பெருமாள் முருகன், எழுத்தாளர்
எழுதுவதற்கு என்று ஓரிடமும் நேரமும் எனக்கு நிரந்தரமாக அமைந்ததில்லை. மிகச் சிறுவயதிலேயே எழுத ஆரம்பித்துவிட்டேன். அப்போதெல்லாம் எங்கள் நிலத்திலிருந்த தானியக் களமாகிய பாறைதான் எழுதுமிடம். அகலமான வட்ட வடிவப் பாறை. சிறுபாழி ஒன்றும் உண்டு. மழைக்காலத்தில் அதில் நீர் நிறைந்திருக்கும். வட்டத்திலிருந்து ஒருபுறம் மட்டும் வால் போலக் கீழிறங்கிச் செல்லும். பனைமரத்தின் மேலிருந்து பார்த்தால் வித்தியாசமான மிருகம் ஒன்று படுத்திருப்பது போலப் பாறையின் வடிவம் தெரியும்.
சுற்றிலும் பயிர்கள் வளர்ந்து நிற்கும் பருவத்தில் கருப்பைக்குள் இருப்பது போலத் தோன்றும். அறுவடை முடிந்த கோடையில் விரிந்த வெளியின் சுதந்திரத்தை அனுபவிக்க முடியும். இளவெயில் படரும் காலையும் ஓரத்து மர நிழல்கள் நிறைக்கும் மாலையும் அந்தப் பாறையில் உட்கார்ந்து எதையாவது வாசிப்பேன்; எழுதுவேன்.
மடியில் குறிப்பேட்டை வைத்துக்கொண்டு எழுதுவேன். சிலசமயம் குப்புறப் படுத்துக்கொண்டு எழுதுவேன். பாறையின் சொரசொரப்பு இதம் தரும். முன்னால் வைத்து எழுதுவதற்கு வாகாக பட்டைக்கல் ஒன்றைப் போட்டு வைத்திருந்தேன். அதுதான் மேஜை. உணவுக்காக அம்மா ஓங்கிக் குரல் கொடுத்து அழைப்பார். பொருட்படுத்தாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இடைவெளி விட்டு ஐந்தாறு முறை அழைப்பு வந்த பிறகு மனமில்லாமல் மெல்லக் கிளம்புவேன்.
எங்கள் வீட்டிற்கு 1993 வரை மின்சார இணைப்பு கிடையாது. ஆகவே இருட்டிய பிறகும் பாறையில் இருப்பதுண்டு. வளர்பிறை நாட்களில் நிலவொளி எனக்கு வெளிச்சம் தரும். அதில் வாசிக்க இயலாது. ஆனால் எழுதலாம். அப்படி நிலவொளியில் உருவான என் பிள்ளைக் கிறுக்கல்கள் ஏராளம். அப்பாறை என் கல்லூரிக் காலம் வரைக்கும் மனதுக்கு உகந்த ஏகாந்த வெளியாக இருந்தது.
இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிப்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்
அதன் பிறகு வெவ்வேறு ஊர்கள்; வெவ்வேறு அறைகள்; வீடுகள். எங்கும் என் மனதுக்குப் பிடித்தமான இடம் அமையவே இல்லை. 2005ஆம் ஆண்டு நாமக்கல்லில் சொந்த வீடு வாங்கினேன். அருமையான மொட்டை மாடி கிடைத்தது. வெயில் காலத்தில் என் படுக்கையும் மொட்டை மாடியில்தான். இரவுகளில் அங்கிருந்து நிறைய எழுதியிருக்கிறேன். என்றாலும் திருப்தியில்லை. எழுதவும் வாசிக்கவும் நிரந்தர அமைப்பு ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளும் விருப்பம் வந்தது. நினைத்த நேரமெல்லாம் மொட்டை மாடிக்குப் போயிருக்க முடியாது. நகரத்துக்கே உரிய கொசுத் தொல்லை மொட்டை மாடியிலிருந்து விரட்டும்.
2009இல் என் அம்மாவுக்கென ஓர் அறை உருவாக்கும் சாக்கில் எனக்கென புத்தக அறை ஒன்றையும் கட்டிக்கொண்டேன். மாடியில் ஒருபாதியில் அம்மாவின் அறையும் என் புத்தக அறையும். இன்னொரு பாதியில் அழகான தகரக் கூரை போட்டுச் மூன்றுபுறம் திறந்த பந்தல் அறை (shed). புத்தக அறையும் பந்தல் வெளியும் என் எழுத்துக்கான இடங்கள். இரண்டு இடங்களிலும் மேஜைகள் இருக்கின்றன. அவ்வப்போது பயன்படுத்தும் புத்தகங்களை கை நீட்டி எடுக்கும்படி வைத்துக்கொள்ள அலமாரிகள் இருக்கின்றன.
கொரானோ தனிமைப்படுத்தல் பொழுதில் பந்தல் அறைப் பகுதியில்தான் என் நேரம் கழிகிறது. மடிக்கணினி, அதனோடு இணைத்த ஒலிவாங்கிகள், புத்தகங்கள் என் மேஜையிலும் சிறிய அலமாரியிலும் இருக்கின்றன. வாசிப்பும் எழுத்தும் அதன்முன் தான் நடக்கின்றன. ஏதாவது பாடல் கேட்டுக்கொண்டே எழுதுவது என் இயல்பு. ஒருபுறம் முருங்கை மரம் ஒன்றும் கறிவேப்பிலை மரம் ஒன்றும் இருக்கின்றன.
முருங்கைப் பூக்களுக்கு வண்ணத்துப் பூச்சிகளும் தேன்சிட்டுகளும் வரும். கறிவேப்பிலைப் பழங்களைக் குயில்கள் விரும்பி உண்ணும். மரங்களிலும் சுற்றுச் சுவர்களிலும் காகங்களும் தவிட்டுக் குருவிகளும் உட்கார்ந்து இளைப்பாறும். சற்றுத் தொலைவிலிருந்து கரிக்குருவிகள் ஒலியெழுப்பும் அணில்கள் மரமேறியும் சுவர்களில் குதித்தும் ஓடிக் கொண்டிருக்கும். அதுவும் காலை நேரத்தில் அவற்றை எல்லாம் ஒருசேரப் பார்க்கலாம். தம் வேலைகளை அவை பார்த்துக் கொண்டிருக்க என் வேலைகளை நான் செய்து கொண்டிருப்பேன்.
அவற்றுக்குத் தங்களைப் போல நானும் ஓர் உயிர். அவ்வளவுதான். என் மேல் அவற்றுக்கு நம்பிக்கை இருக்கிறது. இந்த ஆள் தங்களை விரட்டவோ தொந்தரவு செய்யவோ மாட்டான் என்பது அனுபவத்தில் தெரிந்திருக்கிறது. எனக்கும் அவை எந்தத் தொந்தரவையும் தருவதில்லை. நாங்கள் அவரவர் இருப்பை மதிக்கிறோம். அவ்வப்போது சந்தோசக் குரல் எழுப்பிப் பேசிக் கொள்கிறோம். மௌனமாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம்.
இந்தச் சூழலில் எழுதி முடித்துள்ள சில சிறுகதைகளைச் சற்றே உரக்க வாசிக்கிறேன். அண்டங்காக்கைகள் இரண்டு தலையைத் தாழ்த்தி வியப்போடு பார்க்கின்றன. கறிவேப்பிலை அடர்த்திக்குள் மறைந்திருந்து குயில்கள் கேட்கின்றன. அணில்கள் ஆரவாரமிட்டுக் கத்துகின்றன. என் குரல் இன்னும் கொஞ்சம் உயர்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.