவாகிறது. சமீபத்திய விலைவாசியின்படி, ஒட்டுமொத்த முதலீடு சேர்க்கை என்பது, 30.8 சதவிகிதத்திலிருந்து, 28.5 சதவிகிதமாக குறைந்துள்ளது. 2013-14ல் இது 32.6 சதவிதமாகவும், 2011-12ம் ஆண்டில் இது 34.31 சதவிகித உச்சத்தை தொட்டது என்பதும் தெரிய வருகிறது.

முதலீடு : 2015-16 ஆம் ஆண்டினல்  இருந்து 2016-17 வரையிலான 12 மாத காலப்பகுதியில் நிலையான நிலையான மூலதன உருவாக்கம் 30.8 சதவீதத்திலிருந்து 28.5 சதவீதமாக சரிந்ததுள்ளது. இது 2013-14ல் 32.6 சதவீதமாக இருந்தது. இது 2011-12 ஆம் ஆண்டில் 34.31 சதவீதமாக உயர்ந்திருந்தது.

கடன் வளர்ச்சி : 2016-17ல் கடன் வளர்ச்சி விகிதம் 8.16 சதவிகிதமாக முடிவடைந்தது. இது கடந்த பத்தாண்டுகளின் சராசரி வளர்ச்சியில் பாதிக்கும் குறைவு.

தொழில் உற்பத்தி : தொழில் உற்பத்தி மே 2014ல் 111 சதவிகிதமாக இருந்து ஜுன் 2017ல், 119.6 சதவிகிதமாக ஆமை வேகத்தில் வளர்ந்து வருகிறது.

மகிழ்ச்சி இல்லா கொண்டாட்டம்

நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதவகையாக ஐந்து முக்கிய அளவுகோள்கள், நாட்டின் பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் முன்பு இருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லை. இந்திய பொருளாதாரத்தைப் பற்றி பேசுகையில் இருவரும், வானத்தின் கீழ் இருக்கும் அனைத்தையும் பற்றி பேசுகிறார்கள். பொருளாதாரத்தை தவிர. நாட்டை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கும் பொருளாதார விஷயங்களை மிக கவனமாக அரசியல் விஷயமாக மாற்றும் வல்லமை படைத்தவர் பிரதமர். நாட்டின் முக்கியமான எந்த பொருளாதார வல்லுனரும் ஏற்றுக் கொள்ள மறுக்கும் புள்ளி விபரங்களை போகிற போக்கில் அள்ளி வீசத் தயங்காத ஒரு நிதியமைச்சர். இந்த அரசில் உண்மையை எப்போதாவது பேசும் ஒரே ஒருவர் கூட கிடையாது என்பதுதான் கசக்கும் உண்மை.

இத்தனை இருப்பினும் அரசு இந்தியாவின் 70வது சுதந்திர தின விழா கொண்டாட்டங்களை முன்னெடுக்கிறது. அந்த கொண்டாட்டங்களில் யார் கலந்து கொள்வது ? பிரமிட் கோபுரத்தின் அடியில் இருக்கும் அந்த 22 சதவிகிதம் போர் கிடையாது. விவசாயிகள் அல்ல. சரக்கு உற்பத்தியாளர்களும், அவர்களின் தொழிலாளர்களும் அல்ல. கந்து வட்டிக்கு பணம் வழங்குபவர்களோ, அவர்களிடம் பணம் பெறுபவர்களோ அல்ல. உயர் கல்விக்கான கடன் மறுக்கப்பட்டவர்கள் அல்ல. பெண்கள் அல்ல. தலித்துகளோ சிறுபான்மையினரோ அல்ல. இது மகிழ்ச்சியற்ற ஒரு கொண்டாட்டம்.

(முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். //indianexpress.com/article/opinion/columns/across-the-aisle-india-at-70-the-economy-indian-gdp-growth-financial-p-chidambaram-4794159/)

தமிழில் : ஆ.சங்கர்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close