Advertisment

ஆளுநரின் முதலமைச்சர் ஆசை: ப சிதம்பரம்  

உண்மையில் சொல்லப்போனால் அவர் சொல்கிறபடியெல்லாம் நடக்கப் போவதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை எதிர்ப்போரின் எண்ணிக்கை அதாவது முதல்வரிடம் அதிகாரத்தை காண்பிக்க விரும்பும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

author-image
WebDesk
New Update
ஆளுநரின் முதலமைச்சர் ஆசை: ப சிதம்பரம்  

இங்கிலாந்தில் உள்ள மன்னரைப் போலவே, ஒரு மாநில ஆளுநருக்கும் உண்மையான அதிகாரங்கள் இல்லை. அரசியலமைப்புச் சட்டத்தின் படி அவர் செய்ய வேண்டிய விஷயங்களில் மட்டுமே அவர் தனது விருப்பப்படி செயல்படலாம். ஆனால் அவர்கள் முதல்வர் ஆக விரும்புகிறார்கள்.
 
இந்தியாவில் 28 மாநிலங்கள் உள்ளன. புதுச்சேரி மற்றும் டெல்லி ஆகிய இரண்டும்  யூனியன் பிரதேசங்களாக இருந்தாலும் இங்கு பிற மாநிலங்களை போல  சட்டமன்றம் உண்டு.  ஜம்மு & காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் வரை ஒரே மாநிலமாக இருந்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும்  சம்பிரதாயமாக ஒரு ஆளுநர்  தலைமை வகிக்கிறார்.

மாநில சட்டப்பேரவைக்கு பொதுத்  தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.  மாநில சட்டப்பேரவை உறுப்பினர்கள் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். பெரும்பான்மை பெற்ற  கட்சியின் தலைவர் அரசாங்கத்தை அமைக்க அழைக்கப்பட்டு அவர் முதலமைச்சராக பதவியேற்பார். அவரே முதல்வர். மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். முதல்வரின் ஆலோசனையின் பேரில் அமைச்சர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.  இதை இங்கிலாந்தின்  வெஸ்ட்மின்ஸ்டர் நாடாளுமன்ற மாதிரி என்று அழைக்கின்றனர். இதை தான் இந்தியாவிலும் கடைப்பிடிக்கின்றனர். இதில் சில பிறழ்வுகள் இருந்தாலும் அவை உடனுக்குடன் சரி செய்யப்பட்டு விடும்.  

ஒரே  அரசு

அதே நேரத்தில்  வெஸ்ட்மின்ஸ்டர் முறையை விரும்பாதவர்களும் இருக்கிறார்கள்.தெளிவாக சொல்வதாக இருந்தால்  அவர்கள் மாநிலங்களை விரும்பவில்லை.  தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றங்களை விரும்புவதில்லை.  அவர்களுக்கு முதல்வர்களையும் பிடிக்காது. மொத்தத்தில், அவர்கள் மாநில அரசுகளை அகற்ற விரும்புகிறார்கள். 1,426 மில்லியன் மக்களைக் கொண்ட சீனாவை ஒரே ஒரு அரசு ஆள முடியும்  என்றால், 1,412 மில்லியன் மக்களைக் கொண்ட இந்தியாவை ஒரே  அரசு  ஏன் ஆள முடியாது என நினைக்கிறார்கள். வெஸ்ட்மின்ஸ்டர் மாதிரியை விரும்பாதவர்கள் எண்ணிக்கை  அதிகரித்துக்கொண்டே வருகிறது. அவர்களில் சிலர் மாநில ஆளுநர்களாகவும் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள்.  

ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கு  சம்பிரதாயமான தலைவராக மட்டுமே இருக்கிறார். இங்கிலாந்தில்  மன்னர்  அரசுக்கு சம்பிரதாயமான தலைவராக இருப்பது போல. அதாவது அவரது  பெயரில் அரசாங்கம் இயங்குகிறது. அரசியலமைப்பு சட்டம்  ஆளுநரின் அதிகாரங்களை  பிரிவு 163 ன் கீழ் பின் வருமாறு விளக்குகிறது.

அரசியலமைப்புச் சட்டத்தின் படி  மாநிலத்தில் ஒரு அமைச்சரவை இருக்கும். அதன் தலைவராக முதலமைச்சர் இருப்பார். ஆளுநர் தனது கடமைகளை மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி நிறைவேற்ற வேண்டும்..  அரசியலமைப்பு சட்டப் படியான கடமைகளை மட்டுமே ஆளுநர் நிறைவேற்ற வேண்டும்.

அரசியலமைப்பு சட்டம் நேரடியாகவும் எளிமையாகவும்  ஆளுநரின் கடமைகளை சொல்லி உள்ளது. பிரிவு 163 ன் படி இங்கிலாந்தின் அரசரைப் போலவே  ஆளுநருக்கும் உண்மையான அதிகாரம் கிடையாது.  அரசியலமைப்புச் சட்டத்தின் படி குறிப்பிட்ட சில விஷயங்களில் மட்டும் தான்   அவர் தனது விருப்பப்படி செயல்பட முடியும்.  இருப்பினும் இதிலும் சிலர் சந்தேகப்பட்டு சிலர் விளக்கம் கேட்பார்கள். இதற்கு உதாரணமாக சம்ஷேர் சிங் vs பஞ்சாப் மாநிலம் என்ற  வழக்கில்  நீதிபதி கிருஷ்ண ஐயர்  விளக்கமாக தீர்ப்பளித்திருக்கிறார். அந்த தீர்ப்பின் படி  ஜனாதிபதியும் ஆளுநரும்,  ஒரு சில நன்கு அறியப்பட்ட விதிவிலக்கான சூழ்நிலைகளில் அமைச்சர்களின் ஆலோசனையின் பேரில் மட்டுமே தங்கள் முறையான அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும்.என்று சொல்லப்பட்டிருக்கிறது.

கடக்கப் படும்  வரம்புகள்

ஆனாலும் முதல்வர்களை  தங்களுக்கு கீழானவர்களாக கருதி அதிகாரம் செய்யும்  ஆளுநர்களும் இருக்கின்றனர். அவர்களை  அதிக அதிகாரம் படைத்த  முதல்வர்களாக விரும்புகிறார்கள். ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு ஆளுநரின் ஒப்புதல் தேவை. அரசியலமைப்பு சட்டத்தின்  200 வது பிரிவின் படி  ஆளுநர் ஒப்புதல் அளிக்கலாம் அல்லது ஒப்புதலை நிறுத்தலாம் அல்லது குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.  ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்படாமல் இருந்தால், அந்த மசோதா மறுபரிசீலனைக்காக மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். திருத்தங்களுடனோ அல்லது இல்லாமலோ இந்த மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டால், ஆளுநர் தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்று தெளிவாக சொல்கிறது அரசியலமைப்பு சட்டம்.  சில ஆளுநர்கள் தமக்கு அனுப்பப்படும் மசோதாவை அப்படியே கிடப்பில் போட்டு விடுவார்கள்.  பரிசீலனையில் இருக்கிறது என்று கூறியே காலதாமதம் செய்வார்கள்.  ஒரு  ஆளுநர்  ஒரு மசோதாவை எத்தனை முறை படித்து பரிசீலிப்பார்? அவர் மசோதாக்களை  படித்து புரிந்து கொள்ள இயலவில்லை என்றால், அவர் தனது இயலாமையை காரணம் காட்டி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

ஆளுநர்கள் மாநில அரசுகளுடன் முரண்படுகிறார்கள். புதிய கல்விக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை என்று அழைக்கப்படுவதை எதிர்க்கும் மாநில அரசு உள்ளது. மாநில ஆளுநர் மாநில அரசாங்கத்துடன் முரண்பட்டு அதற்கு எதிரான கருத்துக்களை தெரிவிக்கிறார். இப்படி எதற்கெடுத்தாலும் முரண்பாட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த மாநில ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று அந்த மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநில அரசு வாயிலாக   ஆளுநரை திரும்ப அழைத்துக் கொள்ள குடியரசுத் தலைவரிடம் கையெழுத்திட்ட மனுவை அளித்தனர்.

மாநில ஆளுநர்கள் மாநில மக்களின் உணர்வுகளுக்கு  புறம்பான மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களை கூறுகின்றனர். ஒரு ஆளுநர் சத்ரபதி சிவாஜி  கடந்த காலத்தில் மக்களால் மதிக்கப் பட்ட தலைவர் என்று கூறினார். இதைக் கேட்டு ஒட்டுமொத்த மாநிலமும் கொந்தளித்து எழுந்தது.  ஆளுநருக்கும் ஒன்றிய அரசுக்குக்கும் ஆதரவு போக்குள்ள அதே மாநில ஆளுங்கட்சி கூட  அவரை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியது.

மாநில ஆளுநர்கள் மக்களால் விரும்பப் படாத  கருத்துக்களை கூறுகின்றனர். முதலமைச்சரைப் பற்றி ஆளுநர் ஒருவர் கூறுகையில் தமது உறவினரை  துணை வேந்தராக நியமிக்க முதல்வர் அலுவலகத்தில் இருந்து நெருக்கடி தந்தது கூட அந்த  மாநில முதல்வருக்கு தெரியாது என்றால் அந்த முதல்வர் திறமையற்றவர் என்பது என்பது வெளிப்படுகிறது. அப்படி தெரிந்திருந்தால் அந்த குற்றத்துக்கு அவரும் உடந்தை தானே என்று ஆளுநர் சொல்கிறார்.அதே ஆளுநர் தெரிவித்த இன்னொரு கருத்தும் சர்ச்சைக்குள்ளானது. இதே ஆளுநர், முதலமைச்சரின் கடந்தகால அரசியல் சாதனைகள் பற்றி தனக்குத் தெரியும் என்றும், ஒரு சந்தர்ப்பத்தில் அதே  முதல்வர் முன்னதாக ஒரு சந்தர்ப்பத்தில் சிறுநீர் கழித்ததால் தனது உடையையே  மாற்ற்ற வேண்டியது  வந்தது என கடந்த காலத்தை நினைவு படுத்தி பேசியிருக்கிறார்.  மாநில முதல்வர்களின் கருத்துக்களை எதிர்க்கும் அரசியலை கட்சி தலைவர்களை வரவேற்கும் ஆளுநர்கள் பாராட்டப் படுகிறார்கள். பாதுகாவலர் என்ற பட்டப் பெயரும் சூட்டப்படுகிறது. அதே நேரத்தில் நேர்மையாக நடக்கும் ஆளுநர்கள் வெளியேற்றப் படுகிறார்கள்.

 அதிகார  நமைச்சல்

கவர்னர்கள் ஏன் முதல்வர்கள் போலவே  நடந்து கொள்கிறார்கள்? புகழ்பெற்ற பொருளாதார நிபுணரும், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மற்றும்  ஒரு மாநில ஆளுநருமான  டாக்டர் சி ரங்கராஜன், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஃபோர்ஸ் இன் தி ரோட் புத்தகத்தில் இந்த பிரச்சனை பற்றி விளக்கியுள்ளார்.  

முழுமையான அரசியல்வாதிகள்  ஆளுநர்களாக நியமிக்கப்பட்டால் தங்கள் சேராத கட்சியை சேர்ந்த முதல்வர்களை கையாள்வதில்  சிக்கல் ஏற்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வர்களும் தொடர்ந்து சிரமம் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்.இதன் விளைவாக தான் மோதல்கள் நடைபெறுகின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒரு மாநிலத்துக்கு இரண்டு அதிகார மையங்கள் குறித்து சிந்திக்க வில்லை.மேலும் ஆளுநர்களாக நியமிக்கப்படுபவர்கள் ஏற்கனவே  பொறுப்பான பதவியில் இருந்தவர்கள். அதிகாரம் செய்து பழக்கப் பட்டவர்கள். எனவே எங்காவது அதிகாரம் செய்ய வேண்டும் என்ற அதிகார நமைச்சல் இருந்து கொண்டே இருக்கும்.  இந்த  போக்கை கட்டுப் படுத்திக் கொள்ள அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தெளிவாக சொல்லியுள்ளார் ரங்கராஜன்.  

உண்மையில் சொல்லப்போனால் அவர் சொல்கிறபடியெல்லாம் நடக்கப் போவதில்லை. இதற்கு முக்கிய காரணம் வெஸ்ட்மின்ஸ்டர் முறையை எதிர்ப்போரின் எண்ணிக்கை அதாவது முதல்வரிடம் அதிகாரத்தை  காண்பிக்க விரும்பும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. 

Advertisment

தமிழில் :த. வளவன் 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment