Advertisment

மொரிசியஸுக்கான ஒர் புதிய வார்ப்பு!

இந்திய வம்சாவளியினர் முக்கியமான பெரும்பான்மைச் சமூகம் என்பதால், இது இயல்பானதும்கூட.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Prime Minister Narendr, a Modi, Mauritius counterpart Pravind Kumar Jugnauth

Prime Minister Narendra Modi with his Mauritius counterpart Pravind Kumar Jugnauth at the Hyderabad House in New Delhi on Saturday. Express photo by Renuka Puri.

எழுதியவர் - சி.ராஜா மோகன்

Advertisment

மொரியஸ் நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள பிரவிந்த் ஜக்நாத், மீண்டும் பிரதமர் பதவியேற்க ஏற்பாடுகள் தயாராகிவருகின்றன. இதுவரை, அந்த நாட்டை மேற்கு இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தின் ஒரு சிறு தீவுக் குடியரசாக மட்டுமே இந்தியா பார்த்துவருகிறது. இந்தப் பார்வையை மாற்றிக்கொள்ளவேண்டிய தேவை டெல்லிக்கு ஏற்பட்டுள்ளது.

நீண்டகாலமாகவே மொரிசியசை புலம் பெயர்ந்தவர்களின் கண்ணோட்டத்திலேயே இந்திய அரசும் பார்த்துவருகிறது. அங்கு இந்திய வம்சாவளியினர் முக்கியமான பெரும்பான்மைச் சமூகம் என்பதால், இது இயல்பானதும்கூட. ஆனால், இப்போது மொரிசியசைப் பற்றி இன்னும் விரிந்த தளத்தில் வைத்து பார்க்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் பெரிய அளவில் அதிகாரப்போட்டி வளர்ந்துவரும் நிலையில், மிக அண்மையில்தான் மொரிசியசின் கேந்திர முக்கியத்துவத்தை இந்திய அரசு உணர்ந்துகொண்டது. 2014 மே மாதம் மோடி பிரதமரான காலகட்டத்தில், அந்நாட்டை நம் அண்டை நாடுகளில் ஒன்றாக அறிவித்தார். பிற தெற்காசிய நாடுகளுடனான கூட்டில் இணையுமாறு மொரிசியஸ் அரசுத்தலைவருக்கும் அழைப்புவிடுத்தார்.

மொரிசியசுக்கு 2015-ல் பயணம் மேற்கொண்டபோது, சாகர் (SAGAR- security and growth for all in the region), அதாவது, ’இந்த வட்டாரத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு’ எனும் கொள்கையை வெளியிட்டார், மோடி. சில பத்தாண்டுகளில் இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான இந்தியாவின் முக்கியமான முதல் கொள்கை வெளிப்பாடு இதுவாகும். இத்திட்டத்திற்குள் பொதிந்துள்ள சாரத்தை உருப்படியான பலனாக அடையமுடியும். அதற்கு முன்னர் டெல்லி சில வழிமுறைகளில் இறங்கவேண்டும்.

ஆனால், மொரிசியசைக் கையாள்வது இந்தியாவுக்கு பெரும் சவாலாக இருக்கும். இந்தியாவின் ஒரு நீட்சியே அந்த நாடு எனும் கருத்து இங்கு ஆழ வேரூன்றியுள்ளது; உண்மை அப்படியாக இல்லை. எனவே, இக்கருத்துநிலையைப் புறக்கணிப்பது உடனடித் தேவையாகும். தனக்கே உரிய தேசியப் பண்பாட்டையும் உலகளாவிய தனித்த அடையாளத்தையும் கொண்டிருக்கும் இறையாண்மையுள்ள ஒரு நாடு, மொரிசியஸ். இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் அதன் கவர்ந்திழுக்கும் கேந்திரமான அமைவிடம் மற்றும் வெற்றிகரமான பொருளாதார மையத்தன்மை ஆகியவற்றை அந்நாட்டுத் தலைவர்களும் நன்கு உணர்ந்திருக்கின்றனர். 13 இலட்சம் மக்கள்தொகையே உள்ள சிறு நாடாக இருந்தபோதும் அதன் இருப்பைவிட அதிகப்படியான மதிப்பைப் பெற்றுள்ளது.

ஜக்நாத்தின் இந்தியப் பயணமானது அதன் இறையாண்மைக்கான மரியாதையாகப் பார்க்கும்படியாக நல்லவிதமாக அமைந்துள்ளது. 2017 ஜனவரியில் தன் தந்தை அனெரூட்டிடமிருந்து ஆட்சிப் பொறுப்பைப் பெற்றுக்கொண்ட ஜக்நாத், இப்போது தானாகவே அதிகாரத்துக்கு வந்துள்ளார். 61 வயதாகும் அவர் மிகவும் இளையவராக இல்லாமல்போகலாம். ஆனால், அடிமைநாடு என்ற நிலையைவிட்டு பொருளாதார வளம்படைத்த நாடாக மாறியுள்ள மொரிசியஸ் குடியரசின் பரிமாணத்தைக் கண்டு பெருமிதப்படும் புதிய தலைமுறையை அவர் ஈர்த்துள்ளார்.

மொரிசியசை அதனளவில் பார்க்கத் தொடங்கியுள்ள ஒரு இந்தியா, உணர்ச்சிமயப்பாட்டைத் தாண்டி அதை போர்த்தந்திரக் கூட்டாளியாக மாற்றுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் கட்டவிழ்த்துவிடவேண்டும். அதன் சர்க்கரை உற்பத்திக்கு அப்பால், நிதிச் சேவைகள் மற்றும் புது தொழில்நுட்ப முனைவுகளையும் இதில் இடம்பெறச்செய்யவேண்டும்.

மொரிசியஸ் என்றால் அதன் அமைவிடமும் அந்நாட்டு மக்களின் மேதைமையும்தான். வரலாற்றின் முன்னைய காலத்தில் ஐரோப்பிய கடல்வழிக் கண்டுபிடிப்பாளர்கள் ஆப்பிரிக்கக் கண்டத்தைச் சுற்றியும் இந்தியாவை நோக்கி கிழக்காகவும் மேற்கொண்ட பயணத்தில்தான், மொரிசியசை அடைந்தனர். இந்தியப் பெருங்கடலின் சாவி என்றும் நட்சத்திரம் என்றும் இதை அழைக்கலாயினர். அங்கு முதலில் கால்வைத்த அயலவர் எனும் பெருமை போர்த்துக்கீசியர் மற்றும் டச்சுக்காரர்கள் என்றால், 18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அத்தீவு முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தவர்கள், பிரெஞ்சுக்காரர்கள்.

அவர்கள் அங்கு கரும்புப் பயிர்செய்கையைத் தொடங்கி பரவலாக்கினார்கள். கப்பல் கட்டும் தொழிலையும் அறிமுகப்படுத்தி, அதை ஒரு கடற்படைத் தளமாகவும் ஆக்கினார்கள். மொரிசியசின் கேந்திர முக்கியத்துவத்தை பிரான்சு புரிந்துகொண்டிருந்தது. பிரெஞ்சுக் காலனி அதிகாரியும் படைவீரருமான பெலிக்சு ரினார்டு சான் டி க்ரோக், ‘இந்த உலகத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் இது ஒரு மையப்புள்ளி’ என்று குறிப்பிட்டார்.

நெப்போலியப் போர்களின் காலகட்டத்தில் மொரிசியசை பிரிட்டன் கைப்பற்றியதை அடுத்து, ஐரோப்பாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தகவல்தொடர்புக்கு உதவியாக அமைந்தது. அமைவிடத்தைப் பொறுத்து அதன் நீடித்த மதிப்பானது, டிகோ கார்சியா தீவு விவகாரத்திலும் எதிரொலிப்பதை உணரமுடியும். இப்போது அமெரிக்காவுக்குச் சொந்தமான அயலக பெரிய இராணுவதளங்களில் ஒன்றான இத்தீவு, முன்னர் மொரிசியசின் ஒரு பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால், மொரிசியசின் இராணுவ முக்கியத்துவத்துக்கு அழுத்தம்கொடுத்தால், அதன் புவி- பொருளாதார முக்கியத்துவம் எளிதாக இல்லாதுபோகும். மையமான புவிப்புள்ளி என பிரெஞ்சு தரப்பால் குறிப்பிடப்படும் இத்தீவு, வர்த்தகரீதியாகவும் இந்தியப் பெருங்கடலில் இணைப்புமையமாகவும் சம அளவில் உண்மையாகும். ஆப்பிரிக்க ஒன்றியம், இந்தியப் பெருங்கடல் ரிம் இணைப்பு, இந்தியப் பெருங்கடல் ஆணையம் ஆகியவற்றின் உறுப்புநாடாக இருப்பதன் மூலம், மொரிசியஸ் பலபடித்தான புவியியல் முக்கியப்புள்ளியாக படிப்படியாக உயர்ந்துவருகிறது.

மொரிசியசின் (தெற்காசிய) வட்டார மையத் தன்மையை டெல்லி ஊக்குவிக்குமானால், அதற்குள் பலவகை சாத்தியங்கள் உள்ளன. ஒன்று, மொரிசியசின் ஊடாக ஆப்பிரிக்காவுக்குள் முதலீட்டைக் கொட்டுவதும் அதன் மூலம் அந்நாடும் சேவைகளைப் பெறுவதும் ஆகும். மேலும், அது ஆப்பிரிக்காவுடனான இந்தியப் பொருளாதார இலக்கெல்லைக்கான அடிப்படையாகவும் இருக்கும்.

மற்றது, தென்மேற்கு இந்தியப் பெருங்கடலின் வனிலா தீவுகள் எனப்படும் கொமொரோஸ், மடகாஸ்கர், மொரிசியஸ், மயோட்டே, ரீயுனியன், சீசெல்ஸ் ஆகியவற்றை, இரு தரப்பு உறவு அடிப்படையில் கையாள்வதற்கு இதுவரை இந்தியா முனைந்துவருகிறது. அப்படி அவை மொத்தத்தையும் திரட்சியாக டெல்லி கருதுமானால், அத்தீவுக்கொள்கையின் மையமாக மொரிசியஸ் அமையும்.

மூன்று, இந்த மையமானது, இந்தக் கடல் வட்டாரத்தில் வங்கித்தொழில் நுழைவாயிலாக, இந்திய நகரங்களுக்கான விமானப் போக்குவரத்துக்கும் சுற்றுலாவுக்குமான மையமாக, இந்தியாவின் வர்த்தகச் செயற்பாடுகளுக்கு துணைசெய்வதாக இருக்கும்.

நான்காவதாக, தொழில்நுட்ப முனைவுக்கான வட்டார மையமாக மொரிசியசை பரிணமிக்கவைக்க இந்தியா பங்களிக்கமுடியும். இந்திய நுட்பக் கல்விக்கழகம்-ஐஐடி போன்ற வசதிகளை அமைத்துத்தரும்படி அந்நாடு வைத்த கோரிக்கைக்கு இந்தியா இன்னும் சாதகமாக பதிலளிக்கவில்லை.

ஐந்தாவதாக, பருவநிலை தவறுதல், நிலைத்த வளர்ச்சி மற்றும் நீலப் பொருளாதாரம் ஆகியவை, மொரிசியசுக்கும் அதன் அண்டைய தீவு நாடுகளுக்கும் இருப்புக்கே சவாலாக நிற்கின்றன. இந்தப் பகுதிகளில் இந்திய முனைப்பை மேம்படுத்துவதற்கு மொரிசியஸ் தோதான கூட்டாளியாக இருக்கும். இந்த வட்டாரத்திற்கு… ஏன் சர்வதேச அளவுக்கும் கடல்சார் அறிவியல் ஆராய்ச்சிக்கு மதிப்புமிக்க இடமாகவும் உருவாகமுடியும்.

நிறைவாக, தென்மேற்கு இந்தியப் பெருங்கடல் வட்டாரத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்புக் கோணத்தில் ஒருங்கிணைந்த நிலையை டெல்லி எடுக்குமானால், இயல்பாகவே முதல் தெரிவாக மொரிசியஸ்தான் இருக்கும். மொரிசியசில் உள்ள பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகமானது அங்குள்ள அனைத்து தீவு நாடுகளுக்கும் போலவே கிழக்கு ஆப்பிரிக்க அரசுகளுக்கும் சேவையை வழங்கமுடியும்.

மொரிசியஸ் தொடர்பாக இன்னும் கூடுதலாக போர்த்தந்திரம் கொண்ட புத்தம்புது பார்வையைக் கொள்ளுமானால் இவை மட்டுமல்ல, இன்னும் அதிகமானவை சாத்தியமாகும். இதற்கு ஒரு வழி, முதலில், வனிலா தீவுகளின் அரசுத் தலைவர்களுடன் இந்தியா ஒரு உச்சிமாநாட்டை இந்தியா நடத்தவேண்டும்.

இதனை ஆங்கிலத்தில் படிக்க - it is time for India to look again at Mauritius

இந்தக் கட்டுரை, முன்னதாக, டிச.3-ம் நாளன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டில் வெளியானது. கட்டுரையாளர், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தெற்காசியவியல் கல்விக்கழகத்தின் இயக்குநர் ஆவார். பன்னாட்டு விவகாரங்கள் தொடர்பான ’இந்தியன் எக்ஸ்பிரஸ்’ பங்களிப்பு ஆசிரியர்.

தமிழில்: இர.இரா.தமிழ்க்கனல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment