ப சிதம்பரம்
from the service to servitude : ஐஏஎஸ் (இந்திய நிர்வாக சேவை) என்ற மூன்று எழுத்துக்கள் இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகும் அதிக ஈர்ப்பு கொண்டுள்ளன. அதற்கான காரணிகளை பார்த்தால் சமூக அந்தஸ்து, அதிகாரம், 30 முதல் 32 வருடங்களுக்கு உறுதியான வருமானம், வாழ்க்கைக்கான ஓய்வூதியம், சம்பளம் தவிர பிற இதர வசதிகள், மருத்துவ சிகிச்சை வசதி மற்றும் பெரும்பாலும் வேலையில் இருக்கும் திருப்தி போன்றவற்றை சொல்லலாம். நிர்வாக சேவைக்கு அடுத்த நிலையில் இந்தியக் காவல் சேவை (IPS) உள்ளது. அதற்கு அடுத்த நிலையில் பல்வேறு இந்திய அரசு சேவைகள் உள்ளன. கிட்டத்தட்ட 200,000 இளைஞர்கள் மற்றும் பெண்கள் மேலே குறிப்பிட்ட நிர்வாக சேவை மற்றும் காவல் சேவை பணிகளுக்காக முயல்கின்றனர். இதில் தேர்ந்தெடுக்கப் படும் 400 விண்ணப்பதாரர்கள் அடுத்தடுத்து எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் அரசின் சேவை பணிகளில் சேர்கிறார்கள். பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு (ஒட்டுமொத்தமாக 49.5 சதவீதத்துக்கு மிகாமல்) போன்றவை இந்த இரண்டு சேவைகளையும் பின்தங்கிய சமூகங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்களின் லட்சிய இலக்காக மாற்றியுள்ளது.
ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பதவிகள் அன்றைய பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஐசிஎஸ் மற்றும் ஐபி என அழைக்கப் பட்டன. இந்தப் பதவிகளுக்கு ‘ஸ்டீல் பிரேம்’ என்ற பெயரும் உண்டு. அவர்கள் அரசின் முக்கிய மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த சேவைகளை கவனிக்கின்றனர். இருப்பினும் இந்த சேவைகளில் பல குறைபாடுகளும் உண்டு. ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பதவிகளை அடைந்தவர்கள் சிலர் தவறான வழிநடத்துதலுக்கு ஆளாவதும் உண்டு. சிலர் அரசியல் அனுசரணைக்கு ஏங்குவதும், அரசியல் அதிகாரம் அனுசரணையை வழங்க மிகவும் தயாராக இருப்பதும் கண்கூடு. ஒரு காலத்தில் ‘ஸ்டீல் பிரேம்’ என அழைக்கப் பட்ட இந்த இரும்பு சட்டம் இப்போது பலமானதாகவோ, நேர்மையாகவோ ஒருவர் விரும்பிய மாதிரியோ இல்லை.
இது ஒருபுறம் இருக்க, இரண்டு சேவைகளையும் நிர்வகிக்கும் விதிகள் கடைப்பிடிப்பு முறைமைகள் விதிகளை மீறும் விதமாக இருக்கின்றன. மத்திய அரசுக்கும் பல மாநில அரசுகளுக்கும் இடையே தற்போது நிலவி வரும் சர்ச்சையின் பொருளாக இருக்கும் ‘கேடர் விதிகளை’ எடுத்துக்கொள்ளுங்கள். ஐஏஎஸ் (கேடர்) விதிகள் மற்றும் ஐபிஎஸ் (கேடர்) விதிகள் 1954 இல் உருவாக்கப்பட்டவை. அவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும் நடைமுறையில் விதிமீறல் நடக்கிறது.
இதில் விதி 5 பல்வேறு வகையான நிரந்தர சேனை உறுப்பினர்களுக்காக உருவாக்கப் பட்டது. இது பல ஆண்டுகளாக பின்பற்றப்பட்ட முறை. இது வெளிப்படையானது, ஆனால் நெகிழ்வு இல்லாதது. இந்த முறை அவ்வப்போது மாற்றப்படுவது கேள்விகள் மற்றும் சந்தேகங்களை எழுப்புகிறது, இருப்பினும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாத பலரும் தயக்கத்துடன் இந்த ஒதுக்கீட்டை ஏற்றுக்கொள்கிறார்கள். நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச பதவிக் காலத்தில் ஒரு கேடர் அதிகாரி பதவியை வகிக்க வேண்டும் என்று விதி 7 உறுதியளிக்கிறது, ஆனால் இந்த விதி ஒவ்வொரு அரசு மாறும் போதும் புறக்கணிக்கப்பட்டது.அத்துடன் தேவையில்லாத இடமாற்றங்கள் உயர் அதிகாரிகளுக்கு வாடிக்கையான விதிகளாகி விட்டன.
விதி 8 மற்றும் 9 கேடர் மற்றும் முன்னாள் கேடர் பதவிகளை கேடர் தகுதியுள்ள அதிகாரிகளால் மட்டுமே நிரப்ப வேண்டும் என்றும், இந்த பதவிகளுக்கு கேடர் அல்லாத அதிகாரியை தற்காலிகமாக மட்டுமே நியமிக்கலாம் என்றும் கூறுகிறது, ஆனால் இந்த இரண்டு விதிகளும் எப்போதும் போலவே மீறப்படுகின்றன. . இது ரத்து செய்யப் பட வேண்டும். கேடர் பதவிகளுக்கு ( தலைமைச் செயலாளர் மற்றும் டைரக்டர் ஜெனரல் ஆப் போலீஸ்) இணையான ஏராளமான முன்னாள் கேடர் பதவிகளை உருவாக்குவது விதி மீறலாகும்.
மருத்துவர் உங்களை குணப்படுத்தலாம்
உறுதியான இரும்பு சட்டம் உடைந்து போயிருக்கிறது. அதிகார பீடத்தில் அது இன்னும் மோசமாக உள்ளது. சமீபத்தில் மத்திய அரசால் முன்மொழியப்பட்ட புதிய திருத்தங்கள் பல மாநில அரசுகளால் கடுமையாக எதிர்க்கப்பட்டவை. ஆனால் இவை நிறைவேற்றப்பட்டுள்ளன. முதல் திருத்தம் 40 சதவீத DEPUTATION RESERVE திட்டத்தின் கீழ் குறைந்த அளவில் மத்திய அரசு பணிக்கு செல்லும் அதிகாரிகள் குறித்த சிக்கலைத் தீர்க்கும் நோக்கம் கொண்டது. கடந்த ஏழு ஆண்டுகளில் அதன் விகிதம் 28 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. இந்த பிரச்சனை உண்மையானதாக இருந்தாலும் காரணங்கள் ஆழமான அர்த்தம் கொண்டவை. கடந்த காலங்களில் இருந்ததைப் போலல்லாமல், மத்திய அரசின் பிரதிநிதித்துவத்திற்காக அதிகாரிகள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டபோது தற்போது ஏன் அதே பிரிவினர் மத்திய அரசின் பிரதிநிதித்துவத்துக்காக செல்ல விரும்பவில்லை?
முதலாவதாக, மோடி அரசாங்கத்தின் விஷத்தன்மை வாய்ந்த வேலை கலாச்சாரம். இரண்டாவதாக பொருத்தமான துறைக்கு நீண்ட காலமாக அதிகாரிகளை காத்திருக்க வைப்பது. மூன்றாவதாக பிரதம அமைச்சர் அலுவலகமே அதிக அளவில் அதிகார மையமாக முன்னிலை படுத்தப் படுவது, அமைச்சர்களின் எண்ணிக்கை மற்றும் அமைச்சு துறைகளை குறைப்பது போன்றவை தான். அரசின் அறிவுறுத்தல்களைப் பெறுவதற்குச் செயலாளர்கள் தினமும் காலையில் பிரதம அமைச்சர் அலுவலகத்தில் காத்திருக்கிறார்கள். பட்ஜெட் உரையின் பெரும்பாலான பகுதிகள் பிரதம அமைச்சர் அலுவலகத்தில் தான் எழுதப்பட்டன. நான்காவதாக, நியாயமற்ற முறையில் வழங்கப் படும் உயர் பதவிகள் (மே 2014 ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஏற்பட்ட அவமானகரமான இடமாற்றங்கள் பலருக்கு நினைவிருக்கும்)). ஐந்தாவதாக, பணி நியமனம் மற்றும் பதவி உயர்வு ஆகியவற்றில் மெத்தனம். மத்திய அரசின் இந்த எதிர்மறை அம்சங்களை பிரதமர் முதலில் கவனிக்க வேண்டும்.
முதல் திருத்தம் தேவையால் தூண்டப்பட்டது என்று வைத்துக் கொண்டால், இரண்டாவது திருத்தம் வன்மம் மற்றும் வஞ்சனையால் தூண்டப்பட்டது என்பது தெளிவு. குறிப்பிட்ட காலகட்டத்தில் மத்திய அரசின் கீழ் பணியாற்ற எந்த அதிகாரியையும் ஒருதலைப்பட்சமாக அழைக்கும் அதிகாரத்தை இந்த திருத்தம் மத்திய அரசுக்கு வழங்கும். அந்த குறிப்பிட்ட சூழ்நிலைகள் என்னவாக இருக்கும் என்று நமக்கு தெரியும். ஓய்வு பெற இருந்த மேற்கு வங்க தலைமை செயலாளர் ஒருவர் விமான நிலையம் சென்று பிரதமரை வரவேற்க தவறிய சம்பவமும் திரு ஜே பி நட்டாவுக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய காவல்துறை அதிகாரிகளுக்கு நடந்ததும் நினைவுக்கு வருகின்றன.
மாற்றுத் தீர்வுகள்
மோடி அரசில் பணிபுரியும் அதிகாரிகள் குறித்த எதிர்மறை எண்ணங்கள் சரி செய்யப் பட்டு மாற்றுத் தீர்வுகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அரசு ஆண்டுதோறும் தேர்வு செய்யப் படும் ஐ ஏ எஸ் , ஐ பி எஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது ஒரு ஆலோசனையாக சொல்லப் படுகிறது. இதனால் அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் மத்திய அரசிடம் அதிகாரிகளை நியமிக்க மாநில அரசுகளை கட்டாயப்படுத்துவார்கள். மற்றொரு ஆலோசனை என்னவென்றால், ஆரம்ப ஆட்சேர்ப்பின் போது குறைந்த எண்ணிக்கையிலான விருப்பமுள்ள அதிகாரிகளை அதாவது மாறாத திட சிந்தனை உள்ளவர்களை (ஹார்ட் கோர்) கண்டறிந்து அவர்களை மத்திய அரசின் கீழ் பிரத்தியேகமாக சேவை செய்ய நியமிக்க வேண்டும். இது முன்பு ஐபிஎஸ் நடைமுறையில் இருந்தது.
திரு. நரேந்திர மோடியின் கீழ், கூட்டுறவு கூட்டாட்சி என்பது நீண்ட காலமாக புதைக்கப்பட்டு விட்டது. நாம் மோதல் கூட்டாட்சியின் இன்னொரு கட்டத்தில் நுழைந்துள்ளோம். மோடி அரசுக்கு என்று ஒரு தனி வழி இருந்தால், இந்தியாவில் கடமையுடன் கூடிய சேவை இருக்கும். தற்போதைய மாநிலங்கள் வெறும் மாகாணங்களாக குறைக்கப்படுவதுடன் அரசின் சேவை துறைகள் அடிமைத்தனம் நிறைந்ததாகி விடும்.
தமிழாக்கம் த. வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil