திறந்து விட்டது பண்டோரா பாக்ஸ்

இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளிடையே ஏற்பட்ட மோதல் எதனால்? அது எங்கு போய் முடியும்? நல்லதாக முடியுமா? என்பதை விவரிக்கிறது.

ஸ்ரீவித்யா

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிராக நான்கு மூத்த நீதிபதிகள் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து அளித்த பேட்டி, நீதித் துறையை அசைத்து பார்த்துள்ளது. இந்திய நீதித் துறை வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த சம்பவம், பல கேள்விகளையும், சந்தேகங்களையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் என்றழைக்கப்படும், தலைமை நீதிபதி மற்றும் நான்கு மூத்த நீதிபதிகள் அடங்கிய குழுவே, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனம், இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றை கவனிக்கிறது.

இவ்வாறு நிர்வாகத்தில் மட்டுமல்லாமல், வழக்குகளின் விசாரணையிலும் இந்த மூத்த நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவது நீண்டகால பாரம்பரியம்.

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியை, சீப் ஜஸ்டிஸ் ஆப் இந்தியா என்றுதான் அழைக்கிறோம். அதாவது நாட்டின் உயர்ந்த நீதிபதி. ஆனால், அந்த தலைமை நீதிபதிக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகளான செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் ஆகியோர் திடீரென்று போர்க் கொடி தூக்கியுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்ற நிர்வாகம் முறையாக நடக்கவில்லை. கடந்த சில மாதங்களாக விரும்பத்தகாக சம்பவங்கள் நடந்து வருகின்றன என்று அவர்கள் தங்களுடைய வேதனையை கூறியுள்ளனர். குறிப்பாக அமர்வுகளுக்கான நீதிமன்றப் பணிகளை ஒதுக்குவதில் பாரபட்சம் இருப்பதாகக் கூறியுள்ளனர். இது தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு இந்த நான்கு நீதிபதிகளும் இரண்டு மாதங்களுக்கு முன் எழுதிய கடிதத்தையும் வெளியிட்டனர்.

இதற்கு முன்பும் நீதித் துறையில் சில சர்ச்சைகள் எழுந்திருந்தாலும், நான்கு மூத்த நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு எதிராக ஒன்று திரண்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அனுமதி அளிப்பதில் உச்ச நீதிமன்ற நீதிபதியின் பெயரைச் சொல்லி சிலர் மோசடி செய்தது தொடர்பாக சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று, மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் அமர்வு பரிந்துரைந்தது.

அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, எந்தெந்த வழக்குகளை எந்த அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என்று கூறினார். அதையடுத்து வேறொரு அமர்வுக்கு அந்த வழக்கு மாற்றப்பட்டது.
அப்போது நீதிபதிகளுக்கு இடையேயான மோதல் துவங்கியது எனலாம். அதற்கு முன் பல சம்பவங்கள் நடந்திருந்தாலும், இதுதான் சமீபத்தில் நடந்தது.

பா.ஜ., தேசியத் தலைவர் அமித் ஷா தொடர்புடையதாகக் கூறப்படும் சொராபுதீன் என்கவுன்டர் வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கு, மூத்த நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்படாமல், வேறொரு அமர்வுக்கு மாற்றப்பட்டது.

இதனால் தான், நான்கு நீதிபதிகளும் கொதித்தெழுந்தனர் என்று கூற முடியாது. அதற்கு முன்பாகவே, தலைமை நீதிபதிக்கு அவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். ஆனால், நீறுபூத்த நெருப்பாக இருந்த பிரச்னை, தற்போது வெளிவந்துள்ளது.

இந்த இடத்தில் நமது பக்கத்து நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த சம்பவத்தை இங்கு பார்ப்போம்.

வங்கதேச அரசுடன் ஏற்பட்ட மோதலையடுத்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி, சுரேந்திர குமார் சின்ஹாவை கட்டாய மருத்துவ விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டது. அவரும் சென்றார்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீதான புகார்களின் அடிப்படையில் அவர்களுடைய பதவியைப் பறிக்கும் உரிமையை பார்லிமென்டுக்கு அளித்து அங்கு சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு தலைமை நீதிபதி தடை விதித்தார். அதையடுத்து அரசுடன் ஏற்பட்ட மோதலில், அவர் கட்டாய ஓய்வில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனால், அதுபோன்ற மோசமான நிலைமை இங்கு இல்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தில் ஏற்பட்ட பிரச்னையில் தலையிடாமல் மத்திய அரசு மவுனம் காத்து வருகிறது. அது அவர்களுடைய பிரச்னை என்று மட்டும் அரசு கூறியுள்ளது. தற்போதும் உச்ச நீதிமன்றம் உள்பட நீதித் துறை மீது மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.

சரி, இந்தப் பிரச்னை காட்டுவது என்ன?

உச்ச நீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் உள்ளிட்ட நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறப்படும் நிலையில், தற்போது மூத்த நீதிபதிகள் எழுப்பியுள்ள பிரச்னை, அதற்கு தீர்வாக அமையுமா?

பண்டோரா பாக்ஸ் திறக்கப்பட்டது என்ற கூறினால், அதற்கு தவறான அர்த்தம் இங்கு உள்ளது. உண்மையில், கிரேக்க புராணத்தின்படி, உலகின் முதல் பெண்ணான பண்டோராவிடம் ஒரு பெட்டியை கடவுள் கொடுத்து அனுப்புகிறார். அதை அவள் திறக்கும்போது, அதில் இருக்கும் தீய சக்திகள் அனைத்தும் வெளியேறுகிறது. நம்பிக்கை என்ற நல்ல சக்தி மட்டும் அதில் தங்கி விடுகிறது.

தற்போது மூத்த நீதிபதிகள் திறந்துள்ள பண்டோரா பாக்ஸ், நீதித் துறையில் நல்ல, வெளிப்படையான நிர்வாக சீர்திருத்தத்தை ஏற்படும் என்று நம்புவோம்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close