ப. சிதம்பரம்
கடந்த 2013-14 இறுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவியிலிருந்து விலகிய போது, நடப்பு நிதியாண்டின் பற்றாக்குறை 1.7% ஆக குறைக்கப்பட்டது. நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான விலைவாசி ஏற்றம் 9.4% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டது (இது 2014-15 ஆம் ஆண்டில் மேலும் 5.9% ஆகக் குறைந்தது), அந்நியச் செலாவணி கையிருப்பு 15.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது . தவிர டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 58.4 ரூபாயாக இருந்தது. வரலாற்றைப் படிக்க விரும்புவோருக்கு இதில் பாடம் உண்டு.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 2022-23 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கான நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் 16.2 சதவீதமாக இருக்கும் என மதிப்பிட்டது. ஆனால் 13.5 சதவிகிதத்தை மட்டுமே பதிவு செய்ய முடிந்தது. இதனால் ரிசர்வ் வாங்கி ஏமாற்றமடைந்தது. இதனால் மீதமுள்ள மூன்று காலாண்டுகளில், ரிசர்வ் வங்கியின் மதிப்பீடுகள் 6.3, 4.6 மற்றும் 4.6 சதவீதமாக இருக்கும் என இப்போது மதிப்பிட்டிருக்கிறது.
மொத்தமாக மதிப்பிடப்பட்ட சராசரி 7 சதவிகிதம் என்பது கவனத்துக்குரியதாக இருந்தாலும் உண்மையான பொருளாதார வளர்ச்சி இந்த சராசரியில் இல்லை. வளர்ச்சி விகிதம் எப்படி இருக்க போகிறது என்பதில் தான் உள்ளது. காலாண்டிற்கு பின் காலாண்டில், வளர்ச்சி விகிதம் குறையும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வர்த்தகத்துக்கான ஐக்கிய நாடுகள் சபை மாநாடு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2022 இல் 5.7 சதவிகிதம் மற்றும் 2023 க்கு 4.7 சதவிகிதம் என்றே இருக்கும் என சொல்லியிருக்கிறது. 2016-ல் பணமதிப்பிழப்பு செய்யப்பட்டதில் இருந்து, 2016-17, 2017-18, 2018-19, 2019-20 மற்றும் 2020-21 ஆகிய ஆண்டுகளில் ஆண்டு வளர்ச்சி விகிதம் 8.26, 6.80, 6.53, 4.04 மற்றும் -7.25 ஆக இருந்தது.
அதேபோல், 2017-18-ன் நான்காவது காலாண்டில் இருந்து காலாண்டு வளர்ச்சி விகிதம் 8.93; 7.56, 6.49, 6.33, 5.84 எனும்படியாக சரிந்தது. அடுத்த நிதியாண்டை கவனித்தாலும் (2018-19) 5.39, 4.61, 3.28, 3.01 (2019-20) படிப்படியான சரிவைக் காணலாம். இதை கூர்ந்து கவனித்தால் புரியும். நான்கு நிதியாண்டுகள் மற்றும் எட்டு காலாண்டுகளில் சரிந்து வரும் போக்கை நீங்கள் காணலாம்.
வலுவான , உறுதியான பொருளாதாரக் கொள்கை எப்போதும் சூழலுக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். சந்தைப் பொருளாதாரத்தில் பொருளாதாரக் கொள்கையின் சில கூறுகள் நிலையானதாக இருக்கும் போது, மற்ற கூறுகள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சேர்க்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின் கவர்னர் திரு சக்திகாந்த தாஸ் இது குறித்து விளக்கியிருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில், உலகம் இரண்டு பெரிய அதிர்ச்சிகளை எதிர் கொண்டுள்ளது. கோவிட் 19 தொற்றுநோய் மற்றும் உக்ரைனில் மோதல் போக்கு உலகை நிலைகுலைய செய்துள்ளது. இவற்றை தவிர நாம் இன்னொரு புயலையும் சந்திக்க வேண்டியுள்ளது. பணக்கார நாடுகளின் கடுமையான நிதிக்கொள்கைகளும் அவற்றில் ரிசர்வ் வங்கிகளால் மேற்கொள்ளப்படப் போகும் கடுமையான வட்டி விகித உயர்வும் உலக நாடுகளை பாதிக்கும். இந்த புயலில் நாமும் தான் இருக்கிறோம். அமெரிக்கா உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாகவும், உலக வர்த்தகம் டாலரில் நடக்கும் பட்சத்தில் தலைவனை பின்பற்றுவது தான் விவேகமான முடிவு. அமெரிக்காவின் பணவீக்கம் தற்போது 8.3 சதவீதமாக இருக்கிறது. இதை சீராக்குவதற்காக அமெரிக்க தலைமை வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்திக் கொண்டே இருக்கும்.
இந்திய ரிசர்வ் வங்கி 2022 செப்டம்பர் மாதத்துக்கான அறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலை விவரிக்கப்பட்டுள்ளது. அதன் அறிமுகத்தில், நாம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட சாத்தியக்கூறுகளின் காலங்களில் பயணிக்கிறோம். உயர்த்தப்பட்ட பணவீக்கம், அதிகரித்து வரும் மந்த நிலை அபாயங்கள், பொருளாதார தேக்கநிலை, அதிகரிக்கும் கடன், வலுவாகிக் கொண்டே செல்லும் அமெரிக்க டாலர் , வலுவிழக்கும் பிறநாட்டு நாணயங்கள், விநியோகச் சங்கிலி அழுத்தங்களை எளிதாக்குதல் மற்றும் மறுசீரமைப்பு, கொள்கை நடவடிக்கைகளில் ஒத்திசைவு மற்றும் உலகளாவிய கொள்கைகளை கைவிடுதல், பற்றுநிலையில் இயல்பு நிலையை கொண்டு வர நடவடிக்கை எடுத்தல், கடன் வழங்க முடியாத அளவுக்கு நிதியை பெறுவதில் அழுத்தங்கள் போன்றவை விவரிக்கப்பட்டுள்ளன.
கடினமான சவால்கள்
மேற்கண்ட மதிப்பீடு அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். ஆனால், இந்தியாவில் மட்டும்தான் இந்த ஆபத்துக்குரிய நடவடிக்கைகளை எடுக்காமல் பயத்தை மறைக்கும் வகையில் வெறும் வெட்டிப்பேச்சை வீறாப்பாக பேசுவதே கொள்கையாகி விட்டது. இந்த கட்டுரையில் நான் அடுத்தடுத்து சொல்வதை வைத்து இந்த அரசின் செயல்திறன் தேர்ச்சி பெறுவதற்கு தகுதியானதா அல்லது தோல்விக்கு தகுதியானதா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். அவற்றை பட்டியலிட விரும்புகிறேன்.
ரிசர்வ் வங்கியின் நியதிப்படி பணவீக்கம் 4 சதமானம் அல்லது அதைவிட 2 சதமானம் குறைவாக இருக்க வேண்டும். கடந்த 24 மாதங்களில் சில்லறை பணவீக்கம் 6 சதவீத வரம்பை விட அதிகமாக உள்ளது. கடந்த 12 மாதங்களாக மொத்த விலை பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. தற்போதைய பணவீக்க விகிதங்கள் நுகர்வோர் விலை குரியீட்டு எண் அடிப்படையில் I 7 சதவீதமாகவும் மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் 12.37 சதவீதமும் இருக்க வேண்டும். பணவியல் கொள்கைக்குப் பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர் இதை நேர்மையாக ஒப்புக்கொண்டார். இரண்டு வருட சுழற்சியில் பணவீக்கம் இலக்கை நெருங்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், அதை உறுதியாக நிறைவேற்ற முடியாத வகையில் பல்வேறு நிச்சயமற்ற நிலைகள் உள்ளன. நிதியமைச்சருக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே உள்ள பணவியல் கொள்கையின் செயல்திறன் குறித்து கருத்து வேறுபாடுகள் இருப்பதால் பணவீக்க மேலாண்மையின் போக்கு நிச்சயமற்றதாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவர அட்டவணையின்படி முதல் காலாண்டில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 23.9 பில்லியன் டாலர்கள். இது மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.8 சதவீதமாக இருக்கிறது. முக்கியமாக சரக்கு வர்த்தகத்தில் ஏற்பட்ட பற்றாக்குறையின் காரணமாக, ஏப்ரல்-செப்டம்பர், 2022 காலகட்டத்தில் வணிகப் பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறை 149.5 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு ஆதாரம் ஒன்றிய வணிகம் மற்றும் தொழில் அமைச்சக புள்ளிவிவரங்கள், தங்கம் மட்டும் 20 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. லாப, நஷ்ட கணக்கில் 65.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கிறது. முதல் காலாண்டில் ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கத்துக்கு பிறகு ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பொருட்களின் ஏற்றுமதி ஒரு சரிவை சந்தித்தது. அமெரிக்க டாலர் மதிப்பில் இவை 36.27, 33.00 மற்றும் 32.62 பில்லியன். இந்த விகிதத்தில் ஏற்றுமதி குறைந்து இறக்குமதி அதிகரித்தால், வெளி வர்த்தக பற்றாக்குறை மட்டுமே ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதமானம் என்ற அளவை தாண்டி 3.4 சதமானம் என்ற அளவுக்கு போகும்.
ரூபாய்- டாலர் செலாவணி விகிதம்
நிதி ஆண்டின் தொடக்கத்தில், ரூபாய், டாலரின் மாற்று விகிதம் ரூ.75.91 ஆக இருந்தது. இன்று இதன் விலை ரூ.82.32. ஏப்ரல் 1, 2022 அன்று மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு 606 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. செப்டம்பர் 30க்குள் மொத்த கையிருப்பு 537 பில்லியன் அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வேகமாக சரிந்து விடாமல் இருக்க ரிசர்வ் வங்கி 69 பில்லியன் டாலர்களை செலவிட்டது. இருந்தாலும் கூட ரூபாய் மதிப்பு ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 8 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவின் பொறியியல் பொருளாதார அடையாளங்கள் என்று எடுத்துக் கொண்டால் குறைந்து வரும் பொருளாதார வளர்ச்சி, பண வீக்க எழுச்சி, மோசமாக்கும் வெளிவர்த்தக பற்று வரவு, குறைந்து வரும் ரூபாயின் மதிப்பு போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
ஒரு வரலாற்று பாடம்
இந்திய நாடு தற்போது நாடு எதிர்கொண்டுள்ள நிலைமைக்கு முன்னுதாரணம் இருக்கிறது. 2012-13 ல், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் பொருளாதார நடவடிக்கைகள் கைகொடுத்தன. அப்போதும் அதிக தங்க இறக்குமதி இருந்தது. அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் பென் பெர்னான்கே வட்டி விகிதத்தை அதிகப் படுத்தினார்.
2013-14 இறுதியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பதவியிலிருந்து விலகிய போது, நடப்பு நிதியாண்டின் பற்றாக்குறை 1.7% ஆகக் குறைக்கப்பட்டது, நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான விலைவாசி ஏற்றம் 9.4% ஆகக் கட்டுப்படுத்தப்பட்டது (இது 2014-15 ஆம் ஆண்டில் மேலும் 5.9% ஆகக் குறைந்தது), அந்நியச் செலாவணி கையிருப்பு 15.5 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது . தவிர டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 58.4 ரூபாயாக இருந்தது. வரலாற்றைப் படிக்க விரும்புவோருக்கு இதில் பாடம் உண்டு.
தமிழில்: த. வளவன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.