Advertisment

ப. சிதம்பரம் பார்வை : சங்கரி லா போன்ற உரையை இந்தியாவின் நிலையுடன் ஒப்பிட்டுப் பேசுங்கள் மோடி!

அறிவை நோக்கி செல்லும் பாதையை நிராகரிக்கும் ஒவ்வொரு இந்துத்துவ குழு உறுப்பினர்களுக்கும் இந்த உரையை நீங்கள் ஆற்ற வேண்டும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ayodhya verdict, pm modi

PM Modi

ஜேம்ஸ் ஹில்டன் அவரின் ஷங்கரி லா நாவலில் வரும் மாய உலகம் என்றும் மகிழ்ச்சியானது, உலகத்தில் இருக்கும் சொர்க்கம், அங்கு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். நல்லவேளையாக சங்கரி லா இந்தியாவில் இல்லை. இந்தியாவுடன் ஒப்பிட்டு பார்க்கும் அளவிற்கும் இந்தியா இல்லை. இதைப் படிக்கும் போது இந்தியாவின் கலாச்சாரத்தினை, பாரம்பரியத்தினை தாங்கிப் பிடிக்கும் மக்களுக்கு மன வருத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்று தான். சிங்கப்பூருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அங்கிருக்கும் மக்கள் மத்தியில் ஆற்றிய உரையில் சங்கரி லாவின் பன்முகத்தன்மையை அவர் ஞாபகப்படுத்தி பேசிய பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக அனைவராலும் பார்க்கப்படுகின்றது. ஆனால், நம் நாட்டிலோ பன்முகத்தன்மை என்ற வார்த்தைக்குக் கூட அர்த்தம் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றது.

Advertisment

இந்தியாவின் பன்முகத்தன்மை

நரேந்திர மோடி அவருடைய பேச்சில் “சிங்கப்பூர் மக்களும் சிங்கப்பூரின் அரசாங்கமும் அவர்கள் கொள்கை எதுவோ அதற்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து அதனை பின்பற்றுகின்றார்கள். எதற்காகவும் அவர்கள் அதிகார சக்தியின் பின்னால் நிற்பதில்லை. உலக நாடுகளில் எங்காவது யாருக்கேனும் பிரச்சனை ஏற்படும் பட்சத்தில் தயங்காமல் தங்களுடைய கருத்தினை வெளியிடுகின்றது சிங்கப்பூர். அதனால் அவர்கள் உலக நாடுகளின் மத்தியில் அதிகம் மதிக்கப்படுகின்றார்கள். பன்முகத்தன்மையை உள் நாட்டில் நிறுவியது மட்டுமின்றி உலக நாடுகளிலும் அதன் பெருமையை பறை சாற்றுகின்றது சிங்கப்பூர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சிங்கப்பூரின் பன்முகத்தன்மையைப் பற்றி அறிந்து கொள்வது இருக்கட்டும். இந்தியாவின் பன்முகத்தன்மையை கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் இந்தியா ”மதம், மொழி, இனம், கலாச்சாரம், உணவு, உடைகள் என அனைத்திலும் வித்தியாசப்படுத்தும் பல்வேறு மக்களைக் கொண்ட நாடு”. ஆனால் இது எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்தியா என்பது ஒருமுகத்தன்மை கொண்ட நாடு என உலகிற்கு காட்ட முயற்சித்துக் கொண்டே இருக்கின்றார்கள். அவர்கள் யாவரும் இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர் என்று வரலாற்றினை மாற்றி எழுத முயற்சிக்கின்றார்கள். அவர்கள் இந்தியர்கள் அனைவரும் ஒரே விதமான உணவு, உடை, மொழி, பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டும் என்ற ஆசையுடன் அதை மக்களிடம் திணிக்கின்றார்கள்.

உலக அரங்கில் மோடி பேசியதை கேட்டு அனைத்து நாட்டினரும் மோடியை வியந்து பார்த்துவிட்டு, இந்தியாவில் நடைபெறும் நிகழ்வினை காணும் போது ஏமாற்றத்திலும் குழப்பத்திலும் உறைந்து போகின்றார்கள். வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்தாக  சந்தேகப்பட்டு உத்திரப்பிரதேச மாவட்டத்தில் இருக்கும் தாத்ரி பகுதியில் முகமது அக்லாக் என்பவரை கொலை செய்தது, இராஜஸ்தான் மாநிலத்தில் மாடுகளை பால் கறப்பதற்காக வாங்கி வந்த பெஹ்லு கானை கொலை செய்தது, குஜராத் மாநிலத்தில் இருக்கும் உனா பகுதியில் தலித் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மகாராஷ்ட்ராவில் கூடிய தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என வரிசையாக பிரச்சனைகள் ஏற்படும் போது மோடி பேசிய பன்முகத் தன்மைக்கும், நாட்டில் நிலவுகின்ற பன்முகத்தன்மைக்கும் மத்தியில் மக்கள் குழம்பிப் போய்விடுகின்றார்கள். மிக சமீபத்தில் கூட மாடுகளை கடத்திச் செல்வதாக நினைத்து 2 இஸ்லாமியர்களை தாக்கியிருக்கின்றார்கள் (டுல்லு பகுதி, குட்டா மாவட்டம், ஜார்கண்ட்). மகாராஷ்ட்ரா மாநிலம், ஜல்கான் மாவட்டம், வாகடி பகுதியில் இருக்கும் ஊர் பொதுக்குளத்தில் குளித்ததை காரணம் காட்டி தலித் சிறுவர்களை நிர்வாணமாக்கி அடித்த நிகழ்வுகளும் கூட அரங்கேறிய வண்ணம் இருக்கின்றது. நம் நாட்டிலேயே இது போன்ற பிரச்சனைகள் இருக்கும் போது உலகத்திற்கு பன்முகத்தன்மைப் பற்றி பாடம் எடுக்க என்ன இருக்கின்றது? அதே அரங்கில், நாட்டின் வளர்ச்சி மற்றும் வணிகம் தொடர்பாகவும் பேசியிருக்கின்றார் மோடி. உலகின் இந்தப் பகுதியில் இருக்கும் நாடுகளில் இந்தியாவில் மட்டுமே அதிகப்படியான வணிகம் நடைபெறுகின்றதும் அதில் இந்தியா அதிக வளர்ச்சி அடைந்திருக்கின்றது என்றும் கூறுயிருக்கின்றார்.

ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகம்:

இந்தியா சார்க் மற்றும் ஏசியன் கூட்டமைப்பில் இருக்கும் நாடுகளுடன் ஏன் வர்த்தகம் மேற்கொண்டு வருகின்றது என்று தெரியுமா? இந்த பகுதியில் இருக்கும் நாடுகளுடன் இந்தியா செய்து வரும் வர்த்தகம் பற்றி ஒரு சிறுபார்வை. சார்க் நாடுகளுடன் இந்தியா செய்துவரும் வர்த்தக மதிப்பு 2013-14ல் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும், 2017-18ல் இதன் மதிப்பு 26 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். சார்க் அமைப்பில் இருக்கும் மொத்த நாடுகளுடன் இந்தியா நடத்தும் வர்த்தகத்தின் வளர்ச்சி விகிதமானது 2.6% (2013-14) மற்றும் 3.4 % (2017-18) ஆகும். அதே போல் ஆசியன் அமைப்பில் இருக்கும் நாடுகளுடன் இந்தியா செய்த வர்த்தகத்தின் மதிப்பானது 2013-14ல் 74 பில்லியன் அமெரிக்க டாலராகும் (9.7%) . 2017 - 18ல் இந்த வர்த்தக மதிப்பானது 81 பில்லியன் அமெரிக்கா டாலராகும் (10.5%) ஆகும். இதற்கு இடைப்பட்ட நான்கு வருடங்களில் வளர்ச்சி என்பதற்கான ஒரு துளி ஆதாரமும் இல்லை. நிலை இப்படியாக இருக்கும் போது, மோடி “இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஆண்டொன்றிற்கு சுமார் 7.5 % லிருந்து 8% என்ற அளவில் இருக்கும். நம் இந்தியாவின் வளர்ச்சியானது தேசிய மற்றும் சர்வதேச நாடுகளுடனான வர்த்தக கூட்டமைப்பினால் சாத்தியப்படுகின்றது. எனவே இந்தியாவில் இருக்கும் 800 மில்லியன் இளைஞர்களின் எதிர்காலம் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சியோடு மட்டும் அல்லாமல் சர்வதேச நாடுகளுடனான இந்தியாவின் கூட்டமைப்பினாலும் சாத்தியமாகும் என்று கூறியிருக்கின்றார்.

இப்படி கூறியதில் தவறொன்றும் இல்லை. ஆனால், மத்திய அரசு, ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் வேலை ஆகியவற்றிற்கு இடையேயான உணர்வினை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். உலக நாடுகளுடனான இந்தியாவின் வர்த்தகம் இறங்குமுகமாகவே இருக்கின்றது. இந்த நான்கு வருட ஆட்சியில். ஏற்றுமதி மதிப்பு 315 பில்லியன் டாலர்களில் இருந்து 303 டாலர்களாக குறைந்துவிட்டது. இறக்குமதி மதிப்பு . 450 பில்லியன் டாலர்களில் இருந்து 465 பில்லியன் டாலர்களாக அதிகரித்திருக்கின்றது. உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்காமல் ஏற்றுமதி சாத்தியப்படுவதில்லை. எந்தஒரு நாடும் வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியாது. இது போன்ற பிரச்சனைகளின் விளைவாகவே மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமும் 8.2% ல் (2015 - 16) இருந்து 6.7%ஆக (2017-2018ல்) குறைந்திருக்கின்றது.

அறிவை நோக்கிச் செல்லும் பாதை:

உலக பொருளாதாரம் பற்றி பேசும் போது நரேந்திர மோடி முன் யோசனையுடன் பேச வேண்டும், அதைப் பற்றி பேசும் போது இந்தியாவின் இன்றைய நிலை குறித்தும் அவர் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

“எதிர்காலம் ஒன்றும் அவ்வளவு தீர்க்கமாக இல்லை. இத்தனை முயற்சிகள் செய்தும் பதில் தெரியாத கேள்விகள், அவிழ்க்க முடியாத புதிர்கள், போராட்டங்கள், மோதல்கள், என்று எதிர்காலம் தீர்க்கமற்றதாக இருக்கின்றது.”

இவ்வுரையின் இறுதியில் மோடி கூறியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ”வேதாந்த தத்துவங்களை பின்பற்றி நடக்கும் நாங்கள் யாவரும் வேற்றுமையில் ஒற்றுமையுடன் வாழப் பழகியவர்கள். உண்மை ஒன்று தான், ஆனால் அதை நாங்கள் பல்வேறுவிதமாக பேசப் பழகியவர்கள்” - இதுவே நம் நாட்டின் பன்முகத்தன்மை விளக்கும் முக்கியமான உரையாகும். நாம் பன்முகத்தன்மை கொண்டவர்கள் தான்.

“இதை கடந்து போகும் போது, நம் வளர்ச்சி பாதையானது சிந்தனை சார்ந்ததாக இருக்க வேண்டும். அனைவருடைய எண்ணங்ளையும் விருப்பங்களையும் புரிந்து கொண்டு அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். அனைத்து மக்களும் சேர்ந்து ஒன்றாக நாட்டின் வளர்ச்சிக்காக துணை நிற்க வேண்டும்.” எத்தனை தெளிவான தீர்க்கமான உரை இது. இந்த உரையின் அர்த்தத்தினை நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி விஷ்வ ஹிந்து பரிசாத், பஜ்ரங் தாள், ராம சேனா, ஹனுமன் சேனா, ஆண்டி-ரோமியோ ஸ்குவாட், அகில பாரதிய வித்யார்தி பரிஷாத், மற்றும் சில குறிப்பிட்டு சொல்லக் கூடிய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூறினால் நன்றாக இருக்கும்.

நான் நாட்டின் பிரதமர் அவர்களை, சங்கரி-லா போன்ற அதிசிறப்பு உரைகளை இந்தியாவின் தற்போதைய நிலையோடு ஒப்பிட்டு பேச வேண்டுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 17.6.18 அன்று, முன்னாள் நிதி அமைச்சர் பா. சிதம்பரம் அவர்கள் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.

தமிழில் : நித்யா பாண்டியன்

Narendra Modi P Chidambaram Nithya Pandian
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment