ப. சிதம்பரம், P Chidambaram
சட்டப்படி நீதி வழங்குவதற்காக நீதிமன்றங்கள் நிறுவப்பட்டுள்ளன. சில சமயங்களில், நீதி தடுமாறலாம், ஆனால் இந்தியாவில் உள்ள வழக்கறிஞர்கள், கடினமான பாதையில் பயணத்தைத் தொடர்ந்தால், இறுதியில் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்று நியாயமாக நம்பலாம். அந்த முன்னுரையுடன், முழு நாட்டின் கவனத்தையும் ஈர்த்து உணர்ச்சிகளையும் கிளறி விட்ட ஒரு வழக்கை விளக்குகிறேன்.
கடந்த மார்ச் 23, 2023 அன்று, குஜராத்தில் உள்ள ஒரு மாஜிஸ்திரேட், அவதூறு குற்றத்திற்காக திரு ராகுல் காந்தியை குற்றவாளி என்று அறிவித்து பிரிவு 499, IPCபடி 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தார். தண்டனையை அறிவித்த மாஜிஸ்திரேட் சிறிது நேரத்திலேயே தண்டனையை நிறுத்தி வைத்தார். ஆனாலும் மார்ச் 24 அன்று, திரு காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மக்களவையில் அவரது இடம் காலியாக அறிவிக்கப்பட்டது.
வழக்கு பயணித்த பாதை
13-04-2019: கர்நாடகாவின் கோலாரில் ராகுல் காந்தி தேர்தல் உரை நிகழ்த்தினார்
16-04-2019: திரு பூர்னேஷ் மோடி, எம்.எல்.ஏ (பா.ஜ.க), குஜராத்தின் சூரத்தில் உள்ள மாஜிஸ்திரேட் முன், திரு ராகுல் காந்தி ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவதூறு செய்ததாக புகார் செய்தார்.
07-03-2022: புகார்தாரர் தனது சொந்த புகாரின் விசாரணைக்கு தடை கோரி, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
07-02-2023: அதானி குழுமத்தின் பிரச்சினைகள் குறித்து மக்களவையில் ராகுல் காந்தி உரை நிகழ்த்தினார்.
16-02-2023: குஜராத் உயர் நீதிமன்றத்தில் புகார்தாரர் தனது மனுவை வாபஸ் பெற்றார்
21-02-2023: சூரத் மாஜிஸ்திரேட் முன் விசாரணை மீண்டும் தொடங்கியது.
17-03-2023: விசாரணை முடிந்து தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.
23-02-2023: மாஜிஸ்திரேட் 168 பக்க தீர்ப்பு வழங்கினார், திரு ராகுல் காந்தி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார்
சிறிது நேரத்தில் மாஜிஸ்திரேட் தண்டனையை நிறுத்தி வைத்தார்
24-03-2023: மறுநாளே லோக்சபா செயலகம் திரு ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை அறிவிப்பு செய்தது.
மூன்று வருடங்களாக அலைக்கழிக்கப்பட்டு, தாமதமாகி, திடீர் வேகம் பெற்று இறுதிக்கட்ட விசாரணையும் முடிந்து 30 நாட்களில் தண்டனை பெற்று தருவது இந்திய சட்ட வரலாற்றில் புதிரான விஷயம் தான். திரு. ராகுல் காந்தி மேல் புகார் கொடுத்தவர் தனது வழக்கை நிறுத்திவைக்குமாறு முதலில் தடை வாங்கி விட்டு, பின்னர் அதானி குறித்து ராகுல் காந்தி பேசிய பிறகு தடை கோரிய தனது மனுவை விரைந்து நடத்தும்படி ஏன் மனு செய்தார்?
யார் அவதூறு செய்யப்பட்டார்?
தன்னைச் சேர்ந்த மோடி சமூகம் இழிவு படுத்தப்பட்டதாக புகார்தாரர் குற்றம் சாட்டினார். வெளிப்படையாகச் சொல்வதானால், ‘மோடி’ என்று ஒரு சமூகம் இருக்கிறதா அல்லது ‘மோடி’ என்ற குடும்பப்பெயர் கொண்ட அனைவரும் ஒரு சமூகத்தை அல்லது சாதியை சேர்ந்தவர்களா என்பது எனக்கு தெரியாது. இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை (மார்ச் 28, 2023) விளக்கியுள்ளது, மோடி என்ற வார்த்தை “எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையோ அல்லது சாதியையோ குறிக்கவில்லை என்று. குஜராத்தில் மோடி என்ற குடும்பப் பெயரை இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் பார்சிகள் பயன்படுத்துகின்றனர். வைஷ்ணவர்கள் (வணிகர்கள்), கர்வாக்கள் (மீனவர்கள்) போர்பந்தர் மற்றும் லோஹானாஸ் (வர்த்தகர்களின் சமூகம்) மத்தியில் மோடி குடும்ப பெயர் கொண்டவர்கள் உள்ளனர். ஓ.பி.சி.,களின் மத்திய பட்டியலில் ‘மோடி’ என்ற பெயரில் எந்த சமூகமும், சாதியும் இல்லை என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் கண்டறிந்துள்ளது. மேலும், பீகார் அல்லது ராஜஸ்தானுக்கான மத்திய பட்டியலில் ‘மோடி என்ற பட்டப் பெயர் இல்லை. குஜராத்துக்கான மத்திய பட்டியலில், மோடி என்று ஒரு சமூகமோ, சாதியோ கிடையாது. ஆறு தசாப்தங்களுக்கு முன்னர் சாதியை துறந்த எனக்கு, சாதியை அங்கீகரிக்காத எனக்கு, ஒரு சமூகத்தை இழிவுபடுத்தும் முழு வாதமும் தலை சுற்றும் விதத்தில் இருக்கிறது.
தண்டனை நிறுத்தி வைப்பு
இந்த புகாரைப் பொறுத்தவரை இது அவதூறு வழக்கு. IPC பிரிவு 500ன் கீழ், தண்டனை 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து நீட்டிக்கப்படலாம். 1860ல் இருந்து (IPC அமலுக்கு வந்த போது) அவதூறு வழக்கில் அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வழக்கு எதுவும் இல்லை என்பது எனக்குத் தெரியும். சாதாரணமாக, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்கும் குறைவான சிறை தண்டனை விதிக்கப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது, இதனால் அவர் தண்டனை மற்றும் தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நிவாரணம் பெற வழி உண்டு. எனினும் இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே மாஜிஸ்திரேட் தானே தண்டனையை நிறுத்தி வைத்தார்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 இன் பிரிவு 8(3), எந்தவொரு குற்றத்துக்காகவும் தண்டிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நபர், அத்தகைய குற்றம் நிரூபிக்கப்பட்ட நாளிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார், என்று விளக்குகிறது. திரு ராகுல் காந்தி வழக்கில் அவர் தண்டனை பெற்றுள்ளார். ஆனால் உடனடியாக சிறையில் அடைக்கப்பட வேண்டும் என சொல்லப்படவில்லை. அத்துடன் மேல்முறையீடு செய்ய அவகாசமும் தரப்பட்டுள்ளது. இப்படி இருக்கும் போது அவர் எப்படி உடனடியாக மார்ச் 23 ஆம் தேதியே பதவி இழப்புக்கு உள்ளாவார்? இது விரிவாக விவாதிக்கப் பட வேண்டிய விஷயம். பலரும் இது தொடர்பாக வினா எழுப்பி பதிலுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இதில் எந்த சந்தேகமும் இல்லாமல் 24 மணி நேரத்துக்குள், மக்களவை செயலகம் மூலம் ராகுல் காந்தியின் பதவியை பறித்து தகுதி இழப்பு செய்து விட்டனர்.
தகுதியிழப்பு யார் செய்ய முடியும்?
ஒரு உறுப்பினர் தகுதி இழந்தால் இந்திய அரசியலமைப்பு சட்ட பிரிவு 102(2) ஈ- யின் படி அவர் உறுப்பினராக தொடர முடியாது. தண்டனை பெற்று விட்டாலே அவர் உறுப்பினர் தகுதியை இழந்து விடுவார் என்று சட்டம் சொல்லவில்லை. அப்படி பார்த்தால் தகுதியை இழந்து விட்டார் என்று கூறும் உத்தரவு அவசியமாகிறது. அப்படியானால் தகுதி நீக்கம் செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்ற கேள்வி எழுகிறது. இந்த கேள்வியை மக்களவையின் முன்னாள் தலைமை செயலர் பி.டி.டி ஆச்சார்யா உட்பட பலரும் எழுப்பி உள்ளனர். அரசியலமைப்பு சட்டத்தின் 103 வது பிரிவில் இதற்கு பதில் உண்டு. தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக கேள்வி எழுந்தால் அதை இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விட்டு பின்னர் அவர் தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசனை செய்து அதன் அடிப்படையில் முடிவு எடுக்க வேண்டும் என்பதே சட்டப்படி முறையானதாக இருக்க முடியும். ஆனால் ராகுல் காந்தி விவகாரத்தில் இந்த தகுதி இழப்பு என்பது குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு அது தேர்தல் ஆணையத்துடன் கலந்தாலோசிக்கப்பட வில்லை. இந்த முடிவை யார் எடுத்தது என்பதும் தெரியவில்லை. மக்களவை செயலகமா? அல்லது சபாநாயகரா என்றும் யாருக்கும் தெரியவில்லை.
இதையே வின்ஸ்டன் சர்ச்சில் வார்த்தையில் சொல்வதானால் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கும் அதன் முடிவுகளும் பெரும் புதிர் கொண்ட மர்மமே தவிர வேறில்லை.
தமிழில் : த. வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.