பெண்களுக்கு துப்பாக்கி தேவையா? நினைவில் வந்த 3 நிகழ்வுகள்

நிர்மலா தேவி, ஆசைவார்த்தைகள் கூறி அழைத்தபோது அப்படியே, அவர்களின் கைபேசியில் பதிவு செய்து மிகவும் துணிச்சலுடன் வெளியுலகிற்குக் கொண்டு வந்தனர்.

கமல.செல்வராஜ்

பொள்ளாச்சி கொடூரங்கள் அண்மையில் நம்மை உலுக்கியவைதான். அதனூடே கோவை மாவட்டத்தைச் சார்ந்த, ஒரே வீட்டிலுள்ள இரண்டு சகோதரிகள் சேர்ந்து, “சமுதாயத்தில் பெண்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை. அதனால் பெண்களுக்கு துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை வழங்க வேண்டும்” என கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு ஒன்றை அளித்ததும், கவனம் ஈர்த்தது.

இவ்விரு சகோதரிகளில் ஒருவர் கல்லூரி மாணவி. மற்றொருவர் பள்ளி மாணவி. இவர்களின் கோரிக்கையை, அனைத்து பத்திரிகைகள் மற்றும் சமூக ஊடகங்கள் பெட்டிச் செய்தியாகவும் முக்கியச் செய்தியாகவும் வெளியிட்டன. ஆனால் என்னைப் பொறுத்தவரை இக்கோரிக்கையை படித்தவுடன் வேடிக்கையாகவே இருந்தது.

ஏனென்றால் இச்செய்தியைப் படித்த போது எனது நினைவிற்கு வந்தவர்கள், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையை சார்ந்த ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் நான்கு மாணவிகள் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனூர் பகுதியில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரி மாணவி ஒருவரும் தான்.

அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகள், தங்களுக்குப் படித்துக் கொடுத்த பேராசிரியை நிர்மலா தேவி, தங்களை தவறான வழிக்கு இட்டுச் செல்வதற்காக, பல்வேறு ஆசைவார்த்தைகள் கூறி அழைத்தபோது, அவை எவற்றிற்கும் மசியாமல் மறுத்து விட்டார்கள். மட்டுமின்றி அந்தப் பேராசிரியை பேசிய அனைத்து ஆசை வார்த்தைகளையும் அப்படியே, அவர்களின் கைபேசியில் பதிவு செய்து மிகவும் துணிச்சலுடன் அதை வெளியுலகிற்குக் கொண்டு வந்தனர்.

அதன் விளைவு, அந்த நான்கு மாணவிகளால் தமிழகத்திலுள்ள எத்தனையோ கல்லூரி மாணவிகள், கல்வித்துறையிலுள்ள கறுப்பு ஆடுகளின் கொடூரக் காமவெறியாட்டத்திற்கு ஆட்படாமல் காப்பாற்றப்பட்டுள்ளனர். இல்லையேல், அவர்கள் நான்கு பேரின் வாழ்க்கை மட்டுமல்ல பொள்ளாச்சியில் நடந்தது போல் எத்தனையோ பெண்களின் வாழ்க்கை இன்றைக்கு அலங்கோலமாயிருக்கும் என்பதை அறிவுடையோர் அனைவரும் உணர வேண்டும். மட்டுமல்ல இவர்களின் துணிச்சலுக்கு முன்பு எந்த துப்பாக்கி நிற்கும் என்பதை, துப்பாக்கிக் கேட்கும் கோவை சகோதரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இது போல் மற்றொரு சம்பவம்… திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் ஆய்வு செய்து வந்தார். அவர் அதே கல்லூரியிலுள்ள மாணவியர் விடுதியில் தங்கிப் படித்துள்ளார். அந்த மாணவிக்கு, அக்கல்லூரிப் பேராசிரியரும் விடுதி கண்காணிப்பாளருமான தங்கப்பாண்டியன் என்பவர் பாலியல் தொல்லைக் கொடுத்துள்ளார்.

அதனால் பேரதிர்ச்சியடைந்த அம்மாணவி அக்கொடுமையை அவ்விடுதியிலுள்ள உதவிக் கண்காணிப்பாளராகிய புனிதா மற்றும் உதவியாளர் மைதிலி ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் பெண்களாக இருந்தும் கூட தங்களின் இனத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணுக்கு ஏற்பட்டக் கொடுமையை எதிர்த்து நிற்காமல், தவறுக்கு துணை நின்றுள்ளனர்.

எனினும் சிறிதும் தயங்காமல் சென்னையிலுள்ள தனது பெற்றோரிடம் நடந்தவற்றையெல்லாம் எடுத்துக் கூறியதுடன் திருவண்ணாமலையிலுள்ள காவல் நிலைத்தில், தனக்குத் தீங்கிழைத்த கீழ்தரமானப் பேராசிரியர் மற்றும் அவருக்குத் துணைநின்ற இரண்டு பெண்கள் மீது வழக்கும் தொடுத்துள்ளார். இங்கும் அந்த மாணவி தனக்கு நேர்ந்த கொடுமைகள் அனைத்தையும், தனது பெற்றோரின் துணையுடன் வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டுவராமல் தனது தன்மானத்தைக் காப்பதற்காகத் தனக்குத்தானே தாங்கிக் கொண்டு மௌனம் சாதித்திருந்தால், இன்று பொள்ளாச்சியில் நிலவும் நிகழ்வுகளுக்கு இவளும் ஒரு சாட்சியாகத்தானே இருந்திருப்பாள்.

ஆனால் அம்மாணவியின் துணிச்சலால் எத்தனையோ மாணவிகளின் வாழ்க்கை, அந்த தங்கபாண்டியன் போன்றவர்களிடமிருந்து காப்பாற்றப் பட்டிருக்கிறது என்றால், அன்பு சகோதரிகளே பெண்களுக்குத் தேவை அதீதமானத் துணிச்சலா? இல்லை ஒரு குற்றவாளியை ஒழிக்க இன்னொருக் குற்றவாளியை உருவாக்கும் துப்பாக்கியா? என்பதை சற்றே சிந்தித்துப் பாருங்கள். இவை இரண்டு சம்பவங்கள் மட்டும் தான் என்று தவறாகக் கருதி விடாதீர்கள். இதைபோல் எத்தனையோ துணிச்சல் மிகு சம்பவங்களை எடுத்துக்காட்டலாம். ஆனால் “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பதற்கிணங்க இவற்றை மட்டும் எடுத்துரைத்துள்ளேன்.

ஒருவேளை இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ளாமல், அந்த இரண்டு சகோதரிகளின் கோரிக்கையை ஏற்று பெண்களுக்குத் தற்காப்பிற்காகத் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான உரிமையை வழங்கிவிட்டால், என்னவாகும் என்பதற்கு இன்னொரு நிகழ்வும் எனது நினைவில் வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஹரியானா மாநிலம் ரோட்டக் பகுதியைச் சார்ந்த ஆர்த்தி, பூஜா என்ற இரண்டு சகோதரிகளானக் கல்லூரி மாணவிகள் பஸ்சில் பயணம் செய்யும் போது, அதே பஸ்சில் பயணித்த குல்தீப், மோஹித், தீபக் என்ற மூன்று இளைஞர்கள், தங்களுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்தாகக் கூறி அந்த மூன்று இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியதோடு, அதை தங்களின் தோழிகளின் உதவியோடு செல்போனில் படம் பிடித்து, ஊடகங்களுக்கு அனுப்பி, பேட்டியும் அளித்துள்ளனர். கூடவே போலீசில் வழக்குப் பதிவு செய்து, அவர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

தங்களுக்குப் பாலியல் தொல்லைக் கொடுத்த இளைஞர்களை அடித்துத் துவைத்தெடுத்தாகக் கூறிய சகோதரிகளுக்கு பாராட்டுகளும், பரிசுகளும் குவிந்துள்ளன. இரண்டு சகோதரிகளுக்கும் ஹரியான அரசு குடியரசு தினவிழாவில் தலா 31,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கிக் கௌரவித்துள்ளது. கூடவே அனைத்து ஊடங்களும் இருவருக்கும் “வீரமங்கைகள்” எனப் பட்டம் சூட்டி சூளுரைத்துள்ளன. மட்டுமின்றி இரண்டு மாணவிகளும் கல்லூரிக்குச் செல்ல போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

குற்றமற்ற இம்மூன்று இளைஞர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்தும், சகப் பயணிகளின் சாட்சியின் அடிப்படையிலும் இச்சம்பவம் குறித்து ரோட்டக் சிறப்பு புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையும் நடத்தியுள்ளனர். அந்த விசாரணையின் முடிவு அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்குவதாக இருந்தது.

இவ்விரு சகோதரிகளும் பஸ்சில் ஏறி, ஒரு வயதான மூதாட்டியின் இருக்கையை அபகரித்துள்ளனர். இதனை அந்த பஸ்சில் இருந்த மூன்று இளைஞர்கள் மற்றும் சகபயணிகள் தட்டிக்கேட்டு, அந்த வயதான மூதாட்டிக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த இரு சகோதரிகளும் அந்த மூன்று இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தி விட்டு, இளைஞர்கள் பாலியல் தொல்லைக் கொடுத்ததாகக் கபட நாடகமாடியுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் பேரில் அந்த மூன்று இளைஞர்களையும் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதிகள் எனக் கோர்ட் தீர்ப்பளித்து விடுதலை செய்துள்ளது.

இப்பொழுது அநியாயமாக பழிசுமத்தப்பட்டு சிறையில் வாடிய மூன்று இளைஞர்களின் பரிதாபமான எதிர்கால நிலையை எவராலேனும் கற்பனைச் செய்து பார்க்க முடியுமா?

கையில் துப்பாக்கி இல்லாமல் இருந்த போதே இவ்வளவு நியாயத்தை அரங்கேற்றும் இது போன்ற சகோதர மாணவிகள், கையில் துப்பாக்கி இருந்தால் என்ன செய்திருப்பார்கள்? அவர்கள் நினைத்ததைச் சாதிப்பதற்காக முன்பின் சிந்திக்காமல் எவரை வேண்டுமானாலும், எதற்காகவும் எந்த இடத்தில் வைத்தானாலும் சுட்டுத்தள்ளுவார்கள்.

எனவே தங்களின் பாதுகாப்பிற்காக துப்பாக்கிக் கேட்கும் சகோதரிகளிடத்தில் நான் கூறிக்கொள்ள விரும்புவது, அருமை சகோதரிகளே! நீங்கள் பள்ளிக் கல்லூரிகளில் படிப்பவர்கள். உங்களுக்கு ஆசிரியர்கள் கண்ணகி, சீதை, மணிமேகலை, பாஞ்சாலி, சத்தியவான் சாவித்திரி போன்ற புராண, இதிகாச, காப்பியத் தலைவிகளைப் பற்றியெல்லாம் படித்துத் தந்திருப்பார்கள். இவர்களெல்லாம் தங்கள் வாழ்க்கையில் பெரும் துயரங்களையும் துன்பங்களையும் அனுபவித்தவர்கள். அப்பொழுதெல்லாம் அவர்கள், தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்குத் துப்பாக்கியை கேட்கவில்லை, கொடும் வாளையும் எடுக்கவில்லை மாறாகத் துணிச்சலோடு அரசர்களைக்கூட எதிர்த்து நின்று வாதிட்டார்கள், வெற்றியும் பெற்றார்கள். அதனால்தான் அவர்களெல்லாம் அன்று பெரும் காவியங்களின் தலைவிகளாக மாறியுள்ளார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

அதுபோல் நவீன காலத்து பெண்களே, உங்களுக்கும் ஏதேனும் சூழ்நிலையில் அநீதியும் அக்கிரமமும் நிகழுமேயாயின் அருப்புக்கோட்டை மற்றும் திருவண்ணாமலை இன்னும் பல கல்லூரி மாணவிகளைப் போன்று உங்களுக்குள் துணிச்சலை வரவழைத்துக் கொண்டு, உங்களையும் தற்காத்து, மற்றவர்களுக்கும் பாதுகாப்பு கேடயமாக இருங்கள். அதற்காகத்தானே முண்டாசுக் கவிஞன் பாரதி, உங்களுக்காக உரக்க உரைத்துள்ளான் “அச்சமும் நாணமும் நாய்களுக்கு வேண்டுமென்று”.

பெண்களே துப்பாக்கி கனவைத் தூக்கி எறியுங்கள், துணிச்சலை மனதில் வளர்த்துக் கொள்ளுங்கள்.

(கட்டுரையாளர், முனைவர் கமல. செல்வராஜ் கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர்! அழைக்க: 9443559841. அணுக: drkamalaru@gmail.com )

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close