ப. சிதம்பரம் பார்வை இந்தியாவில் கல்வி நிலை : உலக மக்கள் தொகையில் ஆறில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார். இந்தியாவில் வாழ்வானது நன்றாக இருக்கிறதா இல்லை மோசமாக இருக்கிறதா? சில கருத்துக் கணிப்பு முடிவுகள் இந்தியாவில் வாழும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள் என கூறுகிறது.
ஆனால் இங்கு வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவு, சுவாசிக்கும் காற்று மாசடைந்துள்ளது, குடிக்க ஒப்பாத குடிநீர், மோசமான சாலைகள், சட்ட ஒழுங்கு என்பது மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆங்காங்கே கும்பல் கும்பலாக வன்முறைகள் அரங்கேறி வருகின்றன. ஆனால் அவை அனைத்தும் மிகவும் சர்வ சாதாரணமாய் நடக்கிறது.
இதில் சில பிரச்சனைகளை நாம் தினமும் சந்தித்து வருகிறோம். அவையனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவை. சில பிரச்சனைகள் மிகவும் மேலோட்டமாக தெரியும். ஆனால் அவற்றிற்கு தான் நாம் இன்னும் அதிக அளவு முக்கியத்துவம் தர வேண்டும். அதில் மிக முக்கியமான இரண்டு விவகாரங்கள் நம் நாட்டில் 21ம் நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்து வரும் கோடிக் கணக்கான குழந்தைகளின் வாழ்வியலோடு தொடர்புடையது.
கல்வி மற்றும் சுகாதாரம்
நல்ல வீடு, அன்பான பெற்றோர்கள், பாதுகாப்பு, நல்ல நண்பர்கள் தவிர்த்து குழந்தைகளுக்கான பிறப்புரிமைகள் என்னென்ன? அவை தரமான கல்வியும், சுகாதாரமும் தான்.
உலக வங்கி வருடாவருடம் உலக வளர்ச்சி அறிக்கை ஒன்றினை வெளியிடும். அதில் ஹூமன் கேபிட்டல் இண்டெக்ஸ் என்ற அறிக்கை முடிவுகளும் வெளியிடப்படும். 157 நாடுகளில் அதற்கான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டது. அடுத்த தலைமுறை மக்களுக்கு சுகாதாரமான சூழலும், முழுமையான கல்வியும் வழங்கப்படுவதை முக்கியமான காரணியாக கொண்டு இந்த இண்டெக்ஸ் பட்டியலிடப்படும். இந்த இரண்டு காரணிகளையும் ஒரு நாடு பூர்த்தி செய்யும் பட்சத்தில் அந்நாட்டிற்கு வேல்யூ 1 வழங்கப்படும். ஆனால் இது நாள் வரையில் எந்த நாடும் அந்த இரண்டு எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யவில்லை.
முதல் பத்து இடங்கள் பிடித்த நாடுகளின் பட்டியல்
கல்வி மற்றும் சுகாதாரம் குறித்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வது அத்தனை எளிமையான காரியம் இல்லை. ஆனால் 0.88 மதிப்பெண்கள் பெற்று சிஙகப்பூர் முதலிடம் பெற்றிருக்கிறது. 0.80 மேல் 10 நாடுகள் மதிப்பெண்கள் பெற்றிருக்கிறது. சிங்கப்பூர், கொரிய குடியரசு, ஜப்பான், ஹாங்காங், ஃபின்லாந்து, ஐயர்லாந்து, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், நெதர்லாந்து மற்றும் கனடா போன்ற நாடுகள் 0.80க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றன.
இதனை நினைத்து ஆசிய பிராந்தியம் மகிழ்ச்சி கொள்ள வேண்டிய தருணமிது. முதல் நான்கு இடங்களை பெற்றிருக்கும் நாடுகள் ஆசிய நாடுகள் ஆகும். மிகப்பெரிய நாடுகளில் பல பெற்றிருக்கும் மதிப்பெண்கள் வெறும் சுமார் ரகமாகத்தான் இருக்கிறது. இங்கிலாந்து HCI 0.78 மதிப்பெண்கள் பெற்று 15வது இடத்தில் இருக்கிறது. ப்ரான்ஸ் 0.76 மதிப்பெண்கள் பெற்று 22வது இடத்திலும், அமெரிக்கா 0.76 மதிப்பெண்கள் பெற்று 24வது இடத்திலும், ரஷ்யா 0.73 மதிப்பெண்கள் பெற்று 34வது இடத்திலும், சீனா 0.67 மதிப்பெண்கள் பெற்று 46 இடத்திலும் உள்ளது. 157 நாடுகளில் 96 நாடுகள் 0.51க்கு அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளது.
ப. சிதம்பரம் பார்வை இந்தியாவில் கல்வி நிலை
157 நாடுகளில் 61 நாடுகள் 0.50க்கும் குறைவான புள்ளிகளையே பெற்றிருக்கிறது. இந்தியா வெறும் 0.44 புள்ளிகளே பெற்று 115வது இடத்தினை பெற்றிருக்கிறது. இது இந்த மதிப்பெண் பட்டியலின் இறுதி நிலையாக கருதப்படுகிறது. ஆனால் இந்த கருத்துக் கணிப்பை இந்திய அரசு புறக்கணித்துவிட்டு அதனுடைய வேலையை அது செய்து கொண்டே தான் இருக்கும்.
இந்த ஹூமன் கேபிடல் இண்டெக்ஸ் ( Human Capital Index (HCI) ) கருத்துக் கணிப்பு என்னை கவலையடையச் செய்கிறது. ஆனால் இந்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்னை கோபமடையச் செய்கிறது. யாரும் தேசிய ஜனநாயக கூட்டணியை குற்றம் சொல்லவில்லை. இந்நிலைக்கு, இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு ஆட்சி செய்த அனைத்து அரசுகளும் தான் காரணம். ஆனால் என் வருத்தம் என்னவென்றால் இந்தியாவின் கல்வி நிலையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இவ்வரசு இல்லை என்பது தான்.
எங்கிருந்தோ பட்டியலை உலக வங்கி தயார் செய்யவில்லை. இந்த பட்டியலை 6 காரணிகளின் அடிப்படையில் தான் தயார் செய்திருக்கிறது உலக வங்கி. 5 வயது குழந்தையின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் நிகழ்தகவின் மதிப்பு என்பது இந்தியாவில் 0.96 மட்டுமே. வளர்ந்த இளைஞர்களின் வாழ்வாதார நிகழ்தகவு 0.83 ஆகும். ஐந்து வயதிற்கு கீழ் இருக்கும் குழந்தைகளில் சுமார் 38% பேர் தங்களின் வயதிற்கேற்ற உயரத்தினை பெறவில்லை.
அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி என்ற இலக்கினை எட்டும் முயற்சியில் பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களின் தரம் குறித்து அதிக யோசனையில் ஈடுபடவில்லை. அனைவருக்கும் உணவு என திட்டத்தை செயல்படுத்த முயன்றோமே ஒழிய அனைவருக்கும் சரியான போதுமான அளவு அங்கன்வாடிகளில் தரப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ளவில்லை.
கர்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், மற்றும் குழந்தைகள் அவர்களின் ஐந்து வயது வரைக்கும் அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கிறதா என்பதைப் பற்றிய தகவல்கள் ஏதும் இல்லை. மோசமான திட்டங்கள், அதை நிறுவேற்றுவதில் தவறுகள், அதற்கான நிதியை ஒதுக்குவதில் பிரச்சனைகள் இது போன்ற காரணங்களால் தான் இது போன்ற பிரச்சனைகளை நாம் சந்தித்து வருகிறோம்.
மத்திய அரசின் செயல்பாடு
ஹூமன் கேபிடல் இண்டெக்சினை க்ளோபல் ஹங்கர் இண்டெக்சுடன் இணைத்டு பார்க்க வேண்டும். உலகில் இருக்கும் ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐந்தில் இரண்டு குழந்தைகள் வயதுக்கேற்ற வளர்ச்சியினை எட்டவில்லை. ஐந்தில் ஒரு குழந்தை உயரத்திற்கேற்ற எடையை கொண்டிருக்கவில்லை.
ஒரு பக்கம் மலைமலையாய் நெல்லையும் கோதுமையையும் குவித்து வைத்திருக்கிறோம். மறுபக்கம் பசிக்கின்ற வாய்க்கு உணவிட நம்மால் இயலவில்லை. உணவு பாதுகாப்புச் சட்டம் மற்றும் MGNREGA மாற்றங்களை கொண்டு வர தேசிய முற்போக்கு கூட்டணி முயற்சித்தது. ஆனால் இந்த இரண்டு முயற்சிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது நடப்பு மத்திய அரசு.
அதன் விளைவு பட்டினியால் வாடுபவர்களின் பட்டியலில் நிறைய மதிப்பெண்களையும் HCIயில் குறைவான மதிப்பெண்களையும் நாம் பெற்றிருக்கிறோம். ஹூமன் டெவலெப்மெண்ட் இண்டெக்ஸ்ஸில் இந்தியா 139வது இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பசு பாதுகாப்பு, கோவில்கள் கட்டுவது, ஆண்டி ரோமியோ ஸ்குவாட், கர் வாபசி மூலம் மதமாற்றம் செய்தல், நகரங்களுக்கு பெயர் மாற்றம் செய்தல், ஒரே நாடு என்ற கொள்கையை பின்பற்றுதலில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு. ஆனால் இது எதுவும் கல்வி மற்றும் சுகாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யாது.
தமிழில் நித்யா பாண்டியன்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.