ப.சிதம்பரம்
பிப்ரவரி 16ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் பேசும்போது, அரசியலமைப்புச்சட்ட பிரிவு 370ஐ ரத்து செய்தது, குடியுரிமை திருத்தச்சட்டம் இயற்றப்பட்டது என அனைத்தும் தேச நலனுக்கு அவசியமானவை என்று கூறினார். ‘பல்வேறு சர்வதேச அழுத்தங்கள் இருந்தபோதும், நாம் இந்த முடிவுகளை பின்பற்றுகிறோம். தொடர்ந்து பின்பற்றுவோம்’ என்றார்.
தேச நலன் என்பது மாய வார்த்தைகள். அவை நிஜத்தை பிரதிபலிக்கவில்லை. முடிவுகள் இறுதி செய்யப்பட்டதை உணர்த்துகின்றன. ஏனெனில் தேச நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுகள் என அறிவித்த பிரதமர், அவை தொடர்பான விமர்சனங்களும், விவாதங்களும் முடிவுக்கு வரவேண்டும் என எதிர்பார்க்கிறார்.
நான் பாஜ மற்றும் தேஜ கூட்டணியின் கடந்த காலங்களை பார்க்கிறேன், தேச நலன் கருதி என குறிப்பிட்டு மத்திய அரசு எடுத்த முடிவுகள், நடவடிக்கைகளை எண்ணிப் பார்க்க முயன்றேன். அந்தப் பட்டியல் நீளமானதும், சர்ச்சையானதும்கூட! அவற்றில் என்னால் தொகுக்க முடிந்தவை இவை.
பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி
பண மதிப்பிழப்பு நடவடிக்கை தேச நலன் கருதி செய்யப்பட்டதாக மீண்டும், மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இது ஒரு மிகப்பெரிய தவறு என்று விமர்சகர்கள் தெரிவித்தனர். இது பேரழிவான விளைவுகளை ஏற்படுத்தியது. பொருளாதாரத்திற்கு தேவையான பணம் சார்ந்த விவசாயம், கட்டுமானம், சில்லறை வியாபாரம் மற்றும் சுய வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கு தேவையான பணம் தடைபட்டது. சிறு மற்றும் குறு தொழில் செய்தவர்கள் தங்கள் தொழிலை நடத்தமுடியாமல், அதை இயக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். இதுவரை அந்த தொழில்கள் மூடியே கிடக்கிறது. வேலைவாய்ப்பை இழந்தவர்கள் தற்போதும், நீண்ட காலமாக வேலைவாய்ப்பின்றியே இருந்துவருகின்றனர். பணமதிப்பிழப்பு தேச நலனுக்காக செய்யப்பட்டதா அல்லது அதை எதிர்த்து செய்யப்பட்டதா என்று குழப்பமாக உள்ளது.
அரசு கருத்துப்படி, தேச நலன் கருதியே ஜிஎஸ்டி சட்டமும் இயற்றப்பட்டது. இந்த சட்டம் கவனமாக இயற்றப்பட்டிருந்தால், விகிதம், மிதமான ஒற்றை விகிதமாக இருந்திருந்தால், அதற்கு தேவையான மென்பொருள்கள் உருவாக்கப்பட்டிருந்தால், அதை இயக்கக்கூடியவர்களுக்கு முறையான பயிற்சி கொடுக்கப்பட்டு, அவர்கள் தயாரான நிலையில் இருந்திருந்தால், இது ஏற்கத்தக்க வாதமாக இருந்திருக்கும். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து, செய்யப்பட்ட மதிப்பீடுகளைவிட குறைவான வசூல், ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி, மாநிலங்களுக்கு ஈடு செய்வதற்கு உறுதியளித்ததைவிட குறைவாக கொடுக்க வேண்டிய நிலை போன்ற காரணங்களால், இது தேச நலன் கருதியதாக இல்லை. எனவே இதை திரும்பப்பெறவேண்டும்.
சட்டப்பிரிவு 370 மற்றும் குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு
சட்டப்பிரிவு 370ஐ நீக்கியது தேச நலன் கருதி என்று மீண்டும் இந்த அரசு வாதிடுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பது தேச நலன் கருதிய செயல். 2019ம் ஆணடு ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அந்த பள்ளத்தாக்கை பூட்டி வைத்திருப்பது தேச நலன் சார்ந்த செயல். மூன்று முன்னாள் முதலமைச்சர்களை எவ்வித குற்றமும் செய்யாமல் 6 மாதத்திற்கு தடுப்புக்காவலில் வைப்பது, அவர்கள் மீது பொது காவல் சட்டத்தை ஏவி, குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி, மேலும் இரண்டு ஆண்டுகள் வரை கைது செய்வது மிக உயர்ந்த தேச நலன் சார்ந்த செயல். ஏழு மாதத்திற்கு மேலாக ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை தள்ளிவைப்பது தேச நலன் கருதிய செயல். இந்த பட்டியல் மிக நீளமானது. ஆனால், காஷ்மீரில் யாரும் இதை ஏற்பார்களா என்று தெரியவில்லை.
அசாமுக்கு தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்படுத்துவது தேச நலன் சார்ந்த செயலாக அரசு கூறுகிறது. 19 லட்சத்து 6 ஆயிரத்து அறுநூற்று ஐம்பத்தி ஏழு பேரை வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாகவோ அல்லது சட்ட விரோதமாக குடியேறியவர்களாகவோ அடையாளம் காட்டுவது தேச நலன் கருதிய செயல். அவர்களை கரையான்கள் என்று அழைத்து, அவர்களை 2024ம் ஆண்டிற்குள் விரட்டி அடிப்பேன் என்று உறுதி மேற்கொள்வது மேம்படுத்தப்பட்ட தேச நலன் சார்ந்த செயல். அந்த வெளிநாட்டைச் சேர்ந்தவர்களில் 12 லட்சம் பேர் இந்துக்கள். அவர்கள் மீது 1955ம் ஆண்டின் குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றும் கொடூரமான செயல் தேசநலன் சார்ந்த செயல். ஒரு சட்டத்தை இயற்றி, அதை 72 மணி நேரத்தில் நிறைவேற்றி, அது முஸ்லிம் அல்லாதவர்கள் இருக்கலாம். முஸ்லிம்கள் இருக்கக்கூடாது என்று கூறுவது மிகப்பெரிய தேச நலன் கருதிய ஒன்றுதான். இந்த ‘தேச நலன் சார்ந்த முடிவுகள்’ நாடு முழுவதும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளன. குடியுரிமையை நிருப்பிக்கும் 15 ஆவணங்களின் அடிப்படையில், ஜபீதா பேகத்தின் கூற்றை நிராகரிப்பது, தேச நலனை பாதுகாப்பதற்காக செய்யப்பட்ட ஒன்றா?
தேச துரோகம் மற்றும் பட்ஜெட்
குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து பேசுபவர்கள் மீது தேசதுரோக குற்றச்சாட்டுகள் சுமத்துவது தேச நலன் சார்ந்த செயல். அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள் மீது லத்தியை உபயோகிப்பது, தண்ணீர் பீய்ச்சியடிப்பது மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்துவது தேச நலன் கருதிய செயல். (உத்திரபிரதேசத்தில் மட்டும் 23 பேர் இறந்துள்ளனர்) ஒரு குழந்தை குடியுரிமை திருத்தச்சட்டத்தை மறைமுகமாக எதிர்த்து பள்ளியில் நடத்திய நாடகத்திற்காக அதன் ஆசிரியரையும், பெற்றோரையும் கைது செய்வது தேச நலன் சார்ந்த செயல்.
தேர்தல் பேரணிக்காக கூடியிருந்தவர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்று கத்துவது மற்றும் பணியில் இருக்கும் ஒரு முதலமைச்சரை தீவிரவாதி என்று அழைப்பது தேச நலன் கருதிய செயல். டெல்லி தேர்தலில் பாஜவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையேயான போட்டியை இந்தியா-பாகிஸ்தான் சண்டையாக சித்தரிப்பது தேச நலன் சார்ந்த செயல்.
160 நிமிடத்தில் அரைகுறையாக பட்ஜெட் உரையை படித்து முடிப்பது தேச நலன் கருதிய செயல். சில நூறு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாயையை, கார்பரேட் வரி குறைப்பு என்று பிரித்து தருவது தேச நலன் சார்ந்த செயல். விவசாயம், உணவு பாதுகாப்பு, மதிய உணவு திட்டம், சுய வளரச்சி திட்டம், உடல் நலன் திட்டம் உள்ளிட்டவற்றின் செலவுகளை குறைப்பது தேச நலன் கருதிய செயல். வேலைவாய்ப்பின்மை உயர்வு (2017ம் ஆண்டு 6.1 சதவீதம்) நுகர்வு சரிவு (2017ம் ஆண்டு 3.7 சதவீதம்) என்ற சர்வே முடிவுகளை மறைப்பது தேச நலனை பாதுகாப்பதற்காக செய்த செயல். விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு மந்திரங்களை ஜெபித்துக்கொண்டிருப்பதும் தேச நலன் சார்ந்த செயல்.
நீரவ் மோடி, மெகுல் சொக்க்ஷி, விஜய் மல்லையா, ஜெடின் மேத்தா, சண்டசாரா சகோதரர்கள் ஆகியோரை வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல அனுமதிப்பது தேச நலன் கருதிய செயல். லலித் மோடியை வெளியேற்றக்கூறி இங்கிலாந்து அரசுக்கு நெருக்கடி கொடுக்காதது தேச நலன் சார்ந்த செயல்.
இவ்வாறு தேச நலன் சார்ந்த செயல்கள் முடிவில்லாமல், இந்தியாவில் நீண்டுகொண்டே செல்கிறது. இதுபோன்ற தேச நலன் சார்ந்த செயல்களுக்காக இந்திய அரசு கூடுதல் நேரம் உழைக்கிறது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாகி இந்தியா உலகின் சக்தி வாய்ந்த நாடாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
(கட்டுரையாளர் ப.சிதம்பரம், காங்கிரஸ் மூத்த தலைவர். முன்னாள் மத்திய அமைச்சர்.)
தமிழில்: R.பிரியதர்சினி
இந்தக் கட்டுரையை ஆங்கிலத்தில் வாசிக்க, ‘க்ளிக்’ செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.