ஸ்ரீவித்யா
பிரதமர் நரேந்திர மோடியை `நீச் ஆத்மி’ என, காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் விமர்சனம் செய்தது அரசியலில், குறிப்பாக தேர்தலின்போது, தனிநபர்களை குறிவைத்து நடத்தப்படும் விமர்சனங்கள் தரம் தாழ்ந்து வருவதையே காட்டுகிறது.
இந்த விமர்சனங்களை இரு தரப்புமே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதுதான் அரசியல் விளையாட்டு.
தற்போது நடந்துள்ள சர்ச்சைக்கு சிறிய பின்னணி உள்ளது. வரிசையாக அதை பார்த்தால் தான், ஒரு வார்த்தை எப்பட் இவ்வளவு பெரிய பிரச்னையானது என்பது புரியும்.
குஜராத் சட்டசபை தேர்தல், ஆளும் பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் முக்கியமாகும். மோடி பிரதமரானப் பிறகு அவருடைய சொந்த மாநிலத்தில் நடக்கும் தேர்தல் என்பதால், இது அவருடைய கவுரவப் பிரச்னை. அதேபோல், கடந்த மூன்று ஆண்டுகளாக பெரும் தோல்விகளை காங்கிரஸ் சந்தித்து வரும் நிலையில், கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ளார். அவருடைய தலைமைக்கு கிடைக்க உள்ள அங்கீகாரமாக இந்தத் தேர்தல் பார்க்கப்படுகிறது.
அதனால், இரு கட்சிகளும் கடும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் பல மாநிலத் தேர்தலில், ஏன் குஜராத்தில் கடந்த இரண்டு தேர்தல்களில், வளர்ச்சிப் பணிகளை காட்டி பிரசாரம் செய்த பா.ஜ., இந்த முறை அது எடுபடாது என்பதை புரிந்துள்ளது.
அதனால், மத ரீதியில் மக்களை சென்டிமென்டாக ஈர்த்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் அதே பாணியில் முதல் முறையாக ஹிந்துத்துவக் கொள்கையை கையில் எடுத்து பிரசாரம் செய்து வருகிறது.
மண்ணின் மைந்தன், உங்கள் வீட்டுப் பிள்ளை என்ற கணைகளை வீசி வருகின்றனர். இந்த நிலையில், சோம்நாத் கோவிலுக்கு ராகுல் காந்தி சென்றபோது, அவர் ஹிந்துவா, இல்லையா என்ற சர்ச்சை எழுப்பப்பட்டது.
காங்கிரஸ் தலைவராக ராகுல் நிறுத்தப்பட்டபோது, மணிசங்கர் அய்யர் கூறிய கருத்து, பா.ஜ.,வுக்கு சாதகமாக அமைந்தது. முகலாய பேரரசின்போது, ஒரு அரசருக்குப் பிறகு மற்றொருவர் பதவியேற்கவில்லையா. வாரிசாக இருப்பவர் தலைவராக பொறுப்பேற்பதில் என்ன தவறு என்று முத்து உதிர்த்தார்.
முகலாய மன்னராட்சி மனப்பான்மையிலேயே காங்கிரஸ் உள்ளது என்று பாஜவும் மோடியும் பிரசாரம் செய்யத் துவங்கினார். இந்த நிலையில், டில்லியில் அம்பேத்கர் சர்வதேச மையம் திறப்பு விழாவில் பேசிய மோடி, `அம்பேத்கரின் பெயரைப் பயன்படுத்தி ஓட்டு கேட்டவர்கள், அவருடைய பெருமையை மழுங்கடிக்க செய்தனர்’ என்று கூறினார். தலித், ஏழை எளிய மக்களுக்கு ஆதரவாக பாஜ இருப்பதாக மோடி கூறி, அந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.
இந்த நிலையில் தான், மோடியை `நீச் ஆத்மி’ என்று மணிசங்கர் அய்யர் விமர்சித்தார். நீச் ஆத்மி என்றால் பிறப்பால் தாழ்ந்தவர் என்று பொருள் கொள்ளலாம். ஆனால், மக்கள் வெறுக்கக் கூடியவர் என்ற அர்த்தத்தில் கூறியதாக மணிசங்கர் கூறியுள்ளார்.
மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறிய சில மணி நேரத்தில், மணிசங்கர் அய்யர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது காங்கிரஸ் கட்சியின் ஆச்சரியமளிக்கும் விவேகமான நடவடிக்கையாகும்.
குஜராத் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த சர்ச்சை மோடிக்கும், பாஜவுக்கும் சாதகமாகி விடக் கூடாது. அதே நேரத்தில் இந்த நடவடிக்கை காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடம் மரியாதையை ஏற்படுத்தும் என்று இரண்டு மாங்காய்களை அடிக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளார்.
2014ல் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜ வெற்றிப் பெறுவதற்கு மணிசங்கர் அய்யர் உதவியுள்ளார். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்தனர். அப்போது, காங்கிரஸ் கட்சியின் கூட்டம் நடந்தபோது, `மோடியால் பிரதமராக முடியாது. வேண்டுமானால் காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்கலாம்’ என்று மணிசங்கர் அய்யர் கூறினார்.
நான் சிறு வயதில் டீ விற்றவன்தான் என்று அதன் பிறகே மோடி பிரசாரம் செய்யத் துவங்கினார். அதேபோல் தற்போது மணிசங்கர் அய்யர் கூறிய வார்த்தையை பயன்படுத்தி மக்களிடம் அனுதாபத்தை தேடுவதற்கான வாய்ப்பு மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.
நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழி இப்போது ஞாபத்துக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.