Advertisment

பிளவுபட்ட இரு  ஜனநாயகங்கள்!

ப சிதம்பரம்: கருக்கலைப்பு செய்வதற்கான உரிமையை தனியுரிமையாகவும், வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான உரிமையாகவும் இந்திய உச்ச நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இந்தியாவில், கர்ப்ப காலத்தின் 24 வாரங்கள் வரை கர்ப்பத்தை மருத்துவ ரீதியாக கலைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பின்னர் தேவைப்பட்டால் இரு மருத்துவர்களின் கருத்துக்களை பெற்ற பிறகு முடிவெடுக்கலாம். இதை சட்டம் அனுமதிக்கிறது.

author-image
WebDesk
New Update
P Chidambaram writes

P Chidambaram writes: Two divided democracies

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பியூ ஆராய்ச்சி மையம்  இந்த ஆண்டு மார்ச் 7 முதல் மார்ச் 13 வரையில் நடத்திய ஆய்வில், 61 சதவீத அமெரிக்கர்கள்  கருக்கலைப்பை சட்டபூர்வமாக அனுமதிக்க வேண்டும் என்றும்  37 சதவீதம் பேர் கருக்கலைப்பை அனுமதிக்க கூடாது என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.  இந்த கருத்து வேறுபாடு  அரசியல் ரீதியாகவும் உள்ளது: ஜனநாயகக் கட்சியினரும் ஜனநாயகக் கட்சி சார்பான சுயேட்சைகளும் கருக்கலைப்பை ஆதரிக்கின்றனர் (80 சதவீதம்), குடியரசுக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சி சார்பான சுயேச்சைகள் கருக்கலைப்பை எதிர்க்கின்றனர் (38 சதவீதம்). இந்த இடைவெளி 2016ல் இருந்து 33 புள்ளிகளில் இருந்து 42 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

Advertisment

இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும் அமெரிக்க அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்கிறதோ அதுவே சரி என்று  அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருதுகிறார்கள். அமெரிக்காவின் நீண்ட காலம் தலைமை நீதிபதியாக இருக்கும்  ஜான் மார்ஷல் கூற்றுப்படி சட்டம் என்னவோ அதை அப்படியே சொல்வது தான் உச்ச நீதிமன்றத்தின் கடமை. இது தான் அமெரிக்காவை பொறுத்த வரையில் புனிதமானது என்று கூறியிருக்கிறார். 

1973ம் ஆண்டு நடந்த ரோ எதிர் வேட் வழக்கில் அமெரிக்க உச்ச நீதிமன்றம், கருக்கலைப்பு செய்வதற்கான உரிமை குடிமக்களுக்கு வழங்கும் அடிப்படை சுதந்திர உரிமைகளின் ஒரு பகுதி தான் என்று குறிப்பிட்டது. இந்த  14 வது சட்டத் திருத்தத்தில் இடம்பெற்றுள்ள  நடைமுறை  இந்த உரிமையை அளிக்கிறது என்றும்  தீர்ப்பளித்தது. இருபது ஆண்டுகளுக்கு பிறகு இன்னொரு  இதே மாதிரியான வழக்கிலும் ‘ரோ எதிர் வேட்’ வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை உறுதிப்படுத்தி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புகளால் பெற்ற கருக்கலைப்பு உரிமையுடன்  தான்  மூன்று தலைமுறை அமெரிக்கப் பெண்கள் வாழ்கின்றனர்.  

இந்த ஆண்டு ஜூன் 24இல் ‘தோப்ஸ் எதிர் ஜாக்சன் மகளிர் சுகாதார அமைப்பு’ வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் அமர்வில் இடம்பெற்ற நீதிபதிகளில் பெரும்பான்மையினர்  கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை  என்று தீர்ப்பளித்தனர். ஐந்து பேர் கூடாது என்றும் மூன்று பேர் அனுமதிக்கலாம் என்றும்   தீர்ப்பளித்தனர். ‘ரோ எதிர் வேட்’ வழக்கில், அரசமைப்புச் சட்டம் அளிக்கும் தனிப்பட்ட உரிமைக்கு, அதிர்ச்சியளிக்கும் வகையில் விளக்கம் தந்து முன்னர் நீதிபதிகள்  தீர்ப்பளித்துள்ளனர் என்றும் இந்த அமர்வு கருத்து தெரிவித்தது.  இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மக்களிடத்தில் விடப்படுவது சரிதான் என்று முதல் கண்ணோட்டத்தில் தோன்றும். ஆனால், இங்கே ‘மக்கள்’ என்பது நாம் நினைப்பது போல அதிகப்படியான  மக்களைக் குறிக்கவில்லை. வாக்களிக்கும் உரிமை கொண்ட  வயதுவந்த அமெரிக்க வாக்காளர்களையும் இது குறிக்கவில்லை. அப்படி இருந்தால் ரோ, கேசி ஆகியோருக்கு ஆதரவாகவே பெருவாரியான மக்கள் ஆதரவைத் தெரிவித்து இருப்பர். இங்கே ‘மக்கள்’ என்பது அமெரிக்காவின் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும்  அவர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என்றால், வெவ்வேறு வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்ட சிறியதும் பெரியதுமான தொகுதிகளை  சேர்ந்தவர்களையே  குறிப்பதாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆட்சியாளர்கள் தொகுதிகளை மறுசீரமைப்பு செய்தாலும் அங்கிருந்து தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளுக்கு இதில் உரிமை உண்டு என்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகும். 

 பல்வேறு  உரிமைகளுக்கு ஆபத்து

அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்கு (12.04.1861 - 09.04.1865) பிறகு அமெரிக்கா இந்த அளவுக்கு எந்த ஒரு விஷயத்திலும் இப்படி பிளவுபட்டதில்லை.  கருக்கலைப்பு செல்லாது என்று தடை விதிக்கும் சட்டத்தை அமெரிக்காவின் 50 மாநிலங்களில் சரி பாதி மாநிலங்கள் ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஞ்சிய மாநிலங்கள், கருத்தரித்து ஆறு மாத காலம் வரையில் கருவைக் கலைக்கலாம் என்பதை அனுமதிக்கக்கூடும். உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பால் லட்சக்கணக்கான அமெரிக்கப் பெண்கள் தாங்கள்  திட்டமிடாத சமயத்திலோ அல்லது கரு வேண்டாம் என்ற   நிலையிலோ கருத்தரித்தால் அதைக் கலைக்கும் உரிமையை இழந்து விடுவார்கள்.  வல்லுறவு கொண்டதால் உருவான  குழந்தையை, முறையற்ற நெருங்கிய உறவினரால் ஏற்பட்ட கருவை, குழந்தையைப் பெற்றுக்கொள்ளவும் வளர்க்கவும் போதிய பொருளாதார வசதிகளற்ற தாயின் குழந்தையை, எவரிடமிருந்தும் அன்பையும் அரவணைப்பையும் பெற முடியாத குழந்தையையும் கருவிலேயே கலைக்கக்கூடிய வாய்ப்புகள் இனி மறுக்கப்படும்.  அமெரிக்க அரசமைப்புச் சட்டம் கருக்கலைப்பு குறித்து நேரடியாக எதையும் கூறவில்லை என்ற வாதத்தின் அடிப்படையில் உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு மோசமான குறைபாடுகளைக் கொண்டுள்ளது. சட்ட  வல்லுநர்களுக்கு  இது மிகப் பெரிய அதிர்ச்சியையும் அளித்துள்ளது. கருக்கலைக்கும் உரிமை இந்த நாட்டின் பாரம்பரிய வரலாற்றிலும் மரபிலும் இருந்தது  அல்ல என்றும் நீதிமன்றம்  தனது தீர்ப்பில் சொல்லியுள்ளது. 

அரசியலமைப்பு  சட்டப்படி   சொல்லப்படுவதே  சட்டமானால்  அமெரிக்கர்களுக்கு  இந்த நூற்றாண்டு  அளிக்கும்  பல உரிமைகள் இனி மறுக்கப்படும். உதாரணமாக அந்தரங்க உரிமை’ பற்றி அமெரிக்க அரசியலமைப்பு  சட்டம் எதையும் நேரடியாக கூறவில்லை. கருத்தடை சாதனங்களை பயன்படுத்துவது குறித்து கூட  ஏதும் கூறப்படவில்லை. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வது இனி தண்டனைக்குரிய குற்றமாகும்.   இப்படி ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டே போகலாம்.  தோப்ஸ் வழக்கின் தீர்ப்பை நான் படித்த வரையில், கருக்கலைப்பை கட்டுப்படுத்தும் அதிகாரம் மக்களிடமே விடுவது என்பதற்கு, குழந்தை பிறக்கட்டும், அதைக் கலைக்க வேண்டாம் கலைக்காதே என்று எந்தத் தாயையும் கட்டாயப்படுத்தும் உரிமையை மாநிலங்களுக்கு அது வழங்கியிருப்பதாக கருதவில்லை. அந்தந்த மாநில எல்லைக்குள் வாழும் மக்களுக்கு மட்டுமே கருக்கலைப்புச் சட்டம் பொருந்தும். இந்தச் சட்டத்துக்கு எல்லை கடந்து பிற மாநிலங்களிலும் தடை செய்யும் அதிகாரமில்லை. கருவைக் கலைக்க விரும்பும் பெண், அதை அனுமதிக்கும் பிற அமெரிக்க மாகாணங்களுக்கு  சென்று கருவை கலைக்கலாம். இப்படிக் கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்ணின் போக்குவரத்து மற்றும் இதர செலவுகளுக்கு  பெடரல் அரசு அல்லது ஏதேனும் அறக்கட்டளை அமைப்பு பண உதவி செய்யலாம். தோப்ஸ் வழக்கின் தீர்ப்பில் சொல்லப்பட்ட தீர்ப்பில் உள்ள பெரிய குறைபாடு என்னவென்றால் குடிமக்களின் உரிமையை விட, மாநிலத்தின் உரிமையே பெரிது என்று அதற்கு முன்னுரிமை தரப்பட்டது தான். தனிப்பட்ட முறையில் வயிற்றில் வளரும் வேண்டாத கரு என்பது தனிப்பட்ட நபருக்கு மிகவும் கவலையளிப்பது மட்டுமல்ல. மனதுக்கு மிகவும் நெருக்கமானதும் அல்ல.

பிளவான  நாடுகள்

அதிஷ்டவசமாக  இந்திய உச்ச நீதிமன்றம் கருக்கலைப்பு உரிமையை  அந்தரங்க உரிமையாக மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை உரிமை, சுதந்திரம் என்று கருதி சரியாக தீர்ப்பளித்திருக்கிறது. இந்தியாவில் கர்ப்பகால வயதுள்ள பெண்ணுக்கு கரு வளர்ந்து 24 வாரங்கள் வரையில் அதைக் கலைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு அவசியம் என்ற நிலை ஏற்பட்டால், இரண்டு மருத்துவர்களின் கருத்துகளைப் பெற்ற பின்  முடிவெடுக்க வேண்டும். இனியும் கரு வளர்ந்தால் அது கருவைச் சுமக்கும் பெண்ணுடைய உடல் அல்லது மன நலனை மிகவும் பாதித்து விடும் என்பது  தெரிந்த பிறகே கருக்கலைப்பை அனுமதிக்கலாம் என்ற நிலை இன்று உள்ளது.  கருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்க அனுமதித்த பிறகே அமெரிக்க இளம் பெண்கள் படிப்பைத் தொடரவும் வேலையில் கவனம் செலுத்தவும் முடிந்திருப்பது  பல்வேறு  ஆய்வுகளில் தெரியவந்திருக்கிறது. தோப் வழக்கின் தீர்ப்பானது அமெரிக்காவில் பிளவை ஏற்படுத்தியுள்ளது.  இந்தியாவும் பிளவுடன் தான் உள்ளது.  சாதி, மதம், மொழி, பாலினம் ஆகியவற்றால் பல்வேறு பிரிவுகளை கொண்டிருக்கும்  இந்திய சமுதாயம்   பாரதிய ஜனதா கட்சியின் இனவாதக்  கொள்கைகளாலும் மையவாதம் கொள்கைகளாலும் மேலும் பிளவுபட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால், இதைப் பற்றி தனிக் கட்டுரை மட்டுமே  படைக்க வேண்டும்.

உலகின் மிகப் பெரிய இரண்டு ஜனநாயக நாடுகளான இந்தியா  மற்றும் அமெரிக்கா  இப்படிப் பிளவுபடும் என்று நீங்கள் எப்போதாவது கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா?

தமிழில் : த. வளவன்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

P Chidambaram 2
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment