Advertisment

காஷ்மீருக்கு சுயாட்சி வேண்டும்; ப. சிதம்பரம்

காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர், எம்.பி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த ஆசாத் காஷ்மீரின் மூல யோசனைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தார். தற்போது எம்.பி அந்தஸ்தை இழந்து விட்ட ஆசாத் காஷ்மீர் தொடர்பாக எதிர்க் கருத்தை தழுவி இருப்பது துரதிஷ்டவசமான திருப்பம்.

author-image
WebDesk
New Update
காஷ்மீருக்கு சுயாட்சி வேண்டும்; ப. சிதம்பரம்

காங்கிரஸ் காரியக் கமிட்டி  உறுப்பினர், எம்.பி  மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த ஆசாத் காஷ்மீரின் மூல யோசனைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தார். தற்போது  எம்.பி  அந்தஸ்தை இழந்து விட்ட ஆசாத் காஷ்மீர் தொடர்பாக  எதிர்க் கருத்தை தழுவி இருப்பது துரதிஷ்டவசமான திருப்பம்.

 

1947 முதல் காஷ்மீர் பற்றி இரண்டு எதிர் கருத்துக்கள்  தொடர்கின்றன.ஆனாலும்  அவ்வப்போது, கருத்துக்கள் பல மாறுபாடுகளாக உருமாறி காஷ்மீர் பற்றி இரண்டுக்கும் மேற்பட்ட கருத்துக்கள் இருப்பதாக ஒரு  எண்ணத்தை  உருவாக்குகின்றன.  உண்மையில், இரண்டு கருத்துக்கள் மட்டுமே உள்ளன, அவை ஒன்றுக்கு ஒன்று எதிரானவை.



 

உண்மையில் காஷ்மீர் பற்றிய வரலாறு  அக்டோபர் 26, 1947 அன்று அப்போதைய காஷ்மீர் மகாராஜா ஹரி சிங் கையெழுத்திட்ட உடன்பாட்டில் இருக்கிறது. அதை இந்திய அரசியலமைப்பு சட்டமும் அங்கீகரித்தது. ஆனால் காலப்போக்கில் காங்கிரஸ் கட்சி   அதன் நிலையை நீர்த்துப்போகச் செய்தாலும், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும்  காஷ்மீருக்கு தனி அந்தஸ்து வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியே வந்திருக்கிறது.



 

கடந்த 1947 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் முதல் அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த சியாமா பிரசாத் முகர்ஜியில் இருந்து காஷ்மீர் குறித்த மையக் கருத்து  எதிராக தொடங்குகிறது.  அவர் சார்ந்த  RSS மற்றும் பிஜேபி உட்பட அதன் அரசியல் சந்ததியினர் முகர்ஜியின் யோசனையை ஏற்றுக்கொண்டனர். இந்தியாவுடன் காஷ்மீர் இணைந்த உடன்பாட்டையே  சிதைத்தும் வருகின்றனர்.



காங்கிரசுக்கு மாற்றுக்கருத்து இல்லை



கடந்த ஆகஸ்ட் 5, 2019 அன்று, ஜம்மு & காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் தீவிர நடவடிக்கையை பிஜேபி அரசு  எடுத்தது. ஜம்மு காஷ்மீர்   மாநிலத்தை  துண்டாடி, ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக்  என இரண்டு  யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்த பிரிவினைக்கு அடுத்த நாள்  காங்கிரஸ் காரியக் கமிட்டி அவசரமாக கூடி  ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அது இது தான்.  

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு ஜம்மு காஷ்மீர் மாநிலம் துண்டாக்கப்பட்ட ஒருதலைப்பட்சமான  முற்றிலும் ஜனநாயக விரோதமான முறையை காங்கிரஸ் காரியக் கமிட்டி  கண்டிக்கிறது. ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உடன்பாட்டை  அனைத்து பிரிவினருடனும் கலந்தாலோசித்து  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி  திருத்தம் செய்திருக்க வேண்டும். அது வரையில் இந்த திருத்தம்  மற்றும் பிரிவினை கௌரவிக்க தகுதியானது அல்ல. இந்த தீர்மானத்துக்கு காரியக் கமிட்டியின் நீண்ட நாள் உறுப்பினர்  குலாம் நபி ஆசாத்  கூட்டத்தில் கலந்து கொண்டு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்.



திரும்ப பெற முடியாத சட்ட நடவடிக்கைகள்  




இந்த நேரத்தில் மோடி அரசாங்கம் எடுத்ததாகக் கூறப்படும் சட்ட நடவடிக்கைகளை நினைவுபடுத்துவது அவசியம்:



1. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை  நீக்க அரசியலமைப்பு (திருத்தம்) மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவில்லை அல்லது நிறைவேற்றப்படவில்லை.

Advertisment



2. அரசு ஆகஸ்ட் 5, 2019 அன்று   ஒரு ஆணை வெளியிட்டது.  1954 ஆம் ஆண்டின் இதேபோன்ற ஆணையை ரத்து செய்து அதில்  உட்பிரிவு (4) ஐச் சேர்த்தது.

   

3. அதே நாளில் அரசியலமைப்பு சட்டம் 370ஐ  ரத்து செய்வதற்கான ஒரு தீர்மானத்தை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தது.  இது இரு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டது, இது  அரசியலமைப்பு சட்டத்தின்  370(3) 370(3)ன் பிரிவின் படி ஒரு மசோதாவை கொண்டு வந்தது.



4. அதே நாளில் அதே மசோதாவின்  படி  ஜம்மு காஷ்மீர்  மாநிலத்தைப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களை உருவாக்கும் மசோதாவை ராஜ்யசபாவில் அரசாங்கம் அறிமுகப்படுத்தி நிறைவேற்றியது. இது மக்களவையில் நிறைவேற்றப்பட்டது அடுத்த நாள். இது அரசியலமைப்புக்கு சட்டத்தின்  3 வது  பிரிவின்  கீழ் இது நிறைவேற்றப் பட்டது.  



5. ஆகஸ்ட் 6, 2019 அன்று, ஜனாதிபதி  அரசியலமைப்பு  சட்டத்தின்   370 (3)  பிரிவின் கீழ்  2019 ஆகஸ்ட்  6ல் ஒரு அறிக்கை வெளியிட்டார். அரசியலமைப்பு சட்டத்தின் 370 பிரிவின் கீழ் இது வரையில் இருந்த  கூறுகள் அனைத்தும் இன்று முதல் விலக்கிக் கொள்ளப் படுவதாகவும் இனி இந்த அறிக்கையின் கீழ் வரும் புதிய பிரிவு  மட்டுமே அமலில் இருக்கும் என்று அந்த அறிக்கையில் தெளிவு படுத்தப் பட்டிருந்தது.



 

காங்கிரஸ் காரியக் கமிட்டியின்  இந்த  அனைத்து உறுப்பினர்களும் மேற்கூறிய நடவடிக்கைகள் சட்டவிரோதமானது மற்றும் அரசியலமைப்புக்கு முரணானது என்று உறுதியாக நம்பினர். இந்த இரு நாட்களிலும் அரசு எடுத்த நடவடிக்கைகள் எதற்குமே நாடாளுமன்றத்தின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினரின் ஒப்புதல் இல்லாமல்  சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.  நிர்வாக அதிகாரங்களைப் பயன்படுத்தி உத்தரவு மற்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தனிப் பெரும்பான்மையுடன் தீர்மானமும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டன.



 

கேள்விக்குரிய இந்த நடவடிக்கைகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  உச்ச நீதிமன்றம்  இந்த நடவடிக்கைகளை அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக கருதினால் அரசு எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் திரும்பப் பெற வேடணடியவை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.  திரு ஆசாத்துக்கு இவை அனைத்தும் தெரியும். ஆனாலும் அவர் அரசியலமைப்பு சட்டம் 370 மீண்டும் அமலுக்கு வரும் என்று எந்த அரசியல் காட்சியாவது மக்களிடம் கூறினால் அது பொய்யான வாக்குறுதியாகவே இருக்கும் என்று எதற்காக கூறுகிறார்?  



 

 பிரச்சினை விடுதலை அல்ல,  சிறப்பு நிலை.



காஷ்மீர் மக்களுக்கு உண்மையான பிரச்சனை அரசியலமைப்பு சட்டத்தின் 370 வது பிரிவு இல்லை. இந்த அரசால் 2019ல் நீக்கப் பட்ட சிறப்பு மாநில அந்தஸ்து தான். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு விட்டாலும் காஷ்மீரின் பெரும்பான்மையான மக்களும்  லடாக்கின்  கணிசமான மக்களும் தமது மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீடிக்க வேண்டும் என்றே விரும்புகின்றனர்.  சிறப்பு அந்தஸ்து என்பது இந்திய குடியரசின் நிரந்தர உறுப்பினராக மாநிலத்தை வைத்திருக்கும் அதே வேளையில் அதற்குரிய  சுயாட்சியை அளித்து வந்தது.



காஷ்மீர் மக்களை எனக்கு நன்றாக தெரியும் என்ற வகையில் சொல்கிறேன்.  அவர்கள் இந்தியாவிலிருந்து பிரிந்து போக வேண்டும் என்றோ சுதந்திரம் வேண்டும் என்றோ கோரிக்கை விடுக்க வில்லை. சுயாட்சி சுதந்திரம் வேண்டும் என்றே கேட்கின்றனர். இது குறித்து முன்னால் பிரதமர்கள் நரசிம்ம ராவ், வாஜிபாய் போன்றோர் கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ந்து காப்பாற்ற வேண்டும் என்றே விரும்புகின்றனர்.  ஒரு மாநிலம் ஒரு கூட்டமைப்பிற்குள் அதிக அளவு சுயாட்சியை விரும்புவதில்  வித்தியாசமான விஷயம் எதுவும் இல்லை. இலங்கையில் தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தமிழர்களுக்கு அதிக சுயாட்சி தரப்பட வேண்டும் என்றே இந்தியா இலங்கையிடம் வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டுக் கூட்டத்தில் கூட சமீபத்தில், அதாவது ஆகஸ்ட் 12, 2022 இல் இந்தியா  இந்தக் கருத்தை வலியுறுத்தியது.  



காங்கிரஸ் காரியக் கமிட்டி  உறுப்பினர், எம்.பி  மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்த ஆசாத் காஷ்மீரின் மூல யோசனைக்கு ஆதரவாகவே குரல் கொடுத்து வந்தார்.தற்போது  எம். பி  அந்தஸ்தை இழந்து விட்ட ஆசாத் காஷ்மீர் தொடர்பான எதிர்க் கருத்தை தழுவி இருப்பது  துரதிஷ்டவசமான திருப்பம்.



தமிழில் :த. வளவன்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment