Advertisment

அனைத்து ஏழைகளும் பாக்கியவான்கள் இல்லை

இந்தியாவில் ஏழைகளுக்கு புதிய இட ஒதுக்கீட்டை உருவாக்குவது பொருளாதார நீதியை முன்னேற்றும். ஆனால் SC, ST மற்றும் OBC பிரிவை சேர்ந்தவர்கள் மட்டுமே மொத்த ஏழைகளில் சுமார் 81.5 சதவீதம் பேர். இந்த ஏழை மக்களை இட ஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்குவது சமத்துவத்தையும் நீதியையும் மறுப்பதற்கு சமமானது.

author-image
WebDesk
New Update
EWS, EWS quota, Judgement of EWS quota, reservation on the basis of economics condition, EWS quota rulings, ப சிதம்பரம், இடஒதுக்கீடு தீர்ப்பு, உச்ச நீதிமன்றம், பொருளாதார இட ஒதுக்கீடு, Supreme court EWS judgement, Indian express P Chidambaram columns, Economically Weaker Sections, social justice, caste reservation

ப. சிதம்பரம்

Advertisment

இந்தியாவில் ஏழைகளுக்கு புதிய இட ஒதுக்கீட்டை உருவாக்குவது பொருளாதார நீதியை முன்னேற்றும். ஆனால் SC, ST மற்றும் OBC பிரிவை சேர்ந்தவர்கள் மட்டுமே மொத்த ஏழைகளில் சுமார் 81.5 சதவீதம் பேர். இந்த ஏழை மக்களை இட ஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்குவது சமத்துவத்தையும் நீதியையும் மறுப்பதற்கு சமமானது.

இந்த கட்டுரை சட்டம், அரசியல், சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகிய மூன்றும் சந்திக்கும் சங்கமம். இன்றைய இந்தியாவில் சமூக நீதி என்றால் என்ன, அது எதிர்காலத்தில் எப்படி எல்லாம் மாறும் என்பதை என்னால் உணர முடிகிறது. இந்திய சமூகம் எவ்வளவு சமத்துவமற்றது மற்றும் இந்திய சமுதாயத்தை இன்னும் சமத்துவமாக மாற்ற நாம் செய்ய வேண்டிய பல நூற்றுக்கணக்கான பணிகள் என்னவாக இருக்கும் என்பது குறித்து வலுவான உணர்வுகள் என்னிடம் உண்டு. சமூக நீதி மற்றும் சமத்துவம் என்ற வார்த்தைகளில் சில நேரங்களில், சமூக நீதி பாதிக்கப்பட்டுள்ளது, மற்ற நேரங்களில், சமத்துவம் அசமத்துவமாக மாறி நிற்கிறது.

சட்டங்கள் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தால் உருவாக்கப்படுகின்றன. அரசியலுக்கு தொடர்பில்லாத நீதிபதிகளால் சட்டங்களை பரிசீலித்து உரிய நியாயம் வழங்குகின்றன. ஆட்சியாளர்கள் நீதிபதிகளுக்கு அஞ்ச வேண்டும். நீதிபதிகள் ஆட்சியாளர்களுக்கு அஞ்ச தேவையில்லை. அரசியலும் சட்டமும் மோதும் போது எந்த மாதிரியான முடிவுகள் கிடைக்கிறது என்பதை வைத்தே ஒரு நாட்டில் சட்டப்படியான ஆட்சி நடக்கிறதா இல்லையா என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஜன்ஹித் அபியான் வழக்கில் நவம்பர் 7, 2022 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டம், அரசியல், சமூக நீதி மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இக்கட்டான சூழ்நிலைகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு கொண்டு வர பட்ட 103 வது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை விசாரித்து அந்த தீர்ப்பு வழங்கப் பட்டது. பொருளாதார ரீதியில் பின் தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கான இடஒதுக்கீடு வழக்கு என்றே இதை அழைக்கின்றனர். நான் அவர்களை 'ஏழைகள்' என்று அழைக்க விரும்புகிறேன்.

இந்த தீர்ப்பு சம்பந்தமான எனது கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்றே நான் முடிவெடுத்திருந்தேன். இந்த வழக்கின் முக்கிய அம்சங்களை நான் அறிவித்த பிறகு இதில் தங்களது கருத்தை தாங்களே தீர்மானித்துக் கொள்ளுமாறு வாசகர்களை வேண்டிக் கொள்கிறேன்.

அடிப்படை சிக்கல்கள்

கல்வி நிறுவனங்களிலும், அரசு வேலை வாய்ப்பிலும் இன்று பல வகையான இட ஒதுக்கீடுகள் அமலில் உள்ளன. இந்த இட ஒதுக்கீடுகள் "சமூக மற்றும் கல்வியில் பின்தங்கிய வகுப்பினருக்கானது, அதாவது இவர்களை பட்டியல் சாதிகள் (SC), பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) என்று பல வகையாக பிரிக்கலாம். இந்தப் பிரிவினர் சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியிருப்பதற்கு வரலாற்று ரீதியாக சில மறுக்க முடியாத காரணங்கள் உள்ளன. இடஒதுக்கீடு என்பது பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் அளித்து முன்னேறச் செய்வதற்கு உடன்பாடான நடவடிக்கை. அந்த வகையில் இது சட்டபூர்வமான அங்கீகாரமும் ஒப்புதலும் பெற்ற செயல் திட்டமாகும்.

இந்த இட ஒதுக்கீடுகள் எந்த இடஒதுக்கீட்டையும் அனுபவிக்காத மக்களிடையே குறிப்பாக, SC, ST மற்றும் OBC அல்லாத குடிமக்கள் மத்தியில் தாங்க முடியாத கோபத்தையும் துயரத்தையும் ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. இந்தக் குடிமக்களில் ஏழைகளாக இருப்பவர்கள் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு பலனை பெற்றாலும் இதற்கு முன்னர் அடைந்த துயரங்களை சந்திக்க வேண்டியிருப்பதாக ஒரு எண்ணம் வலுத்து வருகிறது. இதற்காக ஏழ்மையை மட்டும் அடிப்படையாக கொண்டு ஒரு புதிய இட ஒதுக்கீட்டை செய்ய முடியுமா? இந்த யோசனை நியாயமாக இருந்தாலும் இதற்கும் பல தடைக்கற்கள் உள்ளன.

இடஒதுக்கீடு வழங்குவதற்காக இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட ஒரே பிரிவான "சமூக மற்றும் கல்வியில் பின்தங்கியவர்கள்" என்று ஏழைகளை கருத முடியுமா?

பொருளாதார நீதியை வழங்க ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை' மீறுமா?

நீதிபதிகள் இயற்றிய சட்டப்படி, அனைத்து இடஒதுக்கீடுகளும் மொத்தமாக சேர்ந்து 50 சதவீதத்தை தாண்ட முடியாது. இப்படி உச்சவரம்பு நிர்ணயித்த பின்பு ஏழைகளுக்கான புதிய ஒதுக்கீடான 10 சதவீதம் அந்த உச்சவரம்பை மீறி விடாதா?

அடிப்படை கட்டமைப்பு' கோட்பாடு மற்றும் '50 சதவீத உச்சவரம்பு' கொள்கை ஆகியவை அரசியலமைப்பை விளக்கிய தீர்ப்புகளில் காணப்படுகின்றன. மாண்புமிகு நீதிபதிகள் உருவாக்கிய சட்டத்தால் உருவாக்கப்பட்ட தடைகளை மீறலாம் என்று நீதிபதிகள் நினைத்து விட்டால் எதிர்கால இருக்கும் என்பது தெளிவாகி விடும். ஐந்து மாண்புமிகு நீதிபதிகளும் பொருளாதார நீதி என்பது சமூக நீதியின் அதே தளத்தில் உள்ளது என்றும் பொருளாதார அளவுகோல் அடிப்படையில் புதிய இடஒதுக்கீடு அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறாது என்றும் ஒப்புக்கொண்டனர். இந்த வழக்கில் 50 சதவீத உச்சவரம்பை மீறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது அல்ல என்பதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். பொருளாதார அளவுகோல் மற்றும் 10 சதவீத அளவு அடிப்படையில் இட ஒதுக்கீட்டை அவர்கள் ஒருமனதாக ஆதரித்தனர். தீர்ப்பின் இந்த பகுதி தொடர்பாக அதை விமர்சனம் செய்பவர்களும் இந்த அம்சங்கள் தொடர்பாக எதுவும் சொல்லவில்லை. இதில் கருத்து வேறுபாடு என்பது SC, ST மற்றும் OBC ஆகிய பிரிவினரை இடஒதுக்கீடு ஒதுக்கித் தள்ளுமா என்பதுதான்.

பிரிக்கப்பட்ட நீதிமன்றம்

ஊட்டச்சத்து, வளர்ப்பு மற்றும் ஆரம்பக் கற்றலில் குறைபாடுகள் ஏற்படுவதற்கு வறுமையே முக்கியக் காரணம். இந்தக் குறைபாடுகள் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை மறுக்கின்றன. இதில் ஏழைகள் யார் என்பதுதான் எழும் கேள்வி. 103 வது அரசியலமைப்புத் திருத்தம், "குடும்ப வருமானம் மற்றும் பொருளாதார பாதகத்தின் பிற தரவுகளின் அடிப்படையில் ஏழைகள் யார் என்று முடிவெடுக்கும் பொறுப்பை அந்தந்த மாநிலங்களிடமே விட்டு விட்டது. 31.7 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு (பிபிஎல்) கீழ் இருப்பதாக சின்ஹோ கமிஷன் (ஜூலை 2010) அறிவித்துள்ளது. இவர்களில், SC மக்கள் தொகை 7.74 கோடி, ST மக்கள் தொகை 4.25 கோடி மற்றும் OBC மக்கள் தொகை 13.86 கோடி. மொத்தம் 25.85 கோடி. இதில் ஏழைகள் யார் என்பது தான் கேள்வி.

இதில் முக்கியமான கேள்வி என்னவென்றால், புதிய இடஒதுக்கீட்டில் இருந்து SC, ST மற்றும் OBC ஆகிய ஏழைகளை விலக்கும் பிரிவு 15(6) மற்றும் பிரிவு 16(6) ஆகியவை அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுபடியாகுமா என்பது தான். இந்த பிரச்சினையில், மாண்புமிகு நீதிபதிகள் 3:2 என பிரிக்கப்பட்டனர். திரு நீதிபதி ரவீந்திர பட் ஒரு சக்திவாய்ந்த வாதத்தை முன் வைத்தார். இதை தலைமை நீதிபதி லலித் ஒப்புக்கொண்டார். "நமது அரசியலமைப்பு சட்டம் யாரையும் தனித்து விளக்கும் வகையில் பேசாது என்று என்று தெளிவாக ரவீந்திர பேட் எழுதிய தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் இனி வரும் காலங்களில் எதிரொலிக்கும்.

இந்த சாத்தியமான முடிவுகளைப் பற்றி சிந்தியுங்கள். ஏழைகளுக்கு புதிய இட ஒதுக்கீட்டை உருவாக்குவது பொருளாதார நீதியை முன்னேற்றும். ஆனால் SC, ST மற்றும் OBC (மொத்த ஏழைகளில் சுமார் 81.5 சதவீதம் பேர்) பிரிவில் உள்ள ஏழைகளை இடஒதுக்கீட்டில் இருந்து ஒதுக்குவது சமத்துவத்தை மறுக்கும். ஏழைகளிலும் மிகவும் மிக ஏழைகளாக இருப்பவர்களுக்கு சமத்துவத்தையும் நீதியையும் மறுக்கும்.

தமிழில்: த. வளவன்

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

India P Chidambaram
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment