காந்தி vs பெரியார்: முரண்களில் விளைந்த பலன்கள்!

Periyar VS Mahatma Gandhi: பெரியார் காந்தியோடு முரண்பட்டு சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது.

By: Updated: September 17, 2018, 03:43:31 PM

தந்தை பெரியார் தமிழ் நிலத்தில் சுயமரியாதை சுடரை ஒளிரச் செய்தவர்! அவரது 140-வது பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 17) கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி-பெரியார் இடையே உருவான சித்தாந்த முரண், தமிழ்நாட்டுக்கு எப்படி நன்மைகளை உருவாக்கித் தந்தது? என்பதை இங்கே புதிய கோணத்தில் விவரிக்கிறார், எழுத்தாளர் அ.பெ.மணி.

அ.பெ.மணி

இந்தியாவிற்கு நிர்வாக விடுதலை வேண்டி உத்தமர் காந்தி போராடிக்கொண்டிருந்தார், நிர்வாக விடுதலையை விட சமூக விடுதலையே முக்கியம் என்று அவரோடு முரண்பட்டு ஐயா பெரியார் தனி வழி கண்டார்.

ஒட்டுமொத்த இந்தியாவும் ஆகஸ்ட் 15, 1947 அன்று ஆங்கிலேயரிடமிருந்து நிர்வாக விடுதலை மட்டும் பெற்ற போது தமிழகம், காந்தியாலும், பெரியராலும் ரெட்டை விடுதலை பெற்றது. வருணாசிரம தருமமும் அதன் தர்மங்களும் மனிதன் பிறக்கும்போதே அவர்களுடன் வருகின்றது என நம்புகின்ற ஒருவரால் எப்படி தீண்டாமைக் கொடுமைகளை முழுமனதாக எதிர்க்க முடியும்? என்ற கேள்வி காந்தி குறித்து பெரியார் மனதில் இருந்தது.

வைக்கம் போராட்டத்தை பற்றி எழுதிய காந்தி, பெரியாரைப் பற்றி எங்கேயும் குறிப்பிடவில்லை என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும்.
1925 ஆம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் இருந்து பெரியார் வெளியேறிய பிறகும் கூட காந்தியின் நிர்மாணத் திட்டங்களை விமர்சிக்கவில்லை, கதரையும் ஆதரித்தே வந்தார்.

ஆனால் அதே நேரத்தில் காந்தியாருக்கு வர்ணாசிரம கொள்கைகளின் பால் உள்ள நம்பிக்கைகளை கடுமையாக விமர்சிக்கவும் செய்தார்.1927 க்குப் பிறகு காந்தியாரின் மீதான விமர்சனங்களை பெரியார் கூர்மை படுத்தினார்.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தை ஏற்படுத்தி இந்து மதத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறார் என்ற செய்தி காந்தியை எட்டியது. ‘நம் ராமசாமியா இப்படி பேசுவது… அவரை நான் சந்திக்க வேண்டும்’ என்று காந்தி அழைத்ததன் பேரில் பெரியாரும் இராமநாதனும் பெங்களூர் சென்று காந்தியை சந்தித்தனர். அங்கே ராஜாஜியும் இருந்தார். பெங்களூரில் காந்தியுடன் பெரியார் இந்திய மதக் கட்டமைப்பு மற்றும் நம்பிக்கைகள் குறித்து மிக ஆழமாக உரையாடினார்.

காங்கிரஸில் இருந்து விலகி சுயமரியாதை இயக்கத்தில் மிகத்தீவிரமாக பெரியார் செயல்படத் துவங்கிய காலகட்டத்தில் சுயமரியாதை இயக்கத்தை அறிவு விடுதலை இயக்கம் என்று சொல்லலாம் என்கின்றார். ஒரு நேர்மையான மனிதன் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் உள்ளக் கட்டுப்பாட்டையும் நிர்பந்தத்தையும் நினைத்தால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும் என்று 25.9.29 குடியரசு இதழில் எழுதுகிறார்.

ஆன்மீக பெரியோர்களின் நோக்கம் ஆன்ம விடுதலை, அது மெய்யறிவு எனப்படும். தந்தை பெரியார் அறியாமை, மூடநம்பிக்கை இவைகளிலிருந்து ஒரு சமூகம் விடுதலை பெற வேண்டும் என்று எண்ணினார். மானுட விடுதலையை நோக்கி தமிழ்ச் சமூகத்தை நகர்த்தினார்.

இந்திய சமூகக் கட்டமைப்பையும், தமிழ் பெரு நிலத்திற்குள் வாழ்ந்த மக்களின் மன அமைப்பையும் ஒரே நேரத்தில் மிகச் சரியாகப் புரிந்துகொண்டு இவை இரண்டும் உருவாகி இருக்கின்றன. அக மற்றும் புற சிக்கல்களோடு தீவிரமாக உரையாடியவர் பெரியார். பெரியார் மூடநம்பிக்கைகளை சாடினார். எளிய மனிதர்களின் நம்பிக்கைகளை அவர் ஒரு போதும் குறை சொன்னது இல்லை. நம்பிக்கைக்கும் மூடநம்பிக்கைக்கும் என்ன வேறுபாடு?

ஒரு மனிதனோ? குடும்பமா? சமூகமோ? காலகாலமாக தங்களது வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு வளர்த்துக்கொள்வது நம்பிக்கை. புறக் காரணிகளால் ஒரு மனிதன் மீதோ, குடும்பத்தின் மீதோ, சமூகத்தின் மீதோ திணிக்கப்படுவது மூடநம்பிக்கை. மூடநம்பிக்கைகளை பகுத்துப் பார்த்தால் அதற்கு உள்ளேயே யாரோ ஒருவரின் சுயநலம் இருப்பதை உணர முடியும்.

மதம் என்பது சமூகத்தை துண்டாடுகின்ற ஒரு காரணியாக இருக்கிறது. ஆலயங்கள் என்பவை அதிகார கட்டுமானங்களாக இருக்கின்றன என பெரியார் கண்டுணர்ந்தார். இந்திய சமூகத்தின் மிகப்பெரிய ஆபத்தாக சாதிய படிநிலைகளை அவர் உணர்ந்தார். சமதர்ம சமுதாயம் உருவாவதற்கு சாதி மிகப் பெரிய தடையாக இருக்கும் என்பதை அறிந்து, சாதிய படி நிலைகளை தாங்கிப் பிடிக்கின்ற மதத்தின் மீது கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

எவ்வளவோ சீர்திருத்தங்களை பெரியார் செய்துள்ளார். பெயருக்குப் பின்னால் சாதியின் பெயரை இணைக்கின்ற வழக்கத்தை தமிழகத்திலிருந்து நீக்கிய பெருமை பெரியாரை சேரும். இந்தியா முழுவதும் ஒவ்வொரு மனிதனும் சாதிப்பெயரை தன்னுடன் வைத்தபடியே உள்ளனர். ஆனால் தமிழகத்தின் நான்கு தலைமுறைகள் சாதிய பெயர்களை தாண்டி வந்து விட்டனர். இந்தியா பெரியாரிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான சிந்தனை இது.

பெரியார் சித்தாந்தரீதியாக காந்தியோடு முரண்பட்டு காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டதன் பலனை இன்று தமிழகம் முழுவதுமாக அனுபவிக்கிறது. ஒருவேளை காந்தியோடு பெரியார் தொடர்ந்து பயணித்து இருப்பாரேயானால் மிக முக்கியமான விடுதலைப் போராட்ட வீரராக அவர் அறியப்பட்டு இருக்கலாம். ஆனால் காந்தியோடு உண்டான முரணால் பெரியார் தமிழ்ச் சமூகத்தில் முன்னெடுத்த உரையாடல் தமிழ் பெருநிலத்தை பல சமூகச் சிக்கல்களில் இருந்து மீட்டது எனலாம்.

இன்று இந்தியாவிலேயே பெண்களுக்கு போதிய உரிமை கொடுக்கக்கூடிய மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருக்கின்றது, இதற்குப் பெரியாரே காரணம். அறிவுக்கு ஒவ்வாத எதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதை பெரியார் வலியுறுத்தி வந்தார். அதே நேரத்தில் விஞ்ஞான முன்னேற்றங்களை ஒதுக்கி விடக்கூடாது என்ற உயரிய சிந்தனையும் அவரிடம் இருந்தது.

அவர் மரணம் அடைவதற்கு சில காலத்திற்கு முன்னால் கம்ப்யூட்டர் என்ற ஒன்று வந்திருக்கிறது என்பதை அறிந்து அதைச் சென்று பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை கேட்டு அறிந்தவர் தந்தை பெரியார். பகுத்தறிவுக்கு ஒவ்வாத மூடநம்பிக்கைகளை கடந்து வாழ்வை எளிதாக்குகின்ற விஞ்ஞான நம்பிக்கைகளை கைக்கொண்டு தமிழ் பெருங்குடி இன்று உலகம் முழுக்க பெருவெற்றி பெற்ற ஒரு இனமாக இருப்பதற்கு பெரியாரே முதற் காரணம்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Periyar ev ramasamy mahatma gandhi ideological differences

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X