வானதி சீனிவாசன்
2019 தேர்தல் முடிவு, இந்தியாவுக்கு இன்னும் பிரகாசமான வெளிச்சத்தை பாய்ச்சியிருக்கிறது. உலகம் வியக்கும் மாற்றங்களை இந்தியாவில் கொண்டு வருவதற்கான வாய்ப்பை பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய மக்கள் வழங்கியிருக்கிறார்கள்.
அடித்தட்டு மக்களுக்காக பிரதமர் மோடி முன்னெடுத்த திட்டங்கள், இதுவரை நாட்டை ஆண்ட காங்கிரஸுக்கு மாற்றாக இருந்தது. அதற்கான பலனாகவும் இந்தத் தேர்தல் முடிவைப் பார்க்கலாம். 5 ஆண்டுகளுக்கு முன்பு என்ன வாக்குறுதிகளை பிரதமர் கொடுத்தாரோ, அவற்றை நிறைவேற்றியிருக்கிறார். கடையிலும் கடைக்கோடி மக்கள் எனக்கு முக்கியம் என்றார் பிரதமர். அந்த மக்கள் அரசாங்கத்தின் பலன்களை அனுபவிக்கத் தொடங்கியதன் வெளிப்பாடுதான் இந்த அதிகப்படியான வெற்றி.
தலைவர்களின் செயல்பாடுகளை மக்கள் பார்க்கிறார்கள். கண் முன்னே அவர்களுக்கு கிடைக்கும் பலன்களையும் பார்க்கிறார்கள். இந்த நாடு எதிரிகளின் கைகளில் போகாதபடி, ஒரு வலுவான தலைமை இருப்பதையும் பார்க்கிறார்கள். அந்த வகையில் வலுவான தலைமைக்கும் எழுச்சியான இந்தியாவுக்கும் கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.
வானதி சீனிவாசன்
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 6 மாதங்களுக்கு முன்பு அரசாங்கம் அமைக்கும் வாய்ப்ப்பை நாங்கள் இழந்தோம். ஆனால் அந்த மாநிலங்களில் இப்போது மிகப் பெரிய வெற்றியை மக்கள் கொடுத்திருக்கிறார்கள். பிரதமராக யார் வரவேண்டும் என்கிற சூழல் வரும்போது தெளிவாக மோடி என மக்கள் முடிவெடுத்திருப்பதை இது காட்டுகிறது.
எதிர்க்கட்சிகள் எவ்வளவோ முயன்றும், ஒன்றாக இணைந்தும் பிரதமர் மோடியின் எழுச்சியை தடுத்து நிறுத்த முடியவில்லை. அகில இந்திய அளவைப் பொறுத்தவரை 2014-ல் பெற்ற வெற்றியைவிட அதிக எண்ணிக்கையைப் பெற்றிருக்கிறோம். குறிப்பாக எங்கெல்லாம் பாஜக இல்லையென்று பலரும் சொன்னார்களோ, அதை மாற்றியமைக்கும் வகையில் பாஜக வென்றிருக்கிறது.
மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காத நிலையில், அங்கு பாஜக 2-வது இடத்திற்கு வந்திருக்கிறது. ஒடிஸாவில் புதிதாக அதிகப்படியான எம்.பி.க்களை பெற்றிருக்கிறோம். ஏற்கனவே வட கிழக்கு மாநிலங்களில் வலுவாக காலூன்றியிருக்கிறோம்.
எங்களுக்கு இன்னும் சவாலாக இருப்பவை தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்கள்தான். தமிழகம் பாஜக.வுக்கும், எங்கள் கூட்டணிக் கட்சிகளுக்கும் புதிய வாய்ப்பை கொடுக்கும் என எதிர்பார்த்தோம். அதற்கு மாறாக இன்னொரு பக்கம் இருக்கும் கூட்டணிக்கு மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். இது பாஜக.வைப் பொறுத்தவரை வருத்தமான விஷயம்தான்.
இங்கு கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட தவறான பிரசாரங்கள் காரணமாக வெற்றி நழுவிப் போயிருக்கிறதோ என சந்தேகம் வருகிறது. ஆனாலும் வரக்கூடிய காலத்தில் இதை மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் பாஜக மேற்கொள்ளும்.
ஏற்கனவே 5 வருடங்கள் மக்களுக்கான பணியை பிரதமர் எப்படி மேற்கொண்டாரோ, அதைவிட வேகமாக மக்கள் பணியை செய்ய பிரதமர் காத்துக்கொண்டிருக்கிறார். இன்னும் அதிகமாக பலன்களை நாட்டின் முன்னேற்றத்திற்கு எதிர்பார்க்கலாம். புதிதாக எங்கெங்கு கட்சியை வலுப்படுத்தி ஆட்சிக்கு கொண்டு வர வேண்டுமோ அதையும் செய்வோம். வரக்கூடிய காலங்களில் மிக விரைவான மாற்றங்களை அந்த மாநிலங்களில் பார்க்க முடியும்.
தமிழகத்திற்கு இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் நிதி உதவிகளையும் திட்டங்களையும் பிரதமர் மோடி அளித்திருந்தார். நிச்சயம் இன்னமும் அது தொடரும்.
(வானதி சீனிவாசன், தமிழ்நாடு பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத் தலைவர்)