Advertisment

நாய்ச்சாதியும் சாதிநாயும்

நாயில் பறைநாய் என்று சொல்லப்படும் பெயரே நிலைத்திருக்கிறது. இந்நிலையில் நாயைக் குறிக்க பறை (யன்) என்னும் பெயர் கையாளப்பட்டது பற்றி அயோத்திதாசர் எழுதியிருக்கும் இரண்டு பதிவுகள் சுவராஸ்யமானவை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாய்ச்சாதியும் சாதிநாயும்

ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்

Advertisment

அண்மையில் இந்து தமிழ் திசை நாளேட்டின் இணைப்பிதழ்களில் ஒன்றான இந்து டாக்கீஸில் கவிஞர் ஸ்டாலின் சரவணன் ஆவணப்படவிழா ஒன்றில் தான் பார்த்த படம் பற்றி கனவில்வந்த வால் (20.03.2020) என்ற தலைப்பில் கட்டுரை எழுதியிருந்தார். அவர் கூறியிருந்த படத்தின் பெயர் கவனத்தை ஈர்த்தது. இந்த காலத்திலும் இந்த பெயர் இருக்கிறதா? அல்லது சூட்டப்பட்டு வருகிறதா? என்பதே இத்தகைய கவனத்திற்கான காரணம். என்னுடைய இக்கட்டுரை அவரின் கட்டுரை பற்றியதோ, கட்டுரை சுட்டும் படம் பற்றியதோ இல்லை. மாறாக படத்தலைப்பு பற்றியது. பறை நாய் என்னும் பொருளில் அமைந்த பறையா டாக் (Pariah Dog) என்பதே அப்படத்தின் தலைப்பு.

இப்பெயரை படித்தபோது சிறுவயதாக கிராமத்தில் இருந்தபோது கறுப்பு நாயொன்றை ஒருவர் பறை நாய் என்று சொல்லியவாறே அடித்துவிரட்டிய காட்சி நினைவில் வந்துபோனது. இணையப் பக்கங்களில் தேடியபோது நாய் இனங்களில் ஒன்றை அப்பெயரில் அழைத்து வருவதை தெரிந்து கொள்ளமுடிந்தது. நாயினத்தின் பெயராக குறிப்பிடப்பட்டு இருந்தாலும் இப்பெயர் இப்போது வழக்கத்தில் இல்லை என்றார் தியோடர் பாஸ்கரன். அவர் சொல்வது உண்மை. கிராமப்புறங்களில் நாய்களை குறிப்பிடுவதற்காக சில காலம் வரையிலும் இருந்து தேய்ந்து இப்போது முற்றிலுமாக மறைந்து போயிருக்கிறது அப்பெயர். தமிழகத்தை பொறுத்தவரையில் பறையர் என்பது ஒரு சாதிக்குழுவினரின் பெயர். அதிலும் தீண்டப்படாத சாதி ஒன்றை குறிக்க பயன்படுத்தப்படும் பெயர். அச்சாதியை ஆதிக்கம் செய்யும் நோக்கிலோ, இழிவு செய்யும் விதத்திலோ பிறவகுப்பினர் இப்பெயரை கையாளுவதுண்டு. பின்னாட்களில் அவ்வாறு குறிப்பிடுவதற்கு எதிராகப் போராட்டங்களும் சட்டவாய்ப்புகளும் உருவாயின. இவ்வாறான மாற்றங்கள் மற்றும் அரசியல் விழிப்புணர்வு காரணமாக கிராமப்புறங்களில் அப்பெயரையோ, அப்பெயரை பிறவற்றோடு ஒட்டாக இணைத்தோ கையாளுவது புறநிலையில் கைவிடப்பட்டிருக்கிறது.

இப்பின்னணியில் தான் இப்படமும், இணையப் பதிவுகளும் இப்பெயரை தாங்கி வந்துள்ளன. அதே வேளையில் இப்படமும், இணையத் தகவல்களும் தமிழோடு தொடர்புடையவை அல்ல. தமிழ்நாட்டில் அதுவொரு தீண்டப்படாத சாதியைக் குறிக்கும் பெயர் என்ற ஓர்மையில்லாமலே ஒரு பெயராகக் கருதி அதை கையாண்டிருக்கின்றனர். நாய் என்று குறிப்பிடுவது இழிவுக் குறியீடாக பொதுப்புத்தியில் உறைந்துள்ள நிலையில் தீண்டப்படாத சாதியொன்றின் பெயரை அவற்றோடு இணைத்து அழைப்பதென்பது சிக்கலானது என்பதோ, அவ்வாறு குறிப்பிடுவது சட்டப்படி குற்றம் என்பதோ தமிழுக்கு வெளியிருப்போர் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு . தமிழுக்கு வெளியே இருந்து அப்பெயரிட்டு அழைப்பவருக்கு அந்த ஓர்மையோ தொடர்போ இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவ்வாறு அழைப்பதற்கான காரணம் தமிழ்ப்பகுதியில் இருக்கிறது. அதாவது அப்பெயர் தமிழிலிருந்தே வெளியே சென்றது என்பதுதான் இங்கு குறிப்பிடவேண்டிய செய்தி.

Pariah என்பது ஆங்கில அகராதியில் உள்ள ஒரு சொல். ஆங்கிலம் மூலமாக உலக மொழிகளுக்கும் பரவி ஒரு பொதுச்சொல் போல நிலைத்துவிட்டது. இதனால்தான் அப்பெயரின் தொடர்புடையோரைக் கொண்ட தமிழ்ப் பகுதியில் அச்சொல்லால் அழைப்பது 'மறைந்து' இருந்தாலும் பரவிய மொழிகளில் அது நிலைத்துவிட்டது. பலசாதிகள் மேல்கீழ் அடுக்காக இருந்த காலனிய இந்தியாவில் (இப்போதும் தான்) ஐரோப்பியர்கள் பல காரணங்களுக்காக சாதிப்பெயர்களை பயன்படுத்தி இருந்தாலும் பறையா (Pariah) என்ற பெயர் மட்டும் குறிப்பிட்ட செயலைக் குறிப்பிடுவதற்கான அடையாளச் சொல்லாக மாறியிருக்கிறது. தமிழ்ப்பகுதியின் பழம் சமூகக் குழுக்களில் ஒன்று பறையர் என்போர். சாதியமைப்பு தோன்றிய பின்னால் இப்பெயர் சூட்டப்பட்டு தாழ்த்தப்பட்டனர் என்றும் சாதியமைப்பு தோன்றி அதில் தாழ்ந்தோராக ‘சேர்’க்கப்பட்டுவிட்டதால் முன்னாலிருந்தே இருந்துவந்த அப்பெயர் இழிவானதாக்கப்பட்டது என்றும் இரண்டு விளக்கங்கள் அதற்குண்டு. எது எப்படியிருப்பினும் இச்சொல் இழிவானதாக்கப்பட்டு நிகழ்காலத்திலும் அவ்வாறே கருதப்படுகிறது. வேறெந்த சாதியின் பெயராலும் நாய் இனம் இருப்பதாகவும் தெரியவில்லை. இந்நிலையில்தான் இப்பெயர் உருவான வரலாற்றை அறிந்துகொள்ள வேண்டியுள்ளது.

இச்சொல் ஐரோப்பிய மொழிகளுக்குள் சென்ற மூலத்தினை துல்லியமாக கண்டுணர முடியவில்லை. ஆனால் ஐரோப்பியர் வருகைக்குப் பின் மிஷனரிகள், அதிகாரிகள் மூலமாக இச்சொல் நுழைந்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம். குறிப்பாக மொழியாய்வை ஒட்டி அழுத்தம் பெற்ற அகராதியில் ஒரு சொல்லாக இது சேர்ந்திருக்கிறது. ஐரோப்பியர்களில் முதலில் வந்த போர்த்துகீசியர் மூலமாகவும் பின்னர் பிரெஞ்சு மொழி வழியாகவும் ஆங்கில மொழிக்குள் சென்றிருக்க வேண்டும் என்று கணிக்கப்படுகிறது. கி.பி.1613 ஆம் ஆண்டில்தான் ஆங்கிலத்தில் அச்சொல் பதிவு செய்யப்பட்டது என்கிறார் ரவிக்குமார். 1729 முதல் 1823 வரை தென்னிந்தியாவில் மிஷனரியாக இருந்த பாதிரியார் ஜே.ஏ.துபுவா (1770-1838) பறையன் என்னும் சொல்லை அதன் இழிந்த அர்த்தத்தோடு உலகுக்கு அறிமுகப்படுத்தினார் என்கிறார் ராஜ்கௌதமன். எனினும் இந்த பின்னணியில் பல்வேறு தரவுகளை திரட்டி ஆய்வு செய்ய வேண்டிய விசயமாகவே இருக்கிறது.

கி.பி.1498 ஆம் ஆண்டு இந்தியாவின் தென்பகுதியில் வந்திறங்கிய ஐரோப்பியர்களில் போர்த்துகீசியர்களின் அரசியல், சமய, பண்பாட்டு நடவடிக்கைகள் அடுத்த ஒன்றரை நூற்றாண்டுகள் இங்கிருந்தன. அவர்களைத் தொடர்ந்து ஐரோப்பாவின் பிற நாட்டவரும் இங்கு வந்தனர். மெல்லமெல்ல சமூகத்தை மேலிருந்து கீழாக நோக்கும் உள்ளூர் சாதிய அணுகுமுறை ஐரோப்பியர்களால் வரித்துக் கொள்ளப்பட்டதும் இக்காலத்தில்தான். இச்சூழலை பரிபூரணமாக விவரிக்கும் தரவுகள் நமக்கு கிடைத்துவிடவில்லை என்றாலும் பறையன் என்னும் சொல் ஐரோப்பிய மொழிகளுக்குள் சென்றதை இப்பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளலாம்.

ஐரோப்பிய மொழிவரை இச்சொல் சென்றமைக்கு இச்சொல் இழிவாக்கியதால் பலன்பெற்ற உள்ளூர் பிரிவினரும் பங்கு வகித்திருக்க முடியும். இதற்கான தேடலில் ஈடுபடும்போது நமக்கு கிடைக்கும் ஒரே ஆதாரம் அயோத்திதாசர் எழுத்துகள்தாம். பறையன் என்ற சொல் மீது பிராமணர்கள் வெளிப்படுத்திய வெறுப்பு, இழிவான பொருளில் அச்சொல்லைப் பரப்பிய விதம் குறித்து அவர் விரிவாக எழுதியிருக்கிறார். பிராமணர் பறையர் வகுப்பார்களுக்கிடையே நிலவும் முரண்களை ஏடுகள், வழக்காறுகள் மூலமாகக் கண்டறிந்த அவர் அதற்கான காரணங்களையும் இம்முரண்பாடு சமூகத்தில் செயல்படும் விதங்களையும் தேடினார்; விளக்கினார்.

குறிப்பாக பார்ப்பார் - பறையர் என்கிற எதிர்மறை, சமூகவழக்கில் புழங்கிவருவதற்கான சான்றுகளைக் காட்டினார். இவற்றில் பார்ப்பாரை உயர்வாக வைத்தும் பறையர் என்போரைத் தாழ்வாக வைத்தும் இவ்வழக்காறுகள் நிலவுவதை சுட்டி அதற்கான காரணத்தையும் விவரித்தார். அதன்படி பறையரை இழிவுபடுத்துதல் என்பதன் எதிர்மறை செயல்பாடாக பார்ப்பாரை பெருமிதப்படுத்துதல் என்பது இருந்திருக்கிறது.

சாதியமைப்பில் தங்களை உயர்வாக இருத்திக்கொண்ட பார்ப்பார்களுக்கு எதிர்மறையாக பறையர் என்ற ஒரு சாதிக்கு மட்டும் (வேறு சில சாதிகள் உண்டெனினும்) இடம் இருப்பது ஏன்? இது தொடர்பான அயோத்திதாசரின் விளக்கம் சாதியமைப்பின் தோற்றத்தையே இந்த எதிர்மறையின் பின்புலத்தில் வைத்து வாசிக்கும் அளவுக்கு கொண்டு நிறுத்துகிறது. அதாவது இவர்களுக்கிடையிலான முரண்தான் தமிழ்ப்பகுதி சாதியமைப்பின் தோற்றம் என்றாகிறது. ஒரு காலத்தில் சாதியமைப்போடு தொடர்பில்லாதிருந்தவர்கள் பல்வேறு காரணங்களால் கீழிறக்கப்பட்டு பின்னர் அவை தெரியக்கூடாதென்பதற்காக பறையர் என்ற பெயருக்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்து அவ்வாறே தக்கவைக்கப்பட்டனர் என்றார். இப்பெயரால்

இழிவாக்கிய பின்னால் அப்பெயரால் அழைத்துக் கொண்டே இருப்பதும் இழிவு தான் என்றார். இழிவு கருதி சூட்டப்பட்ட பறையன் என்ற இப்பெயரை மெல்ல மெல்ல இழிவான அர்த்தம் தரும் பொருள்களுக்கெல்லாம் சூட்டினர். பின்னர் அந்த இழி பொருள்களின் பரவலாக்கத்தோடு அப்பெயரும் சேர்ந்தே பரவலானது என்றும் சொன்னார்.

ஆங்கில அகராதியில் பறையன் என்ற பெயர் சென்றதை அயோத்திதாசரின் இக்குறிப்புகள் நேரடியாக சொல்லவில்லை எனினும், அது எவ்வாறு சென்றிருக்கும்? எந்த அர்த்தத்தோடு சென்றிருக்கும்? என்ற பின்புலத்தை புரிந்துகொள்ள இந்த விளக்கங்கள் உதவும்.

ஐரோப்பியர்கள் அதிகாரச்சாதியாக மாறியபோது அவர்களிடையேயும் இந்த எதிர்மறை கொண்டு சேர்க்கப்பட்டது. இந்திய உயர்சாதியினரின்

கண்ணோட்டத்திற்கேற்பவே ஐரோப்பியர்களும் இந்திய சமூக அமைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் வருவதற்கு முன்பிருந்த சமூக அடுக்கு எந்தநிலையிலும் மாறிவிடக்கூடாது என்று கருதி இந்தச் செயற்பாடுகள் அமைந்தன. இவ்வாறுதான் உள்ளூரில் இழிவைக்குறிக்கும் பொருளில் பயன்படுத்தப்பட்ட பறையன் என்ற சொல் ஐரோப்பியர்களின் தொடக்ககால அகராதிகளில் இடம்பெற்று இருக்கிறது. அச்சொல் அதிகாரம் மிக்கதாக மாறிய எழுத்தின் வெளிப்பாடுகளில் ஒன்றான அகராதியில் இடம்பெற்று அடுத்தடுத்து எழுதப்பட்ட அகராதிகளுக்கும் பெயர்ந்திருக்கிறது. அவற்றின்வழி சர்வதேச புழங்கு சொல்லாகி இருக்கிறது. பிறகு அந்தச் சொல் எந்தப் பின்னணியிலிருந்து வந்தது என்பது தெரியாமலேயே அதன் அர்த்தம் கருதி மட்டுமே பல்வேறு மொழிகளிலும் புழங்க ஆரம்பித்திருக்கிறது. அதாவது தமிழில் சாதி இழிவைக் குறித்த இச்சொல் சென்ற மொழிகளிலெல்லாம் ஏதோவொரு வகையில் இழிவைக் குறிக்க வேண்டிய இடங்களிலேயே கையாளப்படுகின்றன. இதன்படியே பறையன் என்ற சொல்லிலிருந்து பிறந்த Pariah என்பது இப்போதும் பயன்பாட்டில் இருந்து வருகிறது. வெறுக்கத்தக்க/ விலக்கத்தக்க/ தீண்டப்படாத/ வேறுபட்ட போன்ற பொருள்தரத்தக்க இடங்களிலெல்லாம் அச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

இவ்வாறுதான் முன்பொருமுறை விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரனை சாடவந்த சுப்பிரமணிய சுவாமி அவரை இண்டர்நேஷனல் பறையன் என்றார். 01.09.2008 தேதியிட்ட அவுட்லுக் ஏட்டில் ஷபா நக்வி காஷ்மீரில் ஊடகங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் குறிக்கும் கட்டுரைக்கு A Pariah’s Profession (பறையர் தொழில்) என்று தலைப்பு இட்டிருந்தார். 05.02.2007ஆம் தேதியிட்ட இதே ஏட்டில் புகைப்பிடிப்பவர்களைக் குறிக்க Pariah என்னும் சொல்லைக் கையாண்டிருந்தனர்.

Pariah Dog என்ற மேற்கண்ட ஆவணப்படத்தில் கூட வீட்டில் வளர்க்கப்படாத தங்க இடமற்ற தெரு நாய்களை குறிக்கும் பொருளிலேயே கையாளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கைவிடப்பட்ட, ஏதிலியாய் திரியும் நாய்களைக் குறிக்க இச்சொல் கையாளப்பட்டுள்ளது. அதாவது உயர்வாய் அமையாமல் ஒருவித தாழ்நிலையைக் குறிக்கிறது. “The breeds after the untouchable Pariah Tribe of South India” என்று தென்னிந்திய நாய் வகையாகவே இப்பெயர் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நாயில் பறைநாய் என்று சொல்லப்படும் பெயரே நிலைத்திருக்கிறது. இந்நிலையில் நாயைக் குறிக்க பறை (யன்) என்னும் பெயர் கையாளப்பட்டது பற்றி அயோத்திதாசர் எழுதியிருக்கும் இரண்டு பதிவுகள் சுவராஸ்யமானவை.

பார்ப்பாருக்கும் பௌத்தர்களுக்கும் இடையேயான முரணில் பூர்வபௌத்தர்களின் நிலையை தனதாக்கிக்கொண்ட பார்ப்பார், பௌத்தர்கள் மீது பறையர் என்ற இழிபெயரை சுமத்தினர். அதை எல்லோரும் ஏற்கச் செய்யவேண்டுமென்று வெவ்வேறு வழிகளில்/ வடிவங்களில் பரப்பினர். கதைகள் வாயிலாக மட்டுமல்லாது விலங்கினங்கள், பறையினங்கள் வழியாகவும் பார்ப்பாரை எதிர்வைத்து அச்சொல்லைப் பரப்பினர். இவையெல்லாம் அவரின் விளக்கங்கள். இதன்படி பார்ப்பார மைனா Xபறை மைனா, பறைப்பருந்துx பாப்பாரப் பருந்து, பறைப்பாம்பு Xபார்ப்பார பாம்பு என்றெல்லாம் எதிர்மறைகள் கட்டமைக்கப்பட்டிருப்பதை அவர் காட்டினார். இவற்றுள் கறுப்புநிறம், செத்தொழிந்த விலங்குகளை உண்ணுதல், இருப்பிடம் இல்லாதிருத்தல், விகாரக் குணங்களைக் கொண்டிருத்தல் என்பதான குணங்களைப் பெற்றிருந்த விலங்குகளை/ பறவைகளை பறை என்ற ஒட்டுசேர்த்து வழங்கினர். கட்டமைக்கப்பட்ட சமூக இழிவை இப்பெயர்கள் மூலமும் உறுதிபடுத்தினர் என்றெல்லாம் கூறிவந்த அயோத்திதாசர் இவற்றுள் ஒரேயொரு விலங்கினத்தில் மட்டும் இந்த எதிர்மறையை கட்டமைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டினார். எதிர்மறையைக் கட்டமைப்பதில் சாதியம் எந்த இடத்தில் வெளிப்படுகிறது. எந்த இடத்தில் வெளிப்படுவதில்லை என்பதற்கு அச்சுட்டல் சிறந்த உதாரணம்.

அதாவது நாய் இனத்தில் பறை நாய் என்ற வழக்கு உண்டு. பிற விலங்குகளில் உள்ள எதிர்மறைகளைப் பார்க்கும்போது இங்கு பறை நாய் என்றிருக்கும் நிலையில் பாப்பார நாய் என்ற வழக்கும் இருந்திருக்க வேண்டும். ஆனால் விதிவிலக்காக பறைநாய் மட்டுமிருக்க பாப்பார நாய் இல்லை. இது ஏன்? ஏனெனில் நாய் என்பது இழிந்த வழக்கு. அந்த இழிந்த வழக்கில் தங்கள் பெயரைச் சேர்த்தால் பெயர் இழிவாகிவிடும் என்றுணர்ந்து அந்த எதிர்மறையை மட்டும் தவிர்த்துள்ளனர் என்றார் அயோத்திதாசர். அவர் இதனை “பாப்பார நாய் என்பதை வழங்கினால் அஃது தங்களை இழிவுபடுத்தும் என்று உணர்ந்து பறைநாயென்னும் மொழியை மட்டிலும் வழங்கி வருகின்றார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்து அந்த வழக்கு எங்கெங்கு, எந்தெந்த சூழல்களில் வழங்கப்படுகின்றன என்பதை அவரின் சமகால சான்று ஒன்றின் வழியாகவும் விளக்கியிருப்பது சுவராஸ்யமானது. அவர் நடத்திய தமிழன் இதழில் 19.05.1909 ஆம் நாளிட்டு ஒரு குறிப்பை எழுதியுள்ளார். அதாவது 1909 ஆம் ஆண்டு மே 11 ஆம் நாள் சிம்லாவில் அப்போதைய கவர்னர் மிண்டோ மார்லியும் அவர் மனைவியும் வளர்ப்பு நாய் குட்டியைப் பிடித்துக்கொண்டு காலை நடைப்பயிற்சி சென்றனர். அப்போது தெருவில் இருந்த நாயொன்று ஓடிவந்து கவர்னரின் வளர்ப்பு நாயைக் கடித்துவிட்டது. இச்சம்பவம் இந்திய செய்தித்தாள்களில் வெளியாயின. அவற்றுள் சிலவற்றை அயோத்திதாசர் எடுத்துக் காட்டுகிறார். அவர் முதலில் இஸ்டாண்டர்ட் என்ற ஆங்கில ஏட்டின் செய்தியைக் காட்டுகிறார். 12.05.1909 தேதியிட்ட அந்த ஏடு தெரு நாயை (Strange Dog) என்ற பெயரால்

(விசித்திரமான நாய்) குறிப்பிடுகிறது. 13.05.1909 ஆம் தேதியிட்ட விஜயா என்ற தமிழ் ஏட்டில் வெளியான செய்தியில் அந்த நாய் "புதுநாய்" என்று குறிப்பிட்டுள்ளது. இவ்விரண்டையும் காட்டிவிட்டுதேசியம் பேசிய சுதேசமித்திரன் (12.05.1909) வெளியிட்ட இதே செய்தியை மூன்றாவதாக அவர் எடுத்துக் காட்டியிருக்கிறார். அதாவது Strange Dog 'விசித்திரமான ' நாய் என்று முன்னர் காட்டிய ஏடுகளில் வந்த இந்தச் சொல் சுதேசமித்திரனில் 'பறை நாய்' என்று குறிக்கப்பட்டிருந்தது. அதாவது குணத்தைக் குறிக்கும் ஒரு சொல் சாதியோடு தொடர்புபடுத்தப்பட்டு ஏற்கனவே புழங்கிவந்ததன் தொடர்ச்சியில் பண்பாட்டு புழங்குசொல்லாக மாறிவிட்டிருக்கிறது. இவ்வாறு மாறியபின் இச்சொல் நாயின் குணத்தை மட்டும் குறிக்கும் சொல்லாக இருக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்கிறோம். இந்தச் சொல்லைப் பற்றி நாம் ஏன் இப்போது பேசவேண்டும் என்பதற்கான காரணமும் இதுவே. வரலாற்று நிலையில் இருந்து மறைந்துவிட்ட சொல்லாகத் தெரிந்தாலும் அது மறையாமல் மீண்டும் மீண்டும் எழுவது ஆங்கில அகராதிகளிலும், வழங்கும் விதங்களிலும் நிலைத்திருப்பதால்தான்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Art And Culture
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment