எழுதியவர்: அமீதா முல்லா வாட்டல்
பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்ய முடியாமல் தவிக்கின்றன. நல்ல தரமான அதிக அளவுக்கு அரசு ஆதரவுடன் கூடிய பள்ளிகள்தான் இதற்கு தீர்வாக இருக்க முடியும்.
கல்வியில் உலகம் எதிர்கொள்ளும் பாதிப்புகள் மற்றும் சவால்கள் மீது தொற்றுநோய் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதுள்ள ஏற்றத்தாழ்வுகள் காரணமாக ஒரு பெரிய கற்றல் இடைவெளி உள்ளது.
இந்தியாவில் அரசு மட்டத்தில் கற்றல் வளங்கள், கல்வி நிறுவனங்களை உருவாக்கா விட்டால், இடைவெளி தொடர்ந்து அதிகரிக்கும். கல்வி கற்பவர்கள் கவனிப்பாரற்று போய்விடக் கூடும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கற்றல் முறைகளில் மத்திய மற்றும் மாநில அளவில் முதலீடு செய்யும் அரசாங்கம் நமக்கு அவசர தேவையாக உள்ளது. அத்தகைய அரசானது வறுமையை நிவர்த்தி செய்யவும், பாலின சமத்துவத்தை ஏற்படுத்தவும் உதவும்.
நமது பல சமூக அமைப்புகளில் இடைநிறுத்தம் நேரிடும்போது, கற்றலை மீண்டும் தொடங்குவது எப்படி?
கல்வி மோசமாக பாதிக்கப்பட்டுவிட்டது என்று சொல்லும் பல தலைப்புச் செய்திகள் வெளியாகி உள்ளன. அதை எப்படி சரி செய்வது? உடைந்து விட்டது, நெருக்கடி என்பது போன்ற சொல்லாடல் மட்டும் அதற்கு உதவாது. உரையாடல் மற்றும் அதற்கு எதிர்வினைகள் என்பதை விடவும் விரைவான திருத்தங்களே தேவை. சலுகை பெற்றவர்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கம் மற்றும் மாற்றுத் திறனாளிகள் என அனைத்து பிரிவு கற்கும் மாணவர்களைச் சித்தப்படுத்துவதற்கு பல்வேறு முறைகளைக் கண்டறியும் நடைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும். நம் சிந்தனையில் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும், இரண்டாம்பட்சமாக அவர்களை கருதக்கூடாது.
சவால் என்பது தேர்வுகளைப் பற்றியது அல்ல, ஏனெனில் தேர்வுகள் அச்சுறுத்தலாக இல்லை. கடந்த மூன்று ஆண்டுகளில் இணையவழியில் அல்லது நேரடியான முறைகளில் மதிப்பீடுகள் குழந்தைகளை மையமாகக் கொண்டவை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது, பாதிப்புக்கு காரணம் என்பது பெரும்பாலும் உண்மைக்கு மாறானவையாக இருக்கின்றன. பள்ளிக்குத் திரும்புவதுதான் சவாலாக இருக்கிறது.
குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் இல்லாதது மற்றும் நிர்வகிக்க முடியாத நெறிமுறைகள் பற்றிய உரையாடல்கள், இவற்றுக்கு மத்தியில் நாடு முழுவதும் நிலவும் அச்சத்தின் பொதுவான சூழ்நிலையும் தொடர்ந்து சுற்றி வருகின்றன.
பணக்கார நாடுகளில், பள்ளிகள் எப்போதுமே முதலில் திறக்கப்படுவதும் கடைசியாக மூடுவதும் ஆக உள்ளது. மேலும் குடிமக்கள் பொதுப் பள்ளி அமைப்பிலிருந்து பயனடைந்துள்ளனர்.
இந்தியாவில், மாநிலங்கள் முழுவதும், வேலையின்மை மற்றும் நிதி ஆதாரங்களின் பற்றாக்குறை காரணமாக விரக்தி உணர்வு உள்ளது, இது தொற்றுநோய் காரணமாக மேலும் அதிகரித்திருக்கிறது. சமத்துவமின்மையை அதிகப்படுத்துகிறது. குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது, அவர்களை வீட்டில் வைத்திருப்பதற்கு மாறாக, குறிப்பாக தனியார் பள்ளிகள் அமைப்பில் ஒரு பெரிய நிதி முதலீடு தேவை கொண்டதாக இருக்கிறது, தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு சீருடைகள், புத்தகங்கள், காலணிகள், குளிர்பானங்கள், போக்குவரத்து மற்றும் செயல்பாடுகள் மற்றும் பள்ளி நிகழ்ச்சிகளுக்கான பிற பொருட்கள் அவசியம் தேவையாக இருக்கிறது.
பணப்பற்றாக்குறை காரணமாக குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர்கள் தவித்து வருகின்றனர். ருச்சிகா திங்ரா கூறுகையில், “எனது குழந்தைக்கு 3 வயதாகிறது, நான் அவளை ஏதேனும் ஒரு தனியார் முன்பருவப் பள்ளியில் சேர்த்தால், ஆண்டுக்கு சுமார் 1,80,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். மீண்டும் வைரஸ் வரலாம் என்பதால் நான் கட்டணம் செலுத்தி அவளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை. நாங்கள் அனைவரும் நிதி நெருக்கடியை எதிர்கொள்வதால், நான் அவளை சேர்க்க முடியவில்லை” என்கிறார். இரண்டு குழந்தைகளைக் கொண்ட மற்றொரு பெற்றோர், சிறந்த கல்வித் திறன் கொண்ட ஒருவரை விலையுயர்ந்த தனியார் பள்ளியில் சேர்த்துள்ளனர், மற்ற குழந்தையை குறைந்த கட்டணத்தில் சாதாரணமான தனியார் பள்ளியில் சேர்த்துள்ளனர். . இரு குழந்தைகளையும் ஒரே பள்ளியில் படிக்க வைக்க பணம் இல்லை என்று அவர்கள் காரணம் கூறுகின்றனர்.
நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள் மீதான நம்பிக்கையின்மையை இந்த உரையாடல்கள் வெளிப்படுத்துகின்றன. அவர்கள் தங்கள் குழந்தைகளை நல்ல அரசுப் பள்ளியை விட தரமற்ற தனியார் பள்ளியில் படிக்க வைக்கவே நினைக்கின்றனர்.
தொற்றுநோய்களின் விளைவாக, வாய்ப்பு இடைவெளிகள் அதிகரித்துள்ளன. ஏனெனில் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்யக் கூடிய நிதி திறன் கொண்டிருக்கவில்லை. பலர் கல்வியை விடவும் சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். இதனால் எதிர் வரும் ஆண்டுகளில் குழந்தைகளின் கற்றல் குறைமதிப்பிற்கு உட்பட்டுள்ளது. இதன் விளைவு குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் எதிரொலிக்கும்.
கல்வியை அரசுப் பள்ளியின் வழியில் பார்ப்பதுதான் ஒரு தேசமாகிய நாம் செய்ய வேண்டிய பெரிய மாற்றமாகும் . இலவச, கட்டாய, சுற்றுப்புறக் கல்விக்கான வாய்ப்பை மாநிலங்கள் வழங்கினால் மட்டுமே இது நடக்கும்.
மேற்கத்திய நாடுகளில், 90 சதவீதத்திற்கும் மேலான கல்வி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது, மிக நன்றாக இயங்கும் பள்ளிகள். சூடான உணவுகள், சீருடைகள், புத்தகங்கள் மற்றும் மருத்துவம் உள்ளிட்ட பிற கற்றல் உபகரணங்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.
மிகவும் சலுகை பெற்ற குடிமக்களைத் தவிர பெரும்பாலான குழந்தைகள் பொதுப் பள்ளிகளில் படிக்கின்றனர். இது பசி, ஊட்டச்சத்து, தரமான கல்வி மற்றும் பாலின சமத்துவம் தொடர்பான நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய உதவுகிறது, இறுதியாக வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கிறது.
அரசுப் பள்ளிகளை மறுசீரமைக்கவும், தரத்தை உறுதிப்படுத்தவும் தீவிர சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டும். நாடு முழுவதும் மின்சாரம், எரிவாயு, குடிநீர், வீடு, உணவு விநியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்தியிலும், மாநிலங்களிலும் உள்ள அரசு, தரமான தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளை உருவாக்கி, சிறந்த தனியார் பள்ளிகள் வழங்கும் வசதிகளை அரசு பள்ளிகளிலும் வழங்க வேண்டும்.
இதற்காக பள்ளிகள் பங்காற்றுவதை பெற்றோர்கள் உணர்ந்துள்ளனர். அவை குழந்தைகளுக்கு கல்வி கற்றலுடன் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்ட நல்வாழ்வை வழங்குகின்றன,. இவ்வாறான அதிகரித்த விழிப்புணர்வு பொதுக் கல்வியின் மறுமலர்ச்சிக்கு அடிப்படையாக அமையும்.
தொழில்நுட்பம் திறனை விரிவுபடுத்தியுள்ளது என்ற மாயவலையில் நாம் கட்டுண்டுள்ளோம். உலகளாவிய தெற்கில் மட்டுமல்ல, உலகின் மிகவும் வளமான நாடுகளிலும் கூட இணையவழி கற்றல் அதிக சமத்துவமின்மையை உருவாக்கும் என்பதே கவலையாக உள்ளது. இணைய வழி கற்றல் முன்னெடுக்கப்படக் கூடாது.
அனைத்து தரப்பு பங்கெடுப்பாளர்களுக்கும் ஆதரவாக அரசு பள்ளிகளை அணிதிரட்டி கல்விக்கான உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும். எதிர்காலத்திற்கான கல்வி எனும் யுனெஸ்கோவின் சர்வதேச ஆணையத்தின் அறிக்கையில், "பொதுக் கல்வி மற்றும் பொது நன்மை ஆகியவை எப்போதும் நினைவில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய கடமைகள்" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், "இந்தக் கொள்கைகளை பின்வாங்குவதற்கும் பலவீனப்படுத்துவதற்கும் இது நேரம் அல்ல, மாறாக அவற்றை உறுதிப்படுத்தவும் வலுப்படுத்தவும் வேண்டும்" என்றும் கூறுகிறது. பொதுக் கல்வியைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும்.
அரசாங்க சுகாதார அமைப்பு மற்றும் அரசாங்க கல்வி ஒன்றுக்கொன்று எதிராக இருப்பதை நாம் அனுமதிக்க முடியாது. அவைகளுக்கு இடையே ஒன்றுக்கு ஒன்று ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். மக்கள் வாழ்நாள் முழுவதும் கல்வி கற்க வேண்டும் என்பதில் அரசுகள் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும். பிரெஞ்சு தத்துவஞானி எட்கர் மோரின், "பொது சுகாதாரம் மற்றும் பொதுக் கல்வி ஆகியவை ஒன்றோடொன்று நெருக்கமான தொடர்பை கொண்டுள்ளன. ஏனெனில் அவை பொது நலனுக்காக ஒத்துழைப்பு, ஒற்றுமை மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகியவற்றின் மறுக்க முடியாத அவசியத்தை வெளிப்படுத்துகின்றன" என்று கூறியுள்ளார்.
சமுதாயம், சமூக அமைப்புகள் மற்றும் தனிப்பட்டநபர்களின் வாழ்க்கைக்கு பொதுக் கல்வி மிகவும் முக்கியமானது. அது ஒன்றே கண்ணியத்துடனும் நோக்கத்துடனும் வாழ உதவும். எதிர்பாராதவிதமாக எவ்வாறாயினும் பள்ளிக் கல்வியின் நோக்கத்தையும் அதை எவ்வாறு ஒழுங்கமைக்கிறோம் என்பதையும் நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டிய ஒரு தருணத்திற்கு, வந்துள்ளோம். நாம் எவ்வாறு வெற்றி பெறுகின்றோம் என்பது உலகின் தொடர்ச்சியாக இருக்கக்கூடாது, ஆனால் உலகமாக: மிகவும் நிலையான ஒன்றாக இருக்க வேண்டும்.
இந்த கட்டுரை முதன்முதலில் ஏப்ரல் 28ம் தேதியன்று அச்சுப் பதிப்பில் 'A time to revisit the school’ என்ற தலைப்பில் வெளிவந்தது. எழுத்தாளர் கல்வி, DLF அறக்கட்டளை பள்ளிகள் மற்றும் உதவித்தொகை திட்டங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார்.
தமிழில்; ரமணி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.