People of Uttar Pradesh : உத்தரப்பிரதேச மாநில தேர்தல் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாடி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே நடக்கும் இருமுனை போட்டியாக சிலர் சித்தரிக்கின்றனர். இது திரு அமித்ஷா மற்றும் திருமதி மாயாவதி இடையே நடைபெற்ற கனிவான பேச்சு வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனது கொடியையும் சின்னத்தையும் முன்னிறுத்தி துணிச்சலாக தேர்தலை சந்திக்கிறது.
ஒரு மாநிலம் தோல்வியுற்ற மாநிலம் என்றால் அதன் வளர்ச்சியை முதலில் வரையறுக்க வேண்டும். நான் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித வளர்ச்சி குறிகாட்டிகளாக முதலில் எடுத்துக் கொள்ளலாம். மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி விகிதம் ( GSDP ) தனிநபர் வருமானம் மற்றும் மாநிலத்தின் கடன் சுமை ஆகிய புள்ளி விபரங்களுடன் தான் அதை ஆரம்பிக்க முடியும். சுகாதாரம் மற்றும் கல்வி பற்றிய அதிகாரப்பூர்வ கணக்கெடுப்புகளையும் இத்துடன் இணைக்க வேண்டும். மேலும் குற்றம், வேலையின்மை மற்றும் இடப்பெயர்வு பற்றிய புள்ளி விவரங்களையும் சேர்த்து அவற்றின் கூட்டுத்தொகை உங்களுக்கு ரசிக்க வில்லை என்றால் மட்டுமே இந்த மாநிலத்தை ஒரு தோல்வியுற்ற மாநிலமாக எடுத்துக் கருத வேண்டும்.
தளர்ச்சியில் பொருளாதாரம் உ.பி.யில் கடைசியாக 1980-1989 ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. கடந்த 32 ஆண்டுகளில், மாநிலத்தில் பாஜக , எஸ்பி மற்றும் பி எஸ் பி ஆகிய மூன்று கட்சிகள் ஆட்சி செய்துள்ளன. மாநிலத்தின் நல்லது கெட்டதுக்கு அவர்கள் பொறுப்பேற்க வேண்டும். திரு ஆதித்யநாத் (பாஜக) மார்ச் 2017 மார்ச் முதல் முதல்வராக இருக்கிறார்.
ஒரு ஆட்சியை பற்றி கணிக்க வேலை, நல்வாழ்வு மற்றும் செல்வச் செழிப்பு ஆகிய மூன்றையும் நான் ஒரு செயல்திறன் சோதனையாக சொல்வேன். உத்தரப்பிரதேசத்தை பேரியல் பொருளாதார சோதனைக்கு உட்படுத்துவோம். அகில இந்திய அளவில் திரு ஆதித்யநாத் ஆட்சியின் பொருளாதாரம் சரிந்து கொண்டே வருவதை பார்க்கலாம். பொருளாதார வளர்ச்சி விகிதம் ( GSDP ) படிப்படியாக குறைந்துள்ளது.
உ.பி.யின் தனிநபர் வருமானம் இந்தியாவின் சராசரி வருவாயில் பாதிக்கும் குறைவு. 2017-18 மற்றும் 2020-21 க்கு இடையில், தனிநபர் வருமானம் 1.9 சதவீதமாக குறைந்துள்ளது. அந்த நான்கு ஆண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை மேலும் 40 சதவீதம் அதிகரித்தது. 2021 மார்ச் மாத முடிவதற்குள் மொத்தக் கடன் ரூ.6,62,891 கோடியாக உருவெடுத்தது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 34.2 சதவீதம். நிதி ஆயோக்கின் பல பரிமாண வறுமை குறியீட்டு எண் (NITI ) 2021 இன் படி, மாநிலத்தின் 37.9 சதவீத மக்கள் ஏழைகள். இது 12 மாவட்டங்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமாகவும், மூன்று மாவட்டங்களில் 70 சதவீதமாகவும் உள்ளது. இந்த புள்ளிவிவரங்கள் ஒருவரின் முகத்தில் அறைவது போல இருக்கிறது. உ.பி. ஒரு ஏழை மாநிலம். அதன் மக்கள் ஏழைகள். அவர்கள் திரு. ஆதித்யநாத்தின் அரசாங்கத்தின் கீழ் மேலும் ஏழைகளாகி விட்டனர்.
திறனற்ற அரசு
இந்த ஆட்சியில் இளைஞர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு வேலையின்மை விகிதம் நாட்டிலேயே மிக அதிகம். ஏப்ரல் 2018 முதல், 15 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. இது அந்த வயதினருக்கான அகில இந்திய விகிதத்தை விட அதிகம். 15 முதல் 29 வயதுடைய பெண்களில், ஜூலை-செப்டம்பர் 2020 இல் வேலையின்மை விகிதம் 40.8 சதவீதமாக இருந்தது. ஏப்ரல் 2018-மார்ச் 2021 க்கான தொழிலாளர் விகிதாச்சார கணக்கீட்டின் (PLFS) புள்ளி விபரங்களின் படி நகர்ப்புறங்களில் நான்கு இளைஞர்களில் ஒருவர் வேலை இல்லாமல் இருக்கிறார்.
இதன் விளைவாக மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்வது இங்கு மிக அதிகமாக நடந்தது. சுமார் 12.32 மில்லியன் அதாவது 1.2 கோடி மக்கள் உத்தரப்பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்தனர். மொத்த மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 16 பேரில் ஒருவர் வேலைக்காக மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்திருக்கிறார். மார்ச் 25, 2020 அன்று நாடு தழுவிய பொது முடக்கத்திற்கு பிறகு உ.பி மற்றும் பீகாரில் வசித்த லட்சக்கணக்கானோர் பசியுடன் இடம் பெயர்ந்தது பரிதாபம். அவர்கள் நடந்து சென்றது ஒரு திகில் படம் பார்ப்பது போலவே நிழலாடியது.
மோசமான ஆட்சியில் இருக்கும் ஏழை மாநிலமாக இருப்பதால் சமூக நலன் குறித்த நிலை இங்கு படுமோசமாக இருக்கிறது. உத்தரப்பிரதேச மாநிலம் தனிநபர் கல்விக்காக மிகக் குறைந்த தொகையை செலவிடுகிறது. மாணவர்-ஆசிரியர் விகிதம் நாட்டிலேயே மிக அதிகம். இந்த பற்றாக்குறையை சமாளிக்க 2,77,000 ஆசிரியர்கள் தேவை. 2021 வெளிவந்த ஒரு அறிக்கையின் படி பள்ளி செல்லும் மாணவர்களில் 38.7 சதவீதம் பேர் மட்டுமே தனிப் பயிற்சி நிலையங்களில் தனியாக கல்வி கற்கிறார்கள், இது அவர்களின் கற்றல் தேவைகளை நிவர்த்தி செய்வதில் பள்ளி ஆசிரியர்களின் தரத்தை வெளிப்படுத்துகிறது. எட்டு மாணவர்களில் ஒருவர் 8 ஆம் வகுப்பில் இருந்து வெளியேறிய பின்னர் கல்வியை நிறுத்தி விடுகிறார். உயர்நிலைப் படிப்பில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 46.88 சதவீதமாகவும், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் 25.3 சதவீதமாகவும் உள்ளது. இதில் அனைவராலும் கல்வியை தொடர முடியவில்லை. இந்த மாநிலத்தில் சுகாதாரத் துறையின் நிலையும் சிறப்பாக இல்லை. இங்கு குழந்தை பிறந்த 4 வாரங்களுக்குள் இறப்பது என்பது ஆயிரத்துக்கு ( NMR ) 35.7 சதவிகிதமாகவும் சிசு மரணம் ( IMR ) 50.4 சதவிகிதமாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 59.8 சதவிகிதமாகவும் உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகம். மருத்துவர்கள் எண்ணிக்கை ஆயிரம் பேருக்கு 0.64 சதவிகிதமாகவும் செவிலியர்கள் 0.43 சதவிகிதமாகவும் துணை மருத்துவர்கள் 1.38 சதவிகிதமாகவும் உள்ளனர். இந்த விகிதம் தேசிய சராசரியை விட மிகக் குறைவு. மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் ஒரு லட்சம் பேருக்கு மாவட்ட மருத்துவமனைகளில் 13 படுக்கைகள் மட்டுமே உள்ளன. நிதி ஆயோக் சுகாதார குறியீட்டு எண் கணக்கீடுகள் படி (NITI) 2019-20 சுகாதாரத்தில் இந்த மாநிலம் இந்தியாவின் கடைசி இடத்தில் இருக்கிறது.
தேர்தலுக்குப் பிறகு என்ன நடக்கும்?
திரு ஆதித்யநாத்தின் ஆட்சி முறை மிகவும் குறைபாடுடையது. அவர் கூப்பாடு போடுவது போல வேகமாக பேசுகிறார். தன்னுடன் ஒரு பெரிய தடியை எடுத்துச் செல்கிறார். இவரது ஆட்சி சர்வாதிகாரம், சாதி மேலாதிக்கம், மத வெறுப்பு, காவல்துறையின் அத்துமீறல்கள் மற்றும் பாலின வன்முறை ஆகியவற்றின் ஆபத்தான மொத்த கலவையாக இருக்கிறது. ‘என்கவுண்டர்’, ‘புல்டோசர்’ மற்றும் ’80 வெர்சஸ் 20′ போன்ற வார்த்தைகள் இவரது ஆட்சிக்கு கட்டியம் கூறுகின்றன. ‘மதம் மக்களின் அபின்’ என்ற கருத்தை நிரூபிக்கும் வகையில் எல்லா வலிகளையும் தோல்விகளையும் மறக்க வைப்பது என்ற உண்மையே என்று நிரூபிக்க முயல்கிறது பாஜக. அதை தனது தனித் தன்மையாகவும் பாஜக கொண்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநில தேர்தல் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் சமாஜ்வாடி மற்றும் சமாஜ்வாதி கட்சிகளுக்கு இடையே நடக்கும் இருமுனை போட்டியாக சிலர் சித்தரிக்கின்றனர். இது திரு அமித்ஷா மற்றும் திருமதி மாயாவதி இடையே நடைபெற்ற கனிவான பேச்சு வார்த்தைகளிலிருந்து தெரிகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் 403 சட்டமன்ற தொகுதிகளிலும் காங்கிரஸ் தனது கொடியையும் சின்னத்தையும் முன்னிறுத்தி துணிச்சலாக தனித்து தேர்தலை சந்திக்கிறது.
ஒரு மாற்றத்திற்காக வாக்களிப்பவர்கள் கட்சியை மாற்றி வாக்களித்தால் சரி அவர்களே வென்றாலும் சரி எந்த மாற்றமும் ஏற்பட்டு விடப் போவதில்லை. 2022-ல் கூட இந்த வினாவுக்கான விடையை நம்மால் கண்டுபிடிக்க இயலாது.
தமிழில் த. வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil