scorecardresearch

உலக சூழலிலும் யாரையும் பொருட்படுத்தாத பட்ஜெட்

தனிநபர் வருமான வரியிலிருந்து அனைத்து விலக்குகளையும் ரத்து செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளது. நிச்சயமற்ற ஒரு வருடத்தில் ரோலர்கோஸ்டர் சவாரிக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள் – ப.சிதம்பரம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - கஜேந்திர யாதவ்)
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம் (எக்ஸ்பிரஸ் புகைப்படம் – கஜேந்திர யாதவ்)

P Chidambaram ப. சிதம்பரம்

கடந்த வாரம் முழுவதும் நிதிநிலை அறிக்கை தொடர்பான பேச்சு அதிகமாகவே இருந்தது. இது அனைவருக்கும் தெரியும். ஒரு நிதியாண்டில் ஒன்றிய அரசுக்கு வரும் வருவாயையும் செய்ய வேண்டிய செலவுகளையும் மதிப்பிடுவது என்பதற்கும் அப்பாற்பட்ட நிலையில் வருடாந்திர நிதி நிலை அறிக்கை உள்ளது. அரசின் கொள்கைகளையும் திட்டங்களையும் மக்களுக்கு தெரிவிக்கும் முதன்மையான சாதனமாகத் திகழ்கிறது இந்த நிதிநிலை அறிக்கை.  அரசின் உத்தேச வரிகளும் திட்டங்கள் இதை நோக்கியதாகவே இருக்கிறது, அரசின் நிதிநிலை அறிக்கை எந்த திசையில் நகர்கிறது என்று அறியதான் மக்கள் இதை ஆர்வமாகப் எதிர்நோக்குகிறார்கள்.  

குரலற்றவர்கள்

எப்படியிருந்தாலும் தொடர்ந்து மக்கள்  குரலற்றவர்களாகவே தொடர்கிறார்கள். அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கிறவர்களை அவர்களால் தொடர்பு கொள்ளவே முடிவதில்லை, எனவே அரசியல் கட்சிகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தங்களுக்கான தொடர்பு பாலமாகக் கருதுகிறார்கள். பெரும்பான்மை பலம் உள்ள, ஆதிக்க மனப்பான்மை மிக்க அரசு எப்போதும் தன்னைப் பற்றிய பெருமிதத்திலேயே மிதப்பதாலும் தன்னுடைய நலனைப் பற்றி மட்டுமே சிந்திப்பதாலும் பிற அரசியல் கட்சிகளையோ நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ ஆலோசனை செய்வதில்லை.   .

சூழலைச் சொல்லும் முதன்மை பொருளாதார ஆலோசகர்

நாட்டின் பொருளாதார சூழ்நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய மக்களும் நிபுணர்களும் பொருளாதார ஆய்வறிக்கையை படிக்கிறார்கள்; வழக்கம்போலவே, 2022-23 நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையின் முதலாவது அத்தியாயம், அடுத்த ஆண்டு குறித்த கண்ணோட்டத்தை தெரிவிக்கிறது. இந்த ஆண்டு, அரசின் முதன்மை பொருளாதார ஆலோசகர் இந்த ஆய்வறிக்கையில் குறிக்கோள் இன்றி அங்குமிங்கும் திரிந்துவிட்டு, 2023-24 எப்படி இருக்கும் என்ற கண்ணோட்டத்தை இரண்டு பத்திகளில் தெரிவித்துள்ளார், அதன் சுருக்கம் தான் இது.

இந்தியாவின் பொருளாதார நிலைமை பற்றிய கண்ணோட்டம் பிரகாசமாக இருந்தாலும் உலக அளவிலான பொருளாதார நிலைமை தனித்துவமான பல சவால்களின் கூட்டு விளைவால் வளர்ச்சியைப் பின்னுக்கு இழுக்க கூடிய இடர்ப்பாடுகள் நிறைந்து இருப்பது தெரிகிறது. கடந்த பத்தாண்டுகளாக நிலவிவரும் உயர் பணவீக்க விகிதம் (விலைவாசி உயர்வு) பல நாடுகளின் மத்திய வங்கிகளை நிதி நிர்வாகத்தை மேலும் கடுமையாக்கும் கட்டாயத்தில் தள்ளிவிட்டது. பண விநியோகத்தை கட்டுப்படுத்தும் அவற்றின் செயல்கள், பொருளாதார நடவடிக்கைகள் மந்தமடையத் தொடங்கியதில் எதிரொலிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த மந்தம் மிகவும் வளர்ந்த நாடுகளில் நிலவுகிறது. இது போதாதென்று பொருள்கள் மற்றும் சேவைகளை வழங்கும் அளிப்புச் சங்கிலியில் தொடர்ச்சியாக நிலவும் சிக்கல்கள், எதிர்காலப் பொருளாதார நடவடிக்கைகளை ஊகிக்க முடியாமல் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப் படுகின்றன. உலகின் அரசியல் மோதல்களும் உலக அளவில் பொருளாதார வளர்ச்சியையும் மீட்சியை மேலும், மேலும் மோசமடைய செய்கின்றன.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி 2022இல் 3.2%ஆக இருப்பது 2023இல் 2.7%ஆகக் குறையும் என்று பன்னாட்டுச் செலாவணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்). உலகப் பொருளாதார கண்ணோட்ட அறிக்கை 2022 அக்டோபரில் தெரிவித்தது. பொருளாதார உற்பத்தி வளர்ச்சி மந்தமாக இருப்பது நிச்சயமற்ற நிலைமை அதிகரிப்பதும் உலக வர்த்தக வளர்ச்சியை நிச்சயம் சோர்வடையவே செய்யும். உலக வர்த்தக அமைப்பானது (டபிள்யு.டி.ஓ), உலக வர்த்தக வளர்ச்சி 2022இல் 3.5%ஆக இருந்தது 2023இல் 1.0%ஆகக் குறையும் என்று கணித்துள்ளது.

இந்தியாவின் இறக்குமதி – ஏற்றுமதி தொடர்பான நடப்புக் கணக்கில் பற்றாக்குறை நிலவுகிறது; இதில் சமநிலை ஏற்படாமல் போக பல காரணங்கள் இருக்கின்றன. பல பண்டங்களின் விலைகள்  அதிகமாக இருந்த நிலையிலிருந்து சற்றே குறைந்திருந்தாலும், ரஷ்யா – உக்ரைன் மோதலுக்கு முன்னால் இருந்ததைவிடவும் அதிகமாகவே இருக்கிறது. பண்டங்களின் விலை இப்படி தாறுமாறாக ஏறி இருக்கும் நிலையிலும் அதற்கான தேவைகள் இந்தியாவில் அதிகமாக இருந்தால், நாம் அன்னியச் செலாவணியை அதிகம் செலவிட வேண்டிவரும், அதனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை மதிப்பு அதிகமாகிவிடும். இதன் விளைவாக இந்திய ரூபாயின் செலாவணி மாற்று மதிப்பை அரசு குறைத்தாக வேண்டிய நிலை ஏற்படும்.

இப்படி நிலைமையைச் சுட்டிக்காட்டியதோடு தன் கடமை முடிந்துவிட்டது என்று முதன்மை பொருளாதார ஆலோசகர் கருதினால் அது  மிகவும் தவறு. உலக வர்த்தகம் தொடர்பான தனது கண்ணோட்டத்தை தெரியப்படுத்தியதுடன், இந்தியச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அதை மேலும் தீவிரமாக ஆய்வு செய்திருக்க வேண்டும்; இதனால் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன, தவிர்க்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்று சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். இப்போதைய நடவடிக்கைகளில் திருத்தம் தேவைப்பட்டிருந்தால் அவற்றையும் தெளிவுபடுத்தி இருக்க வேண்டும்.

அதேவேளையில், பொருளாதார ஆய்வறிக்கையின் முதல் அத்தியாயத்தை வாசித்த நிதியமைச்சர், இந்தப் பின்னணியில் தன்னுடைய மதிப்பீடுகள் என்ன என்பதையும் இவை தொடர்பாக தான் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பதையும் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருக்க வேண்டும். இருவருமே தங்களுடைய கடமைகளில் தவறிவிட்டனர். இதன் விளைவாக, எந்தச் சூழ்நிலையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறதோ அதற்குப் பொருத்தமாக அந்த உரை அமையவில்லை. ஒன்றரை மணி நேரம் நிதியமைச்சர் நிகழ்த்திய உரை இருட்டில் கேட்ட குரல் போல இருண்டு போய்விட்டது.

சந்தேகத்துக்குரிய மூன்று அம்சங்கள்

இந்த நிதிநிலை அறிக்கையில் மூன்று அம்சங்கள் தனித்துவமாக தெரிகின்றன. அவையாவன :

மூலதனச் செலவினத்துக்காக 2022-23இல் ஒதுக்கப்பட்ட நிதியை முழுதாகச் செலவிட்டு பயன்படுத்தாமலேயே, 2023-24 நிதியாண்டில் மூலதனச் செலவுக்கான மதிப்பீட்டில் 33% உயர்த்தி அறிவித்திருக்கிறார்.

சமூக நல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை இரக்கமில்லாமல் குறைத்துவிட்டு, ஏழைகள் மற்றும் நலிவுற்ற பிரிவினரின் நலனே தன்னைப் பொருத்தவரையில் மிகவும் முக்கியம் என்று உறுதியளிக்கிறார்.

வரிச் சலுகைகள் ஏதுமில்லாமல், அதேசமயம் வருமான வரியைக் குறைத்துக்கொள்ளும் புதிய வரிவிதிப்பு முறையை 2020இல் அறிமுகப்படுத்தினார் நிதியமைச்சர்; அதில் சேர்ந்து பயனடையுமாறு வருமான வரி செலுத்துவோரை ஊக்கப்படுத்தத் தவறிவிட்டு, புதிய வரிவிதிப்பு முறை நடுத்தர மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கேள்விக்குரிய சில கணக்குகளைப் போட்டு உதாரணம் காட்டியிருக்கிறார்.

நிதிநிலை அறிக்கையில் உள்ள இந்த மூன்று அம்சங்களையுமே தீர ஆராய்ந்தால் அவையும் சரியல்ல என்பது விளங்கும். முதலாவதாக அரசின் மூலதனச் செலவு ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளலாம். பொருளாதார வளர்ச்சியைத் தூண்டக்கூடிய இதர மூன்று இயந்திரங்களும் (ஏற்றுமதி, தனியார் முதலீடு, நுகர்வு) படுத்துவிட்டன என்பதை இதன் மூலம் மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறார் நிதியமைச்சர். தொழிலதிபர்களை வசைபாடிய பிறகும் தனியார் முதலீடு பெருகவில்லை. நுகர்வு வளரவில்லை, தேக்க நிலையிலேயே இருக்கிறது, இனி சரியும் ஆபத்தும் இருக்கிறது. எனவே, நிதியமைச்சருக்கு வேறு வழி இல்லை, அரசின் மூலதனச் செலவை அதிகப்படுத்தியிருக்கிறார். 2022-23 நிதியாண்டில் ரூ.7,50,246 கோடியைச் செலவிடுவோம் என்று பட்ஜெட் மதிப்பீடு தெரிவித்தது.

ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீடோ ரூ.7,28,274 கோடியைத்தான் அரசால் செலவிட முடிந்தது என்று காட்டுகிறது. அரசின் திட்டங்களை நிறைவேற்றுவதில் நிர்வாக நடைமுறைகளில் உள்ள குறைகளால் இப்படி நேர்கிறது. இப்படிச் செலவிடுவதில் உள்ள இடர்ப்பாடுகள் , சவால்கள் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ளாமலும் அரசுத்துறைகளால் எதிர்பார்த்த அளவுக்கு, எதிர்பார்த்த வேகத்தில் செலவுகளைச் செய்ய முடியாது என்பது தெரிந்தும் (ரயில்வே, நெடுஞ்சாலைகள் உள்பட) மொத்தம் ரூ.10,00,961 கோடி ஒதுக்கியிருக்கிறார்,  மூலதனச் செலவை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆதரித்தவர்கள் கூட இவ்வளவு பெருந்தொகையை அரசால் ஓராண்டில் செலவிட முடியுமா என்று வியப்பினால்  என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கிறார்கள்.  

இரண்டாவது, நல்வாழ்வு திட்டங்களுக்கான செலவை அதிகப்படுத்துவோம் என்ற வாக்குறுதி. 2022-23இல் வழங்கப்பட்டது. வேளாண்மை, கல்வி, சுகாதாரம், சமூக நலன், நகர்ப்புற வளர்ச்சி, பட்டியல் இனத்தவர், பழங்குடிகள், சிறுபான்மைச் சமூகத்தவர், விளிம்புநிலை மக்கள் ஆகியவற்றுக்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால், அரசு தனது திட்டங்களுக்கான இலக்குகளை  மக்களிடம் மாற்றிக்கொண்டு விட்டது. உரம், மற்றும்  உணவுதானிய மானியம் திருத்தப்பட்ட மதிப்பீட்டு அளவைவிட ரூ.1,40,000 கோடி குறைக்கப்பட்டு விட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான ஒதுக்கீட்டில் ரூ.29,400 கோடி குறைக்கப் பட்டது.  எஞ்சியிருப்பது என்னவென்றால் ஏழைகள், விளிம்புநிலை மக்களுக்கான ஆறுதல் வார்த்தைகள்தான்.

யார் செய்திருப்பார்கள்?

இறுதியாக, புதிய வரி ஆளுகை பற்றிய மர்மத்துக்கு வருவோம். இது எப்படிப்பட்டது என்று வெளிப்படத் தொடங்கிவிட்டது. இதைப் பற்றி மட்டும் தனியாக அடுத்த கட்டுரையில் பார்ப்போம். ஒன்று மட்டும் நிச்சயம், தனிநபர் வருமான வரி செலுத்துவோருக்கு இதுவரை அளிக்கப்பட்டு வந்த விலக்கு வாய்ப்புகள் அனைத்தையும் அரசு ஒட்டுமொத்தமாக ரத்துசெய்யவே விரும்புகிறது. நிச்சயமில்லாத அடுத்த ஆண்டில், பொருளாதாரத்தின் தாறுமாறான ஏற்ற, இறக்கப் பயணத்தை எதிர்கொள்ள மக்கள் தயாராக வேண்டும்.  

தமிழில்: த. வளவன் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: P chidambaram writes budget 1 text ignores the context