ப சிதம்பரம்
நடுத்தர வர்க்கத்தினரை அவர்கள் தமக்கு தாமே திணித்துக்கொண்ட தனிமைப்படுத்தலில் இருந்து எதுவும் தடுப்பதாக தெரியவில்லை. இடைவிடாத விலைவாசி உயர்வு, நசுக்கும் வரிச்சுமை, வேலையின்மை, 2020 ல் கோவிட் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வு, அதன் தொடர்ச்சியாக இறப்புகள், காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகளின் அத்துமீறல்கள், மனித உரிமைகளின் அப்பட்டமான மறுப்பு, வெறுப்பூட்டும் பேச்சுக்கள், முஸ்லிம்கள் புறக்கணிப்பு மற்றும் கிறிஸ்தவர்கள், கடுமையான அரசியலமைப்பு மீறல்கள் என ஏகப்பட்ட பிரச்சனைகள் ….
நடுத்தர வர்க்கத்தினரால் நடத்தப்பட்ட சுதந்திரப் போராட்டம் நமது நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சி குறித்தும் உணர்ச்சிப்பூர்வமாக அக்கறை கொண்டிருந்தது. அந்த நேரத்தில் தொலைக்காட்சி மற்றும் இணையம் இல்லாத போதிலும், செய்திகள் வேகமாக செல்ல வேண்டிய இடங்களை சென்றடைந்தன.
நடுத்தர வர்க்க மதிப்புகளை கொண்ட ஒரு நடுத்தர வர்க்கம் உண்மையில் இந்தியாவில் இருக்கிறதா என்று நான் சில நேரங்களில் ஆச்சரியப்படுகிறேன். அந்த மதிப்புகளைக் கொண்ட தனிநபர்கள் இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன், ஆனால் ஒரு 'வகுப்பாக' இருந்த வர்க்கத்தினர் இப்போது இல்லை. அவர்கள் அமைதியாகி விட்டனர்.
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் பணக்காரர்களின் எண்ணிக்கை குறைவாகவும், ஏழைகளின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது. மேற்கத்திய கல்வி முறையின் அறிமுகத்தால் ஆங்கிலம் கற்பித்தல் மற்றும் ஆங்கிலத்தில் கற்பித்தல் மற்றும் மேற்கத்திய சட்ட அமைப்பு ஒரு படித்த இடைநிலை வகுப்பை உருவாக்கியது, அது நடுத்தர வர்க்கமாக மாறியது. ஆசிரியர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், அரசு ஊழியர்கள், ராணுவ அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என ஒரு அறிவாளிகள் கூட்டம் முதல் முறையாக, நடுத்தர வர்க்கத்தின் மையமாக இருந்தனர். இதுவே நடுத்தர வர்க்கமாக மாறியது.
இந்திய தேசிய காங்கிரஸின் ஒரு சிலரைத் தவிர, சுதந்திரப் போராட்டத்தை வழிநடத்திய பெரும்பாலான தலைவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நௌரோஜி, கோகலே, லஜபதி ராய், திலக், சி ஆர் தாஸ், ராஜேந்திர பிரசாத், படேல், ஆஸாத், ராஜகோபாலாச்சாரி, சரோஜினி நாயுடு, கெளப்பன் மற்றும் பொட்டி ஸ்ரீராமுலு ஆகியோர் இதில் அடங்குவர். டாக்டர் தாரா சந்த் தனது இந்திய சுதந்திர இயக்க வரலாற்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். "மக்களிடையே தேசிய உணர்வைப் பரப்பி, தேசிய விடுதலை இயக்கத்தை நடத்தி, இறுதியில் நாட்டை அந்நிய ஆட்சியில் இருந்து விடுவித்த பெருமை இந்த நடுத்தர வர்க்கத்தை சேர வேண்டும்.
முன்னணியில் நின்ற தலைவர்கள்
இந்த தலைவர்கள் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் இவர்க்ளின் அழைப்பை மக்கள் ஏற்றுக்கொண்டனர். விவசாயிகளின் போராட்டங்கள் மற்றும் தொழில்துறை தொழிலாளர்களின் போராட்டங்களுடன் சேர்ந்து, சுதந்திர இயக்கம் மக்கள் இயக்கமாக மாறியது. நடுத்தர வர்க்கத் தலைவர்களையும் அவர்களைப் பின்பற்றுபவர்களையும் வேறுபடுத்தியது. அவர்கள் தங்களுக்காக எதையும் கேட்க வில்லை. மக்களுக்கு சுதந்திரம் மட்டுமே கேட்டார்கள்.
நடுத்தர வர்க்கம் தலைமையிலான சுதந்திரப் போராட்டம், நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் அக்கறையுடன் இருந்தது. தொலைக்காட்சி மற்றும் இணையம் இல்லாத போதிலும், செய்திகள் வேகமாகப் பயணித்தன. சத்தியாகிரகம், ஜாலியன் வாலாபாக் படுகொலைகள், பூர்ண ஸ்வராஜ் தீர்மானம், தண்டி அணிவகுப்பு, பகத்சிங், ராஜ்குரு, சுகதேவ் ஆகியோரை தூக்கிலிட்டது, வெள்ளையனே வெளியேறு இயக்கம், நேதாஜி போஸ் தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தின் வெற்றி ஆகியவை மக்களை வீறு கொண்டு எழச்செய்தது. இப்படியாக நாட்டுக்கு ஊக்க சக்தியை தந்து சுதந்திர போராட்டத்தை வழி நடத்தியது மத்திய தர வர்க்கம்.
இல்லாத தலைமை
அந்த நடுத்தர வர்க்கம் இன்று வெளிப்படையாக இல்லை. நடுத்தர வர்க்கத்தினரை அவர்கள் சுயமாக திணிக்கப்பட்ட தனிமைப்படுத்தலில் இருந்து எதுவும் தூண்டுவதாக தெரியவில்லை. இடைவிடாத விலைவாசி உயர்வு, நசுக்கும் வரிச்சுமை, வேலையின்மை, 2020 இன் துயரமான உள்நாட்டு இடப்பெயர்வு, லட்சக்கணக்கான கோவிட இறப்புகள், காவல்துறை மற்றும் விசாரணை அமைப்புகளின் அத்துமீறல்கள், மனித உரிமைகள் அப்பட்டமான மறுப்பு, வெறுப்பு பேச்சுகள், போலிச் செய்திகள், முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அரசியல் அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் போக்கு, மோசமான அரசியலமைப்பு மீறல்கள், அடக்குமுறைச் சட்டங்கள், நிறுவனங்களைத் தகர்த்தல், தேர்தல் ஆணையை மாற்றியமைத்தல், சீனாவுடனான எல்லை மோதல்கள் போன்றவை எதுவுமே இந்திய நடுத்தர வர்க்கத்தை பாதிப்பது போல தெரியவில்லை.
சமீபத்திய சில முன்னேற்றங்களை சில உதாரணங்களுடன் நான் விளக்குகிறேன்: திரு நானா படோல் பிப்ரவரி 2021 இல் மகாராஷ்டிர சட்டமன்றத்தின் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார். இரகசிய வாக்கெடுப்பு மூலம் சபாநாயகரை தேர்ந்தெடுக்க சட்டமன்ற விதிகள் வகுக்கப் பட்டுள்ளன. வெளிப்படையான வாக்களிப்பு மூலம் பேரவைத் தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என்று விதிகள் மாற்றப்பட்டன. புதிய சபாநாயகர் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிப்பது மட்டுமே கடமையாக கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மற்றும் பாஜகவைச் சேர்ந்த ஆளுநர் தேர்தலை முடக்கிக் கொண்டே இருந்தார். இதனால் சபாநாயகர் இல்லாமலேயே 17 மாதங்கள் சட்டமன்றம் இயங்கிக்கொண்டிருந்தபோது துணைத் தலைவர் மூலம் தேர்தல் நடந்தது. பாஜகவின் உதவியுடன் திரு ஏக்நாத் ஷிண்டே ஜூன் 30ஆம் தேதி ஆட்சியை கவிழ்த்து முதல்வராக பதவியேற்றார். புதிய சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேதியை நிர்ணயம் செய்யுமாறு அவர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார், ஜூலை 4ஆம் தேதி திறந்த வாக்கெடுப்பில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேரவை தலைவரை தேந்தெடுப்பதற்கான விதிகள் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய ஆட்செபமும் அப்படியே மறைந்து விட்டது. சபாநாயகர் பதவி 17 மாதங்கள் காலியாக இருந்தது அல்லது இந்திய அரசியலமைப்பு என்று ஒரு புத்தகம் இருப்பதைப் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை. அமெரிக்காவிலோ அல்லது இங்கிலாந்திலோ சபாநாயகர் பதவி காலியாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட கவலையை உங்களால் கற்பனை செய்ய முடியுமா?
இதோ இன்னொரு உதாரணம். ஜிஎஸ்டி கவுன்சிலின் 47 வது கூட்டத்தில் பேக் செய்யப்பட்ட உணவு தானியங்கள், மீன், பன்னீர், தேன், வெல்லம், கோதுமை மாவு, உறைய வைக்காத இறைச்சி, மீன், பஃப்டு ரைஸ் போன்றவற்றுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. அச்சிடுதல், எழுதுதல் அல்லது வரைதல் மை, கத்திகள், கரண்டிகள், முட்கரண்டிகள், காகிதக் கத்திகள், பென்சில் ஷார்பனர்கள் மற்றும் எல்இடி விளக்குகள் ஆகியவற்றின் மீதான வரி விகிதம் 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மற்றும் இதுவரை விலக்கு அளிக்கப்பட்ட ஹோட்டல் தங்குமிடங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.1,000 வரை 12 சதவீத வரி விதிக்கப்பட்டது. பணவீக்கம் 15.88 சதவீதமாகவும், பணவீக்கம் 7.04 சதவீதமாகவும் இருக்கும் போது இந்த வரிகள் குறைக்கப்பட்டன. இந்த வரி உயர்வை எதிர்ப்பதில் லயன்ஸ் கிளப்கள், மகிளா குழுக்கள், வர்த்தக சபைகள், தொழிற்சங்கங்கள், நுகர்வோர் அமைப்புகள் போன்றவை அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. மகாத்மா காந்தி உப்பு சத்தியாகிரகத்தை ஏன் தொடங்கினார் என்பது சிலருக்காவது நினைவிருக்கும் என நம்புகிறேன்.
சுயமான தனிமைப்படுத்தல்
காலையில் செய்தித்தாள் படிப்பது இப்போது வெறும் சடங்காகி விட்டது. அதற்கு பதிலாக நெட்ஃபிளிக்ஸில் ஒட்டிக்கொண்டு, ஐபிஎல் கிரிக்கெட்டில் மகிழ்கிறது நடுத்தர வர்க்கம். தானாக முன்வந்து தேசிய உரையாடலில் இருந்து தன்னை விலக்கிக் கொள்கிறது. விவசாயிகள் தமது உரிமைகளுக்காக போராடுகிறார்கள். ராணுவத்தில் சேர்ந்து வாழ்வை வலுப்படுத்துவதுடன் நாட்டை காக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கும் இளைஞர்கள் தமது லட்சியத்துக்காக போராடுகிறார்கள். இந்தப் போர்களின் விளைவுதான் இந்த நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்பதை நடுத்தர வர்க்கம் உணர்ந்தால் அது ஒரு ஆச்சரியமான விஷயம் தான்.
தமிழில் :த. வளவன்
தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.