scorecardresearch

சீனாவின் சதுரங்க வேட்டை

சீனாவின் ஆட்டத்தை ஒன்றிய அரசு இருட்டடிப்பு செய்கிறது. நாடாளுமன்றத்தையும் மக்களையும் இருட்டில் வைக்க முனைகிறது. அதனால்தான், பாலியில் திரு ஷி ஜின்பிங் இடம் மோடி என்ன கூறினார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லை.

சீனாவின் சதுரங்க வேட்டை

ப.சிதம்பரம்

சீனாவின் ஆட்டத்தை ஒன்றிய அரசு இருட்டடிப்பு செய்கிறது. நாடாளுமன்றத்தையும் மக்களையும் இருட்டில் வைக்க முனைகிறது. அதனால்தான், பாலியில் திரு ஷி ஜின்பிங் இடம் மோடி என்ன கூறினார் என்பது எங்களுக்குத் தெரியவில்லை. இது குறித்து நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லை

மார்ச்-ஏப்ரல் 2020 ல் இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனா ராணுவத்தால் நாட்டிற்கு ஏற்பட்ட அவமானத்தை மோடி அரசால் ஒருபோதும் மறைக்க முடியாது என்று சில அரசியல் பார்வையாளர்கள் நம்புகின்றனர். இது குறித்து எனது முந்தைய கட்டுரையில் (‘ தி டிராகன் இன் தி ரூம் ‘, தி இந்தியன் எக்ஸ்பிரஸ், ஜூலை 31, 2022), நான் எழுதி இருந்தேன். அதில் பின்வருமாறு குறிப்பிட்டு இருந்தேன்.

அக்டோபர் 11, 2019 அன்று தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் இருவரும் ஒரு ஊஞ்சலில் அமர்ந்திருந்தபோது, சீன அதிபர் திரு ஷி ஜின்பிங்கின் உண்மையான முகத்தை மோடியால் கணிக்க முடியவில்லை என்பதை பிரதமர் மோடி உணர வேண்டும். குளிர்ந்த கடல் காற்றுக்குள் ஊஞ்சல் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தபோது, சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் ஊடுருவ திட்டமிட்டு முன்னேறிய நிலையில் இருந்தது. ஜனவரி 1, 2020 அன்று, ராணுவ நடவடிக்கையை அங்கீகரிக்கும் உத்தரவில் சீன அதிபர் கையெழுத்திட்டார். மார்ச்-ஏப்ரல் 2020-ல் சீன ராணுவம் கட்டுப்பாட்டு எல்லையில் தாக்குதல் நடத்தின.

ஜூன் 19, 2020 அன்று அழைக்கப்பட்ட அனைத்து கட்சிக் கூட்டத்தில், பிரதமர் தனது இறுதி உரையாற்றினார். வெளிநாட்டவர் எவரும் இந்திய எல்லைக்குள் ஊடுருவவில்லை அல்லது இந்திய எல்லைக்குள் வெளிநாட்டவர் இல்லை என்றும் சொன்னார். மாண்புமிகு பிரதமரின் வார்த்தைகளை எவரும் நம்பலாம். ஆனால், அதற்கு எதிர்மறையாக ஏராளமான சான்றுகள் உள்ளன.

நினைவாற்றல் இழப்பு

நாடி நரம்புகளை உசுப்பேற்றிய அந்த கஷ்ட நாட்களை நாட்டு மக்கள் மறந்துவிட்டார்கள் என்று மோடி நம்புகிறார். அவர் சொல்வது சரிதான். பணமதிப்பு நீக்கம், எச்சரிக்கை இல்லாத ஊரடங்கு, ஏழைகளின் மிகப்பெரிய உள் குடியேற்றம் (சில மதிப்பீடுகளின்படி எண்ணிக்கை 30 மில்லியனாக உள்ளது), மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை ஆக்ஸிஜன் பற்றாக்குறை, ஆற்றில் ஒதுங்கிய சடலங்கள் போன்றவற்றை மக்கள் மறந்து விட்டதாக தெரிகிறது. மிக சமீபத்திய பேரழிவான மோர்பி நதிப் பாலம் இடிந்து விழுந்ததைக் கூட மக்கள் மறந்து விட்டிருக்கின்றனர்.

மார்ச்-ஏப்ரல் 2020 முதல், இந்தியாவும் சீனாவும் பகிர்ந்து கொள்ளும் 3,488 கிமீ எல்லையில் நிலைமை இன்னும் மோசமாகிவிட்டது. அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டரில் உள்ள யாங்சேயில் டிசம்பர் 9, 2022 அன்று நடந்த சம்பவம் கசப்பான உண்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. சீனா இந்திய எல்லைக்குள் ஊடுருவ வேண்டிய நேரத்தையும் இடத்தையும் சீன தேர்வு செய்கிறது. ஆனால் இந்திய அரசோ அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திக்குத்தெரியாத நிலையில் சிக்கி உள்ளது. எதையும் எதிர் கொள்வதற்கான எந்த திட்டமும் இந்தியாவிடம் இல்லை அதிர்ஷ்டவசமாக, நமது படைகள் ஒவ்வொரு ஊடுருவல் சமயத்திலும் வீரத்துடன் செயல்பட்டு அனைத்தையும் சமாளிக்கின்றனர். . ஜூன் 2020 இல் கல்வானில், 20 வீரர்கள் உயிரிழந்தனர். அருணாச்சல பிரதேசத்தில் 2022 டிசம்பரில், 7 வீரர்கள் காயமடைந்ததாக அரசாங்கம் ஒப்புக்கொண்டது, இருப்பினும் அதிகமான வீரர்கள் காயமடைந்ததாக சில நம்பத்தகுந்த தகவல்கள் உண்டு.

இதில் கேள்வி என்னவெனில், சீனா விரும்பும் நேரத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவுவதற்கான தைரியத்தையும் நம்பிக்கையையும் எது அளிக்கிறது? டிசம்பர் 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பாராளுமன்றம் விவாதிக்க விரும்பிய கேள்வி இது தான். ஆனால் இரு தலைமை அதிகாரிகளும் இந்த விஷயம் ஒரு உணர்வு பூர்வமான விஷயம் எனக் கூறி இதை நிராகரித்தனர். உணர்வுப்பூர்வமான” விஷயத்தைப் பற்றி விவாதிக்க நாடாளுமன்றத்திற்கு வாய்ப்பு மறுக்கப்படும் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் விசித்திரமான வரையறையாக இருக்கிறது. விதி 267 இன் கீழ், அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான FIFA கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி போன்றவையை தான் விவாதிக்க முடியும். திரு டெரெக் ஓ பிரையன் எம்.பியின் கூற்றுப்படி, கடந்த ஆறு ஆண்டுகளில், ராஜ்யசபாவில் விதி 267 ன் கீழ் விவாதத்திற்கான ஒவ்வொரு கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இப்படியே போனால் விதி 267 பயன் படுத்தப் படாமலே வழக்கொழிந்து போய் விடும்

பாராளுமன்றத்தை விவரம் தெரியாமல் மறைக்கலாம். ஆனால் மக்கள் மன்றத்திடம் மறைக்க முடியாது. இது தொடர்பாக சில உண்மைகளை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பல சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதி இந்தியாவுடையது என்பதை சீனா ஒப்புக் கொள்ளவில்லை.

டெப்சாங் சமவெளி மற்றும் டெம்சோக் சந்திப்பில் துருப்புக்களை வெளியேற்றுவது பற்றி விவாதிக்க சீனா மறுத்துவிட்டது. தி இந்துவின் கூற்றுப்படி, இந்த இரண்டு இடங்களிலும் சீன ராணுவம் LAC இன் இந்தியாவின் பக்கத்தில் உள்ளது.

கிழக்கு லடாக்கில் இருந்து அருணாச்சல பிரதேசம் வரை, சீனா தனது ராணுவ இருப்பு மற்றும் உள்கட்டமைப்பை பலப்படுத்தியுள்ளது (துருப்புக்கள், ஆயுதங்கள், சாலைகள், பாலங்கள், தகவல் தொடர்பு, ஹெலிபேடுகள் மற்றும் குடியிருப்புகள் கூட).

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் செய்திச் செயலர், சீனா “தொடர்ந்து படைகளைக் குவிப்பதையும், எல்ஏசியில் இராணுவ உள்கட்டமைப்பை உருவாக்குவதையும்” அமெரிக்கா கண்டதாக வெளிப்படுத்தினார்.

மேலும் இடையக மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு இடையக மண்டலம் என்றால், அந்த பகுதியில் இந்திய துருப்புக்கள் இனி ரோந்து செல்லமுடியாது (2020 க்கு முன்பு செய்தது போல). யாங்ட்சேயில் மற்றொரு இடையக மண்டலத்தை சீனா கோரும் என்று எதிர்பார்க்கலாம்.

நவம்பர் 2022 இல் பாலியில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டில் திரு மோடி சீன அதிபரை சந்தித்தார். இந்தோனேசிய பட்டுச் சட்டை அணிந்த இரு தலைவர்களும் கைகுலுக்கியதை வீடியோ கிளிப் காட்டுகிறது. திரு மோடி எதோ பேசினார். அதைக்கேட்டு திரு ஜி சிரிக்கவில்லை. முகம் சுளிக்கவும் வில்லை, இந்த சந்திப்பில் வெளிப்படையாக எந்த முக்கியத்துவம் எதுவும் இல்லை.

சீன முக்கியத்துவத்தை குறைக்க முடியாதா?

இதற்கிடையில், இந்தியா மீது சீனா காட்டும் விரோதப் போக்கையும் மீறி, இந்தியா சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதை விட நான்கு மடங்கு அதிகமாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. 2021-22 ல் வர்த்தகப் பற்றாக்குறை 73.31 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 174 சீன நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்துள்ளன. 3,560 இந்திய நிறுவனங்களின் வாரியங்களில் சீன இயக்குனர்கள் உள்ளனர். சீன தொடர்பை துண்டித்து விடுவோம் எனும் மோடியின் கூற்று காற்றில் பறந்துவிட்டது.

சீனா சீன செக்கர்ஸ் எனும் சதுரங்க விளையாட்டை விளையாடுகிறது. இது பகடை போன்ற திறமையற்ற விளையாட்டு அல்ல. சீன செக்கர்ஸில், ஒரு வீரர் முன்னோக்கி அல்லது பக்கவாட்டில் மட்டுமே செல்ல முடியும். இறுதியில் எதிராளியின் காயை வெட்டி விட்டு தன்னுடைய 12 காய்களை எதிரியின் இடத்தில் முக்கோண வடிவில் நிறுத்த வேண்டும். இதற்கு மதிநுட்பம் அவசியம்.

சீனா ஆடும் ஆட்டம் குறித்து அரசு இருட்டில் இருப்பதால், நாடாளுமன்றத்தையும், மக்களையும் இருட்டில் வைக்க முனைகிறது. அதனால்தான், பாலியில் திரு ஷி ஜின்பிங் இடம் மோடி என்ன சொன்னார் என்பது எங்களுக்குத் தெரியாது. இது குறித்து நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் இல்லை.

தமிழில்: த. வளவன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Opinion news download Indian Express Tamil App.

Web Title: P chidambaram writes playing chinese checkers tawang clash modi