கதிர்
தியேட்டருக்கு போய் படம் பார்க்கிற வழக்கம் உண்டா?
சில படங்கள் படு மொக்கையாக இருக்கும். முடிவு என்ன என்பதை முதல் இரண்டு சீனில் தெரிந்து கொள்ளலாம். கடைசி சீன் வந்ததும் ரசிகர்கள் எழுந்து விடுவார்கள்.
ஆனால், பாருங்கள். எதிர்பாராத வகையில் க்ளைமாக்சில் ஒரு திருப்பம். சஸ்பென்ஸ். விறுவிறுப்பு. ரசிகர்களை அப்படியே கட்டிப் போட்டுவிடும். எழுந்தவர்கள் ஒவோருத்தராக உட்கார்வதை பார்க்க வேண்டுமே.
ஜனாதிபதி தேர்தல் அதுபோன்ற க்ளைமாக்ஸை நோக்கி நகர்வதாக தோன்றுகிறது.
பாரதிய ஜனதா தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) நிறுத்தியுள்ள ராம் நாத் கோவிந்தாவுக்கு 67 சதவீத ஓட்டுகள் கிடைக்கும் என்று அந்த அணியில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். சிலர் 62 என்கிறார்கள்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கணக்கு வேறாக இருக்கிறது. என்டிஏ ஆதரவு ஓட்டுகள் 55 சதவீதத்துக்கும் கீழே வந்து விட்டதாகவும், தேர்தல் நாள் வரும்போது அது 50க்கும் கீழே போய்விடும் என்றும் சொல்கிறார். காலை வாரப் போகும் கட்சிகள் எவை என்பதை சொல்ல அவர் மறுக்கிறார்.
ஆதரவு 60 சதவீதத்துக்கு கீழே இறங்கினால் ஆபத்துதான். சான்சே இல்லை என ஊடகங்களால் கைவிடப்பட்ட பாவப்பட்ட வேட்பாளர் திடீரென்று ஜனாதிபதி ஆகிவிடுவார். நடக்காது என்று சொல்வதற்கில்லை.
முன்பொரு முறை நடந்திருக்கிறது. சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட வி.வி.கிரி வெற்றி பெற்று ஜனாதிபதி ஆனார். 1969 ஆகஸ்ட் 16ல் நடந்தது அந்த தேர்தல். சுவாரசியங்கள் நிரம்பி வழிந்த தேர்தல் அது. இந்திய அரசியலின் போக்கையே புரட்டிப் போட்ட தேர்தலும் கூட. அந்த பின்னணியை இங்கே நினைவுக்கு கொண்டு வந்தால்தான் மேலே சொன்ன க்ளைமாக்ஸ் மாறும் சாத்தியத்தை உங்களால் ஆமோதிக்க இயலும்.
மத்திய அரசும் பெரும்பாலான மாநில அரசுகளும் காங்கிரஸ் வசம் இருந்தன. இந்திரா காந்தி பிரதமர். நிஜலிங்கப்பா காங்கிரஸ் தலைவர். காமராஜ் விலகி நிஜலிங்கப்பாவுக்கு வழி விட்டிருந்தார். நீலம் சஞ்சீவ ரெட்டி பெயரை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்மொழிந்தார் நிஜலிங்கப்பா. இந்திராவும் வழி மொழிந்திருந்தார்.
ஆட்சியை விட கட்சிதான் பெரியது; பிரதமராக இருந்தாலும் கட்சி முடிவுக்கு கட்டுப்பட வேண்டும் என்பது நிஜலிங்கப்பா, காமராஜ், மொரார்ஜி போன்றவர்களின் கருத்து. ஆட்சியில் கட்சியின் தலையீடு இருக்கக் கூடாது என்பது இந்திராவின் எண்ணம். பெருந்தலைகளை கொண்ட நிஜலிங்கப்பா அன்கோவுக்கு சிண்டிகேட் என ஊடகங்கள் பெயர் சூட்டின. இருவரும் நேருக்கு நேர் மோதாமல் அடக்கி வாசித்தாலும், நிழல் யுத்தம் நடந்து கொண்டே இருந்தது.
இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டிக்கு மற்ற கட்சிகளிடமும் ஆதரவு திரட்ட சிண்டிகேட் முடிவு செய்தது. தேர்தலுக்கு 5 நாட்கள் இருந்த நிலையில் காங்கிரஸ் தொழிற்சங்க தலைவர்களான அர்ஜுன் அரோரா, சஷி பூஷன் இருவரும் ஒரு குண்டை வீசினர்.
காங்கிரசின் கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமான ஜனசங்கம், சுதந்திரா ஆகிய கட்சிகளின் ஆதரவை நிஜலிங்கப்பா கேட்டுப் பெற்றது கேவலம் என்று அவர்கள் சாடினர். அந்த தீய சக்திகளின் ஆதரவுடன் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டளிக்க தங்களுக்கு விருப்பம் இல்லை என்றனர்.
அதோடு நிற்கவில்லை. “எங்கள் மனசாட்சி யாருக்கு போட்டு போட சொல்கிறதோ அவருக்கே எங்கள் ஓட்டு” என்று இருவரும் அறிவித்தனர். மனசாட்சி ஓட்டு என்ற வார்த்தைகள் இந்திய அரசியலுக்கு அறிமுகம் ஆனது அப்போதுதான். காங்கிரஸ், அதாவது சிண்டிகேட், தலைவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
அடுத்த இரண்டு நாட்களில் அடுத்த இடியை இறக்கினார் இந்திரா. அவரது அமைச்சர்கள் ஜெகஜீவன் ராம், பக்ருதீன் அலி அகம்து இருவரும் மனசாட்சி ஓட்டுக்கு ஆதரவாக அறிக்கை விட்டார்கள். அதற்கு அவர்கள் சொன்ன காரணம்: ”காங்கிரஸ் வேட்பாளர் சஞ்சீவ ரெட்டிக்கு எதிராக சி.டி.தேஷ்முக் என்ற வேட்பாளரை எதிர்க்கட்சிகள் அறிவித்துவிட்ட பிறகு, அந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள சுதந்திரா, ஜனசங்கம் முதலான தொழிலாளர் விரோத வலதுசாரி கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் தலைமை நாடியது மன்னிக்க முடியாத காரியம்.”
அமைச்சர்களின் அறிக்கையை பிரதமரின் அறிவிப்பாக பார்த்து அதிர்ந்து போனது சிண்டிகேட். அன்று இரவே 36 அமைச்சர்கள் உட்பட 250 எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு வெளியானது. ஜனாதிபதி தேர்தலில் கொறடா கட்டளையை பொருட்படுத்தாமல் அவரவர் மனசாட்சிப்படி ஓட்டளிக்க உரிமை வேண்டும் என்பது அதில் சொல்லப்பட்ட கோரிக்கை.
இந்திரா காந்தி தலைமையில் அன்று இரவே அமைச்சரவை கூடியது. 51 அமைச்சர்களில் ஒய்.பி.சவான், ராம் சுபக் சிங் ஆகிய இருவர் மட்டும் மனசாட்சி ஓட்டு கூடாது; காங்கிரஸ்காரர்கள் சஞ்சீவரெட்டிக்குதான் ஓட்டு போட வேண்டும் என்றார்கள்.
நாளை தேர்தல் என்ற நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் அன்று நிஜலிங்கப்பாவுக்கு கடிதம் அனுப்பினார் இந்திரா. பெங்களூர் மாநாட்டில் சஞ்சீவ ரெட்டியின் பெயர் தேர்வு செய்யப்பட்ட சூழலே ஜோடிக்கப்பட்ட ஒன்று என தொடங்கி, காங்கிரசின் மக்கள் சார்பு கொள்கைகளுக்கு முரணான போக்கு கொண்ட கட்சிகளின் ஆதரவைப் பெற்று ஜெயித்தாக வேண்டிய கட்டாயம் என்ன என்று கேட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் மன்சாட்சிப்படி ஓட்டளிப்பதே காங்கிரஸ் உறுப்பினர்களின் கடமை என்று அவர் சொன்னார்.
மனசாட்சி ஓட்டுகளை அள்ளிக் குவிக்க சுயேச்சையாக களம் இறங்கினார் வி.வி.கிரி. அவர் துணை ஜனாதிபதியாக இருந்தார். ஜனாதிபதி தேர்தலில் ஜெகஜீவன் ராமைத்தான் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்த இந்திரா விரும்பினார். சிண்டிகேட்டில் யாரும் ஆதரிக்கவில்லை என்றதும், பொதுக் கருத்து மூலம் தேர்வு செய்வோம் என்றார். ஆனால், அவரது யோசனையை நிராகரித்து விட்டு சஞ்சீவ ரெட்டியை தேர்வு செய்தது சிண்டிகேட். ரெட்டி அப்போது லோக்சபா சபாநாயகராக இருந்தார். சிண்டிகேட் சார்பில் அவர் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படலாம் என்று செய்திகள் கசிந்தபோது, “சிண்டிகேட் மாதிரியான ஒரு கும்பலுடன் என் பேரை இழுக்காதீர்கள்” என்று ரொம்பதான் கோபப்பட்டார் ரெட்டிகாரு. ஆனால் இந்திராவின் சாய்ஸ் கிரிதான் என தெரிந்ததும் சிண்டிகேட் பக்கம் சாய்ந்தார்.
கிரி 4,20,077 ஓட்டுகள் பெற்று வென்றார். சஞ்சீவ ரெட்டி 4,05,427 ஓட்டுகள் பெற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் தேஷ்முக் 1,12,769 ஓட்டுகள் பெற முடிந்தது. மேலும் 12 பேர் தோல்வி அடைந்தனர். அவர்களில் 5 பேருக்கு ஒரு ஓட்டு கூட விழவில்லை.
நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியின் பலம் 431 ஆக இருந்தும், காங்கிரசின் அதிகாரபூர்வ வேட்பாளருக்கு 268 ஓட்டுதான் அங்கிருந்து கிடைத்தது. 17 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது. ஆனால் 6 மாநிலங்களில்தான் காங்கிரஸ் எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களின் ஓட்டு ரெட்டிக்கு விழுந்தது.
தமிழ்நாடு (காமராஜ்), கர்நாடகா (நிஜலிங்கப்பா), ஆந்திரா (சஞ்சீவ ரெட்டி), மகாராஷ்ட்ரா (ஒய்.பி.சவான்), பாம்பே (எஸ்.கே.பாட்டீல்), குஜராத் (மொரார்ஜி தேசாய்) ஆகிய மாநிலங்கள் அவை. பிராக்கெட்டில் குறிப்பிடுள்ள தலைவர்கள் அப்போது தேசிய அரசியலுக்கு வந்து டெல்லியில் செட்டிலாகி விட்டாலும் அவரவர் மாநிலங்களில் உள்ள பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியையும் அதன் வழியாக மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளையும், அதன் விளைவாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியையும் மாநில ஆட்சியையும் தங்கள் இரும்புக் கைக்குள் வைத்திருந்தார்கள். அவர்களை மீறி அந்த மாநிலங்களில் எதுவும் நடக்காது.
ஆனால் இதற்கு ஈடுகட்டும் விதமாக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளீன் ஓட்டுகள் கிரிக்கு கிடைத்தன. முதலாளித்துவத்தின் ஏஜன்டுகள் என நிஜலிங்கப்பா, பாட்டீல், சவான், நிஜலிங்கப்பா ஆகியோர் விமர்சிக்கப்பட்ட சூழல் அது. இந்திரா காந்தி அதற்கு எதிராக தன்னை ஏழைகளின் காவலனாக சித்தரிக்க அப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். வங்கிகள் தேசிய மயம் அதில் முதன்மையானது. மொரார்ஜி தேசாயையும் அவர் அமைச்சரவையில் இருந்து நீக்கி இருந்தார். இதனால் இடதுசாரிகள் அவரை புதிய காவல் தெய்வமாக கருதினர்.
அதன் பிறகு நடந்தது வரலாறு. கட்சியில் இருந்து இந்திரா நீக்கப்பட்டது, காங்கிரஸ் பிளவு, காங்கிரஸ் (ஐ) உதயம், காங்கிரஸ் (ஓ) படிப்படியான அஸ்தமனம், 1971 நாடாளுமன்ற கலைப்பு, திடீர் தேர்தல், அதிரடி பெரும்பான்மை, சஞ்சய் காந்தி பிரவேசம், எமர்ஜென்சி இத்யாதி விஷயங்கள் இந்தக் கட்டுரைக்கு அனாவசியம். மேலே சொன்ன வேறு சில விஷயங்களும் அவசியம் அற்றவையாக தெரியும். ஆனால் இன்றைய நிலவரத்தை அலசும்போது சில புதிய கோணங்களில் பார்க்க அவை உதவும்.
இந்த ஜனாதிபதி தேர்தலில் டெல்லியில் வேண்டுமானால் பரபரப்பு இல்லாதிருக்கலாம். ஏனென்றால் பாரதிய ஜனதா கட்சிக்குள் இப்போது எந்த அதிகாரப் போட்டியும் நடக்கவில்லை. மோடி உச்சத்தில் இருக்கிறார். கட்சிக்குள் எதிரிகளே கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால் மாநிலங்களின் நிலைமை அப்படி இல்லை. பிகார், உத்தர பிரதேசம், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா என்று பல மாநிலங்களில் ஜனாதிபதி தேர்தல் லேசானது முதல் பலமானது வரையிலான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியில் இல்லாவிட்டாலும் பல மாநிலங்களில் இது அரசியல் மாற்றத்தை உருவாக்கப் போவது நிச்சயம் என்று தெரிகிறது.
நாளை பார்ப்போம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.