பேராசிரியர் அருணன்
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் 3 கட்டமாக அவரது கட்சியின் தமிழக நிர்வாகிகள் மத்தியில் காணொளியில் உரையாடியிருப்பது, ஒரு தலைவருக்குரிய நல்ல பண்புதான். கஜா பாதிப்பின்போது மக்களை சந்திக்க அவர் வராவிட்டாலும்கூட, அவரது கட்சியினரிடம் பேசுவதை நான் வரவேற்கவே செய்கிறேன்.
ஆனால் அவரது கட்சியினர் கேட்ட கேள்விக்கே பிரதமரிடம் பதில் இல்லை என்பதுதான் பரிதாபம்! புதுவையைச் சேர்ந்த பா.ஜ.க. நிர்வாகி ஒருவர், ‘மத்திய தர வர்க்கத்தினரிடம் கறாராக வரி வசூலிக்கிறோம். ஆனால் அவர்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லை. இது நம்ம கட்சியை பாதிக்காதா?’ என கேள்வி எழுப்புகிறார். உடனே, ‘வணக்கம் புதுச்சேரி’ எனக் கூறி பேச்சை முடித்துக் கொள்கிறார் மோடி.
சொந்தக் கட்சி நிர்வாகி ஒருவர் கேட்கும் கேள்விக்கே பிரதமரிடம் பதில் இல்லை. அவர் ஏன் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிறார்? என்பது இப்போது புரிகிறதா? இதில் வேடிக்கை என்னவென்றால், இனி இதுபோல கேள்வி எழுப்ப அடுத்தக்கட்ட கூட்டங்களில் பா.ஜ.க. நிர்வாகிகளுக்கே அனுமதி கிடையாதாம்.
புதுச்சேரி விவகாரம் முகநூலில் வைரல் ஆனவுடன், அதற்கு பிந்தையக் கூட்டங்களில் எதிர்க்கட்சிகளை தாக்கிப் பேச ஆரம்பித்திருக்கிறார் மோடி. இதில் அவர் கில்லாடி என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
முதல் அம்சமாக, ‘எதிர்க்கட்சிகளின் கூட்டணி கொள்கையற்ற, அதிகார நோக்கிலான கூட்டணி’ என்கிறார். கூட்டணி என்பதே அதிகாரத்திற்காகத்தானே? வாஜ்பாய் காலம் முதல் இவர்கள் எப்படி கூட்டணி அமைத்தார்கள்? இப்பக்கூட மத்தியில் மெஜாரிட்டி இருந்தாலும்கூட, சில கட்சிகளுக்கு அமைச்சர் பதவிகளை கொடுத்துத்தான் ஆட்சி நடத்துகிறார்கள்.
காங்கிரஸைவிட, இடதுசாரிகளைவிட அதிகமாக பா.ஜ.க.வை கிண்டல் - கேலி செய்கிற சிவசேனா தலைவரை அமித்ஷா சென்று பார்க்கிறார். அந்தக் கூட்டணி அதிகாரத்திற்கு இல்லையா? எனவே கொள்கையற்ற கூட்டணி என குறிப்பிட பிரதமருக்கு அருகதை இல்லை.
அரசியல் என்பதே அதிகாரத்தை அடைவதற்காகத்தான். அந்த அதிகாரத்தை மக்களுக்கு பயன்படுத்துகிறோமா, பெரும் கார்ப்பரேட்களுக்கு பயன்படுத்துகிறோமா? என்பதுதான் பிரச்னை. விவசாயிகள் முதல் பல்வேறு தரப்பினரும் இந்த ஆட்சியில் எப்படி பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என எல்லோருக்கும் தெரியும்.
இன்னொன்று, அவசர நிலையை கொண்டு வந்த காங்கிரஸுடன் மற்ற கட்சிகள் கூட்டணி அமைப்பது பற்றி பிரதமர் குறிப்பிடுகிறார். அது முடிந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகிவிட்டது. ‘அப்போதாவது, நேரடியான நெருக்கடி நிலை. இப்போது மறைமுக நெருக்கடி நிலை இருக்கிறது!’ என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டதை நானும் சுட்டிக்காட்டுகிறேன்.
அதைவிட அதிகமாக சொல்வதானால், அது அவசர நிலை ஆட்சி. இப்போது இருப்பது, மனுவாத பாசிச ஆட்சி. ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், இது ஹிட்லர், முசோலினி மாதிரியான பாசிசம் அல்ல. ஆர்.எஸ்.எஸ் கொண்டு வருகிற ஜாதி ரீதியான, மத ரீதியான, மனுதர்ம ரீதியான ஆட்சி.
எனவேதான் இந்த ஆட்சியை அகற்ற விரிந்த அணிவகுப்பு தேவைப்படுகிறது. அது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம். ஆனால் அனைவரின் நோக்கமும் பா.ஜ.க. ஆட்சியை அகற்றவேண்டும் என்பதுதான்.
திரிபுராவைப் போல தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்றும் பிரதமர் பேசியிருக்கிறார். திரிபுராவில் காங்கிரஸில் இருந்து திரிணாமுல் காங்கிரஸுக்கு சென்ற 8 எம்.எம்.எல்.ஏ.க்களை அதிகார பலம், பண பலம் கொண்டு கைப்பற்றி தங்களின் ஆதாரபலமாக மாற்றிக்கொண்டு, அதன்பிறகே ஆட்சியைப் பிடித்தனர். அதனால் நாங்கள் ஆட்சியை இழந்தோம். அந்த வேலையை இங்கு செய்யப் போகிறார்கள் என்றால், நான் சொல்ல ஒரு வரிதான் இருக்கிறது... ‘உஷார் அ.தி.மு.க.’!
எம்.ஜி.ஆர். ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது குறித்தும் பிரதமர் பேசியிருக்கிறார். 1980-ல் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றதும், எம்.ஜி.ஆர். ஆட்சியை காங்கிரஸ் கலைத்தது தவறுதான். பின்னர் இட ஒதுக்கீடு விஷயத்தில் செய்த தவறை திருத்திக்கொண்டு, கூடுதலாக பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி அடுத்த சட்டமன்றத் தேர்தலை எம்.ஜி.ஆர். வென்றார்.
பொதுவாக பா.ஜ.க.வினர் எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதாவையும் அவ்வளவாக விமர்சிக்க மாட்டார்கள். ஆனாலும் அவர்கள் இருவரும் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள். 2014 தேர்தலில்கூட, ‘இந்த லேடியா, மோடியா?’ என்றுதான் ஜெயலலிதா கேட்டார்.
இப்போது தேர்தலுக்கான சில மாத இடைவெளியில் எம்.ஜி.ஆர். அபிமானிகளை ஈர்ப்பதற்காக அவரது நினைவு தினத்திற்கு முன் தினம் மோடி இதை பேசியிருக்கலாம். அல்லது, அதிமுக.வுடன் கூட்டணி என்கிற கணக்கை வைத்திருக்கலாம். இதையெல்லாம் மக்கள் ஏற்கமாட்டார்கள். வரும் தேர்தல் இதை நிரூபிக்கும்.’
(பேராசிரியர் அருணன், மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். அந்தக் கட்சியின் சார்பில் ஊடக விவாதங்களில் பங்கேற்று வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.