P Chidambaram writes on NHFS-4 ASER reports : இந்தியாவின் அண்டை நாடுகளான சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளிடமிருந்து வரும் அச்சுறுத்தல், தீவிர இந்துத்துவா நிலை, இந்திய இறையாண்மையை போற்றும் வகையில் செயல் படும் நாடாளுமன்றத்தை சீர்குலைக்க சதி, வாரிசு அரசியல், அ ந்தோலன் ஜீவிகள் என சொல்லப்படும் இந்தியாவின் நிரந்தர எதிர்ப்பாளர்கள், 70 ஆண்டுகளாக வளர்ச்சியடையாத இந்தியாவின் அவல நிலை என மத்திய அரசும், அதன் அமைச்சர்களும் ஆவேசமாக பேசுகின்றனர். ஆனால் உலகிற்கே பல கலைகளை கற்பித்த ஆசான் என சொல்லப் படும் இந்தியாவில் எங்கள் குழந்தைகளின் நிலை, முக்கியமாக குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் கல்வியின் நிலை பற்றி யாரும் பேசுவதை நான் கேட்கவில்லை.
வருடந்தோறும் வெளியிடப்படும் தேசிய வருடாந்திர கல்வி நிலை அறிக்கையை (ASER) நான் தொடர்ந்து கண்காணித்து வந்தேன். இதே மாதிரி எங்களிடம் 2018 மற்றும் 2020க்கான அறிக்கைகளும் உள்ளன. இதே மாதிரி 2021க்கான ASER அறிக்கை நவம்பர் 17, 2021 அன்று வெளியிடப்பட்டது. அதே நேரத்தில், தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு-5 (2019-21) அறிக்கையும் வெளியிடப்பட்டது. இது NHFS-4 போன்ற அதே முறையைப் பின்பற்றுகிறது. இது ஒன்றுடன் ஒன்றை தொடர்பு படுத்த எதுவாக இருந்தது.
இரண்டு அறிக்கைகள்
ASER 2021 மற்றும் NFHS-5 - தந்த அறிக்கைகள், பட்டியலிடப்பட்ட 100 க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் முன்னேற்றத்தை குறிப்பிடும் BSE குறியீடு அல்லது NIFTY குறியீட்டைப் போலல்லாமல், உண்மையான இந்தியாவின் நிலையை படம் பிடித்து காட்டுகின்றன. இந்த அறிக்கைகள் கடந்த இரண்டு வாரங்களாகவே பொதுத் தளம் மூலமாக அனைவராலும் விமர்சிக்கப் படுகின்றன. ஆனால் பிரதமரோ, கல்வி அமைச்சரோ அல்லது சுகாதார அமைச்சரோ இவ்விரண்டு அறிக்கைகள் குறித்து பேசியதை என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. இரண்டு அறிக்கைகளும் தொற்றுநோயின் தாக்கத்தை மதிப்பிடுகின்றன. அறிக்கைகளின் சாராம்சத்தை அப்படியே ஒதுக்கி தள்ளி விட முடியாது. அறிக்கைகளின் முடிவுகள் மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. அதே நேரத்தில் முக்கிய கண்டுபிடிப்புகளை என்னால் பட்டியலிட முடியும்.
ASER 2021 (கிராமப்புறம்):
1. தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. 2. குழந்தைகள் ‘டியூஷன்’ செல்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
3. ஸ்மார்ட்போன் பயன்பாடு உரிமை அதிகரித்துள்ள போதிலும் இதை பயன்படுத்துவதில் குழந்தைகளுக்கு இன்னும் சிரமங்கள் உள்ளன. 4. பள்ளிகள் மீண்டும் திறக்கப் பட்டுள்ளதால் வீடுகளில் கற்பித்தலில் ஆர்வம் குறைந்து வருகிறது.
5. குழந்தைகளுக்கான கற்றல் பொருட்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
NFHS 2019-21:
1. மொத்த கருவுறுதல் விகிதம் 2.0 என்ற அளவில் குறைந்துள்ளது. ஆனால் குறிப்பிட்ட மூன்று மாநிலங்களின் மக்கள் தொகை வேகமாக அதிகரித்துள்ளது.
2. கடந்த ஐந்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளிடையே பிறப்பு விகிதம் 929 என்ற அளவில் உள்ளது. ஆண் -பெண் பாகுபாடு விவரிக்க முடியாத அளவிற்கு குறைந்துள்ளது.
3. சுகாதாரம், சுத்தமான எரிபொருள் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த விஷயங்கள் இன்னும் பலலட்சம் மக்களுக்கு சவாலாகவே இருக்கிறது.
4. இறப்பு விகிதம் குறைந்து வருகிறது, ஆனால் சில குறிப்பிட்ட நேரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
5. மன வளர்ச்சி , உடல் வளர்ச்சி குறைபாடு மற்றும் இரத்த சோகை போன்ற நோய்கள் இன்றளவும் சவாலாகவே உள்ளன.
தேசிய வருடாந்திர கல்வி அறிக்கையின் கல்வி பற்றிய முதல் முடிவுகளையும், தேசிய குடும்பநல ஆய்வு அறிக்கையின் ஆரோக்கியம் பற்றிய இரண்டாவது முடிவுகளையும் சுருக்கியும் இணைத்தும் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும். இதிலிருந்து ஒரு நாட்டின் முக்கிய வளமான குழந்தைகள் நலன் இந்தியாவில் புறக்கணிக்கப் பட்டுள்ளதை அறிந்து கொள்ள முடியும். இது குறித்த பொது விவாதமும் தேவையான அளவு இல்லை. அவர்களின் நலனுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அமைச்சகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கூட ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதாக தெரிகிறது.
தீவிரமடையும் ஏற்றத்தாழ்வுகள்
அனைத்து நாடுகளிலும் பல்வேறு பிரிவு மக்களிடையே சமத்துவமின்மை காணப்படுகிறது. இதற்கு தனிநபர் வருமானமும் செல்வமும் முக்கிய காரணிகளாக இருகின்றன . அதே நேரத்தில் இந்த சமத்துவமின்மை இந்தியாவில் மதம் மற்றும் சாதிய மோதல்களால் மேலும் மோசமடைந்துள்ளது. மிகவும் பின்தங்கிய சமூக மற்றும் பொருளாதார பிரிவுகளை சேர்ந்த மக்கள் அரசால் பாகுபாடு காட்டப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட ஏழைகளாகவும் வேலையில்லாதவர்களாகவும் பரிதாபமான நிலையில் உள்ளனர். இவர்களது குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் ஒப்பிடுகையில் மிகப் பெரிய வித்தியாசத்தை காண முடியும். அதே நேரத்தில் ASER மற்றும் NFHS ஆகியவை மதம் அல்லது சாதி அடிப்படையிலான கணக்கீடு அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப் பட வில்லை. அது அனைவருக்கும் பொதுவான விதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு பகுப்பாய்வு செய்யப் பட்டுள்ளது. . இந்தியா ஒரு குறிப்பிட்ட தொற்று நோயால் பாதிக்கப் படும் போது அது மொத்தமாக குழந்தைகளை எவ்வாறு பாதிக்கும் என்பதே இதன் கருவாக உள்ளது.
எனது முடிவுகள்:
குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளை உடைய தம்பதிகள் சம எண்ணிக்கையில் ஆண் - பெண் குழந்தைகளை பெற்றெடுப்பதில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஒட்டுமொத்த பாலின விகிதம் ஆரோக்கியமாக இருந்தாலும் (1,020), இது கடந்த ஐந்து ஆண்டுகளில் 929 ஆக சர்ச்சைக்குரிய விதத்தில் குறைந்துள்ளது. இதை நாம் தீவிரமாக ஆராய வேண்டும். இது அதுவாகவே நடந்திருந்தாலும் கவலைக்குரிய விஷயமாகவே கருதப் பட வேண்டும்.
இந்தியாவின் மூன்று ஏழை மாநிலங்களில் சரியான நிர்வாகம் இல்லை. ஆனால் இந்த மாநிலங்களின் மக்கள் தொகை பெருக்கம் அதிகம். தேசிய மக்கள் தொகை பெருக்கத்தை விட அதிகம். அதே நேரத்தில் இந்த மாநிலங்களில் வறுமை ஒழிப்பு திட்டங்கள் எதுவும் வெற்றி பெற்றதாகவும் தெரிய வில்லை.
இந்தியா சாதனை நாடாக தன்னை காட்டிக் கொண்டாலும் இன்னும் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத நாடாக தன்னை அறிவித்துக்கொள்ள முடிய வில்லை. இலவச எரிவாயு உருளை திட்டம் மட்டுமே ஒரு நாட்டின் வெற்றி அல்ல.
இந்தியாவின் மக்கள் தொகை மாற்றத்துடன் வரும் சவால்கள்
இந்தியாவில் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் மேம்பட்டிருந்தாலும், தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம் இன்னும் மேம்படுத்தப் பட வில்லை. குழந்தைகள் பிறக்கும் போதும் (ஆயிரத்திற்கு 24.9), குழந்தைப் பருவத்திலும் ( ஆயிரத்துக்கு 35.2) முதல் ஐந்தாண்டுகளில் 41.9 சதவீதம் வரை தமது இன்னுயிரை இழப்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இப்படி உயிர் பிழைக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு சவால்கள் உள்ளன. இவர்களுக்கு தேவையான ஊட்டச் சத்து எளிதில் கிடைப்பதில்லை. இது அதிக சதவீத வளர்ச்சி குன்றிய நிலை (35.5 சதவீதம்), வீணாக்குதல் (19.3) மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு (32.1) போன்றவற்றில் நிரூபிக்கப் பட்டுள்ளது.
2020-21 மற்றும் 2021-22 ஆண்டுகளின் கற்பித்தலுக்கு ஏற்பட்ட சோதனையும் இழப்பும் மிக அதிகம். அகில உலக அளவில் சராசரியாக 35 வாரங்களுக்கு பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் இங்கோ 73 வாரங்களுக்கு பள்ளிகள் செயல்பட வில்லை. கோவிட் தாக்கத்தால் நடந்த இடப்பெயர்ச்சி மற்றும் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக ஏராளமான குழந்தைகள் தனியார் பள்ளிகளை விட்டு அரசு பள்ளிகளுக்கு மாறினர். இப்படி அரசுப் பள்ளிகளில் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் அரசுப் பள்ளிகளின் திறன் மேம்படுத்தப் பட்டுள்ளதா என்றும் சிந்திக்க வேண்டியுள்ளது. பல குழந்தைகள் பல தரமாக பிரிக்கப் பட்டு வகுப்பறைகளில் அமர்ந்திருப்பதை காண முடிந்தது. கோவிட் தாக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டபோது 39.8 சதவீதம் பேர் மட்டுமே கற்பதற்கான அடிப்படை வசதிகளையும் பொருட்களைப் பெற்றதாக தெரிவித்துள்ளனர். மாணவர்களின் வாசிப்பு மற்றும் கணித பாடம் குறித்த அக்கறையும் அமல்படுத்தப்படவில்லை.
நமது குழந்தைகளின் உடல்நலம் மற்றும் கல்வியின் கவலைக்கிடமான நிலையைப் பற்றி பிரதமர், மாநில முதல்வர்கள் கொஞ்சமாவது சிந்திப்பார்களா - இது குறித்து ஒரு வார்த்தையாவது பேசுவார்களா? விலைமதிப்பற்ற நமது வளமான நமது குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் குறித்து மத்திய மாநில அரசுகள் ஒரு கணமாவது சிந்திப்பார்களா?
தமிழில் த. வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.