கதிர்
சென்னை சிந்தாதிரிபேட்டையில் ஒரு மீன் மார்க்கெட் இருக்கிறது. காங்கிரஸ் பிரமுகர் ஹாரூண் மகன் அதை விலைக்கு வாங்கி இருக்கிறார். மாடர்னாக மாற்ற நிறைய செலவு செய்கிறார். வாடகையையும் உயர்த்தினார்.
மீன் வியாபாரிகளுக்கும் அங்கே வேலை செய்பவர்களுக்கும் வாடகை உயர்வெல்லாம் பெரிதாக தெரியவில்லை. புது ஓனர் போட்ட ரூல்ஸ்தான் அவர்களை கடுப்பாக்குகிறது. காலை மாலை குறிப்பிட்ட நேரங்கள் மட்டுமே மார்க்கெட் இயங்கும். வாரம் ஒருநாள் விடுமுறை. இரவில் யாரும் தங்க கூடாது. வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் மார்க்கெட் பூட்டி இருக்கும்.
“அதெப்படி..? 150 வருசமா நாங்க இங்கதான் தொழில் செய்றோம். இங்கயே தங்குறோம். திடீர் கெடுபிடி எல்லாம் ஏத்துக்க முடியுமா..?” என்று போர்க்கொடி தூக்குகிறார்கள்.
இதுதான் பிரச்னை. எந்த விஷயத்தில் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடு கொண்டு வந்தாலும் நமது மக்களுக்கு பிடிக்காது. காலம் காலமாக எந்த கட்டுப்பாடும் இல்லாமல் சுதந்திரத்தை அனுபவித்தவர்களால் திடீரென்று எப்படி மாற முடியும்?
மாட்டுக்கறி விவகாரமும் அப்படித்தான். உண்மையில் இது மாட்டுக்கறி பிரச்னை கிடையாது. அடிப்படையில், மாட்டு சந்தைகளை முறைப்படுத்தும் நடவடிக்கைதான் மத்திய அரசு அறிவித்த புதிய விதிகள்.
மாடுகளை, குறிப்பாக பசுக்களை, வணங்கும் பிராமணர்கள் பெருவாரியாக பிஜேபியை ஆதரிப்பது உண்மை. அக்கட்சியின் தாய்க் கழகமான ஆர்.எஸ்.எஸ் பசு வதையை தடை செய்ய வேண்டும் என நீண்டகாலமாக கோரி வருகிறது. அவ்வாறு தடை விதிப்பது மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது என்பதை அறிந்தும், தேசிய அளவில் தடை கொண்டுவர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் சமீபத்தில்கூட மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
அந்த பின்னணியில் மத்திய அரசின் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இது அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் திட்டம் என்றும், மத அடிப்படையில் மக்கள் மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சி என்றும் பலரால் பார்க்கப்படுகிறது. அப்படி இல்லை என்று சொல்லிவிட முடியாது. அதே சமயம் பிரச்னையின் மறுபக்கத்தையும் கவனிக்க வேண்டும்.
நாடெங்கும் ஆயிரக்கணக்கான மாட்டு சந்தைகள் இயங்குகின்றன. இவற்றில் விவசாயிகள் உழவுக்காக, பாலுக்காக, வண்டிக்காக, செக்குக்காக மாடுகள் வாங்குகிறார்கள், விற்கிறார்கள். ஆனால் அதைவிட அதிகமான மாடுகள் மாமிசத்துக்காக விற்கப்படுகின்றன. பால் சுரப்பு நின்ற மாடுகள், நோயில் விழுந்த மாடுகள், எந்த வேலைக்கும் பயன்படாத முதிர்ந்த மாடுகள் இவ்வாறு கறிக்கடைகளுக்கு விற்கப்படுகின்றன. கறிக்கடைகளின் சார்பில் தரகர்கள் இவற்றை வாங்குகின்றனர். மாட்டை பாசத்தோடு வளர்த்து அதன் மூலம் பயன் அடைந்த விவசாயிக்கு கண்ணார அதை கறிக்கடைக்கு விற்க மனம் வராது என்பதால் விற்பவர்களும் பெரும்பாலும் தரகர்களே.
தரகர்களுக்கும் கறிக்கடை ஆட்களுக்கும் மாடுகள் நான்கு காலுள்ள ஜீவன்களாக தெரிவதில்லை. இத்தனை கிலோ கறி என்றுதான் அவர்களின் கண்கள் அந்த உயிர்களை எடைபோடும். எனவே, பயன் தரக்கூடிய ஆரோக்கியமான மாடுகளையும் கறிக்காக அவர்கள் கைப்பற்றுகிறார்கள்.
விற்கும் விவசாயிக்கு நஷ்டம் என்பது ஒரு புறம். மாடுகள் இனம் வேகமாக அழிவது ஒரு புறம். சுகாதார அடிப்படியில் நோய் தாக்கிய மாடுகளும் உணவாக மாற்றப்படும் கொடுமை ஒரு புறம். கன்றுகளும் கறியாகும் அவலம் ஒரு புறம். மாடுகளை வெட்டுவதிலோ, தோலை நீக்குவதிலோ, எலும்புகளை பிரித்தெடுப்பதிலோ சுகாதார அறிவியல் வழிகள் எதுவும் பின்பற்றப்படுவது இல்லை என்பது இன்னொரு புறம். நீண்ட தொலைவுக்கு இந்த மாடுகள் கோரமான வகையில் லாரிகளில் அடைக்கப்பட்டு கொண்டு செல்லப்படும் பரிதாபம் மற்றொரு புறம்.
இப்படியாக முறைகேடுகள் மலிந்த தொழிலாக நடைபெறுகிறது மாடு வர்த்தகம். அதற்கு மணி கட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவேதான் நாடெங்கும் இறைச்சிக் கூடங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு வருகின்றன. மன்மோகன் சிங் ஆட்சியில் முடுக்கிவிடப்பட்ட அந்த நவீனமய திட்டம் உள்ளூர் இடைத்தரகர்களாலும் அவர்களுக்கு பரிந்து பேசும் அரசியல்வாதிகளாலும் தடுக்கப்பட்டு தேங்கிக் கிடக்கிறது.
இந்த சூழ்நிலையில் திடீரென்று புதிய விதிகளை அறிவித்து பட்டாசை கொளுத்திப் போட்டிருக்கிறது மத்திய அரசு.
தனி மனித சுதந்திரம், உரிமைகள் முதலான அரசியலமைப்பு சட்டத்தின் உத்தரவாதங்கள் இந்த அறிவிப்பால் மீறப்பட்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அவ்வாறு மீறப்பட்டால் அதை தடுத்து நிறுத்தும் கடமையும் பொறுப்பும் நீதிமன்றங்களுக்கு உண்டு. அரசியல் சாசனத்தின் மாண்பை காப்பாற்றுவதுதான் நீதிமன்றங்களின் தலையாய கடமை. சர்வ வல்லமை படைத்த பாரத் சர்க்காராக இருந்தாலும் அது இயற்றிய சட்டம் அரசியல் சாசனத்துக்கு முரணானது என்றால் அது செல்லாது எனக்கூறி தூக்கி எறிய நீதிமன்றத்தால் முடியும். எத்தனையோ முறை அவ்வாறு நடந்திருக்கிறது. எனவே, அரசு சட்டம் போட்டு விட்டது; இனிமேல் அவ்வளவுதான் என்று எவரும் நடுங்கத் தேவையில்லை. எதிர்க்கட்சிகள்கூட வேண்டாம், எந்த ஒரு குடிமகனும் இதற்காக நீதிமன்றத்தை நாடமுடியும். அத்தகைய ஒரு பிரஜையின் மனுவை ஏற்று மத்திய அரசின் ஆணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பிரிவு தடை வழங்கியுள்ளது சான்று.
கேரளா, கர்நாடகா, திரிபுரா, மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய பிஜேபி ஆளாத மாநிலங்களின் அரசுகள் மத்திய அரசின் ஆணையை அமல்படுத்தப் போவதில்லை என அறிவித்து விட்டன. தமிழ்நாட்டை ஆளும் அதிமுகவும் பிரதமர் மோடியின் தாளத்துக்கு தலையாட்டியபடியே இந்த விதிகளுக்கு எதிரான நிலைப்பாட்டை சத்தமில்லாமல் மேற்கொண்டுள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் நிச்சயமாக மத்திய ஆணை அமலுக்கு வர வாய்ப்பில்லை. “எங்கள் பகுதியில் மாட்டுக்கறியை விரும்பி சாப்பிடாத பிஜேபி தலைவரே கிடையாது” என்று மேகாலயாவில் அக்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஆக, எப்படிப் பார்த்தாலும் இது அப்படியே நடைமுறைக்கு வர முடியாத அரசாணையாகத்தான் இருக்கிறது. பிறப்பித்த மத்திய அரசே அதனை மறு ஆய்வு செய்கிறது. விதிகள் தளர்த்தப்படலாம். அல்லது, பயனற்ற மாடுகளை கன்றுகளை அரசே விலைக்கு வாங்கி பராமரிக்க ஏதுவாக விதிகள் திருத்தப்படலாம். நீதிமன்றம் இவ்விதிகளை அடியோடு ரத்து செய்யக்கூடும்.
இத்தகைய பல சாத்தியக்கூறுகள் இருக்கும்போது, இன்று நாட்டின் மிக முக்கியமான பிரச்னை இதுதான் என்பதைப் போல சமூக ஊடகங்களில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் பந்த், ஆர்ப்பட்டம் அறிவிக்கின்றன. ஒரு கம்யூனிஸ்ட் தலைவர் “இந்தியாவில் உள்நாட்டு போர் மூள மத்திய அரசு தூண்டிவிடுகிறது” என்கிறார். இதெல்லாம் ஏதோ அரசியல் நடவடிக்கைகள் என்று ஒதுக்க நினைத்தால், “பொதுமக்கள் சும்மா இராமல் இந்த விஷயத்தில் மத்திய அரசுக்கு எதிராக வீதியில் இறங்கி போராட வேண்டும்” என்று திமுக தலைமையில் ஏழெட்டு கட்சிகளின் விடுத்துள்ளனர்.
கோடை வெயில் கொளுத்துகிறது. அணைகள், ஏரிகள் வறண்டு கிடக்கின்றன. குடிநீர் கிடைக்காமல் குடத்துடன் பெண்கள் அலைமோதுகிறார்கள். தேவைக்கு மேல் உபரியாக இருக்கிறது மின்சாரம் என்று அமைச்சர் பெருமிதம் வெளிப்படுத்தும் நேரத்தில் தினமும் சராசரியாக நாலரை மணி நேரம் மின்சாரம் தடைபடுகிறது, விட்டு விட்டு துண்டிக்கப்படும் வினியோகத்தால். விசாரித்தால் 1980-90 களில் இருந்த மின்சார தேவைக்கு ஏற்ப ஏற்படுத்தபட்ட வினியோக கட்டமைப்பால் இன்றைய அதிகபட்ச வினியோகத்தை சமாளிக்க இயலவில்லை என்கிறார்கள் மின்வாரிய பொறியாளர்கள். வர்தா புயலில் சாய்ந்த மரங்களைக்கூட அப்புறப்படுத்த வழி தெரியாமல் காலி கஜானாவை பார்த்து விழி பிதுங்கும் அரசால் மின் கட்டமைப்பை மேம்படுத்த பல ஆயிரம் கோடிகளை எவ்வாறு திரட்ட முடியும்? ஓய்வு பெற்ரு 24 ஆண்டுகள் கடந்த தொழிலாளிக்கு சொந்தமான வைப்புநிதியைக்கூட கொடுக்க வக்கில்லாத அரசு மக்கள் நலனுக்கான அடிப்படைக் கட்டமைப்பை எவ்வாறு எப்போது மேம்படுத்தப் போகிறது?
கல்வி, உடல் நலம் தொடங்கி அனைத்து துறைகளிலும் சீர்குலைந்து கிடக்கும் நிர்வாகத்தால் பொதுமக்கள்மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ஓர் அரசு திடீரென்று மாடு பிடிக்க இறங்குவது திசை திருப்பும் முயற்சி என்றால், பொறுப்புள்ள எதிர்க்கட்சிகள் தலைபோகும் பிரச்னைகளை கீழே போட்டுவிட்டு மக்களை வீதிக்கு அழைப்பதை என்னவென்று சொல்ல? மத்திய அரசின் வலையில் விழுந்துவிட்டார்கள் என்பதை தவிர.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.