ப சிதம்பரம்
அனைவருக்கும் பென்ஷன் தரும் ஓய்வூதிய மசோதா உண்மையில் ஒரு பிரச்சனை தான். ஆனால் அவற்றுக்கான மாற்று திட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை. அக்னிபாத் திட்டம் ஒரு மாடலாக இஸ்ரேலில் சோதனை செய்யப்பட்டது என்ற வாதம் புத்திசாலித்தனமானது இல்லை. இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகை மிகவும் குறைவு. அத்துடன் இங்கு வேலைவாய்ப்பின்மை என்ற நிலையே இல்லை. அங்கு கட்டாய ராணுவ சேவை உண்டு. இந்த நிலையில் இந்த திட்டத்தை ஒரு ஆட்சேர்ப்பு முறையாக மாற்றுவதற்கு முன் சோதித்துப் பார்த்திருக்க வேண்டும்.
முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது, அமெரிக்கா முழுவதும் ஒரு சுவரொட்டி ஒட்டப்பட்டது. அதில் "அமெரிக்க இராணுவத்துக்கு நீங்கள் வேண்டும் " என்று எழுதப்பட்டிருந்தது. மேல் தொப்பியுடன் இருந்த இந்த உருவம் அங்கிள் சாம் என்று செல்லமாக அழைக்கப்பட்டது. பாதுகாப்புப் படைகளுக்கு வீரர்களைச் சேர்ப்பதற்கான அதன் அக்னி பாதை திட்டத்தை விளம்பரப்படுத்த இந்திய அரசாங்கம் இதேபோன்ற சுவரொட்டியை முயற்சி செய்யலாம். இருப்பினும் இந்த சுவரொட்டியில் ராணுவ வீரர் தவிர தையல்காரர், சலவை செய்பவர், முடிதிருத்தும் பணியாளராக பணியாற்ற ஆட்கள் தேவை என ஒரு வாசகத்தை சேர்க்க வேண்டும்.
அக்னிபாத் என்று அழைக்கப்படும் இந்த திட்டம் உண்மையில் மிகவும் எளிமையானது. முப்படைகளில் ஒவ்வொரு ஆண்டும் நாற்பத்தாறாயிரம் வீரர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ஆறு மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டு 42 மாதங்கள் பணியமர்த்தப்படுவார்கள். 48 மாதங்களின் முடிவில் அவர்களில் நான்கில் ஒரு பங்கு வீரர்கள் மட்டும் மேலும் 11-13 ஆண்டுகள் பணியாற்ற தக்க வைக்கப் படுவார்கள். மீதமுள்ளவர்கள் அதாவது 34,500 பேர் ரூ. 11,67,000 பணி முடிப்பு தொகையாக அளிக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள். அதன் பின்னர் வேலைக்கு உத்தரவாதம், ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் மருத்துவம் அல்லது பிற சலுகைகள் எதுவும் இருக்காது.
இந்த திட்டத்தின் குறைகள் பளிச்சென்று நமக்கு தெரிகின்றன. இந்த யோசனை மிக உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களிடமிருந்து திணிக்கப்பட்டது என்பது நமக்கு முதலிலேயே தெரிகிறது. மோடி அரசு பதவியேற்ற 2014 முதல் இந்த அரசாங்கம் அப்படித்தான் செயல்படுகிறது. பணமதிப்பு நீக்கம், ரபேல் ஒப்பந்தம், நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் திருத்தங்கள் மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிரான மூன்று விவசாயச் சட்டங்கள் ஆகியவை கடந்த கால உதாரணங்கள். எதிர்பார்த்தபடியே இந்த சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அவை தொற்றுநோய் காரணமாக ஒன்றுக்கு மேற்பட்ட முறைகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில் அவர்களில் பலர் அக்னிபாத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 21 வயதைத் தாண்டி இருப்பார்கள். எதிர்ப்புக்கள் வெடித்த மறுநாளே, அரசாங்கம் இடைக்கால அறிவிப்புகளை அறிவிக்க தொடங்கியது. இந்த அறிவிப்புகளை ஏற்கனவே முடிவு செய்திருந்ததாகவும் வெட்கமில்லாமல் சொல்லிக்கொண்டது. ஆனால் இவை எவையும் அடிப்படை குறைபாடுகளை தீர்ப்பதாக இல்லை.
முதலாவதாக இந்த அறிவிப்பு வெளியான நேரமே சரியில்லை. சீனாவும், பாகிஸ்தானும் ஊடுருவ முயலும் இந்த நேரத்தில் இந்த அறிவிப்பு நிலைமையை மேலும் மோசமாக்கும். சூரியன் பிரகாசிக்கும் போது கூரையை சரி செய்ய வேண்டுமே தவிர மழை பெய்யும் போது அல்ல.
இரண்டாவதாக, அரசு அறிவித்துள்ள அக்னிபாத் வீரர்கள் போதிய அளவுக்கு பயிற்சி பெறாமல் நாட்டின் எல்லைகளில் கொண்டுபோய் நிறுத்தப்படுவார்கள். கடற்படைத் தளபதி அருண் பிரகாஷ் சொல்வது போல, வழக்கமாக கடற்படைக்கு வீரர்கள் ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குப் பயிற்சி பெற்ற பிறகே முழுமையாக போர் செய்யும் ஆற்றலை பெறுவார்கள். கடற்படையும் விமானப் படையும் தொடர்ச்சியாக நவீன தொழில்நுட்பங்களை புகுத்திக் கொண்டே வருகின்றன. இந்நிலையில் எந்த ஒரு கடற்படை வீரரும் விமானப்படை வீரரும் ஆறு மாதங்களுக்குள் பயிற்சிகளை முடித்துக் ஒரு போருக்கு தயாராக முடியாது. இந்த திட்டப்படி ராணுவ வீரர்கள் பயிற்சி முடித்து முப்படைகளிலும் சேர்க்கப்பட்ட பிறகு பிரம்மோஸ், பினாகா அல்லது வஜ்ரா போன்ற நவீன ரக ஏவுகணைகளையும் போர்த் தொழில்நுட்பங்களையும் கையாளும் திறமையற்றவர்களாக இருப்பார்கள் எனக் கவச வாகனப் படையின் தலைமை இயக்குநராகப் பணிபுரிந்து ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் பி.ஆர்.சங்கர் சுட்டிக் காட்டுகிறார். அவர்கள் பீரங்கியைக் கையாளவும் படைப்பிரிவின் தலைவருக்கு அடுத்த நிலை அதிகாரியாக பணி புரியும் அளவுக்கு பயிற்சி பெற்றிருக்க மாட்டார்கள் என்று சொல்லுகிறார். இவர் மேலும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் உருவாகும் தரைப் படையை ‘கிண்டர் கார்டன் சேனை’ என்றும் சிலேடையாக சொல்கிறார்.
மூன்றாவதாக இந்த திட்டத்தை கூர்ந்து கவனித்தால் போர்க்குணம் மிக்க படைவீரர் தன்னுடைய படைப்பிரிவு குறித்துப் பெருமை கொள்பவராகவும் துணிச்சல் மிக்கவராகவும் இருக்க வேண்டும். நெருக்கடியான நிலையில் தலைமைப் பண்பை வெளிப்படுத்துகிறவராகவும் எத்தகைய ஆபத்தையும் எதிர்கொள்ளும் துணிச்சலை வளர்த்துக் கொள்பவராகவும் இருக்க வேண்டும். இந்தக் கருத்துக்களை ராணுவத்தில் பணிபுரிந்து புகழ்பெற்ற பல தரைப் படை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆறு மாதப் பயிற்சிக் காலத்தில் இந்தப் பண்புகள் வந்துவிடும் என்று மனித வளம் தொடர்பான எந்த புத்தகத்திலும் இல்லை. மாநில காவல் துறையில் ஒரு போலீஸ்காரருக்கு பயிற்சி தருவதற்கு கூட அதிக காலம் பிடிக்கும்.
நான்காவதாக, ராணுவத்தில் அதிலும் குறிப்பாக தரைப்படை பிரிவில் பாரம்பரியம் மற்றும் சமுதாயத்திற்கான பண்புகள் உண்டு. ஒரு போர் வீரர் தன்னுடைய நாட்டுக்காகவும் தன்னுடன் பணி புரியும் சக வீரர்களை காப்பாற்ற தன்னுடைய உயிரைத் தியாகம் செய்பவராக இருக்க வேண்டும். இந்தியாவின் பல்வேறு படைப்பிரிவுகள் மிகவும் தொன்மையானவை. ஆனால், உலகிலேயே மிகச்சிறந்த ராணுவமாக இந்தியா திகழ அவையே காரணகர்த்தாவாக இருந்திருக்கின்றன என்பதை மறக்க முடியாது. நான்காண்டுகள் படையில் பணிபுரியும் போதே நான்காண்டுகளுக்குப் பிறகு தங்களில் முக்கால்வாசிப் பேர் ‘ராணுவத்தில்இருந்து விடுவிக்கப்பட போகிறார்கள் என்று அவர்கள் உணர்வார்கள். அவர்களை ‘முன்னாள் படை வீரர்கள்’ என்றுகூட அழைக்க மாட்டார்கள். வாழ்க்கையை எதிர்கொள்வதிலும் பாதுகாப்பற்ற நிலையிலேயே இருப்பார்கள். நான்காண்டுகளுக்கு பிறகு வாழ்வதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. அப்படிப் பட்ட நிலையில் இவர்கள் என்ன விதமான தியாகங்களை செய்வார்கள்?
ஐந்தாவதாக, நிதிச் செலவை மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ராணுவ வீரர்களின் தரத்திலும் திறனிலும் சமரசம் செய்து கொள்வது குறித்து சிந்திக்க வேண்டும். ராணுவத்தில் பணியாற்றியவர்களின் ஓய்வூதியச் சுமை ஆண்டுக்காண்டு அதிகரித்துவருவது உண்மையில் ஒரு முக்கிய அங்கம் தான். அதைச் சமாளிப்பதற்காக மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டதாக எந்த ஆதாரங்களும் இல்லை. .
அக்னிபாத் திட்டம் ஒரு மாடலாக இஸ்ரேலில் சோதனை செய்யப்பட்டது என்ற வாதம் புத்திசாலித்தனமானது இல்லை. இஸ்ரேல் நாட்டின் மக்கள் தொகை மிகவும் குறைவு. அத்துடன் இங்கு வேலைவாய்ப்பின்மை என்ற நிலையே இல்லை. அங்கு கட்டாய ராணுவ சேவை உண்டு. இத்தனை விஷயங்களும் வெளிச்சத்துக்கு வந்த பிறகும்
அக்னிபத் திட்டத்தை ஏன் சோதனை திட்டமாக சில படைப்பிரிவுகளில் மட்டும் அறிமுகப்படுத்தி, அதன் செயல்பாடு எப்படி இருக்கிறது என்று அனுபவம் மூலம் விளைவுகளைத் தெரிந்து கொண்ட பிறகு, முழு ராணுவத்துக்கும் விரிவுபடுத்த கூடாது என்பது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். தரைப்படையின் துணைத் தலைமைத் தளபதி ஜெனரல் ராஜு இது முன்னோடி திட்டம்தான், நான்கு அல்லது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இதில் தேவையான மாற்றங்கள் செய்யப்படும்” என்று சொல்கிறார்.
ஒப்பந்தத்தின் சக்தியா ?
முறையான பயிற்சி இல்லாமல், எந்த விதமான கவனமான லட்சியமும் கொடுக்கப் படாத , ஒப்பந்த அடிப்படையிலான வீரர்களைக் கொண்ட படைப் பிரிவுகள் நாட்டின் பாதுகாப்புக்கு பெருத்த பலவீனமாக அமைந்துவிடாதா என்ற கேள்விக்கு நேரடியாக அரசு பதில் சொல்லவில்லை. ஆனால் அடுத்தடுத்து சில மாற்றங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. மத்திய துணைநிலை ராணுவப் படைப்பிரிவுகளிலும் மத்திய அரசின் அரசுத் துறை நிறுவனங்களிலும், பணிக்காலம் முடிந்து வெளியே வரும் வீரர்களுக்கு 10 சதவீத பணியிடங்கள் ஒதுக்கப்படும் என்பது சரியான பதிலா ? முன்னாள் படை வீரர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிரிவின் தலைமை இயக்குநர் அளித்த தகவல்களின்படி (21.06.2022 இந்தியன் எக்ஸ்பிரஸ்), குரூப்-சி பதவிகளில் 10-14.5% பதவிகளும் குரூப்-டி பதவிகளில் 20-24.5% பதவிகளும் ஒதுக்கப்படுவதாக அறிவித்திருந்தும் உண்மையில் குரூப்-சி பிரிவுகளில் 1.29% குறைவாகவும் குரூப்-டி பிரிவில் 2.66% குறைவாகவும் தான் சேர்க்கப்பட்டனர். இந்திய ராணுவத்தில் ஆள் சேர்க்க மாறுதல்களைச் செய்ய வேண்டிய தேவையேற்பட்டால் அது தொடர்பாக தெளிவான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும். எதிர்கொள்ள வேண்டிய தேவைகள் என்ன என்று பட்டியலிடப்பட்டு இருக்க வேண்டும். மாற்று வழிகளை ஆலோசனைகளாகக் கூறுமாறு கேட்டிருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறைக்கென்று உள்ள நிலைக்குழுவில் இதைப் பற்றி விரிவாக விவாதித்திருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தியிருக்க வேண்டும். இத்தனையும் நடந்த பின்பே இந்த திட்டம் செயல்படுத்தப் பட்டிருக்க வேண்டும். உரிய திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அதன் பின்னர் அமல் படுத்தப் பட்டிருக்க வேண்டிய அக்னிபாத் திட்டத்தை மோடி அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். இதற்கு என்ன மாற்றுவழி என்ன இருக்கிறது என்பதை அரசு மறுபடியும் சிந்திப்பது நல்லது.
தமிழில் :த.வளவன்
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.