M M Ansari
கட்டுரை ஆசிரியர், பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் உறுப்பினர் , மத்திய தகவல் ஆணையக் குழுவின் முன்னாள் உறுப்பினர் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பேச்சு வார்த்தைக் குழுவில் கலந்து கொண்டவர் .
2017 ஆம் ஆண்டில் செங்கோட்டையிலிருந்து தனது சுதந்திர தின உரையில், பிரதமர் நரேந்திர மோடி, “காஷ்மீரின் பிரச்சினைகளை காஷ்மீர் மக்களை அரவணைப்பதன் மூலம் மட்டுமே தீர்க்க முடியும்,தோட்டாக்களிலோ அல்லது துஷ்பிரயோகத்தினாலோ அல்ல ” என்று முழங்கினார்.
ஆனால், அதே பிரதமர் ஆகஸ்ட் 8-ம் தேதி தனது சிறப்பு உரையில்,காஷ்மீர் பிரச்சனையின் மைய புள்ளியான 370 வது பிரிவை ரத்து செய்வது தொடர்பான தனது அரசின் நடவடிக்கையை நியாயப்படுத்தவும் செய்கிறார். இதில் என்ன வேடிக்கை என்றால் முக்கியமான தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு,அவர்களிடம் ஆலோசிக்கபடாமலே இந்த முடிவு நடை முறைப்படுத்தப்பட்டது.
ஆகவே, காஷ்மீர் குழப்ப நிலையைத் தீர்ப்பதற்கான உத்தி கடந்த ஒரு வருடத்தில் தலைகீழாக மாறிவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை .
தகவல் தொடர்பு முறை தடுக்கப்பட்டதாலும், 144 பிரிவு தடை உத்தரவு அமலில் இருந்ததாலும், அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான இந்த முடிவு, காஷ்மீர் மக்களின் உணர்வுகளை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதை நம்மால் அளவிடவும் முடியாது.
இந்த சரத்து 370, இந்திய நாடாளுமன்றத்திற்கு காஷ்மீர் நிலப்பகுதியில் பாதுகாப்பு, வெளிவிவகாரங்கள் மற்றும் தகவல்தொடர்புகள் ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டும் சட்டம் இயற்றும் அதிகாரம் அளித்திருந்தது.மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு எந்தந்த நாடாளுமன்ற சட்டங்கள் பொருந்தும் என்பதை அவர்களே தீர்மானிக்கும் உரிமையும் இருந்தது.
தற்போது, ரத்து செய்யப்பட்டு பிரிவு 35 ஏ, ஜம்மு-காஷ்மீரின் சட்டமன்றத்திற்கு நிரந்தர குடியிருப்பாளர்கள் யாரென்று வரைமுறைப் படுத்துவதற்க்கும், அவர்களுக்கு சொத்துரிமை , மற்றும் சிறப்பு சலுகைகளை வழங்குவதற்கும் அதிகாரம் அளித்திருந்தது.
ஆனால், பிரதமர் ஆகஸ்ட் 8 சிறப்பு உரையில் "சிறப்பு அந்தஸ்தை 370-இ ரத்து செய்வதன் மூலம், காஷ்மீர் மக்களுக்கு நாட்டின் பிற பகுதிகளில் அனுபவிக்கும் உரிமைகள் கிடைக்கப் போகிறது" என்கிறார். இம்முழக்கத்தில் அர்த்தம் உள்ளதா? இம்முழக்கம் அம்மக்களின் காதுகளில் ஒலித்திருக்குமா?
2010-11 ஆம் ஆண்டில், அப்போதைய மாநில முதல்வராக இருந்த ஒமர் அப்துல்லா மற்றும் மறைந்த முப்தி முகமது சயீத் அவர்கள் நாட்டின் மிக சக்திவாய்ந்த முதல்வர்கள் என்று தங்களை எண்ணினார்கள்,ஏனெனில் 370 வது பிரிவு அவர்களுக்கு வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற அதிகாரம் அளித்தது. ஆனால் பிரதமர் ஆகஸ்ட் 8-ம் தேதி சிறப்பு உரை இதற்க்கு நேர்மாறாகவே உள்ளது.
நிரந்தர கொந்தளிப்புக்கு மத்தியிலும், ஜம்மு-காஷ்மீர் சமூக வளர்ச்சி குறியீடுகளை மற்ற இந்திய மாநிலங்களுடன் ஒப்பிடும் வகையில் தான் உள்ளது. இருப்பினும், சிக்கல் என்னவென்றால், நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் ஒருபோதும் திறம்பட அங்கு இந்த அரசால் செயல்படுத்தப்படவில்லை. உதாரணமாக, வணிக மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்த காஷ்மீரிகளுக்கு வாய்ப்புகளை வழங்கும் லைன் ஆப் கன்ட்ரோல் வர்த்தகம், இந்திய அரசாங்கத்தால் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. அதேபோல்,ஜம்மு-காஷ்மீர் மாணவர்களுக்கான பிரதமரின் சிறப்பு உதவித்தொகை திட்டம், பெயரளவில் மட்டும்தான் உள்ளது.இத்திட்டத்தில் மாணவர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சரியான நேரத்தில் பணம் அரிதாகவே வழங்கப்படுகிறது. ஆகவே, 370 வது பிரிவால் தான் நிர்வாக சீர்கேடு நடக்கிறது என்ற பிரதமரின் விமர்சனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. மேலும், 370 வது பிரிவின் காரணமாக செயல்படுத்த முடியாத பல நலத்திட்ட நடவடிக்கைகள் பிரதமர் உரையில் இருந்தது. ஆனால், மத்திய அரசாங்கதின் எதேர்ச்சிய போக்கினால் தான் பாஜக-பிடிபி கூட்டணியின் குறைந்த பட்ச செயல்திட்டத்தைக் கூட நடைமுறைப்படுத்த முடியாமல் போனது. உதாரணமாக, குறைந்த பட்ச செயல்திட்டத்தில் சொல்லப்பட்ட புலம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிதர்களின் மறுவாழ்வில் இதுவரையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
மேலும் , ஆகஸ்ட் 8-ம் தேதி பிரதமர் மோடி தனது சிறப்பு உரையில்,காஷ்மீரில் நடைபெறும் வம்சாவளி அரசியலால் தான் அங்கு இளைஞர்களுக்கு அரசியல் தலைமைத்துவ வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது என்றார்.மேலும், இந்த சிறப்பு அந்தஸ்து ரத்தால் இனி அம்மக்களுக்கு சுதந்திரமான, நியாயமான தேர்தல்கள் கிடைக்கும் என்று உறுதியளித்தார். ஆனால், சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலுடன் அம்மாநில சட்டமன்றத் தேர்தலை ஏன் நடத்தப்படவில்லை? என்ற கேள்விக்கு அவர் எந்த விளக்கமும் தரவில்லை.
உண்மையில், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்துசெய்து அதை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க இந்த அரசு என்றைக்கே தனது மனதினை தயார் செய்துவிட்டது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. பி.டி.பி-என்.சி ஆட்சி அமைக்க முடிவு செய்தபோது, சட்டசபையை கலைந்தது இதற்கான சான்று.
ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று பிரதமர் சரியாகக் கூறியிருந்தாலும், சர்வதேச ஒப்பந்தங்கள், குறிப்பாக பாகிஸ்தானுடன் அவ்வப்போது விவாதிக்கப்படும் பிரச்சினைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும். சிம்லா ஒப்பந்தத்தின் கீழ், “இரு நாடுகளுக்கும் இடையிலான காஷ்மீர் பிரச்சினைகள் இறுதித் தீர்வு தீர்க்கப்படவேண்டிய சூழ்நிலையில் தான் உள்ளது ,ஆகையால், இரு தரப்பினரும் ஒருதலைப்பட்சமாக நிலைமையை மாற்றக் கூடாது, மேலும் இரு நாடுகளும் அமைதியான மற்றும் இணக்கமான உறவுகளைப் பாதிக்கும் எந்தவொரு செயல்களுக்கும்,நிறுவனஙகளுக்கும், அரசு சார்பில் எந்த உதவிகளும் செய்யக் கூடாது ” என்று தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது .எனவே, சிறப்பு அந்தஸ்து சரத்து 370-ஐ ஒருதலைப்பட்சமாக ரத்து செய்ததும், ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்ததும் மேற்கண்ட விதிமுறையை மீறுவதற்கு ஒப்பாகும்.
காஷ்மீர் சர்ச்சையைத் தீர்ப்பதற்க்கு அடல் பிஹாரி வாஜ்பாயின் ‘இன்சானியாத், காஷ்மீரியத் மற்றும் ஜம்ஹூரியத்’ என்ற கொள்கைகளை பின்பற்றுவேன் என்று பிரதமர் பலமுறை உறுதியளித்திருந்தார். ஆனால் அக்கொள்கையை பின்பற்ற அவரின் அரசாங்கம் கவலைப்பட்டதாய் தெரியவில்லை.
370 மற்றும் 35 ஏ பிரிவுகளை ரத்து செய்து, வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களில் பாஜகவுக்கு முன்னிலைப்படுத்துவதற்கும், ஜம்மு-காஷ்மீரில் பதற்றத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய தனது அரசின் முயற்சிகளை மறைப்பதற்கும் எடுக்கபப்ட்ட இந்த முடிவால் காஷ்மீர் மக்களுக்கு எப்படி அமைதி வரும் ?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.