ப சிதம்பரம்
P Chidambaram Writes No work no welfare only wealth : பொதுநல கோட்பாட்டை முன்னிறுத்தும் கற்பனைவாத கனவிலிருந்து நான் வெளியே வந்ததிலிருந்து, ஒரு நாடு முன்னேற, வளம் கொழிக்க மற்றும் பன்முகத் தன்மையுடன் இருக்க மூன்று உந்து சக்திகள் இருக்க வேண்டும் என நம்புகிறேன். வேலை, மக்கள் நலன் மற்றும் செல்வம் என்ற மூன்றில் எதுவுமே மற்ற இரண்டை விட குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
சூழ்நிலை என்பது கண்டிப்பாக மாறிக் கொண்டே இருக்கும். கடந்த 30 ஆண்டுகளில், 1991 (இயல்பு நிலைக்கு அருகில்), 1997 (உலகமயமாக்கல்), 2002-03 (வறட்சி), 2005-08 (உலகளாவிய ஏற்றம்), 2008 (சர்வதேச நிதி நெருக்கடி), 2012-13 (தடுமாற்றம் ), 2016-17 (பணமதிப்பு நீக்கம், வறட்சி) மற்றும் 2020-22 (தொற்றுநோய், மந்தநிலை) ஆகிய ஆண்டுகளில் வியத்தகு முறையில் வேறுபட்ட பொருளாதார வேறுபாடுகளுள்ளான சூழல்களை நாம் பார்த்து விட்டோம். ஒவ்வொரு சூழலுக்கும் வித்தியாசமான மற்றும் நுணுக்கமான பதில் தேவைப் படுகிறது. குறிப்பாக பட்ஜெட் எனப் படும் ஒரு நாட்டின் வரவு செலவு கணக்கை சமர்ப்பிக்கும் போது இந்த சூழல் தேவைப்படும். ஆனால் வேலை, பொது நலன் மற்றும் செல்வத்தை மேம்படுத்துவதற்கான அடிப்படைத் தத்துவம் மாறி விடக்கூடாது.
எதற்காக இந்த வேலை ?
அறிவார்ந்த மனித இனம் என்பது இப்போது வேட்டையாடுபவர்கள் மற்றும் காய், கனிகள் சேகரித்து உண்பவர்களை மட்டும் குறிக்க வில்லை. இப்போதைய மனிதனின் பாதையே வேறு. மனிதனின் ஆசைகள் மற்றும் தேவைகள் அதிகரித்ததால் மனிதன் தனக்கான வேலையை செய்ய தொடங்குகிறான். இப்போது வேலை என்பது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியே அன்றி வேறில்லை. இன்றைய வளரும் பொருளாதாரத்தில், ஒரு முக்கியமான அங்கம் என்பது 15 வயது மற்றும் அதற்கு மேலான வயதுடைய பணியாளர்களின் எண்ணிக்கை. இவர்கள் தான் வேலை செய்ய முழுத்தகுதி உடையவர்களாக மதிக்கப் படுகிறார்கள். நாட்டின் மக்கள் தொகையில் வேலை செய்ய தகுதியானவர்கள் மற்றும் வேலை தேடுபவர்களை குறிக்கும் தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் ( LFPR ) என்பது கவனிக்க வேண்டிய விஷயம். இந்தியாவில் தற்போதைய இந்த எண்ணிக்கை பணியாளர்கள் 94 கோடி. அதாவது தொழிலாளர் படை பங்கேற்பு விகிதம் படி பார்த்தால் இது 37.5 சதவீதம். இது 52 கோடிக்கு மக்களுக்கு சமமானது. (ஆதாரம்: பொருளாதார ஆய்வறிக்கை இணைப்பு )
இந்தியா மிகப்பெரிய பொருளாதார சவாலை எதிர்கொண்டுள்ளது. சராசரியாக 28.43 வயதுடைய இளைஞர்களை அதிகம் கொண்டுள்ள நாடான இந்தியாவின் முக்கிய சவால் வேலையின்மை தான். திரு நரேந்திர மோடி ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போது இதை புரிந்து கொண்டார். ஆனால் காலப்போக்கில் அவரது தத்துவம் மாறி விட்டதாகவே தெரிகிறது. ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக அவர் அளித்த வாக்குறுதி இளைஞர்களது ரத்த நாளங்களில் புத்துணர்வை பாய்ச்சியது. பின்னாட்களில் பக்கோடா விற்பதும் ஒரு வேலைதான் என்றார். கடந்த ஏழு ஆண்டுகளில் வேலையின்மை அதிகரித்துள்ளது. தொற்றுநோய் மற்றும் ஊரடங்கு காலங்களில் மக்கள் தமது வேலையை இழந்தார்கள். சுமார் 60 லட்சம் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான மக்கள் தமது வேலையை இழந்தனர், அதில் சம்பளம் பெறும் வேலைகள் மற்றும் பல்வேறு வேலைகள் அடங்கும். சுயதொழில் செய்பவர்கள் (எ.கா. தையல்காரர்,மின்சாதன வேலை செய்பவர் ) தமது வேலையை இழந்தனர். இதில் பலருக்கு வேலை திரும்பக் கிடைக்க வில்லை. தற்போதைய வேலையின்மை விகிதம் நகர்ப்புறத்தில் 8 சதவீதமாகவும் கிராமப்புறத்தில் 6 சதவீதமாகவும் இருக்கிறது.
இவை தவிர, வேலைக்கு மீண்டும் திரும்பியவர்களுக்கு சம்பளம் குறைக்கப் பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 84 சதவீத குடும்பங்கள் வருமான இழப்பை சந்தித்துள்ளன. இந்த நிலையில் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் உறுதி அளிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு 12 லட்சம் புதிய வேலைகள் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு ஆண்டும் பணிக்கு வருபவர்களின் எண்ணிக்கை 47.5 லட்சம் (ஆதாரம்: தொழிலாளர் பணியகம்). எனது முடிவின் படி வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்கும். முக்கியமாக குறிப்பாக கல்வியறிவு குறைந்தவர்களிடையே இன்னும் அதிக வேலையில்லாத நிலை ஏற்படும்.
நலன் ஏன்?
நலன் என்பது வாழ்வாதாரம், வேலை, உணவு, சுகாதாரம், கல்வி, சமூகப் பாதுகாப்பு, ஓய்வு மற்றும் பொழுதுபோக்கு, போன்ற பல அம்சங்களை உள்ளடக்கிய ஒரு விசாலமான பார்வையுடன் அணுக வேண்டிய விஷயம். எடுத்துக்காட்டாக, வேலைக்கு உறுதியளிக்கும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்பு திட்டம் (MGNREGA ) என்பது வாழ்வாதாரத்தின் சவாலை எதிர்கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப் பட்டது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் உணவு தேவையின் சவால் இலவச பொது சுகாதார வசதிகள் மற்றும் சுகாதார காப்பீடு, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற சவால்களை எதிர்கொள்ளவும் கல்வி உரிமைச் சட்டம் கல்வியின் சவாலை எதிர்கொள்ளவும் உருவாக்கப் பட்டன. அனால் இந்த பட்ஜெட் இவற்றுக்கெல்லாம் என்ன செய்திருக்கிறது? கீழ் கண்ட அட்டவணை ஒதுக்கீடுகளை பாருங்கள்

இந்த ஒதுக்கீடுகளில் மொத்த மானியத் தொகை 27 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப் பட்டிருக்கும் விதத்தில் பார்த்தால் இனி வங்கிகளில் ரொக்கப் பண பரிமாற்றம் அறவே இல்லை. ஏழைகளுக்கு இலவச ரேஷன் மற்றும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியங்களில் அதிகரிப்பு இல்லை. ஊட்டச்சத்து குறைபாடு, வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான எந்த திட்டங்களிலும் அரசின் மானிய உதவி இல்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பெரும் ‘கற்றல் இழப்பை’ போக்க எந்த நடவடிக்கைகளும் இல்லை. நடுத்தர மக்களுக்கு வரி சலுகை மற்றும் நுகர்வோருக்கு ஜிஎஸ்டி நிவாரணம் இல்லை. எனது முடிவின் படி பார்த்தால் இந்த பட்ஜெட்டில் பொதுநலம் என்பது காற்றில் பறந்துள்ளது.
ஏன் இந்த செல்வம் ?
செல்வத்தை உருவாக்குவதை நான் ஆதரிக்கிறேன். செல்வம் புதிய மூலதனத்தின் ஆதார சுருதியாகும். அதன் விளைவாக, புதிய முதலீடுகள் மற்றும் வருமானம் உயரும். வரிக்குப் பிறகு, செல்வம் குவியும். வருமானம் மற்றும் செல்வம் இரண்டும் முதலீடு, ஆபத்தை எதிகொள்ளுதல், புதுமை, ஆய்வு- அபிவிருத்தி, தொண்டு மற்றும் பிற பயன்பாடுகளுக்கான தூண்டுதலாகும். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் விரிவுபடுத்தும் சொத்துக் குவிப்பை தான் நான் எதிர்க்கிறேன். இந்தியா, சில ஆய்வுகளின்படி, உலகில் மிகவும் சமத்துவமற்ற நாடுகளில் ஒன்று. கோடிக்கணக்கான ஏழைகளின் வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் நிலைநிறுத்துவதற்கு தேவையான மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் உழைப்பு ஆகியவற்றைத் தவிர்த்து, மூலதன முதலீடு, மேம்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் அதிநவீன சுற்றுச்சூழல் அமைப்புகளில் கட்டமைக்கப்பட்ட இந்த பட்ஜெட் ஏழைகளை ஏளனப்படுத்துகிறது. ஏழைகளுக்கு உதவ அதிக பணம் தேவைப்பட்டால், பணக்காரர்கள் அதிக பணம் சம்பாதிப்பதை குறைப்பதே சரியான அணுகுமுறையாக இருக்கும். இந்தியாவில் மிகப் பெரிய பணக்காரர்களாக 142 பேர் இருக்கிறார்கள். அவர்களின் சொத்து மதிப்பு ரூ. 53,00,000 கோடி. மற்றும் ஏழைகளுக்கு உதவும் திட்டங்களுக்கும் தலையீடுகளுக்கும் வளங்களைப் பயன்படுத்துகிறது. இந்த பட்ஜெட் ஏழைகளை புறக்கணித்த ஒரு முதலாளித்துவ பட்ஜெட் எனபதே எனது முடிவு.
ஊடகங்களிலும், நாடாளுமன்றத்திலும் நடந்து கொண்டிருக்கும் விவாதம், சலுகை பெற்ற பிரிவினருக்கும் தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கும் இடையே உள்ள ஆழமான பிளவை அம்பலப்படுத்தி உள்ளது. மூலதனச் சந்தை இந்த பட்ஜெட்டுக்கு வணக்கம் சொல்லலாம். ஆனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இந்த பட்ஜெட்டை உருவாக்கியவர்களை மன்னிக்கவே மாட்டார்கள்.
தமிழில் த. வளவன்