ஆர். முத்துக்குமார்
நாட்டின் அதி உயர் பதவியாகக் கருதப்படும் குடியரசுத் தலைவர் பதவிக்கான தேர்தல்களில் தமிழகம் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியிருப்பதுதான் கடந்த கால வரலாறு. இந்த ஆண்டு நடக்க விருக்கும் தேர்தலிலும் அதே அளவுக்கு முக்கியமான பங்கை ஆற்றுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இருந்தன.
தமிழகத்தில் 234 எம்.எல்.ஏக்களும் 39 மக்களவை உறுப்பினர்களும் 18 மாநிலங்களவை உறுப்பினர்களும் வாக்களிக்கும் தகுதி கொண்டவர்கள் என்பதால் ஆளும் பாஜக நிறுத்தும் வேட்பாளரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக, தமிழகத்தின் ஆளுங்கட்சியான அதிமுக இருக்க வேண்டும். ஆனால் இன்றைய நிலையை தலைகீழாக இருக்கிறது.
முதல்வர் ஜெயலலிதாவைப் பார்க்க பிரதமர் மோடியே வீடு தேடி வந்ததெல்லாம் பழைய கதை. அதிமுகவின் ஆதரவு கோரி இதுவரை எந்தவொரு பாஜக தலைவரும் அதிமுகவின் தலைமை அலுவலகம் வரவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைப் பார்க்கவரவில்லை. அதிமுகவின் துணைப் பொதுச்செயலாளரை அணுகியிருப்பதாகச் செய்திகள் வரவில்லை. மாறாக, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளரை அதிமுக தாமாக முன்வந்து ஆதரவளிக்கும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான இல. கணேசன்.
அவர் மட்டுமல்ல, பாஜகவின் இன்னபிற தலைவர்களும் இதே தொனியில்தான் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இந்தக் கருத்துகளுக்கு அதிமுக தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு மறுப்பும் அதிகாரபூர்வமாக வந்துசேரவில்லை. அதைப்பற்றிப் பேசுவதற்கும் அவர்களுக்குத் தயக்கம் அல்லது பயம்.
நாடாளுமன்றத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அதிமுகவுக்கு இப்படியொரு நிலைமை ஏற்பட்டது ஏன்?
வெற்றிடம்.
அதிமுகவின் பொதுச்செயலாளரும் தமிழக முதல்வராக இருந்தவருமான ஜெயலலிதாவின் மரணம் அவருடைய கட்சியையும் அவர் நடத்திய ஆட்சியையும் அடியோடு புரட்டிப் போட்டிருக்கிறது. இன்றைய நிலைமையில் கட்சி மூன்று கூறுகளாகப் பிளவுபட்டு நிற்கிறது. தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என்று மூன்று அணிகள்.
ஓர் அணியின் பொதுச்செயலாளரான சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கிறார். துணைப்பொதுச்செயலாளர் தினகரன் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்சப்புகாரில் சிக்கி, தற்போதுதான் பிணையில் வந்திருக்கிறார். அதிர்ந்துகூட பேசாத அமைச்சர்கள் எல்லாம் இப்போது ஆவேச உரை நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
எல்லாவற்றையும்விட முக்கியமாக, அமைச்சர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரி உள்ளிட்ட சோதனைகள் அவர்களை வெகுவாகப் பயமுறுத்தியிருக்கின்றன. தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வந்து ஆய்வு நடத்துவதும் முதலமைச்சர் இருக்கும்போது நடுநாயகமாக நின்று செய்தியாளர்களைச் சந்தித்து ஆய்வு குறித்துப் பேசுவதும் பலத்த விமரிசனங்களை எழுப்புகின்றன.
தமிழகத்தில் பெயருக்குத்தான் அதிமுக ஆட்சி இருக்கிறது. ஆனால் அரசை நடத்துவது பாஜகதான், மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவே தமிழகத்தின் சூப்பர் முதல்வர், மத்திய அரசின் கைப்பாவையாக எடப்பாடி பழனிச்சாமி அரசு செயல்படுகிறது என்பன போன்ற விமரிசனங்கள் தீவிரம் பெறுகின்றன.
டிடிவி தினகரனை ஒதுக்கிவிட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்வதும், நானே ஒதுங்கிவிட்டேன் என்று தினகரன் சொல்வதும், பிறகு நான் மீண்டும் வந்துவிட்டேன் என்று தினகரன் சொல்வதும், ஏற்கெனவே சொன்னது போல ஒதுங்கியிருப்பதுதான் நல்லதென்று அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுப்பதும், அறுபது நாள் அமைதியாக இருப்பேன் என்று தினகரன் சொல்வதும் திடீர் திடீரென அமைச்சர்கள் சந்திப்பு நடத்துவதும், கூடிப்பேசுவதும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் தினகரனைச் சந்திப்பதும் அதிமுகவின் உள்கட்சிக் குழப்பம் உச்சத்தில் இருப்பதைக் காட்டுகிறது.
கிட்டத்தட்ட இந்த நிலைமையில்தான் குடியரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்தலில் பாஜக நிறுத்தும் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவளிக்குமா, அளிக்காதா என்ற கேள்வி முதன்மையாக எழுந்தது. பல்வேறு சங்கதிகளால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கும் அதிமுகவினருக்கு பாஜக வேட்பாளரை ஆதரிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அதன்காரணமாகவே, பாஜகவின் முன்னணித் தலைவர்கள் அதிமுகவை வலியச் சென்று அணுகாமல் இருக்கிறார்கள் என்ற பார்வை முன்வைக்கப்படுகிறது.
ஆனால் அதிமுகவின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் பாஜகவுக்குச் சேர்வதை தினகரனின் திடீர் நடவடிக்கைகள் தடுத்துநிறுத்தக்கூடும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் கொறடா உத்தரவு கிடையாது என்பதாலும், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதாலும், யார் யாருக்கு வாக்களித்தார்கள் என்பது தெரியாது. அது ஒருவகையில் பாஜகவுக்குச் சாதகமாகவே இருக்கும் என்ற கருத்தையும் மறுப்பதற்கில்லை.
இந்த இடத்தில்தான் இன்னொரு முக்கியமான கேள்வி எழுகிறது. அது, குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்படுமா என்பது.
இன்றைக்குள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் நிலையற்ற ஆட்சி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. ஆளும் அரசு மெஜாரிட்டி இருக்கிறதா என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. ஒருவேளை, எடப்பாடி பழனிச்சாமி அரசின் மீது எதிர்க்கட்சிகளோ அல்லது ஆளுங்கட்சியின் அதிருப்தி அணியோ நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால், அது அரசுக்கான ஆபத்தாக மாறக்கூடும்.
ஆனால் அப்படியான நிகழ்வு இப்போதைக்கு நிகழ்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வதில் மத்திய பாஜக அரசு கண்ணும் கருத்துமாக இருக்கும் என்றே தெரிகிறது. ஏனென்றால், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு அதிமுகவினரின் வாக்குகள் தேவை. சரி, குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தபிறகு?
அந்த இடம்தான் முக்கியமானது. தமிழகத்தின் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தைப் பயன்படுத்தி, ஆட்சியைப் பிடிப்போம் என்பதை கழகங்கள் இல்லாத தமிழகம் அமைப்போம் என்றும் கோடி உறுப்பினர் சேர்ப்போம், மோடி ஆட்சி அமைப்போம் என்றும் அதிமுக அழிந்துவிட்டது, திமுக அழிந்துகொண்டிருக்கிறது, அதிமுக இயற்கை மரணம் அடைந்துவிட்டது என்றும் வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிவருகிறது பாஜக.
ஆக, ஜெயலலிதாவின் மரணத்தால் ஏற்பட்டிருக்கும் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப பாஜக விரும்பினால், அதற்கு இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, தற்போதைய ஆட்சியை முழுமையாகத் தம்வசப்படுத்தி, மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்தி, அதிமுக அரசின் எல்லா சாதனைகளையும் தன்னுடைய சாதனைகளாக மக்களிடம் முன்வைத்துப் பிரசாரம் செய்வது, இரண்டாவது, தற்போதைய அதிமுக அரசை நீக்கிவிட்டு, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தி, போதுமான கால அவகாசம் எடுத்துக்கொண்டு, தேர்தல் நடத்துவது.
இரண்டுமே அவ்வளவு சுலபமானதல்ல என்பதுதான் கள யதார்த்தம். அதிமுக அரசை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியுமே தவிர அதன் சாதனைகளை எல்லாம் தன்னுடைய சாதனைகளாக மக்கள் மத்தியில் கொண்டு செல்வது சாத்தியமில்லை. ஏனென்றால், இங்கு இன்றைய அதிமுகவைவிட பலமான எதிர்க்கட்சியாக திமுக இருக்கிறது. தவிரவும், பாஜகவைவிட பன்மடங்கு வாக்குவங்கி கொண்ட இன்னபிற கட்சிகள் இருக்கின்றன. முக்கியமாக, தமிழக அரசில் பாஜகவின் தலையீட்டை விமரிசிக்கவும் விவாதிக்கவும் ஏராளமான பத்திரிகைகளும் ஊடகங்களும் இருக்கின்றன. தவிரவும், தமிழகம் அரசியல் புரிதல் கொண்ட மாநிலம். ஒருவேளை, தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஆட்சியைக் கலைத்தால், அது பாஜகவுக்கு எதிராகவே முடியக்கூடும்.
இரண்டாவது, அதிமுக அரசை நீக்குவது. இதற்கும் இரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று, ஆட்சியைக் கலைப்பது. கர்நாடக முதல்வராக இருந்த எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பு ஆட்சிக்கலைப்பு வாய்ப்புகளை அடியோடு நிராகரிக்கின்றன. ஆகவே, அடுத்த வாய்ப்பு, ஆட்சிக் கவிழ்ப்பு. அதற்கு அதிமுகவின் இரண்டு அல்லது மூன்று அணிகள் தயாராக இருக்க வேண்டும். அப்படியான சூழலில்தான் ஆட்சி கவிழும். அது எந்த அளவுக்குச் சாத்தியம் என்பது இப்போதைக்கு விடைதெரியாத வினா.
ஒருவேளை, வேறு ஏதேனும் கண்ணுக்குத் தெரியாத வகையில் ஆளும் தரப்புக்கு நெருக்கடி தரப்படும் பட்சத்தில், ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். அப்போதும்கூட, அதிமுகவின் வலுவான பிரிவுடன் கூட்டணி அமைத்தால் மட்டுமே பாஜகவுக்கு லாபம். இல்லாத பட்சத்தில், அது திமுகவுக்கும் மு.க.ஸ்டாலினுக்குமே லாபமாக மாறும். அதை அதிமுகவும் விரும்பாது, பாஜகவும் விரும்பாது. இதுதான் இன்றைய கள யதார்த்தம்!
(கட்டுரையாளர், ஆர். முத்துக்குமார். எழுத்தாளர். “தமிழக அரசியல் வரலாறு”, “இந்தியத் தேர்தல் வரலாறு” உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: writermuthukumar@gmail.com)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.