அரசியல்வாதிகளால் ஆரோக்கியம் கெடுகிறது மீம்

நகைச்சுவைதன்மையோடு ரசிக்கக் கூடியதாக உருவாக்கப்பட்டு வந்த மீம்கள், யாருடைய தலையீட்டுக்குப் பின்னர் மோசமானதாக மாறியது என்பதை விவரிக்கிறது.

By: October 27, 2017, 8:23:59 PM

இரா.குமார்

அரசியல்வாதிகளையும் நாட்டு நடப்புகளையும் கேலி செய்தும், விமர்சனம் செய்தும் சமூக வலைத் தளங்களில் ’மீம்’கள் வெளியிடப்படுகின்றன. பத்திரிகைகளில் வெளிவரும் கருத்துப்படம் அல்லது கேலிச்சித்திரம் என்று அழைக்கப்படும் கார்டூன்களின் நவீன வடிவந்தான் மீம்கள்.

நாட்டு நடப்பையும் அரசியல் நிகழ்வுகளையும் அரசியல்வாதிகளையும் நகைச்சுவையாக கேலி செய்யும் வகையிலும் விமர்சிக்கும் வகையிலும் பத்திரிகைகளில் கார்டூன்கள் வெளியிடப்படுகின்றன. யாரை விமர்சித்து கார்டூன் வெளியிடப்படுகிறதோ, அவரே அந்த கார்டூனைப் பார்த்தாலும் பார்த்து, படித்துவிட்டு ரசித்துச் சிரிக்க வேண்டும். அப்படி, அறிவுபூர்வமாகவும் அங்கதமாகவும் கார்டூன் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். யாருடைய மனத்தையும் புண்படுத்துவதாக கார்டூன் இருகக் கூடாது என்று சொல்வார்கள்.

ஒரு காலத்தில் சங்கர் கார்டூன்கள் மிகவும் பிரபலம். இவர் அடிக்கடி, பிரதமர் நேருவின் செயல்பாடுகளை கேலி செய்து கார்டூன் வரைவாராம். அந்த கார்டூன்களை நேரு மிகவும் ரசிப்பார் என்று சொல்வார்கள். தன்னைத்தான் கேலி செய்து கார்டூன் வரைந்துள்ளார் என்று தெரிந்தும், அதையும் தாண்டி, அதை அவரே ரசிக்கும் வகையில் சங்கர் கார்டூன்கள் அமைந்திருந்தன். இதுதான் ஒரு கார்டூனிஸ்டின் வெற்றி. தமிழ் பத்திரிகை உலகில் முதன் முதலாக கார்டூனை அறிமுகப்படுத்தியவர் பாரதியார்தான். அவரே கார்டூன் வரைவார்.

காலம் மாற மாற, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப எல்லாமும் மாறிகொண்டிருக்கிறது. கார்டூனும் இதற்கு விதி விலக்கு அல்ல. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கார்டூன் தன்னை மாற்றிக்கொண்டுள்ளது. அப்படி மாற்றிக்கொண்டுள்ள கார்டூனின் இன்றைய நவீன வடிவம்தான் மீம்.

அரசியல்வாதிகள், நடிகர்கள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோரைக் கேலி செய்து மீம்கள் வெளியிடுகின்றனர். இவர்களை மீம் க்ரியேட்டர்ஸ் என்று சொல்கிறோம். திரைப்படத்தின் ஸ்டில்களைப் பயன்படுத்தியும் வீடியோக்களை பயன்படுத்தியும் மீம்களை உருவாக்குகின்றனர். இதில் அதிகம் பயன்படுத்தப்படுவது, நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் டயலாக்களும் ஸ்டில்களும்தான்.

பிரபலங்களைக் கலாய்க்கும் மீம்கள், சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி மிகுந்த வரவேற்பை பெறுகின்றன். மீம்களில் அதிகம் சிக்குபவர்கள் யார் யார் என்று பார்த்தால், வைகோ, நாஞ்சில் சம்பத், தமிழிசை சவுந்தர்ராஜன் ஆகியோர்தான் அதிகம் சிக்க்குகின்றனர்.

ஆரம்ப காலத்தில் மிகவும் நாகரிகமாகவும் அறிவு பூர்வமாகவும் யாருடைய மனத்தையும் புண்படுத்தாமலும் ரசித்துச் சிரிக்கத் தக்க வகையில்தான் மீம்கள் இருந்தன். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது. மீம்கள் எல்லாமும் ஆரோக்கியமாக இல்லை. காரணம் இதிலும் அரசியல்வாதிகள் உள்ளே புகுந்ததுதான்.

மீம் கிரீயேட்டர்கள் பெருபாலும் படித்தவர்கள்; சமூக சிந்தனையும் புரிதலும் உடையவர்கள். கற்பனைத் திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர்கள். மேலும் இவர்கள் எந்தக் கட்சியையும் சாராதவர்கள். இதனால், இவர்களுடைய மீம்கள் ஒரு சார்பு இல்லாமல், நடுநிலைமையுடன் இருக்கும். குறிப்பிட்ட கட்சிக்கோ, தலைவருக்கோ ஆதரவாகவோ எதிராகவோ இருக்காது. மிகவும் ரசித்துச் சிரிக்கும்படி இருக்கும். ஆனால், இப்போது நிலைமை மாறிவிட்டது.காரணம் இதிலும் அரசியல்வாதிகள் புகுந்துவிட்டதுதான்.

அரசியல்கட்சிகள் ஒவ்வொன்றும் ஐடி விங் என்ற தொழிநுட்பப் பிரிவை தொடங்கியுள்ளன. சமூக வலைத்தலங்கள் வாயிலாக பிரச்சாரம் செய்யவும், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களிடம் தங்கள் கருத்துகளைக் கொண்டு சேர்க்கவும் அரசியல் கட்சிகளால் தொழில்நுட்பப் பிரிவு தொடங்கப்பட்டது. இது இப்போது, தங்கள் கட்சித் தலைவரை, பிரமுகரை விமர்சிக்கும் மீம்களுக்கு பதிலடி கொடுக்கும் வேலையிலும் இறங்கிவிட்டன. சில கட்சிகளும் தலைவர்களும் மீம் கிரியேட்டர்களுக்குப் பணம் கொடுத்து தாங்கள் எதிர்பார்ப்பது போல மீம்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் பரவ விடச் செய்கின்றனர். இதனால், மீம்களின் தரம் தாழ்ந்து வரத் தொடங்கிவிட்டது. மீம்கள் ரசிக்கத்தக்கதாகவும் நடுவுநிலைமையுடனும் இருந்த நிலைமை மாறிவருகிறது.

மீம்களில் தனிமனித விமர்சனமும் தனிமனித தாக்குதலும் அதிகரித்து வருகிறது.

“தமிழிசை உருவ பொம்மை எரிப்பு”
“எரித்த பிறகும் தமிழிசை போல தெரிந்ததால் மீண்டும் மீண்டும் எரிப்பு”
இப்படி ஒரு மீம் சமீபத்தில் உலவிவருகிறது.

இதே போல, தமிழிசை போட்டோவை, கேவலமாக சித்தரித்து, தலையின் நடுப்பகுதியை மழித்து, மூக்கில் பெரிய வளையத்தை மாட்டி அவரை ராட்சசி போல சித்தரிக்கும் மீம் ஒன்றும் பரவி வருகிறது.

இந்த மீம்கள் முழுக்க முழுக்க தனிமனித விமர்சனமே. இது நாகரிகமான போக்கு அல்ல. அரசியல்வாதிகள் தலையிடாதவரை, மீம்கள் ஆரோக்கியமானதாகவும் ரசிக்கத்தக்கதாகவும் இருந்தன. இதன் மூலம் ஒரு உண்மை தெளிவாகப் புரிகிறது. அரசியல்வாதிகள் தலையிட்ட எதுவும் உருப்பட்டதில்லை என்பதுதான் அந்த உண்மை.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Latest News in by following us on Twitter and Facebook

Web Title:Politician spoil the mem

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X