வாழ்நாளில் முதல்முறையாக ஒரு படம் வெளிவந்த நாளிலேயே பார்க்கப் போனேன். மூத்த மகனுக்கு படங்கள் பார்ப்பது அவ்வளவு பிடித்தமானதல்ல. திரையரங்கின் இருட்டும் அதீத சப்தங்களும் அவனால் சகித்துக் கொள்ள முடியாது. பயத்தினால் அல்ல. உரத்த சத்தங்கள் அவனுக்கு குமட்டிக்கொண்டு வரும். இருக்கையின் அடியில் குனிந்து உட்கார்ந்து கொள்வான். தெளிவற்ற மொழியில் வீட்டுக்கு போலாம் என்று அழுவான். சுற்றிலும் உள்ளவர்கள் எங்களை மிகவும் சங்கடத்துடன் பார்ப்பார்கள்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை அந்த பார்வையின் வலியில் நான் என்ற அம்மாவின் தலை தாழ்ந்து குனியும். இன்றோ என் பார்வை அவர்களுடைய கண்களை மிக இயல்பாக ஏறெடுத்து நின்றது. இப்போது என் கண்களில் நான் எழுதி வைத்ததை அவர்களால் வாசிக்க முடியும். ஒரு அசாதாரணமான குழந்தையை வளர்ப்பதென்பது ஒரு அம்மாவுடையதோ அப்பாவுடையதோ மட்டுமான கடமையல்ல. அது ஒரு சமூகத்தின் கடமையும் கூட. அவர்களுடைய தலை குனியும் வரை என் கண்கள் பதட்டமடையாது. என் மகனுக்கும் இங்கே மிகுந்த அபிமானத்துடன் இயல்பாகவே வாழ உரிமையுண்டென்று நான் தீர்மானமாய் நம்புகிறேன். ஏனெனில் நான் ஒரு அசாதாரண குழந்தையின் அம்மா!
படம் பார்த்து கொண்டிருந்தபோது என் தலை மேல் அடித்து சொன்ன வார்த்தைகள், “இவ்வளவு நாட்களும் நான் பாத்துகிட்டேனே, இனி நீங்க பாத்துக்கோங்க” என்ற வரிகளாக இருந்தது. ஸ்பாஸ்டிக் டிஸ் ஆர்டர் இருக்கும் மகளை அப்பாவிடம் விட்டு விட்டு நேசத்தின் கதவுகளை சாத்திவிட்டு போகும் அம்மாவைப் பற்றி பார்வையாளர்கள் ஆச்சரியப்பட்டு போயிருப்பார்களே! இது என்ன இப்படி ஒரு அம்மாவா? என உள்ளே ஒரு முணுமுணுப்பு கேட்டிருக்கும். எனக்கு ஆனால் ஒன்றும் தோன்றவில்லை. ஏனெனில் அந்த அம்மாவை என்னால் புரிந்து கொள்ள முடியும்.
வீட்டை விட்டு போனதற்காக அவளை என்னால் குறை சொல்ல முடியவில்லை. அவள் இன்னும் கொஞ்சம் தைரியமான பெண் என்று நான் சொல்லும்போது நீங்கள் இன்னும் கொஞ்சம் புரிந்து கொள்ளும் காருண்யத்தோடு என்னை அணுகுங்கள்.
வேலைக்கு போன இடத்திலிருந்து வார இறுதியில் வரும் கணவனிடம் எத்தனையோ முறை இதே வார்த்தைகளைச் சொல்லியிருக்கிறேன். தண்ணீர் நிறைந்த பாத்திரத்தில் தலையை மூழ்க செய்து இரண்டு நிமிடங்கள் நின்றிருக்கிறீர்களா? இல்லை மூக்கை இறுக்கிப் பிடித்து ஐந்து நிமிடம், மூன்று நிமிடம், ஒரு நிமிடம்… நீங்கள் மூச்சிற்காய் துடிக்கும் துடிப்பில்லையா? அதே துடிப்பு இதயத்தில் ஏற்படும்போது என்ன செய்வீர்கள்? எத்தனை வருடங்கள் ஒரு அம்மாவால் மட்டுமே தனியாக அந்த துடிப்பை அடக்கிப் பிடித்துக் கொள்ள முடியும்?
அசாதாரணமான ஒரு குழந்தை பிறக்கும்போது அம்மாவிற்கு குழந்தையைப் பற்றிய கனவு தகர்ந்தெறிந்து போவது மட்டுமல்ல, வெளியே வெளிச்சத்தின் கீற்றைப் பார்க்கும் போது முகம் சுருங்கிப் போகும் வாழ்வு அவளை இருட்டில் தள்ளி விட்டும் போகும். மற்றவர்களின் அனுதாபங்களை, தள்ளி நிறுத்திப் பார்க்கும் பார்வைகளை எதிர் கொள்ளத்தான் அவள் முதலில் பயப்படுகிறாள். சட்டென சந்தோஷித்து சிரிக்க அவளுக்கு காரணங்கள் இல்லாமல் போகிறது.
மடியில் வைத்திருக்கும் குழந்தை எல்லா குறைபாடுகளுடனும் அவளுடைய சிரிப்பை சுக்கு நூறாக்கிவிடும். முலைகளில் சுரக்கும் பாலும், இருட்டிற்கு தயக்கம் வந்த துக்கமும் அவளை வெளிச்சத்திற்கு அழைத்து வரும். விழுந்த இடத்திலிருந்தே நடக்க கற்றுக் கொண்டிருப்பாள். ஆனாலும் அவளுக்கு ஏற்பட்ட காயம் ஆற அவகாசம் கொடுக்காமல் உலகம் அவளை இதென்ன இப்படி ஒரு அம்மாவா என மூக்கில் விரல் வைத்து பேசும். வருடங்களாக உறவினர்களின் உதாசீனங்களுக்கும் முணுமுணுப்பிற்குமிடையில் தன்னந்தனியாய் குழந்தையைப் பார்த்துக் கொண்ட ‘பாப்பா’வின் அம்மா வீட்டை விட்டு போனதை என்னால் குற்றம் சொல்ல முடியாது. அவள் கொஞ்சம் தைரியமுள்ள பெண்ணாக இருந்தாள் என்று நான் சொல்லும்போது என்னைப் புரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம் கருணையோடு அணுகுங்கள்.
Read this article in malayalam, click here
புத்தி சுவாதீனமற்ற என் மகன் சட்டென வளர்ந்து விட்டிருந்தான். அவனுடைய சின்ன சூச்சுவைப் பார்த்து நான் விசனமுற்றிருந்தேன். பாவம் அவன் எப்படி திருமணம் செய்து கொள்ளமுடியும்? நான் என் கணவனிடம் கேட்பேன்.
“கல்யாணம் பண்ணுவதுதானா பெரிய விஷயம்? அவன் வாழ தகுதியுள்ளவனாக வளரட்டும்”.
ஆனால் எனக்கு அவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும். நான் இல்லாமல் போகும்போது அவனுக்கு ஒரு இணையாக, அவனை நேசிக்க, அவன் தெளிவற்று பேசும் பேச்சுகளை புரிந்து கொள்ள, நேரத்திற்கு உணவு கொடுக்க, காய்ச்சல் வந்தால் பக்கத்தில் கட்டிப் பிடித்து படுக்க என் மகனுக்கு ஒரு துணை வேண்டுமென்று நான் விரும்பினேன். வளர்ந்து வேலைக்குப் போவதல்ல நான் அவனைப்பற்றி கண்ட கனவு, மாறாக அவனை நேசிக்கும் ஒரு பெண்ணின் வருகையை எதிர்பார்த்திருந்தேன். எனில் நான் நிம்மதியாக செத்துப் போவேன். நான் போய்விட்டால் என் குழந்தை என்ன செய்வான்? யோசிக்க முடியவில்லை. என் மகன் அடி வாங்குவதையும் உதாசீனப்படுவதையும் உணவிற்காய் கை நீட்டி நிற்பதையும் நேசிக்க யாருமற்ற நிலையையும்… அவனுக்கென்று ஒரு வாழ்க்கை இல்லையென்றால் எனக்கு முன்பே அவனை எடுத்து கொள்ளவேண்டும்!
“சிறு நிலவிற்கு ஒப்பானதொரு புன்சிரிப்பு
அந்த உதடுகளில் இருக்கும்.
வெடித்துச் சிரித்து விழி சுற்றி உழன்று
குழந்தையைப் போல உடைந்து
…ஏதோ ஒரு பறவை காயமேற்று
மனித மொழிகளற்று அலறும் போது
அம்மா மட்டுமே அறிவாள் அதன் மொழியை…
சுகத குமாரியின் கொல்வது எப்படி என்ற கவிதையின் வரிகளை நான் பைத்தியம் போல பிதற்றித் திரிந்த நாட்கள் அவை.
அமுதவன் என்ற அப்பாவைப் போல இருக்க முடியாது அம்மா. அப்பா இதைத்தான் செய்யமுடியும் என்ற வேலி கட்டி என்றும் குழந்தையை குழந்தையாகவே வைத்திருக்கும்போது, அம்மா அந்த சிட்டுக்குருவியை பறக்க கற்றுக் கொடுக்க நினைப்பாள். பல நேரங்களிலும் அவனைப் பற்றி நான் சொல்லும் கனவுகளை, ஆசைகளை பெண்ணைப் பற்றின உணர்வுகளை மடத்தனம் என்று புச்சமாய் தள்ளும் கணவனின் உடனிருந்து இந்தப் படத்தை பார்த்தது என்னை ஆனந்தப்படுத்தியது. பாப்பா லாலிபப்பை உதடுகளில் தேய்ப்பது பாலியல் ஈர்ப்பின் அடையாளமென்று கூட புரிந்து கொள்ள முடியாத ஒரு அப்பாவாகத்தான் இருந்தார் என் மகனின் அப்பா.
அமுதவன் படுக்கையில் பாப்பாவின் முதல் ரத்தம் பார்க்கும் காட்சியொன்றுண்டு. இந்த நொடியை எப்படி கடப்பதென்று தெரியாமல் திகைத்து நிற்கும் தகப்பன். பார்வையாளர்கள் மிகச் சிறந்த காட்சியென்று அதை சொல்லியிருக்கலாம். மம்முட்டியின் இயல்பான நடிப்பை சிலாகித்தும் பேசியிருக்கலாம். ஒரு அப்பா எதிர்கொள்ள வேண்டி வந்த அந்த நிமிடத்தை அம்மா எப்படி கையாண்டிருப்பாள்? போன வருடம்தான் என் மகனின் ஆண் குறியைச் சுற்றிலும் முடி வளரத் தொடங்கியிருந்தது. அதை அவன் என்னிடம்தான் காட்டினான். டிரவுசர் அவிழ்த்து என் முன்னால் நிர்வாணமாய் படுத்துக் கொண்டு ,பாரும்மா எனக்கு முடி வளருது என்று தெளிவற்ற மொழியில் பேசினான். மகன் நன்றாக வளர வேண்டுமென்ற பிரார்த்தனையிலிருந்த அம்மாவான நான் அதிர்ந்து போய் நின்றுவிட்டேன். இனி என்ன செய்வது? அம்மா வலிக்குது, சட்டென முழு வளர்ச்சி அடைந்துவிட்டிருந்த லிங்கங்கள் சுருண்டு மேலேறிப் போவதை சரி செய்து தரச் சொன்ன நாளில் நான் அவனை இறுக்கி அணைத்து அழுதேன்.
அவனுடைய அப்பாவிடம் சொன்னபோது சோர்ந்த மனதுடன் உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்து போய்விட்டார். ஒரு முறை எதிர்பாராமல் அவனுடைய ஆண்குறியைப் பார்த்த ஒரு சொந்தக்காரர் பிறகு தொலைபேசியில் “கடுக்காயைத் தூள் செய்து தண்ணீரில் கொதிக்க வைத்துக் கொடுத்தால் இப்படியான எண்ணங்கள் இல்லாமலிருக்கும்” என்று பேசினார். ஒவ்வொரு முறை பள்ளிக்கூடத்திற்குப் போகும்போதும் ஆசிரியர்களிடம், “என் மகன் பெண்பிள்ளைகளிடம் தேவையில்லாததை செய்கிறானா என்றும் ஆண் பிள்ளைகள் அவனிடம் மோசமாக நடந்து கொள்கிறார்களா என்றும் கவனிக்க வேண்டும்” என்று வெட்கமில்லாமல் கெஞ்சியிருக்கிறேன். அவர்கள் நான் ஏன் இப்படி சொல்கிறேனென்று யோசித்திருக்கலாம். ஒரு நாள் வேலை முடிந்து வந்தவுடன் அவன் தன் முதுகைக் காண்பித்தான். முதுகு முழுக்க கிள்ளியதன் நக வெட்டுகள் காயமாய் பதிந்திருந்தது. குழந்தை பருவ நாட்கள் நினைவில் வர அவளை கட்டிப் பிடித்திருக்கலாம். என்னால் அவளை குற்றம் சொல்ல முடியவில்லை. அவளும் இப்போது வளர்ந்த பெண்தானே.
அவர்கள் சாதாரண குழந்தைகள் இல்லை, அவர்களுக்கு இப்படியான உணர்வுகளோ ஆசைகளோ ஏற்படாது என்று நாம் நினக்கலாம். அறிவுக்கும் மன உணர்வுகளுக்கும் உடல் சார்ந்த எண்ணங்களுக்கும் மட்டுமே அவர்களுக்கு குறைபாடு இருக்கும். பிறகான நேரங்களில் அவர்கள் நம்மைப் போலத்தானே. சின்ன வயதில் அவர்களை வளர்ப்பது மிக இனிமையாக இருந்தது என்று அவர்கள் பெரியதாகும்போது புரிந்தது. அவர்களுடைய சாதாரணமான ஆசைகளை உடைத்தெறியாமல் மீண்டுமொரு வழிக்கு திருப்பி விடுவதுதான் கடினம். எவ்வளவு நாட்கள் ஆகுமென்று தெரியாது.
அமுதவன் மீண்டும் பாப்பாவின் அம்மாவைப் பார்க்கப்போகும் போது அவளுடைய கணவன் தங்களின் குழந்தையைப் பற்றி சொல்லும் ஒரு காட்சி இருக்கிறது. பேரன்பில் மிகவும் மகத்தான காட்சியென்றும் அதை சொல்லலாம். அங்கேதான் இயக்குனரின் கதையின் நுட்பம் வெளிப்பட்டிருந்தது. “போன மாசம்தான் குழந்தை பிறந்தது. எங்க குழந்தை நார்மலாக இருக்கிறது, ஒரு பிரச்சனையும் இல்ல” என்று சொல்லும்போது அமுதவன் என்ற அப்பா தோற்றுப் போவதும், தனிமைப்படுத்தப்படுவதும். பாப்பா என்ற மகளின் அசாதரண தன்மைக்கு தான் மட்டுமே காரணம் என்பதை சொல்லும் காட்சி. இல்லையென்றால் அவருடைய ஜீன் மட்டுமே பாப்பா எனும் அர்த்தமும் அதிலிருக்கிறது. அன்றிலிருந்து அவர் மரணத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கியிருக்கலாம். அசாதாரண குழந்தைகளை வளர்க்கும் எவ்வளவோ பெற்றோர்கள் எத்தனையோ முறை மனதால் அமுதவனைப் போல அந்த கைகளையும் பிடித்திழுத்து கடலில் இறங்கியிருக்கலாம், எத்தனையோ முறை இறந்தும் போயிருக்கலாம்.
“பேரன்பு” ஒரு சினிமாவல்ல, அது வாழ்க்கை. பார்வையாளர்களே, நீங்கள் பார்த்ததுதான் நாங்கள். எல்லா பலவீனங்களும் சுகவீனங்களும் கொண்டுள்ள சாதாரண அம்மாக்களும் அப்பாக்களும். தயவுசெய்து அந்த அம்மாவை குரூரமானவள் என்று சொல்லாமலிருங்கள்.
மம்முட்டி என்ற மகா நடிகனின் நடிப்பைப் பற்றி பேசாமலிருந்ததற்காய் என்னை மன்னியுங்கள். எனக்கு முன்னால் நடிப்பு தெரியவில்லை. நான் அமுதவன் என்ற அப்பாவை மட்டுமே பார்த்தேன், பாப்பா என்ற மகளை மட்டுமே பார்த்தேன். மீரா என்ற அன்புள்ள பெண்ணை மட்டுமே பார்த்தேன். பாப்பா, மீராவின் அன்பில் அம்மாவை கண்டெடுக்க முடியுமென்று நான் முழுமையாய் நம்பினேன். ஏனெனில் இவர்களுக்குத் தேவை அம்மாவும் அப்பாவும் இல்லை, அவர்களை நேசிப்பவர்கள்தான் அவர்களுடைய அம்மாவும் அப்பாவும்.
(ஸ்பாஸ்டிக் டிஸ் ஆர்டர் இருக்கும் ஒரு ஆண்பிள்ளையின் அம்மாவின் பதிவு)
இந்தியன் எக்ஸ்பிரஸ் மலையாளம் இணைய இதழ் பதிப்பிலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர், திருவண்ணாமலையை சேர்ந்த எழுத்தாளர் கே.வி.ஷைலஜா
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.