ஜனாதிபதி தேர்தல் கண்ணோட்டம் 3 : வெற்றிக்கு எத்தனை வாசல்

மக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். ஆனால் வெற்றிக்கு அத்தியாவசியமான சப்போர்ட் சிஸ்டம் பிஜேபி வசம் இருக்கிறது.

கதிர்

நாட்டின் மிகப் பெரிய மாநிலம், மிக அதிகமான மக்கள் என்ற அடிப்படையில் பார்த்தால் உத்தர பிரதேசம் ஒரு மினி இந்தியா. ஆகவே, அரசியல் உத்திகளையும் தந்திரங்களையும் சோதித்துப் பார்க்க பொருத்தமான ஒரு பரிசோதனைக் கூடம் என்று கூறலாம்.

நமது நாட்டில் பொதுத் தேர்தல் தொடங்கியது 1952ல். ஐந்தாண்டுக்கு ஒன்று வீதம் கணக்கிட்டால் இதுவரை 14 நடந்திருக்க வேண்டும். நடுவில் சில ஆட்சிகள் அல்பாயுசில் போனதால் கூடுதலாக 2 நடந்துள்ளது. மாநிலங்களுக்கும் இது பொருந்தும்.

அந்த கணக்குப் படி 16 அல்லது 17 முதல்வர்களை கண்டிருக்க வேண்டிய மாநிலம் உ.பிரதேசம். ஆனால், அங்கே 37 தடவை முதல்வர் மாற்றம் நடந்திருக்கிறது. வேறு எங்கேயும் இந்த அளவு கிடையாது. நமது கட்சிகள் உ.பி.யை எப்படி ஒரு லெபாரட்டரியாக பயன்படுத்தி வருகின்றன என்பதற்கு இந்த சான்று போதும்.

president election - mulayam-singh-yadav-759
இத்தனை பேரிலும் ஐந்தாண்டு பதவிக் காலத்தை முழுமையாக பூர்த்தி செய்த முதல்வர்கள் இரண்டே பேர்தான் என்பது இன்னொரு சான்று. மாயாவதி (2007-12), அகிலேஷ் யாதவ் (2012-17).

இவர்கள் இரண்டு பேருமே மொத்த வாக்காளர்களில் 30 சதவீதம் பேரின் ஆதரவை மட்டும் வைத்துக் கொண்டு இந்த சாதனையை புரிந்திருக்கிறார்கள்.

ஜனநாயகம் என்றால் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றவர் ஆட்சிக்கு வருவார் என்று பாடப் புத்தகத்தில் வாசித்திருக்கிறோம். பெரும்பான்மை என்பது பாதிக்கும் கூடுதலாக இருக்கும் என்பதும் பாடம்தான். எனில் இந்த இருவரும் மிகப் பெரும்பாலான மக்களின் – அதாவது, 70 சதவீத வாக்காளர்களின் எதிர்ப்பை மீறி எவ்வாறு ஆட்சியைப் பிடிக்க முடிந்தது?

அதற்கான விடையை கண்டு பிடிக்க உ.பி என்கிற பரிசோதனைக் கூடத்தில் நமது அரசியல்வாதிகள் திரும்பத் திரும்ப நடத்திப் பார்த்த சமூகப் பொறியியல் ஆராய்ச்சிகளை ஆய்வு செய்ய வேண்டும். மிரள வேண்டாம், சுருக்கமாக பார்ப்போம்.

முதல் தேர்தலில் தொடங்கி ஏறத்தாழ 40 ஆண்டுகளாக சிறு இடைவேளைகளை தவிர்த்து காங்கிரஸ் கையில்தான் ஆட்சி இருந்து வந்திருக்கிறது. இடைவேளை என்று சொன்னது 1967ல் தொடங்கி சில காலம் தொடர்ந்த காலகட்டம். தமிழ்நாட்டிலும் அப்போதுதானே மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் தலைமை எப்போதுமே மாநிலங்களில் வலிமையான தலைவர்கள் உருவாவதை விரும்பியது இல்லை. அட்லீஸ்ட் இந்திரா காந்தி காலத்தில் தொடங்கி. ஆகவே முதல்வராக இருப்பவரின் செல்வாக்கு பெருகுவதாகத் தெரிந்தால் அவரை இறக்கிவிட்டு வேறு ஒருவரை நாற்காலியில் அமர்த்துவது டெல்லி மேலிடத்தின் பொழுதுபோக்கு. இதனால் எந்த முதல்வருக்கும் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் அதிர்ஷ்டமே கிட்டவில்லை.

president election - mayawati-7591
கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், இப்படி பதவிக்கு வந்த முதல்வர்கள் எல்லோருமே பிராமண வகுப்பை சேர்ந்தவர்கள். ஓரிரு சந்தர்ப்பங்களில் அடுத்துள்ள உயர் வகுப்பினராக இருக்கும்.
உயர் ஜாதியினர் 22 சதவீதம் மட்டுமே. பிற்படுத்தப்பட்டவர்கள் 40 சதவீதம். தலித்+பழங்குடி வகுப்பினர் 20 சதவீதம், முஸ்லிம்கள் 17 சதவீதம், கிறிஸ்துவர், ஜைனர், சீக்கியர் முதலான இதர சிறுபான்மையினர் 1 சதவீதம். இதுதான் உத்தர பிரதேசத்தில் ஜாதிகளின் பலம்.

வழக்கமான உயர் வகுப்பினருடன் தலித்+பழங்குடி பிரிவும் முஸ்லிம்களும் ஆதரவு கொடுத்துக் கொண்டிருந்த வரையில் காங்கிரஸ் காட்டில் மழைக்கு குறைவில்லை. பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் மத்தியிலும் கணிசமான ஆதரவு கிடைத்தது.

திருப்பம் நேர்ந்தது 1967ல் என சொன்னது, அப்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போனதை. 425 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபையில் அக்கட்சிக்கு 199 தான் கிடைத்தது. பாரதிய ஜன சங்கம் என்ற கட்சி, இன்றைய பாரதிய ஜனதாவின் முன்னோடி, முதல் தடவையாக உயர் ஜாதிகள் இடையே பிளவை உருவாக்கி காங்கிரசுக்கு போய்க் கொண்டிருந்த ஓட்டுகளை தன் பக்கம் இழுத்தது.

ஓட்டு சதவீதம் சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் அதன் பல வேட்பாளர்கள் வெற்றி பெற்றதால் அதற்கு 98 இடங்கள் கிடைத்தன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உதவியால் கிடைத்த வெற்றி என்பது எல்லோருக்குமே தெரிந்தது. ஜன சங்கம் கட்சியில் இருந்த தலைவர்கள் பலரும் அந்த அமைப்பின் பிரசாரகர்கள்.

சவுத்ரி சரண்சிங் என்ற காங்கிரஸ் தலைவர் இந்த மாற்றத்தை உன்னிப்பாக கவனித்தார். அவர் ஜாட் இனம். அது உயர் வகுப்பு என்றாலும், எண்ணிக்கையில் அவர்கள் அதிகம் இல்லை. 2 சதவீதம்தான். எனவே, காங்கிரஸ் மேலிடம் தனக்கு முதல்வர் பதவியை தராது என்று அவர் உணர்ந்திருந்தார். ஆர்.எஸ்.எஸ் பாணியிலேயே சென்று காங்கிரஸ் பலத்தில் இன்னும் கொஞ்சம் வெட்டி எடுக்க தீர்மானித்தார். விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் ஆதரவு மொத்தமாக அக்கட்சிக்கு போவதை தெரிந்து கொண்டார்.

president election - charan-singh-death-anniv
காங்கிரசில் இருந்து விலகி, பாரதிய கிசான் தளம் (பிகேடி) என்ற கட்சியை தொடங்கினார் சரண்சிங். காங்கிரஸ் வீழ்ச்சியைக் காண காத்திருந்த சோஷலிஸ்டுகள் ராம் மனோகர் லோகியா, ராஜ் நாராயண் ஆகியோரை சந்தித்தார். அவர்கள் ஆதரவை அறிவித்தனர். ஜனசங்கத்தின் நானாஜி தேஷ்முக்கை சந்தித்தார். கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றார். தேஷ்முக் அதில் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், மற்ற ஆர்.எஸ்.எஸ் முக்கியஸ்தர்கள் கிடைத்த வாய்ப்பை விடக்கூடாது என்று வலியுறுத்தியதால் சம்மதித்தார்.

சம்யுக்த விதாயத் தளம் என்ற பெயரில் கூட்டணி அமைத்து அதன் முதல்வராக பதவி ஏற்றார் சரண்சிங். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அதில் இடம் பெற்றது இன்னொரு புதுமை. சுதந்திரா, குடியரசு, பிரஜா சோஷலிஸ்ட் கட்சிகளும் சுயேச்சைகளும் அந்த மெகா கூட்டணியில் இடம் பிடித்தன. வா வா என்று அழைத்து 22 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் வண்டியில் ஏற்றிக் கொண்டார் சரண்சிங்.

அரசியலில் வெறும் கையாலும் முழம் போட முடியும் என்று நிரூபித்தவர் சரண் சிங்.

அவருக்கும் பிரச்னைகள் வந்தன. ஆட்சி கவிழ்ந்தது. காங்கிரஸ் பிளவுபட்டது. வேறொரு கூட்டணி ஆட்சி வந்தது. அதில் முதல்வராக பதவி ஏற்றவர் ஐந்தாவது மாதம் நடந்த இடைத்தேர்தலில் ஜெயிக்க முடியாமல் ஆட்சியை இழந்தார். மறுபடியும் இந்திரா தயவில் சரண்சிங் முதல்வர் ஆக முடிந்தது.

இந்திரா தோற்று ஜனதா ஆட்சி ஏற்பட்ட காலகட்டத்தில் உ.பி.யில் உயர் வகுப்பினர் ஆதிக்கம் கணிசமாக குறைந்து போயிருந்தது. இதை கவனத்தில் எடுத்துக் கொண்டு ராம் நரேஷ் யாதவ் முதல்வராக கை கொடுத்தது ஆர்.எஸ்.எஸ். அதன் குழந்தையான ஜனசங்கம் அப்போது ஜனதா கட்சியின் ஓர் அங்கமாக மாறியிருந்தது. அந்த அரசில் ஆர்.எஸ்.எஸ் பிரசாரக் கல்யாண் சிங் நல்வாழ்வு அமைச்சர் ஆனார். 40 வயதை எட்டாத முலாயம் சிங் யாதவ் கூட்டுறவு அமைச்சர்.

டெல்லியில் மீண்டும் இந்திரா வந்ததும் உ.பி.யிலும் மாற்றம். உயர் ஜாதிகளுக்கு புத்துயிர். ராஜா வி.பி.சிங் காங்கிரஸ் அரசின் முதல்வர் ஆனார். பூலாந்தேவி உள்ளிட்ட கொள்ளையர் வெறியாட்டத்தில் நீதிபதியாக இருந்த தனது தம்பி சுட்டுக் கொல்லப்பட்டதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு தார்மிக பொறுப்பேற்று பதவி விலகினார். பிராமண வகுப்பை சேர்ந்த ஸ்ரீபதி மிஸ்ரா அந்த இடத்துக்கு வந்தார். அந்த வரிசையில் என்.டி.திவாரிக்கும் இன்னொரு சான்ஸ் கிடைத்தது. ஆனால், அதற்குள் காங்கிரசின் சரிவு தொடங்கி இருந்தது.

வி.பி.சிங் பிரதமராகி மண்டல் கமிஷன் பூதத்தை கட்டவிழ்த்து விட்டதும் அரசியல் மாற்றங்கள் ஆழமாக வேர் பிடிக்கத் தொடங்கின. பாரதிய ஜனதா உதவியுடன் உ.பி.யில் ஆட்சி அமைத்த முலாயம் சிங் யாதவ் தனக்கென அசைக்க முடியாத ஆதரவு வட்டத்தை உருவாக்கினார். யாதவ் – முஸ்லிம் உறவை வலுவாக்கினார்.

முள்ளை முள்ளால் எடுக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கல்யாண் சிங்கை முன்னிறுத்தி 1991 தேர்தலில் வெற்றி கண்டது பிஜேபி. கல்யாண் ஆட்சியின் அதிரடிகள் பலவும் சராசரி மக்களை பெரிதும் கவர்ந்தன. எனினும், பாபர் மசூதி இடிக்கப்பட்டதும் கல்யாண் அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.

இதற்குள் சமாஜ்வாதி என்ற பெயரில் தனிக் கட்சி தொடங்கி தேர்தலுக்கு தயாராக இருந்த முலாயம், தலித் ஓட்டுகளைக் கவர மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டு சேர்ந்தார். 1992 தேர்தலில் இருவரும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தனர். ஆனால் சுமுக உறவு இல்லை. அதற்கு பிஜேபியே காரணம் என செய்திகள் வெளிவந்தன. பதில் சொல்லக்கூட தகுதியற்ற வதந்தி என அக்கட்சி நிராகரித்தது.

president election - Indra Gandhi
என்றாலும், மூன்றாண்டுக்குள் மாயாவதி அக்கூட்டணியை விட்டு விலகினார். முலாயம் அரசு பெரும்பான்மை இழந்தது. ஆட்சி பறிபோன ஆத்திரத்தில் மாயா உட்பட அவரது எம்.எல்.ஏ.க்களை முலாயம் ஆட்கள் அடித்து உதைத்தனர். அதைவிட சுவாரசியம், அடுத்த சில நாட்களில் பிஜேபி ஆதரவுடன் மாயா முதல்வர் நாற்காலியில் அமர்ந்ததுதான்.

அடுத்து வந்த தேர்தலில் மாயா கட்சியும் பிஜேபியும் கூட்டாக போட்டியிடவில்லை. ஆனால் பெரும்பான்மை கிடைக்காததால் மாயாவை நாடியது பிஜேபி. ஆளுக்கு 6 மாதம் முதல்வர் பதவி என்கிற ஒப்பந்தம் போட்டு கூட்டணி ஆட்சி அமைத்தனர். அது 6 மாதத்துக்கு மேல் நீடிக்கவில்லை. கல்யாண் சிங் உட்கார நாற்காலி தர மறுத்து விட்டார் மாயா. அவருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது.

பிஜேபியால் தாங்க முடியவில்லை. மாயாவின் பகுஜன் சமாஜ், காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளிலும் பிளவை உண்டாக்கி, பிரிந்து வந்த எம்.எல்.ஏக்களை ஜனதந்ரிக் பகுஜன் சமாஜ் என்ற பிரிவின்கீழ் ஒன்றுசேர்த்து அதன் ஆதரவுடன் மாயாவை கவிழ்த்து ஆட்சியை பிடித்தது. கல்யாண் முதல்வர் ஆனார்.

காங்கிரஸ் சும்மா இருக்குமா? கவர்னர் ரொமேஷ் பண்டாரி மூலம் கல்யாண் அரசை டிஸ்மிஸ் செய்துவிட்டு, ஜகதாம்பிகா பால் என்ற காங்கிரஸ்காரரை முதல்வர் ஆக்கியது. கல்யாண் சிங் ஐகோர்ட்டில் வழக்கு போட்டு,

48 மணி நேரத்தில் மீண்டும் முதல்வர் ஆனார்.

அந்த ஜகதாம்பிகா பால் பிஜேபியில் சேர்ந்து விட்டார். இப்போது எம்.பி.யாக இருக்கிறார்.

கல்யாண் சிங் கட்சியை வளர்க்காமல் தனக்கென ஓட்டு வங்கி உருவாக்குகிறார் என்ற சந்தேகத்தில் பிஜேபி மேலிடம் அவரை கீழே இறங்கச் சொன்னது. பிரஷர் தாங்காமல் கல்யாண் கட்சியை விட்டு வெளியேறினார். மத்திய அமைச்சராக இருந்த ராஜ்நாத் சிங் முதல்வர் ஆனார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்தியில் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்ளும் வகையில் ராஜ்நாத் சில நடவடிக்கைகளை எடுத்தார். இந்த ஜாதியைவிட அதுதான் பின் தங்கி இருக்கிறது என்ற ரீதியில் பேசத்தூண்டி அந்தக் கருத்துகளைப் பரப்பினார். அதற்கு நல்ல பலன் கிட்டியது. அடுத்து வந்த மாயாவதி, முலாயம் ஆட்சிகளில் பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இடையிலான மோதல்கள் பெரிதும் அதிகரித்தன.

பிஜேபியை அதன் குகையிலேயே சந்திக்க முடிவு செய்த மாயாவதி, பிராமண வகுப்பினருக்கும் ஏனைய உயர் ஜாதிகளுக்கும் அதிகமான சீட்களை கொடுத்து அடுத்த தேர்தலை சந்தித்தார். பெரும் வெற்றி பெற்றார். ஐந்தாண்டு பதவிக் காலத்தையும் நிறைவு செய்தார். முலாயம் ஆட்சியில் ரவுடிகள் ராஜ்யம் கொடி கட்டிப் பறந்ததும் மாயாவுக்கு கைகொடுத்தது.

கிரிமினல்கள், தீவிரவாதிகள், ரவுடிகளுடன் நெருக்கமாக இருந்ததால் தனது பெயர் சீரழிந்து போனதை உணர்ந்து, மகன் அபிஷேக் பெயரை முன்னிறுத்தி அடுத்த தேர்தலில் கட்சியை ஜெயிக்க வைத்தார் முலாயம் சிங் யாதவ். ஐந்து ஆண்டுகளை வெற்றிகரமாக முடித்த அகிலேஷ் அதற்கு கொடுத்த விலை ரொம்ப அதிகம்.
யாதவ் குடும்பம் இரண்டாகிக் கிடக்கிறது. அப்பாவை நீக்கிவிட்டு தலைவர் பதவியை மகன் எடுத்துக் கொண்டார். அகிலேஷ் பக்கம் நெருங்க முடியாததால் முலாயமுடன் பழைய கதையெல்லாம் பேசி நட்பு கொண்டாடுகிறது பிஜேபி. புதிய முதல்வர் யோகி அளித்த விருந்துக்கெல்லாம் போய் வருகிறார் முலாயம். அவர் மீதும் பல வழக்குகள் இருக்கின்றன. மத்திய அரசு நினைத்தால் முடுக்கிவிட முடியும். டெல்லியில் உட்கார்ந்து அதே வேலைகளை மாயாவதிக்கு எதிராக செய்து அனுபவம் இருப்பதால் முலாயம் பயப்படுகிறார்.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் பக்கம் நிற்கிறார் அகிலேஷ். கட்சியும் அவர் பின்னால். ஆனால் அவரது அப்பா, சித்தப்பா சிவபால், அவருக்கு நெருக்கமான 5 எம்.பி.க்கள், பிஜேபி வேட்பாளர் ராம் நாத் கோவிந்துக்கு ஓட்டு போடப் போவதாக கூறுகின்றனர். 47 எம்.எல்.ஏ.க்களில் 12 பேரும் பிஜேபிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். தேர்தல் நாளில் இது இரு மடங்காகும் என்கிறது பிஜேபி.

இதுதான் உத்தர பிரதேச நிலவரம்.

ஜெயிப்பதற்கு பெரும்பான்மை தேவையில்லை.

பெரிய கட்சிதான் ஜெயிக்கும் என்பது சரியல்ல.

பிறரை பலவீனப்படுத்தி விட்டால் நீ பலசாலி ஆவாய்.

மற்ற கட்சிகளில் பிளவு உண்டாக்கினால் உன் வெற்றி சுலபம்.

இப்படியாக பல முடிவுகளை உ.பி அரசியல் பரிசோதனைக் கூடத்தில் கண்டறிந்துள்ளனர் நமது அரசியல் தலைவர்கள். கட்சி வாரியாக பார்த்தால் ஏனைய கட்சிகளின் உத்திகளைக் கற்றுத் தெளிந்து சில திருத்தங்களைச் செய்து சாணை பிடித்து இன்னும் கூர்மையாக்குவதில் பிஜேபி முதல் பரிசை தட்டிச் செல்கிறது.

தமிழ்நாட்டிலும் பிஜேபி தனது ஆயுதங்களை சோதிக்கத் தொடங்கி சில காலம் ஆகிவிட்டது.

ஜெயலலிதா மர்ம மரணத்துக்கு திரை போட முதலில் துணை நின்றது. பின்னர் அது பேராசைக் கும்பல் என அறிந்து பன்னீர் செல்வத்தை மெரினாவில் தியானம் செய்ய அனுப்பியது. எத்தனை உசுப்பியும் அவரால் எம்.எல்.ஏ.க்களை இழுக்க இயலவில்லை என்பது தெரிந்ததும், பழனிசாமிக்கு வலை விரித்தது. அவரும் சக அமைச்சர்களும் செய்த செய்கிற முறைகேடுகளை கண்டு கொள்ளாமல் விடுகிறது. பழனிசாமிக்கும் பன்னீருக்கும் நடுவில் தினகரனும் ஒரு குறுநில மன்னராக வலம் வர விரும்பியதும் அவருக்கும் ஆசை காட்டியது. அவர் மீதான வழக்குகளை வேகப்படுத்தாமல் நிறுத்தி வைத்தது. சட்டசபை சம்பிரதாயங்கள் மரபுகள் மீதான தாக்குதல், குதிரை பேரம் மறைப்பு, துணைவேந்தர்கள் நியமன முறைகேடு, தேர்வாணைக்குழு உறுப்பினர்கள் நியமன ஊழல், டாஸ்மாக் தள்ளாட்டம், டிஜிபி நியமன கேலிக்கூத்து உள்ளிட்ட எதையும் தடுக்கவோ சரி செய்யவோ முன்வராமல் நிற்கிறது.

TN CM Edappadi Palanisamy - Admk - TTV Dinakaran

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இந்த அளவுக்கு அதிமுக அரசுக்கும் கட்சிக்கும் உறுதுணையாக ஒரு மத்திய அரசு நிற்க வேண்டிய அவசியம் என்ன? இன்னும் நான்காண்டு காலத்தை அதிமுக ஓட்டி விடும்; நடுவில் அரசு கவிழும் என்ற திமுகவின் கனவு நிறைவேறாது என்று அடுத்தடுத்து மத்திய அமைச்சர்கள் பேச வேண்டிய அவசியம் என்ன?

அடுத்த தேர்தலில் அதிமுக உதவியுடன் ஆட்சியைப் பிடிப்பது மட்டும்தான் பிஜேபியின் நோக்கம் என்பதில் இதற்கு மேலும் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. அதற்கு முதல் கட்டமாக ஜனாதிபதி தேர்தலை கையில் எடுத்திருக்கிறார்கள்.

ஒரு விஷயம் மறந்துவிடக் கூடாது.

அநேகமாக ஓரிருவரைத் தவிர அதிமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் யாரும் மீண்டும் இந்தப் பதவிக்கு வருவோம் என நம்பவில்லை. விரும்பவும் இல்லை. ஆனால் பதவிக்கு வர செலவிட்ட பணத்தை திரும்ப எடுக்காமல் விட்டுவிட யாரும் தயாராக இல்லை. கூவத்தூர் நாடகம் இதை புடம் போட்டு எடுத்துக் காட்டியது.

ஆகவே, வெற்றிக்காக எந்த நிலைக்கும் இறங்கத் தயார் என்று எதிர்க்கட்சிகளும் ஒருவேளை களம் இறங்கினால் கடைசி நேர திருப்பங்களைப் பார்க்கலாம்.

இல்லையென்றால் பிஜேபியின் வெற்றிப் பயணத்தை யாராலும் தடுக்க முடியாது.

சென்ற 2005 பிகார் தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் தேசிய ஜனநாயக கூட்டணியின் கன்வீனருமான சரத் யாதவ் செய்தியாளர்களிடம் ஒரு ரகசியத்தை பகிர்ந்து கொண்டார்:

“மக்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். ஆனால் வெற்றிக்கு அத்தியாவசியமான சப்போர்ட் சிஸ்டம் பிஜேபி வசம் இருக்கிறது. உயர் வகுப்பு ஊடகம், அதிகார வர்க்கம், நீதித்துறை ஆகியவற்றைத்தான் சொல்கிறேன். ஆகவே பிஜேபிக்கு நாங்கள் நன்றி சொல்லியே ஆக வேண்டும்”.

இதைவிடத் தெளிவாக இந்திய அரசியலை படம் பிடித்துக் காட்டியவர் எவருமில்லை.

நிறைவு.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Opinion news in Tamil.

×Close
×Close