கமல. செல்வராஜ்
பொள்ளாச்சி, ஒரு பாடம்! அல்ல, பள்ளி - கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியரும் அவர்களின் பெற்றோரும் பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா,
மோதி மிதித்துவிடு பாப்பா - அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா.
முறுக்கு மீசைக்காரன் பாரதியின் இப்பாடலை, நான் மூன்றாம் வகுப்பில் படிக்கும் போதே எனது ஆசிரியர் அருமையான ராகத்தோடும் தாளத்தோடும் ஒவ்வொரு மாணவனின் மனதிலும் பதியும்படி படித்துத் தந்த நினைவு இன்றளவும் என் உள்ளத்தில் உள்ளது.
பாட்டோடு மட்டும் நின்று விடாமல், “ஏ பிள்ளைகளா உங்கள யாராவது அனாவசியமா அடிக்ககோ, கிள்ளவோ செய்தால் அதை பட்டுக்கிட்டுச் சும்மா அழுதுகிட்டுப் போகக்கூடாது. அவங்ககிட்ட என்ன ஏன் அடிச்சீங்க அல்லது கிள்ளினீங்க எனக் கேட்கணும். அதோடு மட்டுமில்லாம வீட்டில போய் உங்க அப்பா, அம்மாகிட்ட நடந்த விஷயத்தை எல்லாம் அப்படியே சொல்லியும் கொடுக்கணும். அப்பத்தான் அவங்களும் அந்தப் பாவிங்க மேல எதாவது நடவடிக்க எடுப்பாங்க”
இப்படி அந்தப் பாட்டின் பொருளையும் கூறி அறிவுரையும் சொன்னார் அந்த ஆசிரியர்.
எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு படித்த அந்தப் பாரதியார் பாடலுக்கும், எனது அருமை ஆசிரியர் சொல்லித் தந்த அறவுரைக்கும் பொருத்தமான ஒரு மாணவியைத்தான் பொள்ளாச்சி, பாலியல் வன்மத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
அது எப்படி என்ற கேள்வி உங்களுக்குள் எழுமானால் அது நியாயமானக் கேள்விதான். ஊடகங்களின் ஊகங்கள், பத்திரிகைகச் செய்தி, போலீசாரின் விசாரணைத் தகவல் இவற்றையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, இந்தக் காமக் கொடூர வெறியாட்டம் இன்றோ, நேற்றோ தொடங்கியதல்ல, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்து வருவது என்பதும், இதன் மூலம் ஒன்றிரண்டல்ல, எண்ணிலடங்கா அப்பாவிப் பெண்கள் பலிகடாயிருக்கின்றார்கள் என்பதும் நிதர்சனமான உண்மை.
அந்த வரிசையில் பொள்ளாச்சி கல்லூரி மாணவி, தான் அனுபவித்த கொடூரங்களையெல்லாம் தனக்குள்ளே அடக்கிக் கொண்டு தற்கொலை போன்ற விபரீத முடிவுகள் எடுக்காமல் இருந்ததற்காக ஒட்டுமொத்தத் தமிழக மக்களும் அவருக்கு பாராட்டைத் தெரிவிக்கலாம்.
மேலும் தான் அனுபவித்த இன்னல்களையெல்லாம் பெற்றோரிடம் கூறிவிட்டால் தனக்கு அவமானமோ, ஆபத்தோ விளையும் என்று கருதாமல், அனைத்தையும் தனது பெற்றோரிடம் வெளிப்படையாகக் கூறிவிட்டு போலீசில் புகார் அளிப்பதற்கும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துவதற்கும் ஒத்துழைத்த அந்த மாணவிக்கு இரண்டாவதுப் பாராட்டைத் உரித்தாக்கலாம்.
தன்னுடையத் துணிச்சலால் இது போன்ற கொடூரம், இவ்வளவு பகிரங்கமாக இனியும் தொடராமல், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, தன்னைப் போன்ற எத்தனையோ மாணவிகளை, ஒரு பெரும் படுகுழியிலிருந்து காப்பாற்றியிருப்பது மீண்டும் பாராட்டுக்குரியது.
இத்தனையும் செய்யத் துணிந்த அருமை மாணவியே, உன்னிடத்தில் ஒரு கேள்வி. நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது அதாவது எனது எட்டாவது வயதில் எனது அருமை ஆசிரியர் படித்துதந்த அதே பாரதியாரின் பாடலில் இப்படியும் ஒரு பாடல் வருகிறதே...
‘நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி - கிளியே
வாய்ச்சொல்லில் வீரரடி’
இந்தப் பாடலை நீ கல்லூரியில் வந்தப் பிறகும் அதாவது உனக்குப் பதினெட்டு வயதான பிறகும் எந்த ஓர் ஆசிரியரும் கற்றுத் தரவில்லையா? இல்லை அவர்கள் கற்றுத் தந்தும் உன்னைப் போன்ற மாணவிகள் அதனை உணர்ந்து கொள்ள மறுத்து விட்டீர்களா?
முன்னுக்குப் பின் தெரியாத ஒருவன், நேருக்கு நேர் முகமே பார்க்காத ஒருவன் முகநூல் பழக்கத்தால் அழைத்த உடன், அவன் அழைத்த இடத்திற்குச் சற்றும் சிந்திக்காமல் ஓடோடிச் சென்ற நீ, ஏன் இத்தனை நாள் வாய்கிழியப் பேசிய போதும், அவன் ஒரு நெஞ்சில் ஈரமில்லாத, செயலில் நேர்மையில்லாத, வாய்ச்சொல்லில் வஞ்சகனாய் இருந்ததை உணர்ந்து கொள்ள இயலவில்லை என்பதுதான் எனது கேள்வி.
ஒருவனின் அழைப்பை ஏற்று ஓடோடிச் சென்ற உன்னை நான்கு ஓநாய்கள் சேர்ந்து கூறுபோட்ட போது, நீ எழுப்பிய ஓல ஒலி இந்த உலகத்தையே உலுக்கியிருக்கிறதே அன்பு தங்கையே! முகம் தெரியாத ஒருவன் அழைத்த உடன் அனைத்தையும் மறந்து, உன்னையே துறந்து ஓடினாயே அருமை மகளே! நீ ஓடும் போது ஒரு நொடியாவது இத்தனை ஆண்டுகள், தங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்த அன்பு மழையால் உன் முகத்தில் முத்தம் தந்து தூக்கிச் சுமந்த ஒரு முகத்தையாவது நினைத்து பார்த்தாயா? அப்படியென்றால் இன்று நீ இப்படி அபலையாயிருப்பாயா?
கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவிகள் தினமும் ஏதேனும் ஒரு பத்திரிகையைப் படிக்கும் பழக்கத்தையோ தொலைக்காட்சியில் செய்தி பார்க்கும் பழக்கத்தையோ தனதாக்கியிருந்தால் இதுபோன்ற வாழ்க்கைச் சிதைவுக்கு ஆளாகியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் இதே தமிழக மண்ணில்தான் காதல் வெறியாட்டத்திற்கும் காமக்கொடூரத்திற்கும், கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கும் பலியான உமாமகேஸ்வரி, சர்மிளா, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஸ்வாதி, தருமபுரி சவுமியா, சென்னை ஆதம்பாக்கம் இந்துஜா எரித்துக் கொலை....
இப்படி எத்தனை எத்தனையோ கொலைகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் பல பயன்பட்டுப் போகும்.
இவற்றையெல்லாம் பார்த்து, கேட்ட பின்பும் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு சுயபுத்தி இல்லாமல், இப்படி கண்டவனின் காதல் வலையில் சிக்கி சீரழிந்து போகிறார்களென்றால் இதற்கு யார் பொறுப்பு?
பொதுவாக கிராமப்புறங்களில் “இளம் கன்று பயமறியாது” என்று ஒரு பழமொழி கூறுவார்கள். அதுபோல் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளே உங்களுக்கு இதுபோன்ற சம்பவத்திற்குப் பொள்ளாச்சி சகோதரியின் சம்பவம் ஒன்றே சாட்சியாகட்டும். இதோடு இதுபோன்ற சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் எனச் சபதமேற்போம்.
பெற்றோர்களும் தங்களுடைய பொருளாதார நிலையையும் மீறி பிள்ளைகளுக்கு, விலை உயர்ந்த செல்போன்களையும் கம்ப்யூட்டர்களையும் வாகன வசதிகளையும் செய்து கொடுக்கின்றார்கள். அதன் பின்னர், பிள்ளைகள் அவற்றை எப்படி பயன்படுத்துகிறார்கள், எங்குச் செல்கின்றார்கள், யாரோடு செல்கிறார்கள், எதற்குச் செல்கிறார்கள் என்பது பற்றியெல்லாம் சிந்திப்பதில்லை. அதுவே இதுபோன்ற கொடூரச் செயலுக்கு அதிகம் வழிவகுக்கிறது.
சில மாணவிகள் விஷயம் தெரியாமல் இது போன்ற சம்பவங்களில் மாட்டிவிட்டு பின்பு வேறு வழியில்லாமல் பொற்றோரிடம் நடந்த உண்மைகளைக் கூறினால், உடனே தங்களின் சுய மரியாதையையும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, போலீசில் புகார் கொடுக்காமல் அப்படியே மூடிமறைத்து விட்டுகின்றனர். இது குற்றவாளிகளுக்குப் பெரும் சாதகமாகி, அவர்கள் தொடர்ந்து இது போன்ற கொடூரங்களை அரங்கேற்றி வருகின்றனர்.
கல்வியாளர்களும் பள்ளிப் பாடத் திட்டத்தில் பாலியல் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட பாரதியார், சுவாமி விவேகானந்தர் போன்றோரின் வாழ்க்கைக்குப் பயனுள்ளக் தன்னம்பிக்கை ஊட்டும் கருத்துக்களை பாடமாக வைப்பது நல்லது.
பொள்ளாச்சி சம்பவத்தின் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் காலதாமதம் செய்யாமல் மிக விரைவில் உச்சபட்ச தண்டனைக் கொடுக்க வேண்டும். என்றால் மட்டுமே இதுபோன்ற கொடூரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
(முனைவர் கமல. செல்வராஜ், கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை சேர்ந்தவர். கல்வியியல் கல்லூரி ஒன்றின் முதல்வர். அழைக்க: 9443559841, அணுக: drkamalaru@gmail.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.