Advertisment

 கொடூரமான யுத்தம் முடிவுக்கு வர வேண்டும்

யுத்தம் செய்வது என்பது நியாயமற்றது என்று இந்தியா ஏன் கூற முடியவில்லை? பொதுமக்கள் மீது குண்டுகள் பொழிவதையும் வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை அழிப்பதை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் இந்தியா ஏன் முறையிட முடியவில்லை?

author-image
WebDesk
New Update
This horrific war must end

ப சிதம்பரம்  



உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் பேரழிவுப் போரால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். இந்த செய்தியை  படிக்கும் போது  போர் தனது  32 நாட்களை கடந்திருக்கும். உலகெங்கும்  நடக்கும் நிகழ்வுகளில்  நான் ஆர்வம் காட்டத் தொடங்கிய போது நல்ல போப் ஆண்டவர் என அழைக்கப்படும்  போப் ஜான் XXIII உச்சரித்த  ஆறு வார்த்தைகள் என்னுள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த வார்த்தைகள்  இனி போர் வேண்டாம். ஒருபோதும் வேண்டாம் என்பதே.

Advertisment

உலகில் பலவிதமான  போர்கள் நடந்துள்ளன. பெரிய, சிறிய; குறுகிய, நீண்ட; சொந்த பிரதேசத்தின், எல்லையில், தொலைதூர நிலத்தில், யாருக்காகவோ  போர் என பல தரப்பட்ட போர்கள் நடந்துள்ளன.  இந்த 20/21 ஆம் நூற்றாண்டு போர்களில் இருந்து வெளிப்பட்ட ஒரு நிரந்தர  உண்மை என்னவென்றால், போரின் முடிவில் வெற்றியாளர் யாரும் இருக்க மாட்டார்கள். எந்தவொரு சீர்குலைந்த பிரச்சனைக்கும் போர் எந்த தீர்வையும் வழங்கவில்லை. வங்காள தேச விடுதலைக்கு காரணமான 1971 போரில் இந்தியா உறுதியான வெற்றியைப் பெற்றது. ஆனால் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இன்றும் பிராந்திய மோதல்கள் தொடர்கின்றன.  ஆப்கானிஸ்தானை விடுவிப்பதற்காக இரண்டு வல்லரசுகள் மாறி மாறி  போரிட்ட போதும்  அந்த நாடு  இன்றளவும்   தலிபான்களின் உறுதியான கட்டுப்பாட்டில் உள்ளது.

பானையும் அண்டாவும்  

கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்சி அதிகாரத்தை  30 ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா தூக்கி எறிந்ததாக சொல்லப்பட்டாலும்  ரஷ்யாவின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர் முன்னாள் சோவியத் யூனியனின்  கேஜிபி எனும் உளவு அமைப்பின் முக்கிய அதிகாரியான விளாடிமிர் புதின் தான்.  திரு விளாடிமிர் புடின் மே 2000 முதல் ரஷ்யாவின் அதிபராக, தனது அதிகாரங்களை பயன்படுத்தி வருகிறார்.  திரு புடினின் ஆட்சியின் கீழ் தான்  ரஷ்யா கிரிமியாவை  தன்னுடன் இணைத்துக்கொண்டது.  உக்ரைனின் டான்பாஸ் பகுதியின் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க்  போன்ற பகுதிகளை  தன்னாட்சி பெற்ற குடியரசுகளாகவும் அங்கீகரித்தது. ஜார்ஜியாவில் இருந்து  அப்காசியா மற்றும் தெற்கு ஒசேஷியா என இரண்டு பகுதிகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டது. உள்நாட்டுப் போரை அடக்க சிரியாவிற்கு ராணுவ உதவியை வழங்கியது.  இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போருக்கு  எதிராக இன்னும் யாரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. 

கடந்த 20 ஆண்டுகளில் ரஷ்யா செய்த அனைத்தையும் மேற்கத்திய நாடுகள் செய்துள்ளன. குறிப்பாக  அமெரிக்கா 20ஆம் நூற்றாண்டில் செய்தது  என்பதை நாம்  ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.  ஆட்சி மாற்றம் என்பது அமெரிக்க அதிபர்களின் விருப்பமான பொழுதுபோக்கு. மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டுவது, ராணுவ புரட்சிக்கு வித்திடுவது, அரசியல் படுகொலை செய்வது,  பொம்மை ஆட்சிகளை நிறுவுதல், பொருளாதார தடைகளை விதித்தல் என எதையும் அமெரிக்க விட்டு வைக்கவில்லை.  அமெரிக்கா நடத்திய மிகவும் வருந்தத்தக்க மற்றும் நியாயமற்ற செயல் என எடுத்துக்  கொண்டால் அது  போர்  வியட்நாம் மேல் படையெடுத்ததை சொல்லலாம். அடுத்ததாக,  2003ம் வருடம்  சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்கள் குவித்துள்ளார் என்ற அப்பட்டமான பொய்யை சொல்லி அமெரிக்கா ஈராக் மீதும்  படையெடுத்தது.

உண்மையே இல்லாத காரணங்கள்

உக்ரைன் நாட்டில் நடந்து கொண்டிருப்பது  நெஞ்சை உருக்கும் சோகம். ரஷ்யா-உக்ரைன் போர்  காரணம் உக்ரைன் நேட்டோ ராணுவ  ராணுவ உடன்படிக்கையை  வலியுறுத்தியது தான்.  அமெரிக்கா- ரஷ்யா இடையிலான  பனிப்போரின் முடிவில்  ஒருங்கிணைந்த ஜெர்மனி  உதயமானது. மேற்கு ஜெர்மனி நேட்டோவில் அங்கம் வகித்தது என்ற அடிப்படையில் இப்போதும்  ஜெர்மனி நேட்டோவில்  தொடர்கிறது. அப்போதைய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் பேக்கர் நேட்டோ 'ஜெர்மனிக்கு அப்பால் ஒரு அங்குலம் நகராது' என்று ரஷ்யாவிற்கு உறுதியளித்தார். ஜெர்மனியின் எல்லை ரஷ்யாவிலிருந்து 5,439 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. ஆனால்  1999 முதல் நேட்டோ 14 புதிய உறுப்பு நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது. இதனுடன்  ஜார்ஜியாவும், உக்ரைனும்  சேர்ந்தால் 30 உறுப்பினர்களைக் கொண்டதாக நேட்டோ விரிவடையும் என்பதால் நேட்டோவும்  இவர்களது கோரிக்கைக்கு செவி சாய்த்தது. இதையடுத்தே  ரஷ்யா  உக்ரைனுக்கு எதிராக திரும்பியது. இரண்டு நாடுகளும் நேட்டோவில் இணைந்தால், ரஷ்யா தனது எல்லையை தாண்டி  நகர்ந்தால் அடுத்து  நோக்குவது நேட்டோ நாடுகளாகவே இருக்கும். ஜேர்மனிக்கு  அடுத்து எந்த நாட்டையும் நேட்டோ அமைப்பில் சேர்க்க மாட்டோம் என முதலில் நேட்டோ வாக்குறுதி தந்ததை மீறியதே  அனைத்தும் காரணம்.  

ரஷ்யா தனது பாதுகாப்பைப் பற்றி உண்மையிலேயே அக்கறை கொண்டுள்ளது. ரஷ்யாவின் அச்சத்தை போக்க  அமெரிக்காவோ  பிற நேட்டோ நாடுகளோ எந்த  நம்பகமான உத்தரவாதம் எதையும் அளிக்கவில்லை. ஆனால் ரஷ்யா  கிழித்த சிவப்புக் கோடுகளையும்  யாரும் கடக்கவில்லை. உண்மையில், ரஷ்யா கிரிமியாவை (உக்ரைனின் ஒரு பகுதியாக இருந்தது) இணைத்த போதும் சரி ஜார்ஜியாவின் இரண்டு பகுதிகளை தம்முடன் இணைத்துக் கொண்ட போதும் சரி அமெரிக்காவும் நேட்டோ நாடுகளும் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. அமைதியாக ஒப்புக்கொண்டன.  இந்த நிலையில் உக்ரைனுக்கு எதிராக போரை தொடங்க ரஷ்யாவுக்கு எந்த  அடிப்படை முகாந்திரமும்  இல்லை.  

போரினால் உக்ரைனில் ஏற்பட்ட பேரழிவின் அளவு பயங்கரமானது. உக்ரைனின் 44 மில்லியன் மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 3.5 மில்லியன் மக்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் மேலும்  குழந்தைகள் உட்பட 6.5 மில்லியன்  மக்கள்  தங்கள் வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். நகரங்கள் அழிக்கப்பட்டன; மரியுபோல் துறைமுக நகரம் இடிந்து தரைமட்டமானது. உணவு, தண்ணீர், மருந்து இன்றி லட்சக்கணக்கானோர் தவிக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இன்னும், உக்ரைன்  அதிபர் மற்றும் மக்கள் ரஷ்யாவிடம் சரணடைய தயாராக இல்லை.  இந்த யுத்தம் முடிவடையும் போது யாரும் வெற்றியாளராக வாகை சூடப்  போவதில்லை. ரஷ்யா ஒரு வெற்றியாளராகவும்  இருக்கப்  போவதில்லை.  ரஷ்யாவால்  ஒரு போதும் உக்ரைனை தன்னுடன் இணைத்துக் கொள்ள முடியாது.  மாறாக, ரஷ்யா  பல எதிரி நாடுகளை  சம்பாதித்திருக்கும்,  ரஷ்யா  ஆயிரக்கணக்கான இளம் வீரர்களையும் பில்லியன் கணக்கான  ரூபிள் மதிப்பிலான ராணுவ  தளவாடங்களை  இழந்திருக்கும். பல இளம் மற்றும் திறமையான ரஷ்யர்கள் அமைதியாக நாட்டை விட்டு வெளியேறி இருப்பார்கள் மேலும்  அதன் பொருளாதாரம் முடக்கப்படும். ரஷ்யா பாதுகாப்பையும் மரியாதையையும் பெறாது.

குறைக்கப்பட்ட இந்தியா

ஒரு இந்தியனாக நான் இந்த பிரச்னையை நினைக்கும் போது  என்னால் ஏதும் செய்ய முடியாது என உணர்கிறேன்.  இந்திய அரசின் கொள்கை பற்றி எனக்கு எதுவும் தெரியாது. எனது பார்வையில் எந்த வாதமும் போரை நியாயப்படுத்த முடியாது.  இந்திய  வெளிவிவகார அமைச்சர்  போர் தொடர்பாக  ஆறு கோட்பாடுகளை கோடிட்டு காட்டியிருக்கிறார்.  குடிமக்கள் மீது குண்டுகளை பொழிவதையும் வீடுகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளை அழிப்பதையும் நிறுத்துமாறு ஏன் இந்தியா ரஷ்யாவிடம் முறையிட முடியவில்லை?. இந்திய பிரதமர் ஏன் மாஸ்கோவிற்கும்,  கிவ் நகருக்கும்  பயணம் செய்து போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை  செய்ய முடியவில்லை?  இஸ்ரேல் பிரதமரை  போல ஏன் துணிச்சலாக செயல்பட முடியவில்லை? முயற்சி செய்ய முடியாத அளவிற்கு இந்தியாவை முடக்கியது எது?  

இந்த கட்டுரை இந்திய வெளியுறவு கொள்கை குறித்த ஆய்வுக்கட்டுரை இல்லை. சில தெளிவான அரசியல் விமர்சர்கள் உடன் பேசிய போது எனக்குள் ஏற்பட்ட சிந்தனை தான்.  நியாயப்படுத்த முடியாத இடங்களில் மெளனமாக இருப்பதும், போரை நிறுத்தக் கோரும் சர்வதேச அரங்கின் தீர்மானங்களில் பங்கேற்று வாக்களிக்காமல் இருப்பதும் இந்தியாவின் மதிப்பு, மரியாதையை குறைத்து விட்டது.

தமிழில் : த. வளவன் 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment