கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியான oxform அறிக்கையின் படி நாட்டின் மொத்த செல்வத்தில் 77 சதவீதத்தை 10 குடும்பங்கள் மட்டுமே வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பாட்டு ஓன்று தான். ஆனால் தாளம் வித்தியாசமாக இருந்தால் பாடல்களில் வெவ்வேறு ரசனைகள் புரியும். கடந்த காலங்களில் மத்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் தற்போது, பிரவுன் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான வாட்சன் நிறுவனத்தில் மூத்த உறுப்பினராக உள்ளார். அவர் சிறந்த கல்வித் தகுதிகளை கொண்டவர் மற்றும் ஒரு சிறந்த எழுத்தாளரும் ஆவார். கடந்த டிசம்பரில் வெளியான வெளியுறவு விவகாரம் தொடர்பான ஒரு கட்டுரையில், டாக்டர் சுப்ரமணியன், ஆத்மநிர்பார் பாரத் என்ற கோஷத்தின் கீழ் செல்லும் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையின் தவறான பாதையை கோடிட்டுக் காட்டி இருக்கிறார்.
கவலைக்குரிய விஷயங்கள்
டாக்டர் சுப்பிரமணியன் கவலைக்குரிய விஷயங்களாக முக்கிய மூன்று முக்கிய விவரங்களை பதிவு செய்துள்ளார். மானியங்கள்,பாதுகாப்பு வாதம் மற்றும் பிராந்திய வர்த்தக ஒப்பந்தங்களை தவிர்ப்பது. சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள், கூட்டாட்சி எதிர்ப்பு, பெரும்பான்மைவாதம் மற்றும் சுயாட்சி அதிகார நிறுவனங்களை பொருளாதார ஏற்றத்தாழ்வுக்கு உட்படுத்துதல் ஆகியவை அவரது மற்ற விவரங்களில் உண்டு. அவர் 2018ஆம் ஆண்டு அரசாங்கத்தில் இருந்து விலகியதன் காரணத்தை அவர் அறியாமலேயே அவர் வெளிப்படுத்தியுள்ளார். கிட்டத்தட்ட நான்கு வருட பொறுப்புக்கு பிறகு தான் அவர் பதவியை விட்டு விலகினார். அதற்கு காரணம் அரசின் அணுகு முறையாக இருக்கலாம். அல்லது அரசின் பொருளாதார நிலை இன்னும் மோசமாகி விடலாம் என்று அவர் நினைத்திருக்கலாம்.
அவர் எதிர்பார்த்தது மாதிரியே நிலைமை இன்னும் மோசமானது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 12 சதவீதமாக இருந்த சராசரி கட்டணம் தற்போது 18 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாதுகாப்பு கடமைகள் மற்றும் கட்டணமில்லா நடவடிக்கைகள் ஆகியவை கண்மூடித்தனமாக பயன்படுத்தப்படுகின்றன. பலதரப்பு வர்த்தக உடன்படிக்கைகளில் இருந்து இந்தியா விலகிச் சென்றிருந்தால் அது நாட்டுக்கு பெரிதும் பயனளித்திருக்கும். திரு நரேந்திர மோடி அரசியல் மற்றும் பாதுகாப்பு பலதரப்பு ஒப்பந்தங்களில் (GSOMIA, COMCASA, QUAD, QUAD, RELOS) நுழைய ஆர்வமாக இருக்கும் போது, அவர் வர்த்தக உடன்படிக்கைகளை வெறுக்கிறார்.
கடந்த காலங்களில் மத்திய அரசின் பொருளாதார ஆலோசகராக இருந்த டாக்டர் அரவிந்த் பனகாரியாவும் திரு. மோடி அரசின் பொருளாதார கொள்கைகளை ரசிக்க வில்லை. இவர் தற்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். நிதி அயோக்கின் துணைத் தலைவராகவும் இருந்தார். இவர் தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையின் சமீபத்திய கட்டுரையில் அரசை புகழ்ந்தது போல தெரிந்தாலும் மறைமுகமாக அரசை கண்டிப்பது போலவே எழுதினார். அவர் எழுதியதில் ஒரு பகுதியை பார்க்கலாம். “... சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் பொருளாதாரத்தை நாம் மற்றவர்களுக்கு அவர்கள் பங்கு பெறும் படி திறந்து விட வேண்டும். கல்விக்கு அதிக கட்டணங்கள் வசூலிப்பதை திரும்ப பெற்று விட்டு 1956 இன் பழமையான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைய சட்டத்தை இன்றைய தேதிக்கு தகுந்தவாறு மாற்றியமைத்து புதிய சட்டங்களை இயற்ற வேண்டும். உயர் கல்வி முறையை சீரமைக்க வேண்டும். நேரடி மற்றும் மற்றும் மறைமுக வரிகள் விதிப்பு, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கல், மற்றும் PSB க்கள் தொடங்கப்படுவது போன்றவை சீர் செய்யப்பட வேண்டும்."என எழுதுகிறார்.
டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் மற்றும் டாக்டர் அரவிந்த் பனகாரியா சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசாங்கத்தின் ‘உள்முகமாக’ இருந்ததை தவிர, இருவரும் பொருளாதார வல்லுநர்கள். புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் கற்பிப்பவர்கள் மற்றும் தனியார் துறை தலைமையிலான மாதிரியை ஆதரிப்பவர்கள். பொருளாதாரக் கொள்கைகளின் குறைபாடுகளை அடையாளம் காண அவர்கள் தயங்க வில்லை என்றாலும், அத்தகைய குறைபாடுகளின் பேரழிவு விளைவுகளை பட்டியலிட அவர்கள் தயங்குகிறார்கள்.
முக்கிய விளைவுகள்
ஒரு செயலின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இந்தக் கட்டுரையைப் படிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம்
- ஏழைகள் அதிகம் வாழும் நாட்டில் தனிநபர் வருமானம் குறைதல்
- ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிப்பு, குழந்தைகளிடையே வளர்ச்சி குன்றிய நிலை
- உலகளாவிய பசி குறியீட்டில் 94 வது இடத்தில் இருந்து 104 வது இடத்திற்கு (116 நாடுகளில் எடுக்கப்பட்ட சர்வேயின் படி ) சரிவு
- பணமதிப்பிழப்பு நடவடிக்கை, MSME களுக்கு குறைந்த ஆதரவு, ஏழைகளுக்கு பணத்தை மாற்ற மறுப்பது மற்றும் கோவிட் தொற்று நோயில் அரசின் தவறான மேலாண்மை ஆகியவற்றால் லட்சக்கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப் படுதல்
- அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் (நகர்ப்புறம் 8.4 சதவீதம், கிராமப்புறம் 6.4 சதவீதம்)
- அதிகரிக்கும் பணவீக்கம்
- அதிக மறைமுக வரிகள் குறைவான நேரடி வரிகள் மற்றும் சீரமைக்கப்படாத ஜிஎஸ்டி
- பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி விற்பனையில் லாபம் ஈட்டுதல்
- உரிமம்-அனுமதி குறித்த முறைமைகள்
- தனியார்களின் ஏகபோக உரிமை
- நட்பான முதலாளித்துவ முறை
- உயர்தர வணிகம், பொறியியல், மருத்துவம் மற்றும் அறிவியல் திறமைகள் குறைபாடு
தவறான கொள்கைகள் மற்றும் அதன் விளைவுகளின் பொருளாதார நிலையை மக்கள் சுமக்கும்போது, மோடி அரசாங்கம் இன்னும் அரசியல் விலையை ஏற்க அழைக்கப் பட வில்லை. வேறு எந்த ஜனநாயக நாட்டிலும் மக்கள் பணம், உணவு அல்லது மருந்து இல்லாமல் முடங்கிக் கிடக்க வில்லை. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை கிடைப்பதில் சிரமங்கள் , மருந்துகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தகன அறைகள் கூட கிடைக்காத நிலை போன்ற அதிர்ச்சியூட்டும் நிலை நிலவுகிறது. கோவிட்-19 காரணமாக லட்சக்கணக்கானவர்களின் சான்றளிக்கப்படாத மற்றும் கணக்கிடப்படாத இறப்புகள், கங்கையிலும் அதன் கரைகளிலும் சிதறிக் கிடக்கும் பிணங்கள், பள்ளிகளை மூடி விட்டு லட்சக்கணக்கான குழந்தைகளின் கல்வியில் அக்கறை இல்லாமல் புறக்கணிக்கும் அரசின் அலட்சியம் மற்றும் அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டம், இதனால் பாதிக்கப் படும் இளைஞர் களின் எண்ணிக்கை போன்றவை அரசு நீடிக்க சவாலாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கோ அரசு அலட்சியமாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் கூட விவாதங்கள் முழுவீச்சில் நடப்பதில்லை. அரசு "லுடைட்" எனப் படும் வித்தியாசமான கொள்கைகளைப் பின்பற்றுகிறது, மேலும் தனது மதவாதக் காட்சிகளால் மக்களை திகைக்கவும் வைக்கிறது.
வளர்ந்து வரும் அநீதி
இந்த சூழலில் சமத்துவமின்மையுடன் அநீதியும் வளர்கிறது. எல் சான்சல், டி பிகெட்டி மற்றும் பலர் எழுதிய உலக சமத்துவமின்மை அறிக்கை 2022 ன் படி இந்தியாவின் வயது வந்தோரில் முதல் 10 சதவீதம் பேர் தேசிய வருமானத்தில் 57 சதவீதத்தையும், இன்னும் பொருளாதாரத்தில் பின்தங்கிய 50 சதவீதத்தினர் 13 சதவீதத்தையும் மட்டுமே பெறுகிறார்கள் என்று மதிப்பிட்டுள்ளது. இவர்களுக்கும் மேலாக அடுத்த படியில் வசதியாக வாழ்பவர்களில் 1 சதவீதத்தினர் தேசிய வருமானத்தில் 22 சதவீதத்தைப் பெறுகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட ஆக்ஸ்பாம் அறிக்கை இந்த முடிவுகளை ஆமோதிக்கிறது. நாட்டின் மொத்த செல்வத்தில் 77 சதவீதத்தை முதல் 10 சதவீதத்தினர் வைத்துள்ளனர் என்று கூறியது. இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 102ல் இருந்து 142 ஆக உயர்ந்துள்ளது, அதே சமயம் 84 சதவீத குடும்பங்கள் 2021ல் வருமானத்தில் சரிவை சந்தித்துள்ளன. கோடீஸ்வரர்களின் சொத்து மார்ச் 2020 ல் ரூ.23.14 லட்சம் கோடியாக இருந்து 2021 நவம்பரில் ரூ.53.16 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் 460,00,000 மக்கள் மேலும் வறுமையில் வாழ்ந்து வருகின்றனர்.
பட்ஜெட்டுக்கு (2022-23) இன்னும் சில நாட்களே உள்ளன. தம் மீது ஒரு விதமாக மினுமினுங்க செய்யும் teflan பூச்சு எனப் படும் பாதுகாப்பு கவசம் பூசப் பட்டதாக அரசாங்கம் நம்பினால் அது அரசுக்கு ஒரு ஒரு சோகமான நிகழ்வாகவே இருக்கும். இது அரசின் போக்கை மாற்றாது. மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. அக்கறையில்லாத அரசுக்கு அரசியல் மட்டுமே விலை கொடுக்க முடியும்.
தமிழாக்கம் த வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.