Advertisment

கொழிக்கும்  வெறுப்பு பேச்சு!

பாரதிய ஜனதா கட்சியில் போதுமான அளவு சூழ்ச்சித் திறன் வாய்ந்த அறிவார்ந்த தீய மேதைகள் உள்ளனர், அவர்கள் மாநில அளவில் குறிப்பிட்ட வியூகங்களை வகுக்கும் திறன் கொண்டவர்கள். அதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் உணவு, உடை மற்றும் பிரார்த்தனை தொடர்பான சர்ச்சைகளைத் தூண்டும் முயற்சிகள் தூண்டப்பட்டுள்ளன.

author-image
WebDesk
New Update
P Chidambaram

ஹிஜாப் என்பது ஒரு பெண் தன் வீட்டை விட்டு வெளியே வரும்போது தலையை மறைக்கும் ஒருவித முக்காடு. வட இந்தியாவில் உள்ள இந்துப் பெண்கள், சீக்கியப் பெண்கள், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் மற்றும் இன்னும் சிலர் (சீக்கிய ஆண்கள் உட்பட) தலைக்கு முக்காடு போன்ற ஒருவித ஒப்பனையை மேற்கொள்கிறார்கள்.

ப சிதம்பரம் 

Advertisment

ஹிஜாப், ஹலால், ஆஸான் எனப்படும் பாங்கு குறித்த சர்ச்சைகள் கர்நாடகா மாநிலத்தை உலுக்கி வருகின்றன. 2023 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மாநில தேர்தலுக்கு முன்னதாக, கர்நாடக மக்களை இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் என இரு முகாம்களாக பிரிப்பதற்கு அந்த மாநில அரசால்  கவனமாக வடிவமைக்கப்பட்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அவை தயாரிக்கப்பட்டுள்ளன.

ஹலால் என்பது இஸ்லாமிய சட்டத்தின்படி, ஒரு மிருகத்தை கழுத்து நரம்பு அல்லது சுவாசக் குழாயில் வெட்டி , அந்த ரத்தத்தை வடிய விட்ட பிறகு அந்த இறைச்சியை சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு முறையாகும். ஒவ்வொரு மதத்திற்கும்  உணவு தயாரிப்பதற்கான விதிகள் உள்ளன.  யூத மதத்தின் நெறி முறைப்படி இறைச்சியையும் பாலில் இருந்து கிடைக்கும்  பொருட்களையும் ஒன்றாக கலந்து சாப்பிட கூடாது எனும்  கோசர்  மரபை  இருக்கிறது. பல இந்து துணைப்பிரிவுகள் கூட பிரத்யேக  விதிகளின்படி தங்களுக்கான உணவை தயாரிக்கின்றன.

ஆஸான்  எனப்படும்  பாங்கு என்பது மசூதிகளில் இருந்து ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுகைக்கான அழைப்பை கொடுப்பது. இது  ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப்படும். இந்து மற்றும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களில் இது  மணி ஓசை அழைப்பாக வெளிப்படும்.  இந்து சமயப் பண்டிகைகள் பொதுவாக வேதங்கள் ஓதுதல் அல்லது ஒலிபெருக்கிகள் மூலம் பெருக்கப்படும் பக்தி இசையை வாசிப்பது  என்று பலவகையாக வெளிப்படுத்தப்படும்.

நூற்றாண்டு பாரம்பரியம்

ஹிஜாப், ஹலால், ஆஸான் போன்ற புதிய நடைமுறைகள் அல்ல. இஸ்லாம் இந்தியாவில் கால்பதித்ததில் இருந்து அவர்கள் இஸ்லாத்தின் ஒரு பகுதியாக இந்தியர்களாகவே  இருந்து வருகின்றனர். கர்நாடக மக்கள்  இந்த விதிமுறைகளை பல நூற்றாண்டுகளாக ஏற்றுக்கொண்டனர்.  யாரும் அவற்றை எதிர்க்கவில்லை, எந்த முஸ்லிமும் இந்து மத நடைமுறைகளை எதிர்க்கவில்லை. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்  போல் மற்ற மதங்களைப் பின்பற்றுபவர்கள்  ஒருவருக்கொருவர் சமாதானமாக வாழ்ந்து வருகின்றனர்.

பா.ஜ.க. கர்நாடகாவில் கூட்டணியாகவும் தனியாகவும் ஆட்சி செய்து வருகிறது.  சமீப ஆண்டுகளில், அது மற்ற கட்சிகளை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை பக்கம் மாறச் செய்து ஆட்சி செய்து வருகிறது - இந்த முயற்சிக்கு ஆபரேஷன் தாமரை என்று முத்திரை குத்தப்பட்டது.  அடுத்ததாக வரும் 2023 ல் கர்நாடக சட்ட பேரவைக்கு பொது தேர்தல் வருகிறது. அதனுடைய அரசுகள் இதுவரை மக்களுக்கான ஆட்சியாக இருந்ததில்லை. இதனால் வெற்றி வாய்ப்பு ஆட்டம் கண்டிருக்கும் நிலையில்  அதையும் மீறி வெற்றி பெற இந்துத்வா உணர்வை பாஜக தட்டி எழுப்புகிறது. ஆபரேஷன் தாமரையை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் வலுவான கொள்கைகளை எழுப்பி வருகின்றன. எனவே வாக்காளர்களை கவர இன்னொரு கதையை உருவாக்க பாஜக முயல்கிறது.  பிஜேபியில் போதுமான அளவு  சூழ்ச்சித் திறன் வாய்ந்த அறிவார்ந்த  தீய மேதைகள் உள்ளனர், அவர்கள் மாநில அளவில் குறிப்பிட்ட வியூகங்களை வகுக்கும் திறன் கொண்டவர்கள். அதன் முக்கிய  பகுதியாக   கர்நாடகாவில் உணவு, உடை மற்றும் பிரார்த்தனை தொடர்பான சர்ச்சைகளைத் தூண்டும்  முயற்சிகள் தூண்டப் பட்டுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு மாநில அரசு தடை விதித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முழு பெஞ்ச், “ஹிஜாப் அணிவது ஒரு 'அத்தியாவசியமான மத நடைமுறையா' என்று  கேள்வி கேட்டது. இறுதியில்  இல்லை என்று  நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த கேள்வி பொருத்தமற்றது. ஹிஜாபை தடை செய்யும் அதிகாரம் அரசுக்கு உள்ளதா என்று கேள்வி கேட்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி கேட்கபட்டிருந்தால் இந்த தடை மதம் தொடர்பான தனியுரிமையில் தலையிடுவதாக அமைந்திருக்கும். முஸ்லிம் பெண்கள் கல்வி பெறுவதற்கான உரிமையில் அரசு தலையிட முடியுமா என்ற கேள்வியும் பிறந்திருக்கும். இந்த வழக்கில் இப்போது மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.  சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டு, உண்மையான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு தீர்வு காணப்படும் என நம்புவோம். 

வளரும் வெறுப்பு

இத்தகைய சர்ச்சைகள் வெறுப்பை தூண்டும் பேச்சுக்களுக்கு வலுவான அடித்தளம் அமைக்கின்றன.  இரு தரப்பிலும் வெறுப்பூட்டும் பேச்சுக்களை பேசி வந்தாலும் அதை முதலில் தொடங்கியது இந்து வெறியர்கள் தான். இதை  கர்நாடகாவில் சில முக்கியஸ்தர்கள் கண்டித்தனர். அவர்களில் முக்கியமானவர்கள்   வரலாற்று ஆசிரியர் திரு ராமச்சந்திர குஹா மற்றும் தொழிலதிபர் திருமதி கிரண் மஜும்தார்-ஷா. மதவெறியர்கள் தற்போது இவர்கள் இருவர் மீதும் தமது கோபப்பார்வையை திருப்பி உள்ளனர். 

சில மாநிலங்களில், குறிப்பாக உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் வெறுப்பூட்டும் நடவடிக்கைகள்  எல்லா எல்லைகளையும் தாண்டியுள்ளது. தஸ்னா தேவி கோவிலில் பூசாரியாக பணிபுரியும்  எதி  நரசிங்கானந்த் மீண்டும் மீண்டும் இந்த குற்றத்தை செய்கிறார். கடந்த ஆண்டு, ஹரித்வாரில் ஒரு இந்து மதக் கூட்டத்தில், முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் கருத்து தெரிவித்த அவர், கைது செய்யப்பட்டு சில வாரங்களுக்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஏப்ரல் 3, 2022 அன்று, அவர் டெல்லியில் கூட்டப்பட்ட  இந்து மகா பஞ்சாயத்து மாநாட்டில் உங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களைப் பாதுகாக்க, ஆயுதங்களை எடுங்கள் என்று பேசினார்.  2029 அல்லது 2034 அல்லது 2039 இல் ஒரு முஸ்லிம் இந்தியாவின் பிரதமராக இருப்பார் என்பது அவர் கூறிய மோசமான கணிப்புகளில் ஒன்று. இதுகுறித்த புகாரில் காவல்துறை அவரை கைது செய்யவோ, அவரது முன் பிணையை ரத்து செய்யவோ  நடவடிக்கை எடுக்கவில்லை.

இன்னொரு  பயங்கரமான உதாரணமும் இருக்கிறது.  பஜ்ரங் முனி என்ற  தன்னிச்சையான  மதத் தலைவர், ஏப்ரல் 2, 2022 அன்று ஒரு கூட்டத்தில் பேசிய காணொளி ஒன்று வெளியானது. அதில் அவர்  உங்கள் சமூகத்தைச் சேர்ந்த யாராவது அந்தப் பகுதியில் உள்ள எந்தப் பெண்ணையும் துன்புறுத்தினால், நான் உங்கள் மகள்களை உங்கள் வீட்டிலிருந்து அழைத்து வந்து பாலியல் பலாத்காரம் செய்வேன்  என்று அவர்  எச்சரித்தார். அவரது இலக்கு தெளிவாக இருந்தால் அவரை கைது செய்ய தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தியது. ஆனால் பதினோரு நாட்களுக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.

சகிப்புத்தன்மையை பொறுத்துக்கொள்ளுதல்

ஒழுக்கசீலர் என்று கருதப்படும் ராமர் பிறந்த நாள் அன்று இப்படிப்பட்ட  அநாகரிகமான பேச்சுக்கள் பரப்பப்படுகின்றன. வன்முறை வெடிக்கிறது.  ஏதோ சில சமூக விரோதிகளால் தான் இவை நடக்கின்றன என்று அவற்றை அப்படியே நாம் விட்டு விட முடியாது.  இப்போது இந்தி பேசும் மாநிலங்களில் இருக்கும் இந்தியாவின் இந்து மையத்தை ஒருங்கிணைத்து விரிவுபடுத்தும் போக்கில் உறுதியாக இருக்கும் பாஜக கட்சி மற்றும் ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆதரவை அவர்கள் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக ஹர்தோஷ் சிங் பால் வெளிநாட்டு விவகாரங்கள் குறித்த  சிறப்பான இதழில் பின்வருமாறு எழுதுகிறார். 400 மில்லியனுக்கும் அதிகமான இந்திய மக்கள் மிகவும் உயர்வானது என்று கருதப்படும் இந்து மத கோட்பாடுகளை கடைப்பிடித்து  ஆதரிக்கவில்லை. இந்தியாவில் வாழும் அனைவரும் ஒரே கொள்கைகளை கடைபிடிக்க வைக்க அவர்கள் தீவிரமாக முயல்கிறார்கள். அப்படி முயல்வதின் மூலம் இந்தியாவில் வாழும்  முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இரண்டாம் தர குடியுரிமைக்கு தள்ளப்படுவதை உறுதி செய்கிறார்கள். இது தான் அவர் எழுதியதில் முக்கிய ஷரத்தாக இருக்கிறது.

வளர்ந்து வரும் மத சகிப்பின்மைக்கு மத்தியில், நாட்டின் உயர் அதிகாரிகளின் திட்டமிட்ட மௌனத்தை வெறும்  நிர்வாக செயலிழப்பு என நாம் கடந்து போக முடியாது. இது ஒரு ஆட்சியின் குறைபாடாகவும்  நம்மால் எடுத்துக் கொள்ள முடியாது. 

தமிழில் : த. வளவன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp Hijab Row Karnataka Rss P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment